ஒரு படைப்பாளியை, எழுத்தாளரை ஒரு இதழ் உரிமை கொண்டாடுவது மிக மிக முக்கியமானது; அப்போதே இரு தரப்பும் பெருமைப்படத்தக்க சாதனைகள் நிகழும். எனக்குத் தெரிந்து தொடர்கதைகளின் காலம் வரை தமிழ் வெகுஜன இதழியலில் அது நடந்தது. மலையாள இதழியலில் இன்னும் அது தொடர்கிறது. தமிழில் டிவி தொடர்கள் வந்து, கேபிள் டிவி, பெரிய பட்ஜட் படங்கள், புரொமோஷன் என வியாபாரம் பெருத்த பின்னர் தமிழ் இதழியல் முழுக்க முழுக்க சினிமாவின் கூட்டுறவையே பிரதானமாக எண்ணியது - எனக்குத் தெரிந்த ஒரு இயக்குநர் இருந்தார். அவரிடம் உதவி இயக்குநராக இருந்த ஒரு இளம் இயக்குநருக்கு நேரடியாக வந்து ஒரு முக்கிய வார இதழின் எடிட்டரிடம் பேசி ஒரு தொடர் எழுத வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். அந்த தம்பி அப்போது ஒரு எழுத்தாளராகவோ திரைக்கலைஞராகவோ நிலைப்பெறவில்லை. நான் அப்போது பத்தாண்டுகளாக பரவலாக எழுதி வந்திருந்தேன். ஆனால் பலமுறை முயன்றும் எனக்கெல்லாம் தொடர் போக, ஒரு கட்டுரை எழுதக் கூட அவ்விதழில் வாய்ப்பு கிடைத்ததில்லை. அதுதான் திரைப்படக் கலைஞர்களின் அதிகாரம். நான் இதை ஒரு விமர்சனமாக சொல்லவில்லை. நம்மிடம் அதிகாரமும் தொடர்புகளும் இருந்தால் தேவைப்படும் இடத்தில் பயன்படுத்தலாம். ஆனால் அது செல்லுபடியாகும் இடத்தில் ஒரு இதழ் இருத்தலாகாது. கடந்த இருபதாண்டுகளில் அச்சு ஊடகத்தினரில் ஒரு பகுதியினர் சினிமாவில் வாய்ப்பு பெறுவதற்கான சமரசமாக தம் தொழிலை பயன்படுத்துகிறார்கள். அது போக, இந்த காலகட்டத்தில் தான் நிறைய சிறுபத்திரிகை படைபபாளிகள் வெகுஜன இதழியலில் புகுந்தார்கள். அங்கும் அவர்கள் சிறுப்பத்திரிகை சார்ந்த பிற படைப்பாளிகளை அதிகமாக எழுத வைத்ததாக கூற இயலாது - மாறாக பயன்படுத்திக் கொண்டார்கள். அவர்கள் ஒன்று தமக்கு எழுதுவதற்கு ஒரு இடத்தையோ தம் உற்ற நண்பர்களுக்கு அவ்வப்போது சிறு வாய்ப்புகளை உருவாக்கவோ முயன்றார்கள். அவர்கள் வெகுஜன இதழியல் கடமைகளை தம் இலக்கிய தொடர்களைக் கொண்டு ஆற்ற முயன்றார்களே தவிர வெகுஜனத் தொடர்புகளைக் கொண்டு இலக்கியத்தை வளர்க்கவில்லை. ஏனென்றால் அவர்களுக்கும் அதைத்தாண்டி ஒரு அதிகாரம் அங்கு இருக்கவில்லை.
