நியூஸ் செவன் பேட்டியில் அருள் துமிலன் இங்கு சொல்வது 100% உண்மை என்பதை நான் என் அனுபவத்தில் கண்டுகொண்டேன். ஒருவேளை நானும் வழக்காடு மன்றம் ஏறி இறங்கவில்லை என்றால் இது ஏதோ ஒரு வேடிக்கை என்று இக்கருத்தை கடந்து போயிருப்பேன். ஆனால் எனக்கு கிடைத்த அனுபவம் என்னை காலைப் பற்றி அடித்து வீழ்த்தியது. எனக்கான பணத்தை நான் எப்பாடு பட்டேனும் சம்பாதித்துக் கொள்வேன், நானே பயணிப்பேன், எல்லா வேலைகளையும் செய்யத் தயார், எனக்கு அது குறித்து புகார் இல்லை. நான் எதிர்பார்த்தது ஒரு ஆறுதல், அக்கறை, நாங்கள் கூட இருக்கிறோம் எனும் மன ஆதரவு (moral support). ஆனால் அதை வழங்க எனக்கு என் குடும்ப வட்டத்தில் யாருமே இல்லை. நான் அந்தளவுக்கு தனிமையை இந்த அமைப்பின் சக்கரங்களுக்கு இடையே சிக்கிக் கொண்ட போதே முதன்முதலில் உணர்ந்தேன். ஆணென்ன பெண்ண நான் ஒரு மனிதன் தானே என நினைத்தது தவறு, இந்த சமூகமும் சட்டமும் நம்மை பாலினத்தின் அடிப்படையிலே டீல் செய்கிறது எனும் அடிப்படை உண்மையை புரிந்து கொண்டேன். அடேய் கல்யாணத்தின் போது இத்தனை பேர் வந்தீர்களே, இப்போ எங்க போனீங்க என எனக்குள் கேட்டுக்கேட்டு சோர்ந்து போனேன். நீதிமன்றத்தில் நான் சந்தித்த பல ஆண்களுக்கும் இதுவே நடக்கிறது எனக் கண்ட கொண்ட போது இந்த நிதர்சனம் சமூகம் முழுக்க உள்ளது எனப் புரிந்து கொண்டேன். அங்கு 99% பெண்களுடன் அவர்களுடைய அம்மா, அப்பா, அண்ணன் என யாராவது வருகிறார்கள். இது போல சில குடும்பங்கள் நீதிமன்ற வளாகத்திலே ஏதோ பாதுகாப்பு படை போல வலம் வரும். ஆண்கள் தனியாக கொக்கு போல திரிவார்கள். அட இது ஆணாதிக்க சமூகமாயிற்றே, எங்கே போயிற்று ஆண்களின் ஆதிக்கம் என நான் முதன்முதலில் யோசித்தது அங்குதான். என்ன பிரச்சினை என்றால் குடும்ப அளவிலேயே ஆண்களுக்கு எந்த மரியாதையும் இல்லை. இது ஏன்? அவன் என்ன தப்பு பண்ணுகிறான்?
என்னை எடுத்துக் கொள்ளுங்கள். மணமுறிவின் போது என் மீது எந்த பலமான குற்றச்சாட்டுகளும் இல்லை. (இதுவே சில ஆண்கள் மீது ஏகப்பட்ட போலி குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன எனும் போது யோசித்துப் பாருங்கள்.) ஆனாலும் ஒருவர் கூட என்னிடம் வந்து “இட்ஸ் ஓக்கே, இந்த அமைப்புக்குள் இப்படித்தான் பாரபட்சமாக இருக்கும், எங்கள் ஆதரவு உன்னுடன் உண்டு.” என்று சொல்ல வேண்டும் என்று மட்டுமே எதிர்பார்த்தேன். ஆனால் எனக்கு கிடைத்த எதிர்வினை இங்கு துமிலன் நியூஸ் செவன் பேட்டியில் சொல்வதைப் போலவே இருந்தது - “நீ தான் தப்பு பண்ணியிருப்ப, அவள் நல்லவளாகத் தான் இருக்கணும், எல்லா ஆம்பளைங்களும் கெட்டவங்க தானே.” “அட, அப்போ ஏன் இத்தனை நாளா என் கிட்ட பாசமா பழகினீங்க? ஏன் என்னைக் கூடவே வச்சிக்கிட்டீங்க? ஏன் இனிமேலும் என் கிட்ட பழகுறீங்க? ஆண் என்றாலே