நான் குடும்ப நல மீது மன்றத்தில் வழக்கில் சிக்கித் தவிக்கும் போது எனக்கு என் மிக மிக நெருங்கின உறவுகளிடம் இருந்து ஒரே ஒரு ஆறுதல் வார்த்தை கூட கிடைக்கவில்லை என்று கடந்த பதிவொன்றில் வருந்தினேன் அல்லவா அப்போது ஒரு பெயரை குறிப்பிட மறந்து விட்டேன் - அவர் இரா.முருகவேள். அவர் வக்கீலும் கூட என்பதால் அவரிடமே மணிக்கணக்கில் ஐயங்களை கேட்டு தெளிவுபெறுவேன், புலம்புவேன். மனிதர் அவ்வளவு பொறுமையாக எனக்கு மீண்டும் மீண்டும் விளக்குவார். அது எவ்வளவு சிரமம் என்பதை என்னிடம் இப்போது மற்றவர்கள் வந்து புலம்பும்போது புரிகிறது.
நொந்து போயிருக்கும் அந்த சமயத்தில் ஒரு ஆணாக நமக்குத் தேவை பொறுமையாக நாம் சொல்வதைக் கேட்டு தைரியமூட்ட ஒரு ஆள். சட்ட நுணுக்கங்களை சொல்லித் தர முடிந்தால் இன்னும் நல்லது. நாம் குடும்ப உறுப்பினர்களிடம் எதிர்பார்ப்பது இந்த முதலாவது விசயத்தை. மேலும் அப்போது இவர் நம்மை முழுமையாக ஆதரிக்கிறார், நம்புகிறார் எனும் எண்ணமும் வர வேண்டும். நம்மிடம் காதுகொடுத்துக் கொண்டே உள்ளுக்குள் நம் எதிர்க்கட்சியை ஆதரிக்கிறார் என அவர்களுடைய சொற்கள் காட்டிக் கொடுத்தால் செருப்பால் அடித்ததைப் போலிருக்கும். அதுவும் நம் உறவுகள் இருக்கிறார்களே பக்கத்து தெருவில் ஒரு ஆணுக்கு இது நடந்தால் அவனுக்காக பரிந்துபேசுவார்கள், ஆனால் சொந்த குடும்பத்து ஆணென்றால் அதில் 10% கூட இருக்காது. இதை நான் என் அனுபவத்தில் இருந்து மட்டும் சொல்லவில்லை. துமிலனே இது பல ஆண்களுக்கும் நடப்பதாக சொல்கிறார். பல ஆண்கள் என்னிடம் தெரிவிக்கவும் செய்கிறார்கள்.
இத்தனைக்கும் நான் முருகவேளுடன் அதற்கு முன் பேசியதில்லை. அவருக்கு எந்த ஆதாயமும் இல்லை. (அவரால் சென்னை வழக்குகளை எடுத்து நடத்த முடியாது.) ஆனாலும் கேட்பதற்கு அவரிடம் ஒரு இதயம் இருந்தது.