ஈழத்தை சேர்ந்த இளம் எழுத்தாளர் ஒருவர் இக்கேள்வியை என்னிடம் எழுப்பியிருந்தார். அவர் ஈழப்போரின் பின்னணியில் ஒரு அடித்தட்டு மனிதரின் நிஜக்கதையை நாவலாக எழுதவுள்ளதாகவும், அதற்காக நிறைய தரவுகளையும், நேர்முகங்களைக் கண்டு பதிவு பண்ணியுள்ளதாகவும், இத்தகவல்களையும் உணர்வுகளையும் எப்படித் தொகுத்து நாவலாக எழுத ஆரம்பிப்பது என்று வினவினார். நான் அவரிடம் சொன்ன சில விசயங்களை உங்களில் இளம் நாவலாசிரியர்களுக்கு பகிர்வது பயனுள்ளதாக இருக்குமென நம்புகிறேன்.
- ஏதாவது ஒரு பாத்திரத்தை தேர்வு பண்ணி அவரது பார்வையில் கதையைச் சொல்லுங்கள். அப்பாத்திரம் உங்கள் மனதுக்கு நெருக்கமாக, வித்தியாசமாக இருக்க வேண்டும். அப்பாத்திரத்தின் மொழியில் ஒரு தெறிப்பு, ஒரு ஜீவன் இருக்க வேண்டும். அப்பாத்திரத்துக்கு இந்த உலகைப் பற்றி சொல்ல ஒரு தனி கதை இருக்க வேண்டும். நான் சொல்வதை நீ கேட்டுத்தான் ஆக வேண்டும் என கழுத்தைப் பிடித்துக் கோரும் அளவுக்கு அப்பாத்திரத்துக்கு ஒரு கதை சொல்லும் கட்டாயம் இருக்க வேண்டும். என்னுடைய “கால்கள்” நாவலின் மது அப்படி ஒரு பாத்திரம். The Catcher in the Rhyeஇல் ஹோல்டன் கால்பீல்ட், Color Purpleஇல் சீலி, ஷோபா சக்தியின் “சலாம் அலைக்கின்” ஜெபானந்தன் இவ்வகைக்கு சிறந்த உதாரணங்கள். ஒரு நாவலில் இப்படி ஒரு பாத்திரம் கிடைத்தால் நாவலை எங்கிருந்து ஆரம்பித்து எப்படி முடிப்பது எனும் குழப்பம் உங்களுக்குத் தீர்ந்து விடும்.
- ஒரு நாவலுக்கு நீங்கள் சேகரித்து வைத்துள்ள கதைகள், தரவுகளில் ஒரு சிறு பகுதி மட்டுமே நாவலுக்குத் தேவை. எவ்வளவு வேண்டும் என எப்படித் தெரிந்து கொள்வது? ஒரு நாவல் என்பது ஒரு உன்னதமான இலக்கிய வடிவம், அகத்தேடல், உன்னதமான பயணம் என்றெல்லாம் குழப்பிக் கொள்ளாமல் அதை ஒரு நீண்ட கதை என்றே புரிந்து கொள்ள வேண்டும். அக்கதைக்கு ஒரு பாத்திரமும், அப்பாத்திரத்துக்கு ஒரு சவாலும் அவசியம். அப்பாத்திரம் இச்சவாலை எதிர்கொள்ளும் போது கதை ஆரம்பிக்கிறது. நீங்கள் கூகிள் மேப்பில் ஒரு இடத்தை முடிவு செய்து கொடுத்ததும் அது பாதையை காட்டும். அப்போது சில குழப்படிகள் நடந்து நீங்கள் தப்புத்தப்பான பாதைகளில் பயணித்து ஒரு தவறான / இன்னதெனத் தெரியாத / ஆபத்தான இடத்துக்கு போய் சேர்ந்தீர்கள் என்றால் அது ஒரு கதை ஆகி விடும். மேப் சரியாக உங்களை வழிநடத்தினால் அது கதையாகாது. இவ்வளவு தான் நாவலின் கதை. என்னென்ன சொதப்பல்கள் என கூகிள் மேப்பான நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும். இந்த சொதப்பல்களே சவால்கள், இச்சவால்களுக்கு ஏற்ற தரவுகளும், சம்பவங்களும் மட்டும் போதும்.