அவன் கேடுகெட்டவன் தானே? ஏன் கல்யாணம் பண்ணி வைக்கிறீர்கள்? ஒதுக்கி வைக்க வேண்டியது தானே? ஏன் ஆண் குழந்தையை பெற்றுக் கொள்கிறீர்கள்?” இவையெல்லாம் என் மனத்தில் அச்சமயம் என் மனதில் எழுந்த கேள்விகள். இவையே நீதிமன்றத்தில் வாலை சுருட்டி கால்களுக்குள் ஒளித்துக்கொண்ட நாய்களைப் போல உலவும் ஆண்களின் மனதிலும் வந்த கேள்விகளாக இருக்க வேண்டும். நான் அவர்கள் ஒவ்வொருவரிடமும் இக்கேள்வியைக் கேட்டிருக்கிறேன். உங்களுக்கு உங்கள் குடும்பத்தின், பெற்றோரின், உறவினரின் ஆதரவு உண்டா? “இல்லை” என தவறாமல் சொன்னார்கள். அதே நேரம் இந்த ஆண்களிடம் இருந்து தம் பெற்றோரும் உறவினர்களும் வழக்கு நடக்கும் போது, நடந்து முடிந்த பின்னரும் ஏதோ ஒரு பங்களிப்பை எதிர்பார்த்துக் கொண்டே இருந்தார்கள். பொருளாதார ரீதியாக அல்லது சீர், மோர் இப்படி எதாவது. ஆனால் திரும்ப அங்கிருந்து எதுவும் ஆணுக்கு கிடைக்காது. பெண்ணுக்கோ எப்போதும் எதாவது ஒரு உதவி குடும்ப வட்டங்களில் இருந்து கிடைத்துக்கொண்டே இருக்கிறது, அவள் திரும்ப பணமாகவோ உதவியாகவோ கொடுக்க வேண்டும் எனும் கட்டாயம் பெரும்பாலும் இல்லை. அதாவது ஒரு பெண் தான் வேலை பார்த்து சம்பாதித்த பணத்தை தன் பெற்றோருக்கு மாதம் ஒரு தொகையாகவோ சொத்தாகவோ பொருளாகவோ வாங்கிக் கொடுக்கவில்லை என்றாலோ (அப்படி கொடுக்கும் வெகுசில பெண்களும் உண்டு எனினும்), அவளே தம் சம்பளம் மொத்தத்தையும் தன் தேவைக்கு செலவழித்து ஜாலியாக இருந்தாலோ பிரச்சினை இல்லை. ஆனால் ஒரு ஆண் அப்படி இருக்க முடியாது. அவன் கொடுத்து கொடுத்து சிவக்கும் கை. ஆனால் அவனே அடிபட்டு அடிபட்டு ‘புண்ணாகும்’ கையும். அவன் கொடுக்காவிட்டால் அவனை ஊரும் தேரும் ஆறும் அனைவரும் பழிப்பர். சில நேரங்களில் துண்டித்து விட்டுவிடுவர். ஆனால் பெண்கள் தாமாகவே குடும்ப வட்டங்களில் இருந்து, பெற்றோரிடம் இருந்து துண்டித்து செல்லாத பட்சத்தில் அவர்களுக்கு முழு ஆதரவும் இருக்கும். பெண் என்பவள் dad’s little princess அல்ல, அவள் மொத்த குடும்பத்தின், உறவுகளின், family and extended family’s little princess. இதுவே எதார்த்தம். இது ஏன் இந்தளவுக்கு பாரபட்சமாக இருக்கிறது, ஆனாலும் யாரும் இதைப் பற்றி பேசவில்லையே என்றால் இரண்டு காரணங்கள்: ஒன்று இது உணர்வு அடிப்படையில் மறைமுகமாக நடக்கிறது. அடுத்து, இதை செய்து கொண்டு ஆணாதிக்கம், ஆணாதிக்கம் என்று ஊடகங்களில், கல்விப்புலத்தில் கூக்குரலிட்டுக் கொண்டிருக்கிறோம். அதாவது வீடு பற்றி எரிகிறது, வாங்க வாங்க என்று கத்திக்கொண்டே திருடர்கள் அங்குள்ள பொருட்களை ஆட்டையப் போடுவதைப் போல. (அட நான் உங்களை திருடன் என்று சொல்லிவிட்டேன் என்று என்னை வந்து கும்மாதீங்க. இதுவே உண்மை.) இந்த பேசுவது ஒன்று, செய்வது மற்றொன்று எனும் அணுகுமுறை தான் நம் ஊரில் நடக்கும் நவீனமாக்கல்.
