மணிப்பூர் கலவரத்தின் போது அப்பெண்களின் சகோதரரும் தகப்பனாரும் கொல்லப்பட்டார்கள். மேலும் பல குழந்தைகளும் வயசாளிகளும் கொடூரமாக கொல்லப்பட்டார்கள். ஆனால் அச்சம்பவங்கள் மக்களின் ‘மனசாட்சியை’ தட்டி எழுப்பவில்லை. ஆனால் ஒரே ஒரு நிர்வாண ஊர்வலக் காணொளி மொத்த நாட்டையுமே உலுக்கிவிட்டது. ஏன்? நாம் அடிப்படையில் நிலப்பிரபுத்துவ / விவசாயக் குடி மனநிலை கொண்டவர்கள். நமக்கு நிலத்துக்கு அடுத்தபடியாக பெண்ணுடலே முக்கியம். அதுவும் பெண்ணின் கருப்பை, அவளுடைய கன்னிமை. ஏனென்றால் நிலத்தின் மீதான அதிகாரத்தை பெண்ணின் சந்ததி வழியாகவே நாம் நிலைநாட்ட முடியும். ஆனால் கடந்த ஒரு நூற்றாண்டாக இதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் துணிச்சல் நமக்கில்லை. ஆகையால் பெண் என்பவள் பலவீனமானவள், பெண்ணுக்கு எதிரான குற்றமே ஆகக்கொடூரமான மன்னிக்க முடியாத குற்றம், அது அநாகரிகம், அநீதி என ஜல்லியடிக்கிறோம். மணிப்பூர் சம்பவத்தின் போதும் அதுவே நடந்தது - அப்பெண்ணுக்கு நேர்ந்த துன்பத்தை விட அவளுடைய உடலுக்கு நேர்ந்த அத்துமீறலே நம்மை அதிகம் உலுக்கியது. அதை விட அந்த நிர்வாணம், அது வெகு சாதாரணமாக அவமதிக்கப்பட்டது, அதன் அநாகரிகம் இவையே நம்மை நடுநடுங்க வைத்தது. நமக்கு கொஞ்சமாவது நீதியுணர்வு இருந்தால் கொல்லப்பட்ட அந்த ஆண்களுக்காகவும் சிறிது சிந்தித்திருப்போம். ஏனென்றால் இப்பெண்களால் இந்த காயங்களில் இருந்து வெளிவந்து வாழ முடியும், ஆனால் செத்துப் போன அவர்களின் சகோதரர்கள், தகப்பன்களால் முடியாது.
துரதிஷ்டவசமாக என்னதான நவீனமானவர்கள் என்று நாம் நம்மைப் பற்றிக் கருதினாலும் நம்மால் இந்த நிலச்சுவான்தார் / விவசாயக்குடி உளவியலில் இருந்து கடைசிவரை வெளிவர முடிவதில்லை. பெரும் அறிவுஜீவிகளில் இருந்து, எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்களால் கூட முடியவில்லை. அந்த மனநிலையின் முன்பே கடைசியில் பிரதமரும் பணிந்திட, அநீதிக்கு எதிராக ‘கொந்தளிக்க’ நேர்ந்தது.
அமெரிக்காவில் ஒரு கறுப்பின ஆணின் கழுத்தில் மிதித்துக் கொன்ற போது பெரும் மக்கள் கூட்டம் திரண்டு எதிர்த்துப் போராடியது. இந்தியாவில் ஒரு பெண் மீது கைவைத்தால் மட்டுமே மக்கள் சஞ்சலப்படுவார்கள். நூறு ஆண்களின் கழுத்தில் ஒரே சமயம் மிதித்துக் கொன்றாலும் கண்டுகொள்ள மாட்டோம். எந்த சிவில் உணர்வும், சமத்துவத்தில் நம்பிக்கையும் இல்லாத சுரணை கெட்டவர்களின் நாடு இது. ஜீக்குத் தெரியும் இந்தியர்களின் ‘பாஞ்சாலி சபத மனநிலையை’ சீண்டினால் ஒருவேளை நிர்பயா விசயத்தில் காங்கிரஸுக்கு நடந்ததும் பாஜகவுக்கும் இப்போது நடக்கக் கூடும் என. அதனாலே அவர் ‘குரல் கொடுத்தார்’.
இந்த பண்பாடற்ற நாட்டில் வாழ்ந்துகொண்டு ஏன் நீதி, பேதி, சத்யமேவ ஜெயதே எனக் கூவுகிறோம் என்பதுதான் எனக்கு எப்போதும் மர்மமாக உள்ளது! இந்த பண்பற்ற நாட்டில் வாழ்ந்துகொண்டு ‘உங்களை நினைத்து அவமானமாக இருக்கிறது பிரதமரே’ என ஏன் கூக்குரலிடுகிறோம் என மர்மமாக உள்ளது! இதைவிட சிறந்த பொருத்தமான ஒரு பிரதமரோ ஒரு கட்சியோ நமக்கு அமைய முடியாது. எங்கள் ஊரில் சொல்வார்கள் ஈனாம்பேச்சிக்கு மரப்பட்டி கூட்டு என்று. கொடூரர்களும் மூடர்களும் நிறைந்த நம் நாட்டை ஒரு மாபியா தலைவனே ஆள வேண்டும்.