“கடைசி விவசாயி” படத்தை அண்மையில் மீண்டும் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்படத்தை ஒவ்வொரு முறைப் பார்க்கும் போது அது எந்தளவுக்கு உண்மைக்கு நெருக்கமாக, போலி முற்போக்கு வியாபார உத்திகள் இல்லாமல் இருக்கிறது என்பது என்னை ஆச்சரியப்படுத்துகிறது. அதில் ஒரு குறிப்பிட்ட காட்சி என்னை வெகுவாக கவர்ந்தது.
கடைசி விவசாயியான மாயாண்டி தாத்தா போலி வழக்கில் சிறையில் விசாரணைக் காவலில் இருப்பார். அவர் குற்றவாளி அல்ல எனத் தெரிந்தும் ஆவணத் தாக்கலில் நேரும் தாமதத்தால் அவரை சிறையில் வைக்க வேண்டிய நிர்பந்தம் நீதிபதிக்கு வருவதை அழகாக காட்டியிருப்பார்கள். இதுதான் நீதிமன்றத்தின் நடைமுறை - அங்கு யாருக்கும் உண்மை, பொய் குறித்து அக்கறை இருப்பதில்லை.
சிறையில் கொலை வழக்கில் ஏற்கனவே ஒரு இளைஞன் இருக்கிறான். அவன் ‘தொழில்முறைக் குற்றவாளி’ அல்ல. அவனுக்கு ஒரு பிரச்சினை - அவன் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்படுவான். அவனுக்கு அப்போது யாரும் வேலை கொடுக்கவோ பெண் கொடுக்கவோ மாட்டார்கள் என ஒரு சிறைக்காவலரே சொல்லிச் சிரிக்கிறார். அவனுக்கு இரு தேர்வுகள் உள்ளன - ஒன்று தொழில்முறைக் குற்றவாளி ஆவது, அடுத்து சுயசார்பாக வாழ்வது. அவன் மாயாண்டி தாத்தாவிடம் சென்று தனக்கு விவசாயம் கற்றுக் கொடுக்க கேட்கிறான். தன் அப்பா தன் பெயரில் ஐந்து ஏக்கர் விவசாய நிலத்தை எழுதி வைத்துள்ளதாகவும், சிறையில் இருந்து வந்த பின்னர் யாரிடமும் கையேந்த வேண்டியிராது என்கிறான். தாத்தா அவனுக்கு ஒரு சிறிய டப்பாவில் செடியை கற்றுத் தருகிறார். அழகிய காட்சி அது. ஒரு இடத்தில் ‘இளந்தாரிப் பயலா இருந்து உனக்கு பயிரிடும் அடிப்படை கூடத் தெரியவில்லையேப்பா’’ என நொந்து கொள்கிறார். அந்த கைதி மட்டுமல்ல ஊரில் உள்ள இளைஞர்களும் அப்படித்தான் மண்ணுடன் தொடர்பற்றவர்களாக இருக்கிறார்கள். போலீஸ்காரருக்கு மாட்டை துரத்தி விடத் தெரியவில்லை என பகடி வருகிறது. கிராமத்து மக்கள் போலீஸ்காரரை மின்சாரத்துறை ஊழியர் என்றும், தபால்காரர் என்றும் நினைக்கிறார்கள். மேம்போக்காக பார்க்கையில் நவீன வாழ்க்கையை பகடி செய்து பழைய கிராம வாழ்க்கையை மகத்தானதென மிகைப்படுத்துகிறார்கள் எனத் தோன்றும். ஆனால் விசயம் அதுவல்ல - இந்த படம் மனிதனின் சுதந்திரம், தற்சார்பு வாழ்க்கை, மாண்பு பற்றியது. நவீன வாழ்க்கை இந்த மூன்றையும் அவனிடம் இருந்து பறித்துவிடுகிறது. அதன் மீதான விமர்சனமே “கடைசி விவசாயி”. அதை சரியாக முன்வைப்பது அந்த கைதியின் பாத்திரமே. ஆனால் நாம் விஜய் சேதுபதியின், யோகி சேதுவின் பாத்திரங்களைப் பற்றி பேசிய அளவுக்கு இப்பாத்திரத்தை பரிசீலிக்கவில்லை.
