யுவனை நான் ஜெயமோகன் நடத்திய ஊட்டி முகாமில் எனக்கு 17 வயதிருக்கும் போது சந்தித்தேன். அவருக்கு அப்போது நாற்பது வயதிருக்கும், ஆனால் என்னை விட பயங்கர இளைஞனாக நடந்துகொண்டார். அந்த முகாமில் நான் பார்த்த ஒரே சுதந்திர பிறவி அவர் தான் - கவிதையியல் குறித்த தன் நுட்பமான கருத்துக்களை தத்துவார்த்தமாக விவாதிப்பார். - யுவன் விமர்சகராக உருவாகாமல் போனது ஒரு இழப்பே!
எப்போதுமே பேசிக்கொண்டிருக்கும் ஜெயமோகன் இவரது கருத்துக்களை மட்டுமே பொறுமையாகக் கேட்டுப் பார்த்திருக்கிறேன். எப்போதுமே சினம் கொண்டபடி இருக்கும் ஜெயமோகன் இவரிடம் மட்டுமே அமைதியாக இருந்து பார்த்திருக்கிறேன். எனக்கு அப்போதே யுவனை மிகவும் பிடித்திருந்தது.
நான் கல்லூரியில் படிப்பதற்காக சென்னைக்கு சென்ற போது முதலில் சென்று சந்தித்த படைப்பாளி யுவனே. அவரது வீடு என் கல்லூரி அருகிலே இருந்தது. அங்கு யுவன் சற்று வித்தியாசமாக இருந்தார். ஊட்டியில் நான் பார்த்த அந்த ஜாலியான சாகசக்காரராக இல்லாமல் அமைதியான குரலில் பேசும், அலுவலக நேரத்தில் அலுவலக வேலை, வீட்டில் இனிமையான தகப்பன், பிரியமான கணவனாக இருந்தார். அவர் வீட்டுக்குள் சிகரெட் பிடிக்க மாட்டார் என்பதே எனக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அதுதான் அவர் - எல்லா இடங்களிலும் பொருந்திப் போகிறவர். யாரையும் எரிச்சல்படுத்தாதவர். கண்ணியமானவர், ஆனால் சு.ராவைப் போல கனவான் அல்ல. கொஞ்சம் ஹிப்பி, கொஞ்சம் கனவான் என "மைக்கேல் மதன் காமராஜன்" போல இருந்தார். எனக்கு அதுவும் பிடித்திருந்தது.
பொதுவாக நான் சந்தித்த படைப்பாளிகளிடம் இருந்த கோணலான இயல்பு, பிறழ்வின் கொண்டாட்டம் யுவனிடம் இல்லை - எங்கும் நியாயமாக நடக்க வேண்டும், சரியாக சிந்திக்க வேண்டும் என யோசிக்கக் கூடியவர். தனிப்பட்ட முறையில் சுதந்திரவாதி, கலகவாதி போன்ற ஒரு சித்திரம் ஒரு பக்கம் இருந்தாலும் அவரிடம் நாம் போய் அறிவுரை கேட்டால் யாரையும் துன்புறுத்தாத, குடும்பத்துக்கும் சுற்றத்துக்கும் நன்மை பயக்கும் அறிவுரையே தருவார்.
யுவனுடைய புனைவின் தனி அடையாளம் அதன் மடக்குவிசிறி போன்ற கதைமொழியும் கதையமைப்பும். பூமியை நோக்கி விரிந்திருக்கும் முடிவற்ற ஆகாயம், கீழே நீர்த்துளியில் அதே ஆகாயம் எனும் (ஆத்மாவைப் பற்றின) உருவகம் உபநிடத்தில் வரும். எனக்கு யுவனின் கதைகளைப் படிக்கையில் அதுதான் நினைவுக்கு வரும். ஓரிடத்தில் வரும் மிகச்சிறிய குறிப்பின் பார்வையில் மொத்த கதையையும் விரித்துப் படிக்கவும், கதைக்குள் வரும் கதையைக் கொண்டு மற்றொரு கதையை சிந்திக்கவும் முடியும். நான் என் இருபதுகளில் முதலில் படித்த அவரது புனைவு “குள்ளச்சித்தன் சரித்திரம்” தான். அது என்னை மிகவும் கவர்ந்தது. அதன் பிறகு அவரது கதைகளை தொடர்ச்சியாக படித்து வந்திருக்கிறேன். அண்மையில் வெளிவந்த “கடலில் தூக்கி எறிந்தவை” வரை. அத்தொகுப்பில் கதைகள் அவ்வளவு நுட்பமாக முதிர்ச்சியாக இருக்கும். கடந்த இரு பத்தாண்டுகளில் கணிசமான தமிழ் (தீவிர) சிறுகதைகள் நாடகீய உணர்ச்சி மோதல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஆனால் யுவனின் கதையில் அத்தகைய மிகை செண்டிமெண்டுகள், நாடகீய தளும்பல்களை, தாழ்வுணர்ச்சி, போலி அறமதிப்பீடுகளின் தளும்பலை பார்க்க முடியாது. அனேகமாக தொண்ணூறுகள் வரை தமிழ் கதைகளில் இருந்த மௌனத்தையும் நுட்பத்தையும் இன்றும் தக்க வைத்திருக்கும் மிகச்சிலரில் யுவனும் ஒருவர் எனத் தோன்றுகிறது. யுவனின் கதைகள், நாவல்களில் திரும்பத் திரும்ப வரும் கருப்பொருள் “கதையாடல்களின் விளையாட்டே வாழ்வு” என்பதுதான். கதைக்குள் கதைக்குள் கதை எனும் அரேப்பிய இரவுகள் போன்ற frame narrative நமது தொன்மங்களில் வாழ்வின் சிக்கலான அமைப்பைக் காட்ட உருவானது. ஆனால் யுவனில் அது அர்த்தங்களின் சாராம்சமின்மையை சுட்டிக் காட்ட பயன்படுத்தப்பட்டிருக்கும்.
யுவன் எனும் ஒரு புனைவெழுத்தாளரை விட யுவன் எனும் கவிஞர் பல மடங்கு மேலானவர் என்பது என் நம்பிக்கை - அவரது கவிதைகளின் மீபொருண்மை வீச்சு அற்புதமானது. காலம் எனும் இருப்பின் விளிம்பில் நிற்கும் மனிதனின் தவிப்பு என்று அவரது கவிதைகளின் மையக்குரலை அடையாளப்படுத்துவேன். அவரது கவிதைத் தொகுப்புக்கு நான் மிகவும் ரசித்து உயிர்மையில் மதிப்புரை எழுதியிருக்கிறேன்.
எனக்கு யுவனிடம் உள்ள ஒரே குறை அவரது பெயர்: யுவன் சந்திரசேகர் என சொல்லும் இடங்களில் யுவன் சங்கர் ராஜா என்றும் யுவன் சங்கர் ராஜா வர வேண்டிய இடங்களில் யுவன் சந்திரசேகர் என மாற்றி சொல்லி பல்ப் வாங்கும் பழக்கம் நீண்ட காலமாக எனக்குண்டு. இப்படி பெயரளவிலும் அவர் ஒரு ‘குள்ளச்சித்திரன்’ தான்.
இம்முறை விஷ்ணுபுரம் விருது யுவனுக்கு என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கும் தேர்வாக உள்ளது. அவருக்கு எனது அன்பும் வாழ்த்துக்களும்.
