50, 60களில் பிறந்து அரசியல் சமூகம் பற்றி சதா அறம், முறம், சமூகம், நீதி, சமூக நீதி, நீதி சமூகம் என்றெல்லாம் எழுதிக் கொண்டிருப்பவர்களிடம் நான் காணும் ஒரு விசித்திர பண்பு இவர்கள் சமூகத்துக்காக இவ்வளவு கண்ணீர் சிந்துவார்களே, சரி இவர்கள் தாயுமானவர் போல இருப்பார்கள் என எண்ணி நீங்கள் நேரடியாக இவர்களிடம் போய் பேசினால் துளி அன்பைக் கூட உங்களிடம் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள் என்பது. எனில் இவர்கள் நா தழுக்க பேசுகிற அந்த சமூகம், மற்றமை என்பது யார்? இவர்களோ நாமோ ஒருவரும் அறியாத புதிர் இது.
என்னுடைய சிறு ஊகம் என்னவென்றால் இவர்கள் தம் தலைமுறையின் ஒரு அடிப்படையான முரண்பாட்டில் உழல்பவர்கள். அது என்னவென பார்க்குமுன்னர் நாம் நமது வரலாற்றைப் பார்க்க வேண்டும்.
வெள்ளையர்கள் இங்கு வருமுன் இங்கு பிரசித்தமாக இருந்தது பக்தி மரபு. பக்தி என்றால் உலகம் முழுக்க ஒன்று தான் - மனிதன் தான் அல்லாத ஒன்றிடம் - மற்றமையிடம் - தன்னை ஒப்புக்கொடுத்து தன்னைக் ‘கடக்காமல் கடந்து’ போவது (என்னவொரு அபத்தமான முரண்!). அதாவது ஒருவன் தன்னிடம் இருந்து கடவுளிடம் செல்வது அல்ல பக்தி அனுபவம். தனக்கும் கடவுளுக்குமான ஒரு பயணத்தில் போய் இணைந்து தானும் அல்லாமல் கடவுளும் அல்லாமல் உருமாறுவதே பக்தி ரசம். இது ஒரு ஏமாற்றுவித்தை என பௌத்தம் நிரூபித்தது. அதனாலே பௌத்தத்தை துரத்தி அடித்தார்கள் பக்தி போதை வியாபாரிகள். சரி அதை விடுங்கள். இதன் பிறகு காலனிய காலம் வருகிறது. அது பக்தி மரபின் இறுதி கட்டம் - மரண ஊர்வல கட்டம் என்று கொள்வோம். இதற்கு அடுத்து அறிவியல், பகுத்தறிவு, நவீன நிர்வாகம், தனிமனிதவாதம், நவீன சமூக கட்டமைப்பு எல்லாம் இந்தியாவுக்கு வருகிறது. இது பக்தி மரபுக்கு பழகியவர்களுக்கு சவாலாகிறது, ஏனென்றால் இது தன்னிலையைக் கடந்த வேறொன்று இல்லை என்கிறது. நீ உனக்காக சிந்திக்க வேண்டும், நீ உனக்காக தீர்மானங்கள் எடுத்து நீயாகவே வாழ வேண்டும் என்கிறது நவீன சிந்தனை. இது கடவுள் நம்பிக்கையை மறுக்கிறது. இந்த இடத்தில் தான் நமது இந்து சீர்திருத்தவாதிகளின் நீட்சியாக, இந்து பக்தி மரபை அரசியல் கதையாடலாக மாற்றிய காந்தி வருகிறார். அவரை நம் ஆட்களுக்கு பெரிதும் பிடித்துப் போகிறது. ஏனென்றால் இப்போது நாம் கடவுள் இல்லாமலே பக்தர்களாக இருக்க முடிகிறது, கூடவே பஜனையும் பண்ணலாம் என்றார் காந்தி. (இதனாலே தமிழகத்தில் பெரியாரிஸ்டுகளை விட அதிகமான காந்தியவாதிகள் இலக்கியவாதிகளாக இருக்கிறார்கள், இலக்கியம் என்பது பக்தி மரபின் நீட்சி அல்லவா?)