அந்த இளைஞன் குற்றத்தின் மீது தடுக்கி விழுந்தவன். ஆனால் அவனை ஏன் பொதுச்சமூகம் மீண்டும் ஏற்க மறுக்கிறது? அவன் ஏன் மீண்டும் குற்றத்திற்கு திரும்ப செல்ல வேண்டும் என மறைமுகமாகத் தூண்டுகிறது? ஏனென்றால் நவீன தேசத்தின் முக்கியமான தொழில்களில் ஒன்று குற்றம். குற்றத்திற்கான ஒரு தொழில்பயிற்சி நிறுவனமாகவே சிறைச்சாலைகள் உள்ளன. காவல்துறையும் நீதிமன்றமும் குற்றத்தொழிலுக்கான ஆவணமாக்கல் பணியை செய்து அதை நெறிப்படுத்துகிற அமைப்புகள். ‘நவீன லஷ்மிகாந்தனான’ நமது சவுக்கு சங்கரை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் தான் வேலை பார்த்த இடத்தில் இருந்து சில தகவல்களைத் திருட்டி சிலரிடம் பகிர்ந்துகொண்டு அதை வைத்து மிரட்டி சம்பாதிக்க முயன்று மாட்டிக்கொண்டார். ஆனால் அரசாங்கம் அவரை கைது செய்து சிறையில் வைத்து ‘நெறிப்படுத்தி பயிற்சி அளித்து’ அனுப்பியது. அங்கிருந்து அவர் கிழக்குப் பதிப்பகத்தால் ஒரு ‘ஜூலியன் அசாஞ்சேவாக’ கட்டமைக்கப்பட்டார். அதன் பிறகு அப்படியே இணையதளம், யுடியூப் என ஆள்மிரட்டல், அரசியல்வாதிகள், அதிகாரிகள் மீது அவதூறு என வளர்ந்து தன் பழைய குற்றத்தை பல மடங்கு மேலான உள்கட்டமைப்புடன் பண்ணி, பாஜக தலைவர்களுடன் தோளோடு தோள் உரசி அவர்களுடைய நிதியைப் பெற்று பல கோடிகளுக்கு அதிபதி ஆகிவிட்டார்.
மேலும் தன்னிடத்தில் பல நூறு சவுக்கு சங்கர்களையும் உருவாக்கி தானே ஒரு ‘சிறைச்சாலையைப்’ போன்றும் இயங்கி வருகிறார். அவரிடம் இருந்து வெளியேறி அவர்களும் ‘நிஜ சிறைக்கு’ சென்று வந்ததும் இவரளவுக்கு வளர்ந்து விடுவார்கள். அவரை களமிறக்கி விட்ட பதிப்பாளர் வேறு ஜெயிலுக்குப் போய் பட்டப்படிப்பை முடித்து வந்துவிட்டார். இங்கு முக்கியமான கேள்வி இப்படி ஒரு வளமான தொழில் தனக்கு வெளியே காத்திருப்பதை ‘நவீன லஷ்மிகாந்தனுக்கு’ சொல்லித் தந்தது யார்? இந்த நவீன சமூக அமைப்பே தான். இந்த தொழிலையும் உருவாக்கி அதற்குத் தேவையான ஆட்களை பயிற்சி அளித்து உருவாக்கி விடுவது யார்? இதே நவீன சமூக அமைப்பு தான்.
