ஆளுங்கட்சியின் ஊழல் - அதை எந்த கட்சி செய்தாலும் - ஒரு தனி பிரச்சினை. ஊழலை நான் இப்படி புரிந்து கொள்கிறேன் - அது முதலீட்டிய சந்தையில் முறையற்று பெருகும் பணம் எனும் கொள்ளையை ஆட்சியாளர்கள் அனுமதிப்பதற்காக அவர்களுக்கு வழங்கப்படும் ஒரு நன்றித்தொகை.
நாம் தீவிர முதலீட்டிய விசுவாசிகள் என்பதால், இந்த பொருளாதார அமைப்பினால் பலனடைகிறவர்கள் என்று நம்புகிறவர்கள் எனபதால், இதில் முறையற்று கையூட்டை வழங்குவோர் அதே பணத்தை முறையற்று தானே சம்பாதிக்கிறார்கள் என்பதை ‘கவனிக்க’ தவறுகிறோம். ஒரு துறைமுக கட்டுமானம் ஒருவருக்கு மட்டும் வழங்கப்படுகிறது என்றால் அது ஏன்? நெடுஞ்சாலை பணிகள் ஒருவருக்கே கிடைக்கிறது என்றால் அது ஏன்? அதில் அபரிதமான பணம் முறையற்று வருகிறது என்பதாலே. உடனே நாம் ஊழல் இருப்பதனால் தான் முறையற்று சம்பாதிக்கும் முறை வருகிறது என்கிறோம். நான் இதை திருப்பி பார்க்கிறேன் - ஊழல் எனும் வழக்கம் இருப்பதே முறையற்று சம்பாதிக்கும் நிலை உள்ளதாலே.
ஆக இந்த பொருளாதார கட்டமைப்பிலேயே அடிப்படையான பிழை உள்ளது. அது என்னவென்று அறிய நாம் ஏன் ஒப்பந்த பணிகளை ஒரு அரசே எடுத்து நடத்த முடியாது என யோசிக்க வேண்டும். ஒரே காரணம் லாபத்தை எப்படி கணக்கு வைப்பது என்பதே. உ.தா., நான் ஒரு பேனாவை உற்பத்தி பண்ணியாக வேண்டும். அதற்கான உற்பத்தி செலவு 6 ரூ. அடக்க விலை 10. 4 ரூ லாபம். ஒப்பந்த பணியின் போது அடக்கவிலை அரசு முன்னரே கொடுக்கும் பணம், உற்பத்தி செலவு ஒப்பந்ததாரருக்கு பின்னர் நிஜமாக ஆகும் செலவு. அதாவது நாலு ரூபாயை கூட்டி சொல்லி செய்து பெறுவதே லாபம். இப்படி இந்த அமைப்பிலேயே ஒரு ஊழல் இருக்கிறது. நீங்கள் இந்த வித்தியாசத்தை எந்தளவுக்கு அதிகப்படுத்துகிறீர்களோ அந்தளவுக்கு ஊழல் அதிகரிக்கிறது எனப் பொருள். ஜனநாயக ஆட்சியின் ஆகப்பெரிய அபத்தம், வேடிக்கை இந்த ஒப்பந்த பணிகளும், கொள்முதலும் தான்.