- அடுத்து புனைவெழுத்து வகைமை - genre of fiction. உங்கள் கதை துன்பியலா, இன்பியலா, தனிநபரின் சுயமுன்னேற்ற கதையா, தன்னையறிதல் கதையா (coming-of-age), காதல் கதையா, குடும்ப நாடக கதையா, பகடியா, தனிநபர் பகடியா, இயக்கங்கள், சமூக அமைப்புகள் மீதான பகடியா என முடிவு செய்து கொண்டால் நாவலுக்குத் தேவையான மொழியை, தொனியை, ஸ்டைலை தேர்ந்தெடுக்க முடியும். இது மிக முக்கியம்.
- அடுத்து, ஒவ்வொரு நாவலுக்கான கிளைமேக்ஸும் அதனதன் வகைமையைப் பொறுத்தது. அசோகமித்திரனின் “தண்ணீர்” coming-of-age வகையை சேர்ந்த நாவல். அதன் முடிவில் நாயகி தூக்கில் தொங்க முடியாது. அ.மி சரியாக அவள் முதிர்ச்சியடைவதாக முடித்திருப்பார். அப்போதே வாசகனுக்கு நிறைவாக இருக்கும். என்னுடைய “கால்கள்” நாவலும் இவ்வகைமையே. அதை நான் எழுத ஆரம்பித்த நூறு பக்கங்களுக்குள் கண்டுகொண்டு அதற்கு ஏற்ற முடிவை அளித்தேன். சரவணன் சந்திரனின் நாவல்கள், கட்டுரைகள் அனைத்தும் சுயமுன்னேற்ற வகைமையில் வரும். அவற்றின் முடிவில் மைய பாத்திரம் ஒரு சுயபரிசோதனையின் வாதைகளை அனுபவித்து பாடம் கற்றிருப்பான், வாசகனுக்கு ஒருவித ஊக்கமும் இந்நாவல்களின் ஊடே கிடைக்கும். இமையத்தின் சமீபத்தைய நாவல் “இப்போதும் உயிரோடு இருக்கிறேன்” ஒரு சமூகப் பகடி + தனிமனித தன்னறிதல் கதை. நகுலனின் அனேகமாக எல்லா நாவல்களும் இந்த வகைமையில் வரும். இதுவே சாருவின் “ஸிரோ டிகிரி” ஆரம்பித்து “அவுரங்கசீப்” வரை சமூகப் பகடி + இன்பியல் வகைமையில் வரும். அதனாலே சாருவின் நாவல்கள் தனிமனித மரணத்தில், முழுமையான அழிவில் முடிவதில்லை. வா.மு கோமுவின் படைப்புகளும் இவ்வகைமையே. சு.ராவின் “புளிய மரத்தின் கதையும்”, ஜெயமோகனின் அனேகமான நாவல்களும் வரலாற்றினூடே தனிமனிதர்களின் / சமூகத் திரளொன்றின் அழிவைப் பேசும் துன்பியல் கதைகள் - இவற்றில் வரலாறும் ஒரு பாத்திரமாக இருக்கும். ஆனால் “ஜெ.ஜெ சில குறிப்புகள்” தனிமனித துன்பியல் கதை மட்டுமே - அதனாலே அது ஜெ.ஜெயின் வீழ்ச்சியில் முடிகிறது. இப்படி ஒவ்வொரு நாவலுக்கும் சொல்லலாம்.
நீங்கள் உங்கள் நாவலை எந்த நாவலின் பாணியில் எழுத விரும்புகிறீர்கள்? அதை அறிந்து கொண்ட பின் அந்நாவலின் வகைமையையும், அவ்வகைமையின் இலக்கணத்தையும் அறிந்து கொள்ளுங்கள். இது உங்கள் நாவலை வெற்றிகரமாக வடிவமைக்க உதவும்; வாசகனுக்கு உங்கள் நாவலின் தலைப்பு, முகப்பட்டையை பார்த்ததும் இந்நாவல் இவ்வகைமை தான் ஒரு உள்ளுணர்வு ஏற்படும். அதன்படியே அவன் தேர்வு பண்ணுவான். நீங்கள் எழுதுவது வணிக நாவலோ இலக்கிய நாவலோ அவனை ஏமாற்றாமல் இருப்பது அவசியம். நீங்கள் என்னதான் சுதந்திரமான படைப்பாளியாக உங்களைக் கண்டாலும் மேற்சொன்ன வகைமைகளுக்கு வெளியே ஒரு நாவலை எழுத முடியாது.