இந்தியாவில் வெள்ளையின காலனியாதிக்கவாதிகள் வந்த பின்னரே தொழில்மயமாக்கல் முனைப்பு பெறுகிறது. வெள்ளையர்களே இங்கு தொழில் நிறுவனங்களுக்கு ‘விரோதமாகத்’ தெரிபவர்களை பெரிய அளவில் குற்றவாளிகளாக அடையாளம் கண்டு உருவாக்கி பெரும் தொழிற்சாலைகளாக சிறைச்சாலைகளை உருவாக்குகிறார்கள். அதற்காக பல சட்டங்களை வகுக்கிறார்கள். சில சமூகத்தினரை குற்றப்பரம்பரையினர் என்றும் அடையாளப்படுத்துகிறார்கள். (நாம் வெள்ளையர் கால சிறைச்சாலைகளை சுதந்திர போராட்டத்துடன் மட்டுமே சுருக்கிப் புரிந்துகொள்கிறோம்.) சுதந்திரத்துக்குப் பிறகு நேருவும் அவரது சந்ததியினரும் இதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்று இந்தியாவை ஒரு பெரும் நவீன தொழில்மய தேசமாக்க முயலும் போது இயல்பாகவே பல லட்சம் குற்றவாளிகளையும் உபரியாக உற்பத்தி பண்ணுகிறார்கள். தொழில்துறை வளர வளர குற்றங்களும் பெருகுகின்றன. ஏனெனில் குற்றமே ஒரு தொழில் தான். சுயசார்பான சமூகங்களில் குற்றத்தொழிலுக்கான இடம் மிக மிகக் குறைவு. ஆனால் நிறுவனமய தொழில் சமூகத்திலோ குற்றமே நிறுவனமயமாக வேண்டிய கட்டாயமும், அதற்கான லாபமும் மிக அதிகம். அங்கு மற்ற நிறுவனங்களைப் போல குற்றத்தொழிலிலும் முதலாளிகளும் தொழிலாளிகளும் உண்டு.
முக்கியமாக நவீன சமூகத்தின் குற்றவாளிகளில் பலரும் சொந்தமாக நிலம் இல்லாதவர்கள், சுயதொழில் செய்ய இயலாதவர்கள். ஏனெனில் நவீன இந்திய அரசு விவசாயத்தை ஒழித்தே தொழில்மயமாக்கத்தை ஊக்குவித்தார்கள். நிலத்தை மட்டும் எடுத்துக் கொள்வோம் - மக்களின் நிலம் எங்கே போயிற்று? நவீன இந்தியாவில் அரசு விவசாயத்தை அசாத்தியமாகவும் தொழிற்சாலை மட்டும் சாத்தியமானதாகவும் மாற்றியதும் மக்கள் தங்களுக்கு சொந்தமான துண்டு நிலங்களையும் விற்றுத் தள்ளிவிட்டு நகரங்களுக்கு கிளம்பவோ பெருநிலக்கிழார்களிடம் கூலிகளாகவோ நேர்ந்தது.
விவசாயம் ஒழிய ஒழிய மக்கள் ஊதியத்துக்கு யாரையாவது நம்பியிருக்கத் தேவை ஏற்பட குற்றத்தொழிலுக்கும் அத்தகையோர் தேவைப்பட அவர்களை முறைப்படுத்த வேண்டிய அவசியம் நவீன அரசுக்கு ஏற்படுகிறது. நேரடியாக நவீன தொழில்களில் எந்திர பற்சக்கரங்களாக பணியாற்றும் மக்களுக்கு பயிற்சி அளிக்க பள்ளி, கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்கள் என்றால் மறைமுக குற்றத்தொழில்களுக்கு காவல்துறை, நீதித்துறை, சிறைத்துறை. சுதந்திரத்துக்குப் பின்னர் பல லட்சம் மடங்கு இங்கு குற்றவாளிகள் பெருகி உள்ளார்கள். அதெப்படி புதிய பொருளாதார உற்பத்தி முறைக்கு இந்தியா மாறியதும் இத்தனை குற்றவாளிகள் உருவாக முடியும், இக்குற்றவாளிகள் முன்பு ஏன் இல்லை எனும் கேள்வி முக்கியமானது. அதற்கான விடையை “கடைசி விவசாயி” தருகிறது. போலிக் குற்றச்சாட்டில் மாயாண்டித் தாத்தா சிறைக்குப் போவது ஒரு நல்ல உருவகம். கடைசி விவசாயியையும் சிறையில் தள்ளாமல் அரசாங்கத்தால் அனைவரையும் தற்சார்பற்றவர்களாக்கி, அறிவிலிகளாக்கி, தொழிற்துறையை முழுமையாக வளர்க்க முடியாது.
