நேற்று அனேகமாக இந்த நேரத்தில் எனக்கு ஒரு வினோதமான விபத்து நடந்தது.
நான் வீட்டுக்கு வந்து கழிப்பறைக்குப் போய்க் கொண்டிருந்தேன். ஜீனோ என் பின்னாலே வந்தான். என்னைத் தாண்டி கழிப்பறையை நோக்கி ஓடினான். நான் அவனுடைய கழுத்துக் கயிற்றைக் கழற்றியிருக்கவில்லை. கழிப்பறைக்குள் எலி வந்து போன சந்தேகத்தில் குறுக்குமறுக்காகப் பாய்ந்து கொண்டிருந்த அவன் சட்டென வெளியே வந்தான். என்ன நடக்கிறது என யோசித்துக்கொண்டு நான் அவனை நோக்கி வர அவனுடைய கயிற்றை நான் மிதித்துவிட்டேன். நான் சுதாரிக்குமுன் அவன் கயிற்றை இழுத்துக்கொண்டு பின்னால் ஓட நான் புரண்டு கீழே முன்னோக்கி விழுந்தேன். பொதுவாக இப்படி விழுகையில் நான் சரியாக லேண்ட் ஆகி விடுவேன் (அடிக்கடி விழுந்து பழக்கம்). ஆனால் இம்முறை நான் கழிப்பறையின் கதவருகே இருந்ததால் என் தலை நேராகப் போய் கதவில் மோதியது. நல்ல வலுவான கதவா அடியும் செமையான வலுவுடன் இருந்தது. எந்தளவுக்கு என்றால் வீட்டுக்கு வெளியே நின்றிருந்த வீட்டு உரிமையாளருக்கே கேட்டு விட்டது. நான் கதவை மூடாததால் அவர் உள்ளே வந்து பார்த்தார். நான் தலையைப் பிடித்துக்கொண்டு கீழே கிடக்கிறேன்.
இடது காதுக்கு மேலிருந்து தலைக்கு நடுவில் உள்ள பகுதியில் பலமான அடி. பில் ஹியூக்ஸ் என்ற ஒரு மட்டையாளருக்கு பந்து பட்டு அவர் செத்துப் போனாரே கிட்டத்தட்ட அந்த இடம். ஆனால் ஆச்சரியமாக எனக்கு கடும் தலைவலி இருந்ததே தவிர தலைசுற்றுவது, குழப்பம், வாந்தி போன்ற உபாதைகள் இல்லை. அதனால் ஆபத்தில்லை எனத் தோன்றியது. எனக்குத் தெரிந்த ஒரு டாக்டரிடமும் பேசினேன். அவரும் பயப்பட வேண்டாம் என்றார்.
வாயை முழுக்கத் திறக்க முடியவில்லை. தலைவலிக்கு மாத்திரை மட்டும் போட்டுக்கொண்டேன். காலையில் எழுந்தால் அந்த வலியும் குறைந்திருந்தது. ஆனால் ஹெல்மெட் அணியும் போது வலி, சாப்பிடும் போது வலி, அவ்வளவு தான். மோதிய வேகத்திற்கு, வலுவிற்கு கொஞ்சம் முன்னே பின்னே பட்டிருந்தால் நான் செத்துப் போயிருப்பேன். ஆனால் ஏதோ ஒரு தற்செயல் தப்பித்துவிட்டேன்.
ஒருவேளை நான் இறந்திருந்தால் இந்த வழக்கு, அதை ஒட்டிய அலைச்சல், செலவுகள், செட்டிமெண்டுக்கான கடன் என எந்த நெருக்கடியும் இல்லை. ஆனால் பாருங்கள் காலம் என்னை அப்படித் தப்பிக்க விடுவதாக இல்லை. நீ இருந்து அனுபவித்து விட்டுப் போ எனச்சொல்லி என்னைப் பிழைக்க வைத்திருக்கிறது. இந்த வருடத் துவக்கத்திலே எனக்கு சிறிதும் அதிர்ஷ்டம் இல்லையென்றால் எப்படி?