பெண்களின் குற்றங்களைப் பற்றி, பெண் சார்பு, பாரபட்ச திருமண, வரதட்சிணை, வன்கொடுமை தடுப்பு சட்டங்களைப் பற்றி பேசினால் பெண் வெறுப்பாளன் என முத்திரை குத்துகிறார்கள். பெண்ணைப் பிடிக்கலைன்னா அதை அறுத்துக்கோ என பேஸ்புக்கில் சில பெண்களே எழுதுகிறார்கள். (இதே மொழியை ஒரு ஆண் பயன்படுத்தினால் அவனை சிறையில் தள்ளி விடுவார்கள். சரி அது போகட்டும்!)
என்னைப் பொறுத்தவரையில் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை - பெண்ணியம் வளர்ந்த வந்த ஆரம்ப காலங்களில் பெண்ணியவாதிகளை பொது சமூகம் ஆண் வெறுப்பாளர்கள் என்றே அழைத்தது. அந்த கால படங்களில் இவ்வாறே பெண்ணுரிமை போராளிகள் அடையாளப்படுத்தப்பட்டார்கள். ஆனால் அடுத்தடுத்த பத்தாண்டுகளில் பெண்ணியம் இயல்பாக்கம் செய்யப்பட்டது. தாராளவாத சந்தைப் பொருளாதாரமும் சமூக இயக்கங்களும் பெண்ணிய விழுமியங்களை நவீன வாழ்வின் கட்டாயங்களில் ஒன்றாக்கின. அப்போது ஆண்களும் பெண்ணியம் பேச ஆரம்பித்து போலி பெண்ணியவாதிகள் ஆகினர். ஆண் வெறுப்பாளன் எனும் பட்டம் மறைந்தது. இதுவே இப்போது ஆண் உரிமை பேசும் ஆண்களுக்கும் நடக்கிறது. அவர்கள் 'பெண் வெறுப்பாளர்கள்' ஆகிறார்கள்.
ஆண்களோ நான் உண்மையைத் தானே பேச்னேன், நான் எப்போ பெண்ணை வெறுத்தேன் என குழம்புகிறார்கள். ஆனால் நாம் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும் - ஆணியமும் ஒருநாள் இயல்பாக்கம் பெறும். அன்று பெண்கள் ஆணியம் பேசுவார்கள் (போலி பெண்ணியம் போல போலி ஆணியம் உருவாகும்)
இதையே பின்நவீனத்துவம் வெற்று குறிப்பான் என்கிறது. பெண் வெறுப்பு குறிப்பீடு இல்லாத வெற்றான ஒரு குறிப்பான். அது இப்படி மிதந்து கொண்டிருக்கும். அவ்வப்போது யார் தலையிலாவது அமரும். பிற்போக்காளன், சாதியுணர்வாளன், ஆதிக்க மனோபாவம் கொண்டவன், மதவாதி என்பன வேறு வெற்று குறிப்பான்கள். மேற்சொன்ன சங்கதிகளை வாழ்வில் பின்பற்றிக் கொண்டே ஒரு அதிகாரத்துக்காக யாரையாவது செருப்பால் அடிப்பதற்கு இந்த வெற்று குறிப்பான்கள் நமக்கு பயன்படுகின்றன. கொள்கை, கோட்பாடு, மனிதநேயம், சமத்துவம் போன்றவை வாழ்வோடு எந்த தொடர்பும் இல்லாத வெறும் சொற்கள் எனத் தோன்றுவது இந்த சூழலாலே.
எல்லாமே பேச்சளவில், எழுத்தளவில் நின்று போகிற ஆபாசமான சீரழிவான சூழலில் நாம் இன்று வாழ்கிறோம். எதை வேண்டுமானாலும் தேவைக்கேற்ப திரித்து பயன்படுத்தலாம் என மக்கள் நினைக்கிறார்கள். பெண்கள் பெண்ணியத்தை தரையில் கிடக்கிற சாணியை எடுத்து பிடிக்காதவர்கள் மீது அடிப்பதைப் போல அடிக்கிறார்கள். ஏன் அடிச்சே என்று கேட்டால் நான் பாதிக்கப்பட்டவள், நீதான் என்னை இப்படி அடிக்க வச்சே என நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள்!