நான் சிறுவயதில் சில நாட்களில் வாரக்கணக்கில் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கும்போது மாடி ஜன்னல் வழி வெளியே பார்த்து யோசிப்பேன். "வெளியே தெருக்களில், வீடுகளில், வாகனங்களில் ஒரு உலகம், நான் இருப்பது இன்னொரு உலகில். ஏன் இப்படி? இவர்கள் எவ்வளவு தாராளமாக சுதந்திரமாக கவலையின்றி இருக்கிறார்கள்! நாம் மட்டும் ஏன் இங்கு கட்டுண்டு கிடக்கிறேன்? விரும்பியதை சாப்பிடாமல், விரும்பியதை செய்யாமல், உலகில் இருந்து முழுக்க விலகி ஏன் இருக்கிறேன்?"
இப்போது சட்டத்தின் கொடூர பற்கள் இடையே சிக்கி நெறிபடும் போதும் எனக்கு அதே கேள்விகள் தாம் எழுகின்றன. நான் சந்திக்கும் பெரும்பாலானவர்களுக்கு ஒன்றைச் செய்யவோ ஒரு சிறிய தேர்வு, அதன் பாலான சுதந்திரம் இருக்கும். கடன்பட்டவர்களுக்குக் கூட. ஆனால் சட்டத்தின் பாற்பட்டவர்களுக்கு, சிறைப்பட்டவர்களுக்கு அச்சுதந்திரம் முழுமையாக மறுக்கப்படுகிறது. அவர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் இருப்பவர்கள் போல் ஆகிறார்கள். எந்த பக்கம் போனாலும் சிக்கிக் கொள்வார்கள். மதிலேறி குதித்தாலும் ‘மதிலேறி குதித்தவர்கள்’ ஆவார்கள். இதை வெளியே இருந்து பார்ப்பவர்களால் கற்பனை செய்ய முடியாது. ஒருமுறை சிக்கிக் கொள்ள வேண்டும், மாதம் சில நாட்கள் அலையவும், கவலைப்படவும், பணத்தை வக்கீலுக்காக செலவு செய்யவும் வேண்டும், அப்போதே இது புரியும் - உங்கள் நேரம், உங்கள் பணம், உங்கள் முடிவுகள் உங்கள் வசம் இல்லை. நீங்கள் ஒருவித திறந்தவெளி கைதி என்று. எனக்கு இப்போதெல்லாம் சகஜ வாழ்க்கைக்குள் இருப்பவர்களைப் பார்க்கையில் - முன்பு நோயாளிச் சிறுவனாக வெளியே பார்த்து பொறாமைப்பட்டத்தைப் போல - பொறாமையாக இருக்கிறது. அவர்களுக்குள்ள ஆதாரமான சுதந்திரம் எனக்கில்லை என்பது ஒரு ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
எனக்கும் பிறருக்கும் இடையில் ஒரு ஆழமானப் பிளவை இது உண்டு பண்ணுகிறது. குறிப்பாக நான் இருக்கும் கல்லூரியானது கொண்டாட்டங்களின், குதூகலங்களின், இளமை உணர்ச்சிவெளிப்பாடுகளை களமாக இருக்கிறது. அங்கு நிகழும் பாய்ச்சலை ஒதுங்கி நின்று பார்ப்பவனாக நான் இருக்கிறேன். எல்லாரும் எப்போதும் சிரித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கிறார்கள். அவர்களிடையே நான் மட்டுமே சிரிப்பும் பேச்சும் அற்றவன். ஒருவேளை நான் காஷ்மீரில் இருந்து என் குடும்பத்தை ராணுவம் கைதுபண்ணி காணாமல் அடித்திருந்தால், என்னை தினமும் யாரோ பின் தொடர்வதாகத் தோன்றினால் நான் இப்படியோ அல்லது இதைவிட மோசமாக உணர்வேனாக இருக்கும்.
நாம் இப்படி மாறும் போது பிறருடைய உலகம் எந்தளவுக்கு சின்னச்சின்ன கவலைகள், சின்னச்சின்ன மகிழ்ச்சிகள், எதிர்பாராமைகள், நிறைய சின்னச்சின்ன விருப்பத்தேர்வுகள் கொண்டதாக இருக்கிறது என்பது புரிகிறது. என்னுலகம்?
