2021இல் எழுதி முடித்த நாவல் அது. அதைக் கடந்த இரு ஆண்டுகளாக திருத்தி மீளெழுதிக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அது புதிய பொலிவை, அடர்த்தியைப் பெறும் போது மகிழ்கிறேன். நான் எழுத்தாளனாக அறிமுகமான காலத்தில் ஒரு புனைவெழுத்தை முடித்ததும் வெளியிட்டு அடுத்த வேலையை பார்க்கப் போக வேண்டும் என நினைத்திருந்தேன். வெகுபின்னரே அது தவறு, கண்ணாடியைத் துடைக்கத் துடைக்க தோற்றம் தெளிவுறுவதைப் போல, ஒரு படைப்பை நாம் திருத்தத் திருத்தத்தான் முழுமையாக வெளிப்படுகிறது எனப் புரிந்துகொண்டேன்.
இந்நாவலுக்காக ஆய்வு செய்யும் நோக்கில் எவ்வளவோ படித்திருக்கிறேன், குறிப்பெடுத்திருக்கிறேன். ஒரு பாத்திரத்தின் பெயரை மாற்ற வேண்டுமெனில் அவர் எந்த மதத்தின், தத்துவ சிந்தனையின் பிரதிநிதி என யோசித்து, அதற்கான நூல்களை வாசித்து, அக்குறிப்புகளை கதையில் சரியான இடங்களில் கதையோட்டம் பாதிக்கப்படாமல் நுழைப்பது, அவரவருக்கான தனித்துவமான சிந்தனை, பேச்சுமொழிகளைக் கொண்டு வருவது ... இதற்கே ஒரு சில மாதங்கள் ஆகும். கதை முழுக்க காலநிலைக் குறிப்புகளில் ஒரு தொடர்ச்சியைக் கொண்டு வரவே ஒரு மாதத்திற்கு மேல் உழைப்பு தேவைப்படும். நாவலின் பக்கங்களை இரட்டைப் படை எண்களாகப் பிரித்து சரியான இடத்தில் திருப்பங்களைக் கொண்டு வருவது,ஒரு பாத்திரம் 200வது பக்கத்தில் சொல்லும் ஒரு கருத்துக்கான தர்க்கத்தை அதற்கு முன்பு ஓரிடத்தில் பட்டும்படாமல் உணர்த்துவது, ஒரு பாத்திரத்தின் நன்மைக்கு ஈடாக அவர்து தீமையையும் காட்டி சமநிலைப்படுத்துவது ... இப்படி நாவலைத் திருத்தி எழுதுவது கடும் உழைப்பைக் கோரும் வேலை, ஆனால் அதே நேரம் நாம் வேறு எதிலும் உழைத்துப் பெறாத மகிழ்ச்சியை நிறைவை இது தரும்.
உ.தா., நான் இதற்கு முன்பு பகவத் கீதையை நான்கைந்து முறைகள் துண்டுத்துண்டாகப் படித்திருக்கிறேன். இம்முறை என் நாவலுக்குத் தேவைப்பட்டதால் சினமயானந்தாவின் 1400 பக்க கீதை உரைநூலை பத்து நாட்களில் தினமும் வேலையிடையே படித்து முடித்தேன். என் நண்பர்கள் என் கையிலோ மேஜையிலோ அந்நூலைப் பார்த்து அதிர்ச்சியாவார்கள். ஆனால் எனக்கு அது ஆய்வுக்கான வாசிப்பு. எந்த மனச்சாய்வும் இன்றி, என் தர்க்க மனதை கழற்றி வைத்துவிட்டு, மகிழ்ச்சியாகவும் கொதிப்பாகவும் அதை வாசிக்கையில் நான் என் நாவலின் பாத்திரமாகவே உணர்ந்தேன். அதற்கு ஈடான மகத்தான அனுபவத்தை நான் எந்த நூல் வாசிப்பிலும் அடைந்ததில்லை. ஏனென்றால் புனைவுக்காக தத்துவத்தை வாசிக்கும் போது அதையும் , ஒரு பாத்திரத்தின் நோக்கில் இருந்து புனைவாகவே பார்க்கிறேன். அதனாலே தர்க்க மனத்துடன் தத்துவம் படிப்பதை விட இது அதிகமாக என்னை திகைப்பூட்டுகிறது.
அடுத்து உபநிடங்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன். என் நாக்வலில் ஒரு முக்கியமான பிரச்சினை இருந்தது. என்ன செய்தாலும் ஒரு பாத்திரத்தை சரியாக 'இருத்த' முடியவில்லை. எவ்வளவு யோசித்தும் தீர்வு கிடைக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட உபநிடத்தில் நான் படித்த உரையாடல் தற்செயலாக எனக்கு ஒரு புதிய திறப்பை அளித்தது. அதற்காக மீண்டும் நாவலில் ஒரு புதிய பகுதியை எழுதத் தொடங்கினேன். அடுத்து இதே புனைவு மனநிலையில் சூன்யவாதமும், ஸ்வந்திரிகா பௌத்தமும் படிக்க வேண்டும்.
இப்படி என் "முடிவற்ற துப்பறியும் கதை" நிஜமாகவே ஒரு முடிவற்ற துப்பறியும் கதையாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் நான் அவ்வளவு மகிழ்ச்சியாக இப்பணியை செய்துகொண்டிருக்கிறேன். ஆம், நான் இதற்கான நேரத்தில் இன்னும் இரு நாவல்களை எழுதி முடித்திருக்க முடியும். ஆனால் இந்த மகிழ்ச்சியும் திருப்தியும் அவற்றில் கிடைக்காது. இதற்கான கூலியோ பாராட்டோ எனக்கு கிடைக்காமல் போகலாம். ஆனால் கிடைத்தால் அவற்றுக்கு எனது மகிழ்ச்சியும் திருப்தியும் ஈடாகாது.