5. நாவலில் கதையை முதல் பக்கத்திலேயே ஆரம்பிக்க வேண்டும் என அவசியம் இல்லை. ஆனால் ஆரம்பித்தால் நல்லது. (காப்கா முதல் வரியிலே ஆரம்பித்து விடுவார்; தஸ்தாவஸ்கியும் முதல் அத்தியாயத்திலே துவங்கி விடுவார்.) ஒருவேளை உங்கள் கதை காலத்தின், வரலாற்றின், ஒரு சமூக இயக்கத்தின் கதை என்றால் அதற்குத் தேவையான பக்கங்களை எடுத்துக்கொண்டு பொறுமையாக ஆரம்பியுங்கள். ஆனால் உங்கள் கதைக்கு, வகைமைக்குத் தேவைப்படாவிடில் ஒவ்வொரு பாத்திரமாக, அவர்களுடைய பின்கதையாக அறிமுகம் பண்ணிக்கொண்டு போகாதீர்கள். அது ஒரு மோசமான உத்தி.
6. 300-400 பக்க நாவல் எனில் அதை நான்கு பகுதிகளாகப் பிரித்து (80-100 பக்கங்கள்), அந்த இடங்களில் திரும்பிப் போக முடியாத அழுத்தமான சிக்கலான நான்கு சந்தர்பங்களை (points of no return) உருவாக்குங்கள். “சலாம் அலைக்கும்” நாவலை எடுத்துக் கொண்டால் இளம் வயது ஜெபானந்தனின் ஊரில் போர் மூண்டு மோசமாகும் போதும் அவன் எப்படியாவது அங்கு தங்கிவிட வேண்டும் என்றே ஆசைப்படுகிறான். அப்போது போர் மிக மோசமாகி அவனையும் அவனுடைய குடும்பத்தையும் சீர்குலைத்து தூக்கி வீசுகிறது, அவன் பயங்கரவாத இயக்கங்களிடம் சிக்குகிறான், ராணுவத்திடம் சிக்குகிறான், ஒரு கட்டத்தில் நாட்டில் தன்னால் இனி வாழவே முடியாது எனும் நிலை வருகிறது. இதுவே திரும்பிப் போக முடியாத நிலைமை. அந்நாவலில் இது போன்ற சந்தர்பங்கள் சரியான இடங்களில் வருகின்றன. இவையே நாவலில் வரும் பல பிரச்சினைகளை மீள மீள நிகழ்வதான அலுப்பை ஏற்படுத்தாமல் தடுக்கின்றன; இவையே நம்மை ஆழ்ந்து நாவலை வாசிக்க வைக்கின்றன. நாவல் என்பது ஒரு நெடுந்தொலைவு பயணம். கதையில் அங்கங்கே ஒரு தூக்கி வீசப்படும் உணர்வு, நிலையழிதல், இனிமேல் இக்கதை எங்கு போகவும் வழியில்லையே எனும் திகைப்பு அவசியம். நாவலின் முடிவில் இந்த சிக்கலான திருப்பங்களின் உச்சம் வர வேண்டும்.
