சில நாட்களுக்கு முன்பு இயக்குநர் வசந்தபாலன் “மகாநதியைப்” பற்றி மீள்மதிப்புரை எழுதியதைப் படித்த போது எனக்கு அதைப் பற்றி வேறு சில விசயங்கள் தோன்றின.
எனக்கு எப்போதெல்லாம் உலகத்தின் மீது கசப்பு ஏற்படுகிறதே அப்போதெல்லாம் “மகாநதியை” ஓட விட்டு என்னை மறந்து பார்த்திருப்பேன். என்னை அதிகமாக ஈர்ப்பது இப்படத்தில் நியாயம், தர்மம், அறம் பற்றி கமல் எழுப்பும் கேள்விகளே. ஒரு சின்ன கோடு, அதைக் கடந்து அந்தப் பக்கம் போய் விடலாமே எனத் தோன்றாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் செய்ய மாட்டோம் இப்படம் அது ஏன் என்பதைப் பற்றியதே எனத் தோன்றுகிறது. மனிதர்கள் தமது நலனுக்காக எதையும் செய்யலாம், யாரையும் ஏமாற்றலாம், சுரண்டலாம், துன்புறுத்தலாம். அதைப் பார்க்காமல், கண்டுகொள்ளாமல் இருப்பது நல்லதா அல்லது அதைப் பற்றி யோசிக்க வேண்டுமா என “மகாநதி” கேட்கிறது. அதற்குள் இன்னும் தீவிரமாக கமல் பயணிக்கவில்லை என்றாலும் தமிழில் வண்ணப்படங்கள் வந்த பிறகு அந்த பகுதிக்குள் யாருமே அனேகமாக பயணிக்கவில்லை, சினிமாக்கள் முழுக்க ஒன்று தனிப்பட்ட உறவுச்சிக்கல் அல்லது சமூகப் போராட்டம் என மாறிவிட்டதால் “மகாநதி” தொடர்ந்து ஒரு தனி இடத்திலே, உயர்வான இடத்திலே இருக்கிறது. நாம் நினைத்திருந்தால் கோடநாடு கொலைவழக்கில் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றியோ, தனிப்பட்ட முறையில் மிரட்டியும் அடித்துப் பிடுங்கியும் நடுத்தெருவுக்கு கொண்டு வரப்பட்டவர்கள் கொல்லப்பட்டவர்கள் பற்றியோ ஒரு படத்தை எடுத்திருக்கலாம். மதுரையில் ஒரு விஞ்ஞானி பல ஆயிரம் கோடிகள் மதிப்புள்ள ஒரு காப்புரிமத்துக்காக அவரது நண்பரால் ரௌடிகளைக் கொண்டு கொல்லப்பட்டார். நாம் சினிமாவில் மட்டுமல்ல எழுத்தில் கூட இந்த வாழ்க்கையை அறமானதாகவா அநீதியாகவா பார்க்க வேண்டும் எனும் கேள்வியை நேர்மையாக எழுப்புவதில்லை. கமல் தன் படத்தில் கிளைமேக்ஸில் ஒருவர் அநீதியைக் கண்டு பயந்து ஓடிக்கொண்டே இருக்கக் கூடாது, எதிர்த்து நிற்கவும் தண்டிக்கவும் வேண்டும் என சொல்லுவார். அந்த சினிமாத்தனமான முடிவை தவிர்த்தால் "ஷஷாங்க் ரிடெம்ப்ஷனைப்" போல இருத்தலியல் படமாகவும் எடுத்திருக்க முடியும்.