சரி இந்த 4 ரூபாய் லாபத்தை நேர்மையாக வாங்கிக்கொண்டு போனால் ஊழலே இருக்காதே என யோசிக்கிறீர்களா? இங்கு தான் நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும் - இந்த 4 ரூபாயே அடிப்படையில் ஒரு ஊழல் தான். அது நியாயமான ‘உபரியோ’, லாபமோ அல்ல. தாராள பொருளாதார சந்தையின் லாஜிக்குக்கே வருகிறேன். சந்தையில் பலத்த போட்டியின் நடுவே ஒரு பண்டத்தை விற்கும் போது நீங்கள் உங்கள் பண்டத்தின் தரத்தின் அடிப்படையிலே வெல்ல முடியும். ஆனால் இங்கு அப்படி ஒரு முறை இல்லை. உ.தா., கொள்முதலில் இதனை நடைமுறைப்படுத்தலாம்: அரசு மாணவர்களுக்கு இலவசமாக கொடுப்பதற்காக மடிக்கணினியை வாங்குகிறது. டெண்டர் முறைக்கு பதிலாக இந்த மடிக்கணிகளை சாம்பிளாக வாங்கி பயனர்களுக்கு கொடுத்து கருத்துக்கேட்டு அதன் அடிப்படையில் அரசின் எந்த தலையீடும் இன்றி ஒப்பந்தத்தை கொடுப்பதானால் அங்கு ஊழலைத் தவிர்க்கலாம். ஒப்பந்தம் பெற்ற பின் உற்பத்தி ஆகும் மடிக்கணிகளின் தரம் குறைவென்றால் அதை ஒப்பிட்டே கண்டுபிடித்து சுலபத்தில் முறைகேட்டை நிரூபிக்கலாம். ஆனால் இப்போதோ ஒரு பண்டத்தின் உற்பத்தி செலவில் சந்தையில் உள்ள மதிப்பென்ன, இவர்களுக்கு அளிக்கப்பட்ட தொகைக்கும் அதற்குமான வித்தியாசம் என்ன என்பதை வைத்தே ஊகம் மூலம் ஊழலை உறுதி செய்ய வேண்டி வருகிறது. அப்போதும் ஒப்பந்ததாரர் தப்பித்து விடுவார்.
இதே போல, சாலை, துறைமுகம், விமான நிலையம் போன்ற கட்டுமானப்பணிகளைப் பொறுத்தமட்டில் அரசுக்கு உள்ள உள்கட்டமைப்பையும் செல்வத்தையும் வைத்து அரசே இப்பணிகளை செய்ய இயலும். மேலும் பணத்தைக் கொடுக்கும் அரசே முதலாளி எனும் போது அதை அரசால் தானே செய்ய இயலாதா? ஆனால் அப்படி செய்தால் தானே ஆளுங்கட்சியால் எஸ்டிமேட் போட்டு தானே குறைந்த செலவில் முடித்து லாபத்தை எடுத்து பாக்கெட்டில் போட முடியாது என்று இப்படி வெளியே விட்டு ஊழல் பண்ணி பணத்தை அடிக்கிறார்கள் ஆட்சியாளர்கள்.
இதற்கு மது உற்பத்தி ஒரு நல்ல உதாரணம். அரசு மதுவை விற்கிறது, ஆனால் உற்பத்தியை கட்சிக்காரர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். இதையும் அரசே செய்தால் அரசின் நிதிநிலைமை மேம்படும், ஆனால் ஊழல் பண்ண முடியாது.
இந்த 4 ரூ என்பது பல ஆயிரம் கோடி முதலீட்டில் எத்தனை கோடி என யோசியுங்கள். மேலும் 4 ரூபாய் என்பது நியாயமான அநியாய லாபம் என்றால் அதை 6 ரூ ஆக்கினால் அது அநியாயமான அநியாய லாபம். அப்போது ஆட்சியாளர்கள் இதில் கையிட்டு வாரத்தான் முயல்வார்கள்.
இப்பணிகளை செய்ய அரசிடம் பணமே இல்லை என்பவர்களிடம் நான் கேட்கும் கேள்விகள்:
ஊழல் கணக்கில் வரும் இவ்வளவு கோடானு கோடி பணம் யாருடைய பணம்?
பணமே இல்லாத அரசால் எந்த சொத்துப்பின்னணியும் இல்லாத அதானியை எப்படி பத்தாண்டுகளில் உலகப் பணக்காரர்களில் ஒருவராக மாற்ற முடிந்தது?
பணமே இல்லாத அரசை நடத்தும் ஆளுங்கட்சியால் எப்படி இவ்வளவு பணத்தை தேர்தல் நிதியாக இறக்க முடிகிறது?