அதாவது ஒவொரு நூறாவது பக்கத்திலும் ஒரு திகைப்பான point of no return வந்தே ஆக வேண்டுமென நான் கூறவில்லை. நாவலில் அது 80-100-120-145-150 என ஏதாவது ஒரு பக்கத்தில் வரலாம். ஒவ்வொரு திரும்பப் போக முடியாத தடை வரும் போதும் நாவலின் சிக்கல்கள் மேலும் மேலும் முறுக்கிக் கொண்டு நிலைமை இன்னும் இன்னும் மோசமாக வேண்டும். நளன் - தமயந்தி தொன்மத்தை எடுத்துக் கொண்டால் இந்திரன் உட்பட்ட மேலுலக சக்திகள் தமயந்தியை விரும்பி ஏமாற்றமடைவது, நளனை அழிக்க முடிவெடுப்பது தான் முதல் திரும்பிப் போக முடியாத தடை. அடுத்த தடை அவன் வாழ்வில் சனிபகவான் புகுவது. அடுத்து அவன் சூதாடி ஒவ்வொன்றையாக இழப்பது. அடுத்து மனைவியுடன் வனம் புகுவது. அடுத்து மனைவியைத் துறந்து போவது. ஒவ்வொரு தடையாகப் பாருங்கள் ஒவ்வொன்றும் முன்னதை விட அவன் வாழ்வை மோசமானதாக, சிக்கலானதாக மாற்றுவதை. இனி அவன் முழுதாக திரும்பி வர வாய்ப்பே இல்லை என நம்மை யோசிக்க வைக்கும்படி இந்த சந்தர்பங்கள் உள்ளன. அதனாலே இக்கதை இன்றும் நம் மக்களின் நினைவில் உள்ளது. மகாபாரதத்திலும் இது போல ஏகப்பட்ட சந்தர்பங்கள் உள்ள - மகாபாரதப் போர் முழுக்க இப்படி திரும்பிச் செல்ல முடியாது அடைக்கப்படும் கதவுகளால் ஆனது தானே!
7. நாவல் எழுதும் கலை குறித்த பல நல்ல புத்தகங்கள் ஆங்கிலத்தில் உள்ளன. தமிழில் ரா.ஜி ரங்கராஜனும் ஜெயமோகனும் எழுதியிருக்கிறார்கள். ஆனால் ஆங்கிலத்தில் உள்ளதைப் போன்ற ஒரு முழுமையான நூல் தமிழில் இல்லை என்பதால் ஆங்கிலத்தில் வாசிப்பதையே பரிந்துரைக்கிறேன். யுடியூபிலும் shaelinwrites போன்ற பயனுள்ள அலைவரிசைகள் உள்ளன. இப்படி எழுதும் கலையை கற்றுக் கொண்டால் அது உங்களுக்கு ஒரு நாவலை வடிவமைப்பதில், திருத்துவதில் வெகுவாக உதவும்.
8. இல்லாவிடில் உங்களுக்குப் பிடித்த ஒரு எழுத்தாளரின் பாணியை ஒட்டி அப்படியே எழுதுவது தான் ஒரே வழி. ஆனால் அப்போது தவறாமல் ஒரு உத்தியைப் பின்பற்ற வேண்டும்: உங்களுடைய ஆசானாகக் கருதும் அப்படைப்பாளி தன் நாவல்களில் சொல்லாமல் விடுகிற ஒரு விசயம் இருக்கும், அவர் தவறாகப் பண்ணுவதாக உங்களுக்குத் தோன்றுகிற ஒரு பிரச்சினை இருக்கும். இதை உங்கள் நாவலில் சரியாக எடுத்தாண்டு உங்கள் நாவலுக்கு ஒரு புதுமையை அளியுங்கள். ஈழப்போரின் கதையை எழுதுகையில் ஷோபா சக்தி சொல்லத் தவறுவதை அகரமுதல்வனும், தீபச்செல்வனும் சொல்ல முயல்வதை கவனியுங்கள். அப்படியே அவர்கள் தமது தனித்துவத்தை நிறுவுகிறார்கள். எங்கு முரண்பட்டு விலகுகிறீர்களோ அங்கு தான் நீங்கள் தோன்றுகிறீர்கள்.
9. எழுத்துக் கலையின் கோட்பாடு சார்ந்து வாசிப்பவர்கள் பெரிய பெரிய நூல்களை எல்லாம் படிக்கத் தேவையில்லை. ஒரே ஒரு 40 பக்க நூலைப் படித்தால் போதும். அது அரிஸ்டாட்டிலின் Poetics. புனைவுகளின் இலக்கணத்தை அரிஸ்டாட்டில் அளவுக்கு துல்லியமாக சுருக்கமாக வரையறுத்த மற்றொரு சிந்தனையாளர் இல்லை.