சரி ஏன் இது இப்படி இருக்கிறது என யோசித்துப் பார்த்ததுடன் அதைப் பற்றி சிறிது ஆய்வும் செய்தேன். மேற்கத்திய ஐரோப்பிய சமூகங்களில் முன்நவீன யுகத்தில் பெண்களை நடத்தியதற்கும் தெற்காசிய சமூகங்களில், இந்திய துணைகண்டத்தில் நாம் பெண்களை நடத்தியதற்கும் பாரித்த வித்தியாசம் உள்ளது. நாம் கணிசமாக விவசாயத்தை நம்பி வாழ்ந்த சமூகங்கள். இத்தகைய சமூகங்களின் பெண்களுக்கு இருகூறான இடம் உள்ளது: பெண்களே இத்தகைய சமூகங்களில் 43% மேல் உற்பத்தியில் ஈடுபட்டு வந்ததாக SOFA அணியினர் மற்றும் செரில் டோஸ் ஆகியோர் செய்த ஆய்வில் குறிப்பிடுகிறார்கள். வளர்ந்து வரும் கணிசமான நாடுகளில் பெண்களே முக்கியமான விவசாய பணிகளையும் வீட்டை நிர்வகிக்கும் பணிகளையும் எடுத்து நடத்தி வந்தார்கள். ஜக்தீப் சிங், உர்சுலா ஷர்மா போன்றோரின் ஆய்வுகள் இந்திய அளவில் பெண்களின் வேளாண் பங்களிப்பை பற்றி பேசுகிறார்கள். இன்னொரு முக்கிய கருத்து என்னவென்றால் ஆதிகாலத்தில் விவசாயம் என்பதே பெண்கள் ஆரம்பித்து வைத்துதான், ஏனென்றால் ஆண்கள் உணவையும் வேட்டையில் இருந்து கிடைக்கும் கறியையும் நாடி திரிந்து கொண்டிருந்தார்கள், அப்போது பெண்களே விவசாயம் பண்ண கற்றுக்கொண்டு, அதன் பல நுட்பங்களைப் புரிந்துகொண்டு, குடும்பத்தையும் நடத்தி அதிகாரம் பெற்றிருந்தார்கள் என்பது. நாம் ஐரோப்பிய சமூகங்களில் மத்திய காலத்தில் நடந்த ஆண் மைய சிந்தனையை வைத்து ஒரு கட்டத்தில் மொத்த அதிகாரத்தையும் ஆண் பெண்ணிடம் இருந்து பறித்துக்கொண்டான் என நம்புறோம். ஆனால் அடிமட்டத்தில் போய், ஆசிய நாடுகளில் கிடைக்கும் தரவுகளைப் பார்த்தால் இது உண்மை அல்ல. ஏனென்றால் இங்கே தான் matriarchy எனப்படும் பெண் நிர்வாக சமூக அமைப்புகள் இருந்துள்ளன. சரி ஆணே நிலத்தின் மீதான உரிமையைப் பெற்றிருந்தான் என்று கொண்டாலும் ஆண்களை உற்பத்தி செய்வது யார் பெண்ணுடல் தானே? இதுவே நான் குறிப்பிடும் மிதமிஞ்சிய பெண் முக்கியத்துவத்தின் இரண்டாவது கூறு.
என்னதான் குழந்தைப்பேறில் ஆணின் பங்கு இருந்தாலும் பெண் பிரவிப்பதால் அவள் ஏதோ பிரம்மா என்பதைப் போல நம் சமூகங்கள் மட்டுமல்ல பல ஆதிசமூகங்களும் நம்பியிருக்கின்றன. பிரம்மன் என்பவன் ஆண் என்கிற கோட்பாட்டைக் கூட மேய்ப்பர்களான ஆரியர்கள் கொண்டு வந்தது என்பதை கவனியுங்கள். உழுதுண்டு வாழ்ந்தவர்களுக்கு பெண்ணே படைப்புக் கடவுள். அவர்களுக்கு உலகைப் படைத்தது பிரம்மன் அல்ல பிரம்மி தான்.