'இந்த கொடுக்கல் வாங்கலிடையே வெகுஜன அச்சு ஊடகங்களில் இருந்து முக்கியமான படைப்பாளிகள் தோன்றி வரவில்லை; மாறாக அவர்கள் சிறுபத்திரிகைகளில் இருந்து தோன்றி வளர்ந்து பின்னர் வெகுஜன இதழ்களில் பயனபடுத்தப்பட்டார்கள்' என்று கவிஞரும் நடுநிலை இதழியலாளருமான ஒரு நண்பர் என்னிடம் கூறினார். அது மிகவும் உண்மை. கடந்த 8 ஆண்டுகளாக, சிறுபத்திரிகைகளை விட்டுவிட்டு சமூகவலைதளங்களில் பெயர்பெற்ற எழுத்தாளர்களை எடுத்து பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் ஒரு படத்தில் மிகச்சின்ன பாத்திரத்தில் நடித்து கவனம் பெற்ற நடிகர்களுக்கு தலா நான்கைந்து பேட்டிகளை பிரசுரித்து புரொமோட் செய்து தூக்கி விடுவார்கள். ஒரு படைப்பாளியைக் கூட அப்படி பிரொமோட் பண்ண மாட்டார்கள். (அவருக்கு தேசிய விருது கிடைத்தால் கூட). எனக்கு சாகித்ய அகாடெமி யுவ புரஸ்கார் கிடைத்த போது கூட என்னுடைய பேட்டியை இந்த வெகுஜன வார இதழ்கள் வெளியிடவில்லை. தினசரிகளே வெளியிட்டன. இதுவே நான் ஒரு குலுக்கு நடிகையாகவோ சொடுக்கு நடிகனாகவோ இருந்திருந்தால் நிலைமையே வேறு.
கடந்த சில பத்தாண்டுகளின் வெகுஜ ஊடகம் என்பது சினிமாவுக்கான விளம்பர நிறுவனம் மட்டுமே. இதில் எதாவது கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவதற்கு அவர்கள் இலக்கிய இதழ் நடத்தினால் அதில் எழுதிக் குவிக்கவோ அல்லது சினிமா பேட்டிகள், கொண்டாட்டங்களுக்கு இடையே கதைகள் எழுதவோ மட்டும் படைப்பாளிகள் சியர் கெர்ள்ஸ் போல செயல்பட்டு வந்தார்கள்.
சினிமாக் கூட்டுறவில் இருந்து வெகுஜன ஊடகம், கடந்த அரைப் பத்தாண்டுகளில் மூன்றாம் அணி - தேசியக் கட்சி கூட்டுறவுக்கு நகர்ந்தது. அதில் பெரும் தரகுப் பணம், செல்வாக்கு, அரசியல் அதிகாரம் அவர்களுக்குக் கிடைத்தது. அங்கிருந்து டிவி அலைவரிசைகளில் அரசியல் விவாதம், யுடியூப் அவதூறாளர்கள் என இந்த கூட்டுறவு வளர்ந்திருக்கிறது.
ஆனால் தீவிர இதழ்களில் இப்போதும் ஒரு எழுத்தாளன் ஓப்பனிங் பேட்ஸ்மேன் தான். இன்றும் அவ்விதழ்கள் ஒரு படைப்பாளியை சொந்தம் கொண்டாடவும், ஒரு படைப்பாளி அவ்விதழ்களை சொந்தம் கொண்டாடவும் முடியும். வெகுஜன இதழ்களில் வாய்ப்பு கிடைத்தால் சில பத்தாயிரம் வாசகர்களை கூடுதலாக அவன் அடைய முடியும். அதை எந்த படைப்பாளியும் விரும்பவே செய்வான். இன்று அதே எண்ணிக்கை வாசகர்களை நீங்கள் பேஸ்புக்கிலே அடைய முடியும். அந்த பிரபலத்தை ஒருவர் அடையும் முன்பு ஒரு வெகுஜன இதழால் அவரைத் தூக்கி விட முடிந்தால் அவரது திறமைக்கு பெரும் வெளிச்சம் கிட்டும். தமிழில் வெகுசொற்பமாக திறமை உள்ள ஒரு திரைக்கலைஞருக்கு கிடைக்கும் வெளிச்சத்தில் நூறில் ஒரு மடங்கு கூட வளரும் எழுத்தாளர்களுக்கு கிடைக்காது. சுந்தரி ரங்கசாமிக்கு கிடைக்கும் வெளிச்சம் சுந்தர ராமசாமிக்கு இருக்காது. அப்படிக் கிடைப்பதற்கு அவர் எதாவது ஒரு படத்தில் உதவி இயக்குநராக இருக்க வேண்டும். (அல்லது அந்த நேரத்தில் எந்த சாதி லாபி கோலோச்சுகிறதோ அதைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.) ஏனென்றால் அவரைத் தூக்கிவிட்டால் அவர் நாளை உங்களைத் தூக்கி விடுவார். எழுத்தாளனால் யாரையும் தூக்கிவிட முடியாதே? அதனால் காரியவாத உலகில் அவனுக்கு இடமிருப்பதில்லை.