10. அரிஸ்டாட்டில் கதைகளில் ஒரு முக்கியமான விசயத்தை சுட்டிக் காட்டுகிறார் - ஒவ்வொரு பாத்திரத்துக்கும் ஒரு மையமான குற்றம், குறைபாடு உள்ளது. இதை அவர்கள் அறிவதில்லை என்பதே ஒரு சம்பவங்களின் கோவையை கதையாக்குகிறது. தெரிந்து விட்டால் பின் கதையென ஒன்றில்லை. இந்த குறையே அவர்களை ஒரு சுய-அழிவுப் பாதையில் இட்டுச்செல்கிறது. அவர்கள் தம் முழுமையான அழிவை நெருங்குமுன் இதைத் தெரிந்து கொண்டால் தப்பிப்பார்கள். அப்போது அது இன்பியல் ஆகும். இறுதியான திரும்பிப் போக முடியாத திருப்பத்திற்குப் பின்னால் இதை அவர்கள் அறிந்து கொண்டால் அது துன்பியல் ஆகும். அரிஸ்டாட்டில் இதை துன்பியல் வழு (tragic flaw) என்கிறார்.
தி.ஜாவின் “மோகமுள்” பாபு தன்னை அலைகழிப்பது வெறும் உடல் விழைவின் பிரம்மாண்டமான அகப்புனைவு தான், தான் கலையென நாடுவதும், தன்னை அறிய முடியாது தள்ளிப் போடுவதும் இந்த உண்மையில் இருந்து தப்பிக்கும் பொருட்டே என ஜமுனா அவனைத் தேடி கடைசியில் வரும் போது கிட்டத்தட்ட புரிந்து கொள்கிறான். “இவ்வளவு தானா? இதற்குத் தானா?” என அவளுடன் உடலுறவு கொண்ட பிறகு யோசிக்கிறான். ஆனால் அவனால் முழுமையாக இதில் இருந்து விடுதலை அடைய முடியாது. அதனால் அவன் இசையில் தன்னைத் தொலைக்கிறான். இசையைக் கற்க வட இந்தியாவுக்கு அவன் ஜமுனாவை விட்டுப் போவதாக நாவல் முடிகிறது. அவன் ஜமுனாவை விட்டல்ல “இவ்வளவு தானா?” எனும் கேள்வியை விட்டே ஓடுகிறான். அவனுடைய பாத்திரத்தின் வழு தன் உடல் வாதை குறித்த தெளிவுக்கு வர இயலாமையே. அதை கலையாக மாற்றுவதே அவனுடைய வெற்றி. அதுவே இந்நாவலை துன்பியலாகாமல் இன்பியலாக்குகிறது. நாடகவியலில் இப்படி துன்பியலில் ஆரம்பித்து இன்பியலாக முடியும் படைப்புகளை tragicomedy என்கிறார்கள். “மோகமுள்” அவ்வகையில் வரும்.
“சலாம் அலைக்கில்” ஜெபானந்தனின் பாத்திர வழு / துன்பியல் பிழை அவனால் எந்த சூழலுடனும் முழுக்கப் பொருந்திப் போக முடிவதில்லை, ஒருவித அந்நியமாதலை உணர்கிறான் என்பது. அவனை எல்லா சூழல்களும் வெளியே தள்ளிக் கொண்டே இருக்கின்றன. ஆதவனின் நாவல் நாயகர்கள், ஆல்பர்ட் காமு, காப்கா ஆகியோரின் நாவலின் நாயகர்களின் துன்பியல் வழுவும் இந்த அந்நியமாதல் தான். அதுவே ஜெபானந்தனிடமும் வெளிப்படுகிறது. அதனாலே ஊரில் இருந்தாலும், போர் நடந்தாலும், போர் முடிந்தாலும், காதலித்தாலும், குடும்பம் அமைந்தாலும், வேலை கிடைத்தாலும் அவனால் நிலைக்க முடிவதில்லை. நாவல் முடியும் போதும் அவன் முழுக்க அந்நியப்பட்டு அடையாளமற்றவனாகவே இருக்கிறான். சாருவின் நாயகர்களுக்கும் இதுவே நடக்கிறது - ஒரே வித்தியாசம் அவர்கள் (மிலன் குந்தரேவின் படைப்புகளில் வருவதைப் போல) இந்த அந்நியமாதலையும் ஒரு விளையாட்டாகக் காண்கிறார்கள். அவர்கள் தம்மையே புனைந்து கொள்கிறார்கள். தம்மையே பகடி பண்ணுகிறார்கள். அதனால் அவர்களுடைய துன்பியல் வழுவானது ஒரு அழிவில் போய் முடியாமல் இன்பியலாக முடிகிறது.