நீதிமன்றத்தின் கரங்கள் என் மென்னியை நெரிக்கும் போது நான் எளிய ஆணைகளுக்கு இணங்க ஓடும் ஒரு எந்திரத்தைப் போலாகிறேன். ஒரு சைக்கிளைப் போல, ஒரு வாகனத்தைப் போல ஆகிறேன். செய் என்றால் செய்வேன். ஏன் செய்ய வேண்டும், எதற்கு என்றெல்லாம் கேட்கும் உரிமையற்றவனாகிறேன். இது என்னுடைய பெரிய கவலையாகிறது - “நான் சரியாகத் தான் என் ஆணையை நிறைவேற்றுகிறேனா, நான் இதையும் மீறி யோசிக்காமல் இதற்கேற்ப என் யோசனையை வைத்துக் கொள்கிறேனா?” நான் என்றில்லை சட்டத்திடம் மாட்டிக் கொண்ட அல்லது சிறைக்குள் இருக்க நேர்கிறவர்களின் கதியெல்லாம் இது தான். இது தான் அவர்களை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்துகிறது. சுதந்திரம் என்பது இந்தளவுக்கு ஒரு அமைப்பு உங்கள் சிந்தனைக்குள் நெறிமுறைகளாக, ஆணைகளாக ஊடுருவாமல் இருப்பதும், ஓரளவுக்கு நெகிழ்வுத்தன்மையுடன் வாழ முடிவதுமே, அந்த நெகிழ்வான வெளிகளுக்குள் சிறுசிறு ஆசைகள் சிறகுமுளைத்து பறப்பதுமே. சிறைத்தண்டனை பற்றி சொல்லும் போது சிலர் சுதந்திரமின்மை அல்ல அங்குள்ள கெடுபிடியான விதிமுறையே அதிக கொடுமையானது என்கிறார்கள் - அதாவது, காலையில் எப்போது எழுந்து என்னென்ன செய்ய வேண்டும், எப்போது எதை சாப்பிட வேண்டும், எப்போது பேச வேண்டும், எப்போது தூங்க வேண்டும் எனும் உருக்கால் வார்க்கப்பட்ட ஒரு நடைமுறை. யோசித்துப் பாருங்கள் - தூக்குத்தண்டனை கூட காலம்-வெளி சார்ந்த ஒரு விதிமுறைக்கு உட்பட்டே நடக்கிறது. அவர் எப்போது எழுந்து எப்படி நடந்து எங்கு போய் எந்த கயிற்றில் எப்படியான சுருக்குக்குள் கழுத்தைக் கொடுக்க வேண்டும், எவ்வளவு நேரம் தொங்க வேண்டும் என சட்டம் விதிக்கிறது, அதன் படியே அவர் இறக்க வேண்டும், அதனாலே அது தண்டனை. ஒருவரிடம் ஒரு கயிற்றைக் கொடுத்து நீயே செத்துக்கோ என்றால் அவரே தொங்கி சாகக் கூடும், ஆனால் அது தண்டனை அல்ல. அதை சட்டம் அனுமதிக்காது. ஏனென்றால் அது தண்டனையாக இருக்காது. பாருங்கள் அங்கு சாவது அல்ல தண்டனை, எப்படி சாக வேண்டும் என முன் தீர்மானிக்கப்படுவதும், அதன்படி நடக்க நேர்வதுமே தண்டனை. சட்டம் உங்களை யாரும் அடிப்பதை, துன்புறுத்துவதை, கொல்வதை அனுமதிக்காது, அது எல்லாவற்றையும் ஒரு நடைமுறை ஒழுங்காக மாற்றும். கட்டாய நடைமுறையே தண்டனை - அதையொத்த வேறொரு வதை இல்லை.
