இம்மாதமும் ஜனவரியிலும் சென்னையில் என்னென்னமோ இலக்கிய நிகழ்வுகள் தொடர்ந்து நடக்கின்றன. நான் சென்னையில் இருந்திருந்தால் இவற்றில் சிலவற்றிலாவது கலந்துகொண்டிருப்பேன். நண்பர்களுடன் அளவளாவி இருப்பேன். இப்போது கூட வரலாம், ஆனால் தங்குவதற்கு இடமில்லை. இப்போதே மாதம் ஒருமுறை சென்னைக்கு கட்டாய பயணம் இருக்கிறது, அதற்காகவே ஒவ்வொரு முறையும் ஒரு நண்பரின் வீட்டுக்குப் போய் பாத்ரூம் பயன்படுத்தி அவர்களுடன் தேநீரோ சிற்றுண்டியோ அருந்திவிட்டு கிளம்பிவிடுகிறேன். இப்படி உதவி கேட்டு தங்கிய பிறகு மீண்டும் அவர்களைத் தொந்தரவு பண்ண முடியாது. அடுத்து இன்னொரு நண்பர் அல்லது புதிய நண்பர். இதனிடையே வேறு விசயங்களுக்கு அங்கே வருகையில் என்னை ஹோஸ்ட் செய்ய யாருமில்லை. ஜனவரியில் ஒரு நீதிமன்றத்தில் ஆஜராகும் பயணம் வருகிறது. அதற்கடுத்த வாரமே என் புத்தக வெளியீட்டை உயிர்மை நடத்துகிறது. அதற்கு மீண்டும் யார் வீட்டில் தங்குவதற்கு கேட்பதெனத் தெரியவில்லை. பண நெருக்கடி வேறு கடுமையாகிக் கொண்டே வருகிறது.
எதற்குடா பெங்களூருக்கு வேலை வாங்கி வந்தோம் என அலுப்பாக இருக்கிறது! அங்கேயே இருந்திருந்தால் என் வாழ்வில் இவ்வளவு துன்பங்கள் ஏற்பட்டிருக்காது. ஒரு தமிழ் எழுத்தாளன் சக படைப்பாளிகளையும் வாசகர்களையும் சந்திக்க இயலாமல் இப்படி ஒரு வேற்றுமொழி மாநிலத்தில் சிறைகொண்டிருப்பது நரக வாழ்க்கை! முன்பு நான் வேண்டியவர்களை சந்திக்க என் வண்டியை எடுத்தால் அரை மணியில் போய் விடுவேன். இப்போது ஓரிரவு பயணமாகிறது. முன்பு எனக்கு அங்கு தங்க இடம் இருந்தது. இப்போது யாரிடமாவது உதவி கேட்டு சில மணிநேரங்கள் இருந்துவிட்டு ஓடிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது!
என்னடா இப்படி ஒரு நாடிருந்தும் அகதி வாழ்க்கை!