இப்படி நீங்கள் எந்த நாவலை எடுத்துக் கொண்டாலும் மைய பாத்திரங்களின் வளர்ச்சிப் பாதையானது அரிஸ்டாட்டில் வகுத்ததை ஒட்டியே இருப்பதைப் பார்க்கலாம்.
உங்கள் நாவலின் மையப் பாத்திரத்திற்கு என்று ஒரு பிரதானமான சவால் இருக்க வேண்டும் என்றேன். இந்த சவால் ஒரு ஆழமான உள்பயணத்திற்கு அப்பாத்திரத்தை இட்டுச் செல்ல வேண்டுமெனில் அச்சவால் மேற்சொன்ன துன்பியல் பிழையுடன் இயைந்து பயணிக்க வேண்டும். அதை அடையாளம் காண்பது சுலபம் அல்ல. ஆனால் எழுதிச் செல்லும் போது உங்கள் பாத்திரத்தின் பிரதானமான உளவியல் குறைபாடு, வாழ்க்கைப் பார்வையில் பிழை இது தான் எனக் கண்டுகொண்டால் உங்களுக்கு புதையல் கிடைத்து விட்டது எனப் பொருள். பின்னர் உங்கள் நாவல் மிகவும் சுவாரஸ்யமாக ஆழமாக வளரும். உங்களுக்கே அப்பாத்திரத்தைப் பற்றி எழுதுவதில் பெரும் உவகை இருக்கும். ஏனென்றால் அப்பாத்திரத்தின் போக்கை நீங்களே விலகி நின்று பார்த்து ரசிக்கத் தொடங்குவீர்கள். “என்னென்ன சொல்றான் பாரு, பண்றான் பாரு? பைத்தியம்!” என செல்லமாக உள்ளுக்குள் அவனை / அவளைக் கொஞ்சிக்கொண்டே எழுதுவீர்கள். அந்த ரசனை நாவலின் நடையிலும் மிளிரத் தொடங்கும். நீங்கள் எழுதும் போது ரசிக்கும் ஒன்றை வாசகனும் ரசிப்பது உறுதி.
11. கடைசியாக, ஒரு கதையில் உங்கள் பாத்திரமும், வாசகனும் கற்கப் போகும் விழுமியம் என்ன? இதை ஒரு பிரதியின் தத்துவம் என்பார்கள். இது நேரடியாக ஒரு ஆசிரியன் திணிக்கிற வாழ்க்கைப்பாடமாகத் தோன்றக் கூடாது. இது மைய பாத்திரத்தின் வாழ்க்கைப் பயணத்தின் ஊடாக எதார்த்தமாக - அவனது துன்பியல் குறையில் இருந்து - அவன் கற்றுக் கொள்ளுகிற விழுமியமாக இருக்க வேண்டும்.
“புரட்சி அல்ல, சமூகத்தைத் திருத்துவதல்ல, தன்னைத் திருத்துவதும், மற்றமையிடம் அன்பு காட்டுவதுமே முக்கியம்” என்பது “குற்றமும் தண்டனையும்” நாவலில் இருந்து வாசகனும் மையப் பாத்திரம் ரஸ்கோல்நிக்கோவும் பெறும் படிப்பினை, விழுமியம். ஆல்பர்ட் காமுவின் “அந்நியன்” நாவலின் ஹீரோவான மெர்சால்ட் ரஸ்கால்நிக்காவ் பண்ணுகிற அதே தவறுகளைத் தாம் செய்கிறான், ஆனால் ரஸ்கால்நிக்காவ் போலன்றி அவன் சமூக அறத்தை கற்றுக்கொள்ளாமல் சமூகத்தில் இருந்தும், காலத்தில் இருந்தும் அந்நியப்பட்டு நிற்பதே அசலான இருப்பு எனும் முடிவுக்கு வருகிறான். இரண்டும் ஒரே கதைகள், இருவருக்கும் ஒரே துன்பியல் பிழைகளே, ஆனால் படிப்பினைகள் மட்டும் வேறு, அதனாலே முடிவுகளும், தொனியும் வேறுவேறு. இரண்டையும் படித்தால் ஒரே நாவலென உங்களுக்குத் தோன்றாது. இரண்டு நாயகர்களும் வெவ்வேறு வாழ்க்கைப் பார்வையை இறுதியில் பெறுவதே அதற்குக் காரணம்.