தண்டனை என்பதே நடைமுறை. தேர்வுகளற்ற நடைமுறையே தண்டனை. சிறை என்பதும் ஒருவித நடைமுறை தான் - விருப்பத்தேர்வுகள் அற்ற நடைமுறையே, நீங்கள் அதற்குப் பழகி விட்டால் அது உங்கள் கண்முன்னால் இல்லாமலாகும், ஆனால் உங்களுக்குள் வியாபிக்கும். சட்டத்தின் பிடிக்குள் வருகிற ஒருவரும் இப்படியே ஆகிறார். நான் கடந்த முறை நீதிமன்ற அறையில் வீற்றிருக்கையில் அங்கு நடக்கிற விசயங்களை நான் மிக இயல்பாக ஒருவித நகைப்புடன் மகிழ்ச்சியுடன் உள்வாங்குவதை உணர்ந்தேன். என்னுடைய ஒரு பகுதி சட்ட நிறுவனத்தின் பகுதியாக மாறிக் கொண்டிருக்கிறது. அங்கு நிகழ்வனவற்றை என்னால் விலகி நின்று பார்க்கவும் புரிந்து கொள்ளவும் முடிகிறது, அங்கு போனதும் என் உடலும் மனமும் உருமாறுகிறது.
இதுவே நீங்கள் அடிமையாக இருப்பதான உணர்வைக் கொடுக்கிறது. இது நீங்கள் ஒரு அலுவலகத்தில் செல்லும் போதும் நடப்பது தானே, எல்லாரும் ஏதோ ஒரு நடைமுறைக்குள் தானே இருக்கிறோம் என உங்களுக்குத் தோன்றினால் இல்லை. இரண்டுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் உண்டு - அலுவலகத்தில் நீங்கள் விடுப்பெடுக்கலாம், அங்கு விதிமுறைகளை சிறிதே வளைக்கலாம், வேலையில் சற்று சுணங்கலாம், வேலையில் இருந்து ராஜினாமா பண்ணலாம். அந்த வாய்ப்புகள் எல்லாம் இங்கில்லை. அதனாலே நீதிமன்றமானது சிறையின் ஒரு நீட்சியே என இப்போது புரிகிறது. ஒன்று நீதிக்கானது, மற்றொன்று தண்டனைக்கானது என இத்தனைக் காலமும் நினைத்திருந்தேன். அல்ல, இரண்டுமே தண்டனைக் களங்கள் தாம். இரண்டுக்கும் ஒரே நடைமுறைகள். அந்நடைமுறைகளே தண்டனை.
அதனாலே நான் முன்பு எப்போதையும் விட இந்த உலகில் மிக அந்நியனாக என்னை உணர்கிறேன். இந்த முறை புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்த போது அங்குள்ள கொண்டாட்டச் சூழலுடன் நானும் இயல்பாகவே கலந்தேன். ஆனால் அதே நேரம் நான் அவர்கள் அல்ல, நான் வேறொரு ஆள், நான் ஒரு அடிமை எனத் தோன்றிக்கொண்டே இருந்தது. என்னுடைய புத்தக வெளியீட்டின் போதும் இதே உணர்வே இருந்தது - நான் முன்பிருந்த ஆள் அல்ல, அந்த சூழலின் அங்கமல்ல நான் என்று, என்னால் முழுமையாக ஒரு மகிழ்ச்சிக்கு, கொண்டாட்டத்துக்கு என்னை ஒப்புக்கொடுக்க முடியாது என்று, என்னால் மனம் திறந்து சிரிக்கவோ, மனதுக்குப் பட்டது போல கோபப்படவோ முடியாது என்று. எல்லாவற்றையும் விட முக்கியமாக ஏதோ விடுமுறையில் வந்த ஒரு ஆள் எனும் உணர்வு - இத்தனைக்கும் நான் தொடர்ந்து எழுதுபவன், தினமும் எழுதுபவன், ஆனால் நான் விடுமுறையில் இருக்கிற ஒரு அடிமை எனும் எண்ணமே என்னை ஆள்கிறது. இதை எப்படிப் புரிந்து கொள்வது?
நான் இதில் இருந்தே விடுதலை பெற வேண்டும் என நினைக்கிறேன், எந்த ஒரு ‘கைதியையும்’ போல.
நான் இந்த உலகைப் பார்க்கையில் எல்லாம் “உங்களைப் போல நானும் ஒருநாள் ஆவேன்” என சொல்லிக் கொள்கிறேன். அதை ஒரு தாரக மந்திரம் போல எனக்குள் உச்சரிக்கிறேன். ஆனால் எனக்குத் தெரியும் இந்த வழக்கில் இருந்து விடுதலை பெறும் போது நான் ஒருபோதும் பழைய மனிதனாக இருக்க மாட்டேன் என்று!