நேற்று குடும்பநல நீதிமன்றத்தில் வைத்து ஒரு வித்தியாசமான ஜோடியைப் பார்த்தேன் - இருவரும் எனக்கு எதிரே தான் இரண்டு மணிநேரங்களுக்கு மேலாக அமர்ந்திருந்தார்கள். அந்த ஆண் இடைவிடாமல் தன் பெரிய வாயைத் திறந்து பேசிக்கொண்டே இருக்க அவள் அந்த வாயை ரசித்துக் கொண்டு ஒரு மங்காத புன்னகையுடன், ஒளிரும் கண்களுடன், அவற்றில் பொங்கும் காதலைப் பார்த்துக்கொண்டே இருந்தாள். அப்படி ஒரு அபாரமான கெமிஸ்டிரி இருவருக்கும். ஆனால் அவர்களுடைய முக அமைப்பின் ஒற்றுமையைக் கண்டு இருவரும் அண்ணன் தங்கையோ என்று கூட சந்தேகம் எழாமல் இல்லை. மதிய இடைவேளையின் போதும் இருவரும் “பாய்ஸ்” படத்து “வாய்தா வாய்தாம்பாங்களே ஜட்ஜய்யா அது இதுதானா” என்பது போல சுற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். இவர் இங்கு திரும்பினால் அவளும் இங்கேயே திரும்புகிறாள், அவள் அங்கு திரும்பினால் அவரும் அங்கேயே திரும்புகிறார். இவள் நின்றால் அவர் நிற்கிறார், இவள் நடந்தால் இவரும் கூடவே உரசிக்கொண்டு நடக்கிறார். சாப்பிடும் இடத்தில் அரை அங்குல இடைவெளிதான் இருவருக்கும் எப்போதும். சாப்பாட்டையும் இவர் ஊட்ட அவள் சாப்பிடுகிறாள், நடுநடுவே அவள் சாப்பாட்டை முழுங்கும் இடைவெளியில் பேசிக்கொண்டே இருக்கிறார். அவளும் சிரித்துக் கொண்டே இருக்கிறார்.
மணி ரெண்டே முக்கால் இருக்கும். மியூச்சுவல் பெட்டிஷன் போடும் ஜோடிகள் நீதிபதி அம்மாவின் அலுவலக அறைக்கு சென்று சாட்சியம் கொடுத்து விண்ணப்பத்தில் ஒப்பமிட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த வரிசையில் இந்த ஜோடியும் பரஸ்பரம் பேசாமல் சிறிய இடைவெளி விட்டுக்கொண்டு வந்து ஒப்பமிடுகிறார்கள். நீதிபதி அம்மா நீங்கள் இதிலுள்ள நபர்கள் நீங்கள் தானே, விபரங்களை படித்துதானே ஒப்பமிட்டீர்கள், இதிலுள்ள தகவல்கள் உண்மை தானா என்றெல்லாம் கேட்டுவிட்டு தீர்ப்புநாளை குறிப்பிடுகிறார். இவர்கள் வெளியே வந்ததும் பழையது போல ஒட்டிக்கொண்டு பரஸ்பரம் போனைப் பார்த்து சிரித்துக்கொண்டு கண்களை பரிமாறி அன்பைக் காட்டிக்கொண்டு நடக்கிறார்கள்.
எனக்கு சத்தியமா புரியல? இவங்களுக்கு என்னதான் வேணும்?