ஒட்டுமொத்த ஐரோப்பிய சமூகத்தின் பிரதிநிதியாக ஒருவன் தன் துன்பியல் பிழையை அறிய நேரும் போதெல்லாம் அதிலிருந்து விலகி ஒரு புது புனைவுக்குள் தன்னை ஒளித்துக்கொண்டு தொடர்ந்து பல துன்பங்களுக்குள் அகப்பட்டு தன்னழிவில் சிக்கிக் கொண்டால், அவன் கடைசியில் கூட தன் பிரச்சினையின் காரணத்தைப் புரிந்து கொள்ளாவிடில் அது ரஸ்கோல்நிக்கோவுக்கும் மெர்ஸால்டிக்கும் மாற்றாக அமைகிற ஆனால் அவர்களுடைய அதே வழுவைக் கொண்ட பாத்திரம் ஆகும். அவனே டான் குவிக்ஸாட். முக்கியமாக நவீன சமூகத்திற்கும் மரபான சமூகத்திற்கும் இடையில் சிக்கிக் கொண்ட ஒரு வரலாற்றுக் கட்டத்து மனிதர்களை ஒட்டுமொத்தமாக பகடி பண்ணும் ஒரு பாத்திரமாக டான் குவிக்சாட் இருப்பதால் அவன் தன்னையறிதலே அவன் மரணம் வரை அவனுக்கு சாத்தியமில்லாமல் ஆகிறது. விமர்சகர்கள் இந்நாவலை அதனாலே துன்பியல் என்றோ இன்பியல் என்றோ வகைப்படுத்த முடியாது என்கிறார்கள். ஏனென்றால் அவனுக்கு தன்னை, தன் பிழையை உணரும் ஒரு வாய்ப்பு கிடைப்பதில்லை. ஏனென்றால் இது ஒரு தனிமனிதன் பற்றின கதையல்ல. ஐரோப்பிய கற்பனாவாத லட்சியவாத சமூகத்தின் பிரதிநிதியே குவிக்ஸாட். இதே குவிக்ஸாட்டை நவீன மனிதனாக்கி ரஷ்யாவில் விட்டால் அவன் ரஸ்கால்நிக்காவ் ஆகிறான், அல்ஜீரியாவில் விட்டால் அவன் காமுவின் நாயகன் ஆகிறான், தமிழகத்தில் சம்பத்தின் நாவலில் விட்டால் அவன் “இடைவெளியின்” நாயகன் ஆகிறான், நகுலனின் புனைவுவெளிக்குள் விட்டால் அவன் நவீனன் ஆகிறான். ஒரே ஆள் அவன் எங்கிருக்கிறான், அவனுடைய துன்பியல் வழுவை அவன் அறிகிறானா இல்லையா என்பதைப் பொறுத்து அவன் வெவ்வேறு பாத்திரங்களாக நமக்குத் தோற்றமளிக்கிறான், இதைப் பொறுத்து அந்நாவலின் விழுமியம் வெளிப்படுகிறது.
உங்கள் நாவலின் மையப் பாத்திரமும் ஏற்கனவே எழுதப்பட்ட ஒரு மனிதனாகவே இருப்பான். அவனை நீங்கள் புத்தம் புதிதாக உருவாக்க முடியாது. ஆனால் அவன் தன் மையப் பிழையை அறியும் போது பெறும் படிப்பினை, வாழ்க்கைப் பார்வை என்ன என்பதை வைத்து அவனை தனித்துவமாக மாற்ற முடியும். உங்கள் நாவலின் தரிசனத்தையும் புதிதாக, ஆழமாக, தனித்துவமாக மாற்ற முடியும். இந்த படிப்பினை அல்லது விழுமியம் அல்லது வாழ்க்கைப் பார்வை அல்லது தரிசனம் இல்லாது உங்கள் நாவல் தட்டையாகி விட வாய்ப்புண்டு. ஆக இது மிக முக்கியமானது!