இவை முழுக்க மக்கள் பணமென்றால் மக்கள் பணமும் அரசின் பணமும் வேறு வேறா?
கடைசியாக, ஒப்பந்தத்தின் போது அரசால் வழங்கப்படும் பணம் அரசுடையது தானே?
எப்போதும் நம் நாட்டில் ஒரு கட்சியிடம் அபரிதமான பணம் இருக்கும், ஆனால் அரசின் கஜானாவில் குறைவாகவே இருக்கும், ஆனால் ஆட்சி பண்ணும் கட்சியானது தன்னையே அரசு என்று எண்ணவும் செய்யும். இது முரண் இல்லையா? மேலும் இப்படி அரசு கஜானா காலி செய்யப்படுவதே தனியார்மயமாக்கலின் முக்கியமானதாக்கி மொத்தத்தையும் அவர்களிடம் விற்கவே.
நாம் ஊழலைப் பற்றி பேசும் போது செய்யும் பெரிய தவறு கட்சிகளை மட்டும் குறைசொல்லிவிட்டு பொருளாதார அமைப்பில் செல்வம் எங்கெல்லாம் போகிறது என்பதை கண்டுகொள்ளாமல் விடுவது. அதாவது காரணத்தை (பொருளாதாரம்) விட்டுவிட்டு அறிகுறியை (ஊழல்) சாடுவது. அதனாலே நம் மக்கள் ஒரு கட்சி அதிகமாக ஊழல் செய்கிறது எனத் தெரிந்தால் “நீ அடிச்சது போதும், அடுத்தவன் வரட்டும்” என அடுத்த கட்சியை ஆதரிக்கிறார்கள். அவர்கள் கொள்ளையடிப்பது அதிகமானால் “உனக்கு முன்னே இருந்தவன் இனி கொஞ்சம் அடிக்கட்டும்” என அவர்களை அழைக்கிறோம். இதில் எதாவது லாஜிக் உள்ளதா?
நான் ஒரு வாக்காளனாக இருந்தால் யார் அதிகமாக ஊழல் செய்தார்கள், யார் அண்மையில் ஊழல் செய்தார்கள் என்று பார்த்து ம்யூசிக்கல் சேர் விளையாடாமல் இந்த சீரழிவுக்கு காரணமான பொருளாதார அமைப்பை மாற்றக் கேட்பேன். அதற்காக போராடுவேன். பேசுவேன். அப்படி என்னால் கேட்க முடியாவிட்டால், ஒரு கட்சியின் அரசியல், கொள்கை முடிவுகளின் அடிப்படையில் மட்டுமே வாக்களிப்பேன் (ஊழலைக் கருதி அல்ல).
இப்போது திமுக அரசின் ஊழல் குறித்து பொங்குகிறவர்களை கவனியுங்கள் - இவர்கள் மத்தியில் ஆளும் கட்சியின் மறைமுக ஆதரவாளர்களாக, மூன்றாவது அணியின் தொண்டர்களாக இருப்பார்கள். இவர்கள் ஒன்றிய அரசின் ஊழல்களைப் பற்றி சேதி வந்தால் கமுக்கமாக இருப்பார்கள். இவர்களுக்கு ஊழலை ஒழிப்பதில் எந்த அக்கறையும் இல்லை.
நமக்குத் தேவை ஊழல் ஒழிப்பு அல்ல, இந்த பொருளாதார அமைப்பின் மாற்றமே. அதுவே பிரச்சினையின் இலைகளைக் கிள்ளிவிட்டு நாடகமாடாமல் ஆணிவேர் வரை சென்று மாற்றுவது. அதுவரை ஊழலை விவாதிப்பதைப் போல பெரிய பாசாங்கு வேறில்லை.
பின்குறிப்பு: என் நோக்கம் ஒரு கட்சியின் ஊழலை ஆதரிப்பதோ ‘முட்டுக்கொடுப்பதோ’ அல்ல. உண்மையான பிரச்சினையை பேசுங்கள் எனக் கோருவதே.