இன்னொரு விசயம் - வணிக சினிமாவில் எப்போதுமே ஒரு சேடோமசோக்கிஸ (சுயவதை இன்பம்) சரடு உண்டு. அந்த காலத்தில் வந்த “துலாபாரம்” போன்ற படங்கள் ஒரு கட்டத்தில் மறைந்துவிட்டன. (அதன் தொடர்ச்சியே 2000இன் பிற்பகுதியில் வசந்தபாலன், பாலா எடுத்தவை.) “மகாநதி” அவ்வகையின் மிக மிகக் ‘கொடூரமான’ சாத்தியம். மற்ற படங்களில் குழந்தை கொல்லப்படும், நாயகன் நாயகி கொல்லப்படுவார்கள், தெருவுக்கு வருவார்கள், தற்கொலை பண்ணுவார்கள். இதிலோ கற்பனை அப்பால் கொடுமைகள் நிகழ்கின்றன - குழந்தைகள் தற்காலிக அனாதையாக்கப்பட்டு, விபச்சாரியாகவும், கழைக்கூத்தாடியாகவும் மாற்றப்படுகிறார்கள். நாயகனுக்கு தொடர்ச்சியான அவமானங்கள் நடக்கின்றன. சொத்தையும் மரியாதையையும் இழக்கிறான். கடைசியில் அவன் தன் கையையும் இழக்கிறான். நம் மனதுக்குள் ஆயிரமாயிரம் புண்கள் முரடுத்தட்டி இருக்கின்றன. நாம் சில நேரங்களில் அப்புண்களை சுரண்டிப் பார்த்து வலியை நினைவூட்டி ரசிக்க விரும்புகிறோம். அதற்கு ஏற்ற படம் “மகாநதி”.
வசந்தபாலன் சொல்வதைப் போல “மகாநதிக்குள்” இரண்டு மூன்று படங்கள் இருக்கின்றன. அ) ஏமாற்றப்பட்ட ஒருவன் தன் பணத்தையும் குடும்பத்தையும் மீட்கும் கதை, ஆ) சிறையில் தன்னைத் தக்க வைக்கும் போராடி மீளும் ஒருவனின் கதை, இ) பழிவாங்கும் கதை. இந்த மூன்று கதைகளையும் போட்டுக் குழப்பாமல் ஒரே கதையை மட்டும் எடுத்திருந்தால் வணிக ரீதியாக வெற்றி பெற்றிருக்கும் என எனக்குத் தோன்றியது. ஒரு படத்தை மக்கள் பார்க்க ஆரம்பித்த 10 நிமிடங்களில், 30வது, 60வது நிமிடங்களில், கிளைமேக்ஸுக்கு அரைமணி நேரத்துக்கு முன்பு என எப்போது அவர்களை எழுப்பி ‘இது எதைப் பற்றின கதை?” கேட்டால் அவர்கள் ஒரே பதிலை சொல்ல வேண்டும். எனில் அப்படம் வெல்லும். குழப்பமாக பதில் சொன்னாலும் சொல்லவே தெரியவில்லை என்றாலோ மாற்றி மாற்றி சொல்கிறார்கள் என்றாலோ அப்படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. அங்குதான் “அவதாரத்தையும்”, “புதுப்பேட்டையும்” போல “மகாநதியும்” கோட்டை விட்டது.
வசந்தபாலன் கொச்சின் ஹனீபாவைப் போன்ற சூழ்ச்சிமிக்க, அடுத்தவர்களை ஏமாற்றிப் பிழைக்கும் வஞ்சகர்களும், சின்னச்சின்ன, நியாயமான ஆசைகள் கொண்ட அப்பாவியான கிருஷ்ணசாமிகளும் இந்த உலகில் என்றுமே இருப்பார்கள் என்று சொல்லி இருந்தார். எனக்கு அண்மையில் இப்படத்தை பார்க்கையில் ஹனீபாவின் பாத்திரம் அந்தளவுக்கு மோசமானவர் அல்ல என்று தோன்றியது. மாறாக, அவர் தன் ‘வேலையை’ செய்கிறார். அவர் அதை மிகவும் மகிழ்ச்சியாக தன்னம்பிக்கையுடன் செய்கிறார், மாட்டினவர்களை வதைப்பதில் ஒரு சிறிய மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார் என்பதே நமக்கு அவர் மீது அருவருப்பை ஏற்படுத்துகிறது; அவருக்கு வேலை கொடுக்கும் தொழிலதிபர் பாத்திரம் இன்னும் கொடூரமான வில்லன். அதனாலே அவர் கையை கமல் வெட்டுகிறார் (பிள்ளைக்கறி கேட்கிறாயா?). ஆனால் நாம் அவரை அதிகமும் நினைவில் வைத்திருப்பதில்லை. ஏனெனில் அவர் யாரையும் வதைப்பதில் மெனெக்கெட்டு அதை ரசிப்பதில்லை. அவரிடம் வஞ்சகம் இல்லை. ஒரு நல்ல வில்லனுக்கு இந்த இரு குணாதசியங்களும் வேண்டும் (தீமையை ரசிப்பது, வஞ்சகம்).