ஒருவருக்கு வயது 60-70 தாண்டிவிட்டால் அந்தப் படைப்பாளிகளை வைத்து விருது விழா எனும் நடுகல் நாட்டும் சடங்கு நடத்துவார்கள். அதை எனக்கும் நாளை நடத்துவார்கள். அது வயதுக்கான மரியாதையா பங்களிப்புக்கும் திறமைக்குமான மரியாதையா? பின்னது எனில் இவர்களுக்குத் தலை நரைக்கும் வரை ஏன் அவர்கள் கண்ணில் படவில்லை?
அண்மையில் சுதிர் செந்தில் அண்ணனை அழைத்து ஒரு கட்டுரை இருக்கிறது அனுப்பவா என்று கேட்டேன். அவர் உடனே "உயிரெழுத்து" உன் பத்திரிகைடா தம்பி, நீ எங்கிட்டே கேட்க வேண்டியதே இல்லை என்று உணர்ச்சிகரமாக பதிலளித்தார். என்னுடைய பேஸ்புக் பதிவைக் கூட அவர் என்னிடம் கேட்டு வாங்கி "உயிரெழுத்தில்" பிரசுரித்தார். அதைப் படித்த ஒருவருடைய மகள் என்னுடைய மாணவியான நிலையில் என்னிடம் வந்து அக்கட்டுரையைப் பற்றிக் குறிப்பிட்டார். நாம் சிறுபத்திரிகைகளின் இந்த வீச்சை சில நேரங்களில் சரியாக கணிப்பதில்லை. தமிழின் பல முக்கிய படைப்பாளிகளின் மிகவும் பேசப்பட்ட எழுத்துக்கள் சில நூறில் இருந்து சில ஆயிரம் பேர்கள் படிக்கும் சிறு, நடுநிலை பத்திரிகைகளில் வந்தவையே. இமையத்தின் "பெத்தவன்" ஒரு உதாரணம். நான் கடந்த 16 ஆண்டுகளாக "உயிர்மையில்" எழுதி வருகிறேன். ஒருவித உரிமையுணர்வை நான் இதைப் போன்ற இதழ்களிலே உணர்கிறேன். மற்ற வீடுகளில் நம்மை வாசலோடே நிறுத்தி அனுப்புவார்கள், ஆனால் சிறு, நடுநிலை இதழ்களிலே நாம் உள்ளே போய் உரிமையுடன் அமர முடியும். வேறு எங்கும் நாம் தொடர்ந்து இயங்க இடமிருப்பதில்லை - ஏனென்றால் நாம் தான் சினிமாவில் இல்லையே.
நமக்கு உரிமையுள்ள இடத்தை மதித்து அங்கு இருந்து தொடர்ந்து உழைக்கும் போதே நாம் முன்னேறுவோம். "ஓ ரசிக்கும் சீமானே வா ஜொலிக்கும் உடையணிந்து..." குரூப்பை நம்பாமல் நம்மை சொந்தம் பாராட்டுபவர்களுடன் இருப்பதே எழுத்தாளனுக்கு நலம் தரும்.
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share