இரண்டாவது டெஸ்டின் மூன்றாவது நாளான இன்று ஆஸ்திரேலியாவுக்கு வென்று இந்தியாவுக்கு எதிராக தொடரை சமன் செய்ய ஒரு சிறந்த வாய்ப்பிருந்தது. இரண்டாவது நாள் அடித்திருந்த 63 ரன்களுடன் ஒரு 150 ரன்கள் கூட அடித்திருந்தால் போதும், அந்த இலக்கை அடைய இந்தியா தத்தளித்திருக்கும். அவர்களின் 9 விக்கெட்டுகள் இருந்தன. ஆனால் ஐம்பது சொச்சம் ரன்களுக்கு அந்த விக்கெட்டுகளை மொத்தமாக பறிகொடுத்து வெற்றிவாய்ப்பை தொலைத்தனர். (ஷ்ரேயாஸ் ஐயர் சொன்னதைப் போல) நாளின் முதல் ஒருமணி நேரத்தில் பெரோஷா கோடா மைதானத்தில் ஆடுவது மிகவும் சிரமமாக இருக்கிறது, அப்போது சற்று பொறுத்தாடினாலே போதும், மிச்ச செஷன்களில் அடித்தாடுவது சற்று சுலபமாகும். ஆஸ்திரேலியா டிராவெஸ் ஹெட்டை இழந்த பின்னர் ஸ்மித், லேபுஷேன் ஜோடியின் ஆட்டத்தின் போதும் அதை சரியாகவே செய்தது. ஆனால் அஷ்வின் ஓவர் தெ விக்கெட் வந்து ஒரு பந்தை லெங்க்தில் சற்று வேகமாக வீசிய போது அது அங்குள்ள இளகலான மண்ணில் பட்டு எகிறி திரும்பியது. லேபுஷேன் அத்துடன் ஸ்வீப் செய்வதை நிறுத்தி தடுத்தாடத் தொடங்கினார். ஸ்மித்தின் பதற்றமானார். ஏனென்றால் அவர்கள் அதுவரை அவ்வப்போது தடுப்பது, இறங்கி அடிப்பது, ஸ்வீப் செய்வது என சரளமாக ஆடி வந்தன. அந்த ஒரு பந்து அவர்கள் மனதுக்குள் தடுத்தாடுவது மற்றும் ஸ்வீப் செய்வது குறித்த நம்பிக்கையை குலைத்தது. இப்போது அவர்கள் குழம்பிப் போய் தேவையில்லாத ஷாட்களை அடித்து விக்கெட்டுகளை இழந்தனர். அவர்களுக்கு அடுத்து வந்த வீரர்கள் கண்மூடித்தனமாக ஸ்வீப் அடித்து விக்கெட்டுகளைக் கொடுத்ததைக் காண பரிதாபமாக இருந்தது. வர்ணனையாளர்கள் திரும்பத் திரும்ப சொன்னதைப் போல ஒரு ஆஸி அணி இவ்வளவு குருட்டுத்தனமாக அவலமாக ஆடி இதுவரை நாம் பார்த்ததில்லை. அவர்களுடைய கேப்டன் கம்மின்ஸ் தான் சந்தித்த முதல் பந்தில் அடித்த அந்த கேவலமான ஸ்லாக் ஸ்வீப் அவர்கள் எந்தளவுக்கு அவநம்பிக்கையுடன், கவனமின்மையுடன் ஆடினார்கள் என்பதற்கு சான்று.
அதன் பிறகு இந்தியா நூறு சொச்சம் ரன்களை எடுப்பதைத் தடுக்க முடியும் எனும் நம்பிக்கையை ஆஸியினர் முழுக்க இழந்திருந்ததால் அவர்கள் ஆடியது ஏதோ கட்டாய திருமணத்தின் போது அழுதபடி மணப்பெண் அமர்வதைப் போல இருந்தது.
இன்று ஆஸியினர் மட்டையாடியது ஜப்பானியரின் தற்கொலை சடங்கான ஹராகிரியை ஒத்திருந்தது. வாளை எடுத்து வயிற்றைக் கிழித்து கொடூரமாக ரத்தம் வழிய வழிய சாவது அது. இது ஒரு கூட்டு ஹராகிரி.