ஆகையால், கலாச்சார ரீதியாகவும், நிலங்களில் பணிசெய்வதற்கான ஆண்களை உற்பத்தி செய்பவள் எனும் அளவிலும் பெண்ணுடலுக்கு ஒரு மிதமிஞ்சிய மதிப்பு நம் சமூகங்களில் ஏற்பட்டுவிட்டது. இதனாலே பெண் பூப்படைவது துவங்கி அவள் கர்ப்பமான பின்னர் பல்வேறு சடங்குகள் வரை நம் தமிழ் சமூகத்திலும் பிற ஆசிய சமூகங்களிலும் உள்ளது. ஏன் ஆண் பூப்படைவதை, அது என்னதான் அறியவியல் ரீதியாக உண்மையே என்றாலும், சமூகம் கண்டுகொள்ளாதது இந்த முட்டாள்தனமான கருத்தமைவினாலே. ஆனால் ஒரு பெண் மாதவிடாய் நிறுத்தம் பெறுவதை இச்சமூகம் கொண்டாடுவதில்லை என்பதை கவனியுங்கள். இவர்களுக்கு பெண்ணின் கருவளம் மட்டுமே முக்கியம்.
கடந்த அரை நூற்றாண்டில் (அல்லது நகரமயமான இடங்களில் ஒரு நூற்றாண்டாகவே) இந்த பொருளாதார உற்பத்தி முறை மாறினாலும் அந்த கலாச்சார நினைவுகளே இன்றும் நம்மை நடத்துகின்றன. அதுவே ஆண்கள் துன்பப்பட்டாலும், தற்கொலை பண்ணினாலும் சாலையில் அடிபட்டுக்கிடக்கும் பெருச்சாளியைப் பார்த்துக் கடந்துவிடுவதைப் போல இவர்களை நடந்துகொள்ள வைக்கிறது. மற்றபடி பெண்ணியவாதிகள் சொல்வதைப் போல பெண்கள் பலவீனமானவர்கள், அவர்களுக்கு ஆதரவு வேண்டும் எனபதால் அல்ல. ஏனென்றால் இதே பெண்களுக்கு பரவலாக ஏதோ ஒரு நோய் ஏற்பட்டு 20 வயதில் மாதவிடாய் வரட்டுமே, அடுத்த சில பத்தாண்டுகளில் பெண்களை ஆதரிப்பதை இச்சமூகம் உறுதியாக நிறுத்திவிடும். அதுமட்டுமல்ல கூட்டங்கூட்டமாக மக்கள் இதை விவாதிப்பார்கள், அழுது அரற்றுவார்கள், பாராளுமன்றத்தில் கூட காகிதங்களை ஆட்டி ஆட்டி கூச்சலிடுவார்கள். ஆனால் எல்லா ஆண்களுக்கும் சிறுவயதிலேயே மலட்டுத்தன்மை ஒரு நோய்க்கூறாக பரவலாக ஏற்படுகிறது என செய்தி வந்தால் - அதனாலும் இதே விளைவுதான் ஏற்படும் என்றாலும் - அதை ஒரு பொருட்டாகவே கருத மாட்டோம். நாம் அடிப்படையில் இன்னும் ஒரு விவசாய / நிலப்பிரபுத்துவ மனநிலையிலே இருக்கிறோம். நம் உடல் நவீன காலத்தில் உழைத்தாலும் மனதளவில் “விவசாயீ விவசாயீ, கடவுள் எனும் முதலாளி” என்று ஏரோட்டி பாடிக்கொண்டு இருக்கிறோம். அதனாலே பெண்ணென்றால் தெய்வம், ஆணென்றால் பேய் என உள்ளுக்குள் நினைக்கிறோம். அதனாலே பெண் என்றாலே கொதித்தெழுகிறோம், ஆண் என்றால் சவம் செத்தொழியட்டும் என விட்டுவிடுகிறோம்.
துமிலன் குறிப்பிடும் ஆண்களுக்கு எதிரான இந்த அலட்சியம், பாரபட்சம், உணர்வின்மை (apathy), பாலின புறக்கணிப்புக்கு பின்னால் இப்படியான ஒரு சமூக உளவியல் இருக்கிறது.
என்ன கூடுதல் பிரச்சினை என்றால் சட்டம் வேறு பாரபட்சமான ஏகப்பட்ட விதிமுறைகளைக் கொண்டு வந்து ஆண்களின் மென்னியில் ஏறி நின்று மிதிக்கிறது. என்ன ஒரு பொல்லாத காலம் இது!