ஆனால் காந்திக்கு அடுத்த காலகட்டம் தீவிரமான முதலீட்டியவாதம், நகரமயமாக்கல், எந்திரமயமாக்கல் எம சமூகம் நகர்கிறது, இது பக்தி சிந்தனைக்கு இடறாகிறது. இப்போது நமது மக்களில் ஒரு பகுதியினர் அரசியல் சமூக லட்சியவாதிகள் ஆகிறார்கள். அவர்கள் (காந்தியை பின்பற்றி) கடவுளின் இடத்தில் சமூகத்தை, மற்றமையை வைத்துக் கொள்கிறார்கள். இவர்கள் கடவுள் எதிர்ப்பு பேசிக்கொண்டே மதத்துக்குள்ளும், சாதி எதிர்ப்பு பேசிக்கொண்டே சாதியமைப்புக்குள்ளும் காலாட்டியபடி இருப்பார்கள். ஆனால் தொடர்ந்து ஏழைகள், தலித்துகள், சிறுபான்மை மதத்தவர்கள் பற்றி கண்ணீர் வடிப்பார்கள், அவர்களுக்கு சாதகமாக திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்று கூறுவார்கள், ஆனால் அவர்கள் ஒடுக்கப்படும் நிலையில் வைத்திருக்கும் சமூகப்பொருளாதார, மத அமைப்பை எதிர்க்கவோ விட்டு வெளியேறவோ மாட்டார்கள், எப்போதும் அன்பு, கருணை, தன்னிலையை இழந்து மற்றமையாவது பற்றி பேசுவார்கள், ஆனால் தன்னைத் தவிர வேறு யாரைப் பற்றி எதார்த்தத்தில் அக்கறை காட்ட மாட்டார்கள். இதைப் பற்றி குற்றவுணர்வு மிகுந்திட இவர்கள் இன்னும் அதிகமாக சமூக கருத்தியல், நீதி பேதி என கட்டுரைகளை எழுதுவார்கள். ஒரு மனிதன் தன்னைப் பற்றி, குறிப்பாக தன் உடலை, தன் லௌகீகத் தேவைகளைப் பற்றி அக்கறை கொள்ளுவது மட்டுமே இந்த வாழ்க்கையின் ஒரே உண்மை என்பதை புரிந்து கொண்டாலே இந்த சித்தாந்த மயக்கம் தெளிந்து விடும். ஆனால் செய்ய மாட்டார்கள். ஏனென்றால் இவர்கள் ‘கடவுள் நம்பிக்கையற்ற பக்தி மரபை’ சேர்ந்தவர்கள் (மற்றொரு முரண்). கடப்புநிலைவாதிகள் (transcendentalists) அல்லது கடவுளற்ற மீபொருண்மைவாதிகள். நான் ஏற்கனவே சொன்னேன் இல்லையா - கடவுளை அடைவது அல்ல, அந்த பயணத்தில் இருப்பது, தன்னிலையும், மற்றமையும் அல்லாமல் ஆவதே இவர்களுடைய இலக்கு என்று. ஆக சமூகத்திடம் / மற்றமையிடம் போய் சேர்வது அல்ல அப்படி ஒரு கற்பனை பயணத்தில் இருந்து கொண்டிருப்பதே இவர்களுக்குத் தேவை.
இதை நான் ஏதோ புதிதாக சொல்கிறேன் என்று எடுத்துக் கொள்ள வேண்டாம். இந்த மனப்பான்மையே நவீன ஐரோப்பியர்களிடம் தென்படுவதாக நீட்சே கூறியிருக்கிறார். கர்த்தர் நீங்கள் வறியவர்கள், எளியவர்களுக்காக இரங்கினாலே கடவுளை அடையலாம் என்று கூறினார். இதுவே மற்றமைக்காக இரங்குவது. இது தன்னிலை பற்றி ஒரு கற்பனையை உருவாக்க நவீன சமூகத்துக்கு உதவியதாகவும், தன்னிலை-மற்றமை எனும் இருமையை வலுவாக்கியதாகவும், மக்கள் தமக்குள் அடிமைகளாக மாறினார்கள் (slave mentality) என்று நீட்சே கூறுகிறார். விளைவாக நவீன ஐரோப்பியனுக்கு தன்னிடத்தும் அக்கறை இல்லை, மற்றமையிடமும் பாசம் இல்லை, அவன் இரண்டுக்கும் இடையில் அல்லாடியபடி சதா தன்னையும் மற்றமையையும் கண்டு பயந்தபடி போலியானவனாக மாறிப் போகிறான், தன் இருத்தலை அறிய முடியாதவனாக ஆகிறான் என்கிறார் நீட்சே தனது “நன்மை தீமைக்கு அப்பால்” (Beyond Good and Evil) நூலில். ஹைடெக்கரும் இந்த பார்வையை நீட்டித்தே தனது “இருத்தலும் காலமும்” (Being and Time) நூலை எழுதினார். அதில் ஹைடெக்கர் இந்த உடலைக் கொண்டு இவ்வுலகில் இருத்தலைத் தவிர வேறொன்றும் உண்மையாக முடியாது என்று கூறி மேற்சொன்ன கடப்புநிலைவாதத்தை, மீபொருண்மைவாதத்தை மறுத்தார்.
நவீன ஐரோப்பியர்களுக்கும், நம்மூர் காந்தியவாதிகளுக்கும், அவர்களுக்கு அடுத்து வந்த லட்சியவாத தலைமுறைக்கும், இன்றும் எழுதிக்கொண்டிருக்கும் அந்த வம்சாவளியை சேர்ந்தவர்களுக்கும் பிரச்சினை கடவுள் நம்பிக்கை இல்லாமல் தம் பக்தியை எப்படி முன்னெடுப்பது என்பதே, கடவுள் இல்லாமல் தன்னிலையைக் கடந்து ஒரு கற்பனை highக்குள் எப்படி போவது என்பதே, வெறுமனே இந்த உடலுடன் உலகில் இருப்பது அச்சமூட்டாதா என்பதே. நீட்சே ஐரோப்பியர்களிடம் இந்த மனநோயை Christian morality என்றார் என்றால் தமிழில் இது ஒரு ஹிந்து morality ஆக இருக்கிறது.
இவர்களுக்கு காவடி தூக்கிக் கொண்டு மலையேறும் சாமான்யர்களே மேல்.