எனக்கு கமல் பாத்திரத்தின் வீழ்ச்சிக்கு ஹனீபா அளவுக்கு அவரும் தான் காரணம் என்றே படம் உணர்த்துவதாகத் தோன்றியது. கதை ஆரம்பிப்பதே கிருஷ்ணசாமி தன்னுடைய பழைய காரை தன் நண்பன் புதிய காருடன் எதிர்கொண்டு தன் அமெரிக்க வாழ் பகட்டான வாழ்க்கையை காட்டி அவனுக்குள் பொறாமையையும் ஆசையையும் தூண்டும் போதுதான். கிருஷ்ணசாமியின் பிள்ளைகளுக்கு நண்பனின் பிள்ளைகளைப் போல ஆங்கிலம் பேசத் தெரியாது. அவனிடம் விலை மதிப்பான புதிய கார். அவன் நகர வாழ்க்கையை வாழவில்லை. அவனுக்கு மனைவி இல்லை. இது ஹனீபாவின் வைப்பாட்டி மீதான ஈர்ப்பாகிறது. பணம், நவீனம், பெண். இதுதான் கிருஷ்ணசாமியை அவனுடைய அத்தனை தவறுகளையும் இழப்புகளையும் நோக்கி ஈர்க்கிறது. இன்னும் சொல்லப்போனால் அவருக்குள் அடக்கப்பட்டு இருக்கும் போதாமையுணர்வு நண்பனின் வருகை கிளர்த்தி விடுகிறது. ஒருவேளை தனுஷுக்குப் (ஹனீபா) பதில் வேறு சரியான வணிக வழிகாட்டியைக் கண்டிருந்தால் அவர் நகரத்துக்கு வந்து சற்றே சிதைத்திருந்தார். தனுஷைக் கண்டதால் அவருடைய சிதைவு இன்னும் வேகமெடுக்கிறது, அவருடைய வீழ்ச்சி இன்னும் கொடூரமானதாகிறது. கிருஷ்ணசாமியின் பிழையே அவரை அந்த இடத்துக்குக் கொண்டு செல்கிறது என்பதை திரைக்கதை சரியாக சொல்லிவிடுகிறது.
கிருஷ்ணசாமியின் இன்னொரு பிரச்சினை அவருக்கு நடப்புலக சூட்சுமங்கள் தெரியவில்லை என்பது. அவருக்கு மனிதர்களின் சுபாவமோ, பணத்தின் சுபாவமோ தெரியவில்லை. கதை முடியும் போது அவர் தன் மகள், மகனை மட்டும் மீட்கவில்லை, அறிவையும் பெறுகிறார். தன் வெள்ளந்தியான குணத்தை இழந்து சாமர்த்தியமான வலுவான நடைமுறை ஞானம் கொண்ட மனிதராகிறார். இப்படிப் பார்க்கையில் “மகாநதி” ஒருவரின் வீழ்ச்சியைப் பற்றின கதை அல்ல, ஒரு சுயமுன்னேற்றக் கதை. ஆனால் கதையின் தொனி அதை வெளிப்படுத்தவில்லை. அப்படி இருந்தாலும் இப்படத்தை மக்களால் இன்னும் சுலபத்தில் ஜீரணித்திருக்க முடியும்.
ஒரு படத்துக்குள் எவ்வளவு கதைகள்!