என்னுடைய "கால்கள்" நாவலில் ஒரே ஒரு முக்கியமான சம்பவம் தான் - மது எனும் மாற்றுத்திறனாளியான பதின் வயதுப் பெண் ஸ்கூட்டர் ஓட்டக் கற்றுக் கொள்கிறாள். இதில் என்ன புதுமை உள்ளது? இதில் என்ன ஆழம் இருக்க முடியும்? ஆனால் அவள் இதன் வழியாக தன்னை அறிகிறாள். இந்த சுய அறிதலும் கதைக்கு வெளியே இல்லை. அவளுடைய பிரதானமான நெருக்கடி அவளுடைய ஊனத்தின் நியாயம், அது அவளுக்கு ஏன் நிகழ்ந்திருக்க வேண்டும் எனும் கேள்வி. அதற்கான விடை காண முடியாது அவள் தத்தளித்துக் கொண்டே இருக்கிறாள். ஸ்கூட்டர் ஓட்ட கற்றுக்கொண்டு அதற்கு உரிமமும் பெறும் போது அவள் தன்னுடைய ஊனம் தனக்கு நன்மையே செய்திருக்கிறது, தனது குறைபட்ட உடலில்லாமல் தன் இருத்தல் இல்லை, தன் வாழ்வின் அர்த்தம் இல்லை எனப் புரிந்து கொள்கிறாள். அவளுக்கு ஒரு நிறைவு வருகிறது. அவளுக்கு உலகம் மீது, தன் குடும்பம் மீது, தன் பாலியல் உடல் மீதுள்ள கோபம் மறைகிறது. இந்த வாழ்க்கைப் பார்வையே இந்நாவலுக்கு ஒரு ஆழத்தை அளிக்கிறது. இதை நீக்கி விட்டால் இந்நாவல் எடையற்றுப் போய் விடும், ஒன்றுமில்லாத கதை எனும் உணர்வை வாசகனுக்கு அளிக்கும். ஒரு கதையை நாவலாக்குவது இறுதியில் அது அளிக்கும் வாழ்க்கைப் பார்வை, விழுமியம், தரிசனம் தான்.
இன்னொரு விசயம் - உங்கள் நாவலின் மையப் பாத்திரம் மிகச்சிக்கலான தத்துவ, வரலாற்று நெருக்கடிக்குள் செல்ல வேண்டியதும் அவசியம் அல்ல. ஒரு எளிய நெருக்கடி, நடைமுறை சார்ந்த சிக்கல், அதனுள் உங்கள் மையப்பாத்திரம் போய் வெளிவரும் போது எப்படி மாறுகிறான், என்ன கற்கிறான் என நீங்கள் உணர்த்தினாலே அது உங்கள் நாவலுக்கு ஒரு ஆழத்தைக் கொடுக்கும். ஒரு வெகுஜன நாவலுக்கும் இலக்கிய நாவலுக்குமான வித்தியாசம் இந்த விழுமியம் எந்தளவுக்கு மையப் பாத்திரத்தின் அடிப்படையான பிழையில் இருந்து தோன்றி வெளிப்பட்டு, தன்னறிதலால் அவனால் பெறப்படுகிறது என்பதே. வணிக நாவலில் பெரும்பாலும் ஆசிரியரே வெளியில் இருந்து கருத்துரைத்து போதனை செய்வார். இலக்கிய நாவலில் அப்பாத்திரம் எதார்த்தமாக தன் வாழ்க்கையை தானே கற்றுணரும். அந்த பாடமும் அவனுடைய சிக்கலில் இருந்து முழுக்க வெளியே எடுக்க முடியாது பின்னிப் பிணைந்து இருக்கும். அதில் ஒரு பூடகத்தன்மை, புதிர்மை கடைசி வரை இருக்கும். ஏனென்றால் அவன் என்னதான் தன்னையறிந்தாலும் அவனுடைய அடிப்படையான கோணல் முழுக்க போயிருக்காது என்பதால் அவன் பெறும் படிப்பினையும் சற்று கோணலாகவே கடைசி வரை இருக்க முடியும். இதுவே நாவலை ரசிக்கத்தக்கதாகவும், தனித்துவமானதாகவும் வைத்திருக்கும். "ஆத்திச்சூடி" சொல்லும் பாடங்களையே உங்கள் மையப் பாத்திரமும் சொன்னால் அதில் எந்த சுவாரஸ்யமும் இருக்க முடியாது தானே. அதனாலே உங்கள் நாவலின் படிப்பினைகளிலும் ஒரு சிறு பிழை இருக்கட்டும்!