உங்களுக்கு என்று வீடும், உணவை உற்பத்தி பண்ண நிலமும், தொழிலும், அதற்கேற்ற சமூக வாழ்க்கையும் இருந்தால் மாயாண்டித் தாத்தாவைப் போல யாரையும் அண்டியிருக்கத் தேவையில்லை. உங்களுக்கு ரேஷன் அட்டையோ, அடையாள அட்டையோ கூடத் தேவையில்லைதான். நீங்கள் வியாபாரம் செய்ய வேண்டும் என்றாலும் சமூக ஏற்பு அவசியம். அதிகார வர்க்கம், காவல்துறை, அரசியல் தலைமையின் அனுசரணை அவசியம். இவர்கள் தேவையில்லாத இரு தொழில்களை மட்டுமே குறிப்பிட முடியும் - மீன்பிடித்தொழில், விவசாயம். ஆனால் அத்தகையோரைத் தான் படிப்பற்றவர்கள், பழமைவாதிகள் எனப் பழிக்கிறோம். “இவருக்கு அறிவு வேற இல்ல, அதனால ஏமாத்த முடியல” என ஒரு ரியல் எஸ்டேட் புரோக்கர் தாத்தாவைக் கசந்துகொள்வதை இதைத் தான். நவீன அறிவு படைத்தவர்களை அடிமையாக்கி எவ்வளவு வேண்டுமானாலும் வேலை வாங்கலாம், கட்டுப்படுத்தலாம். நவீன அறிவு இல்லாதவரிட்ம் ஏமாற்றுவேலைகள் பலிக்காது. இந்த இரு தொழில்கள் மீதும் நவீன அரசுக்கும், நவீன அறிவுச்சமூகத்துக்கும் ஒரு ஒவ்வாமை உள்ளதை கவனிக்க முடியும். இவர்களை எப்படியாவது கூலிகளாக, தொழிற்சாலை, நிறுவன அடிமைகளாகவோ குற்றவாளிகளாகவோ மாற்றிவிட வேண்டும் என அரசுகள் தவித்தபடி இருக்கின்றன. இவர்கள் சொல்லவொண்ணா துயரங்களை அனுபவிக்கும் போது அரசுகள் செவிமடுப்பதில்லை. காரணம் மேற்சொன்னதுதான். அதனாலே தான் முற்போக்காளர்களாக தம்மைக் காட்டிக்கொள்ளும் சிலரை “கடைசி விவசாயி” எரிச்சலூட்டியது. அவர்கள் அதை “சின்ன சங்கி” படம் எனக் கிண்டலடித்தார்கள். அவர்கள் தம்மை கூண்டோடு நவீன சந்தைக்கு விற்று சுதந்திரமோ தற்சார்போ இல்லாத அடிமைகளாக மாற்றிய கங்காணிகளுக்காக கூவுபவர்கள். அதை முற்போக்கு என்று வேறு நினைத்துக்கொள்கிறார்கள்.
எனக்குத் தெரிந்து நவீன உற்பத்தி சமூகம் மீது நேரடியாக விமர்சனம் வைத்த முதல் தமிழ்ப் படம் “கடைசி விவசாயி” தான். (இலக்கியத்தில் பு.பி துவங்கி கோணங்கி வரை பலர் நவீனமயமாக்கலை விமர்சித்திருக்கிறார்கள்.) தமிழில் பொதுவாக வெகுஜன ஊடகத்திலும் அரசியல் விபாதங்களிலும் முற்போக்குவாதம் எனும் பெயரில் நவீன முதலீட்டிய கட்டமைப்புகளை, நகரங்களை கோயில்களாக வழிபட்டு வருகிறோம். கிராமம் என்றால் அறியாமை, மூடநம்பிக்கை, அடிமைத்தனம், சாதியம், மதவாதம் என்பதே இவர்களுடைய கோஷம். ஆனால் மிக மோசமான அறியாமை, மூடநம்பிக்கை, அடிமைத்தனம், சாதியத்தை நான் நகரங்களிலே அதிகமாகக் காண்கிறேன். மதக்கலவரங்கள் எப்போதும் நகரங்களிலே தான் ஆரம்பிக்கின்றன. இந்து மகாசபையில் இருந்து பாஜக வரை நகரங்களை மையமிட்டு உருவாகி வளர்ந்த கட்சிகளே.
நமது நவீன லஷ்மிகாந்தனுக்கும் ஒரு துண்டு நிலமாவது சொந்தமாக இருந்து, சிறையில் அவரும் ஒரு மாயாண்டி தாத்தவை சந்தித்திருந்தால் மிகப்பெரிய மோசடிப் பேர்வழியாக, குற்றவாளியாக மாறியிருக்க மாட்டார்.
