தென்னாப்ப்ரிக்காவின் குவிண்டன் டி காக் உலகின் தலைசிறந்த ஒருநாள், டி-20 மட்டையாளர்களில் ஒருவர். இந்த 2023 உலகக்கோப்பையில் அவர் தொடர்ச்சியாக மூன்று சதங்களை அளித்திருக்கிறார். மிகச்சிறந்த ஆட்டநிலையில் உள்ள அவர் இந்த உலகக்கோப்பையுடன் ஓய்வுபெறுவதாக அறிவித்திருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டின் நெருக்கடி, குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாமையை காரணங்களாக அவர் குறிப்பிட்டாலும் உலக அளவில் நடக்கும் டி-20 தனியார் ஆட்டத்தொடர்களில் ஆடும் விருப்பமும், அதனால் கிடைக்கும் பெருஞ்செல்வமும் ஏற்படும் நேரமின்மையுமே இந்த துரித ஓய்வுக்கு நிஜக்காரணம் என்பது வெளிப்படையானது. ஏற்கனவே இந்த டி-20 கூட்டநெரிசலில் மே.இ அணியின் கணிசமான நட்சத்திர வீரர்கள் தம் நாட்டுக்காக ஆடுவதில்ல என முடிவெடுத்ததில் அந்த அணி இந்த உலகக்கோப்பையில் இடம்பெறாதபடி பலவீனமாகி விட்டது. இதையெல்லாம் பார்க்கும் போது இந்திய கிரிக்கெட் வாரியம் தன் வீரர்கள் அயல்நாட்டு டி20 தனியார் தொடர்களில் ஆடக்கூடாது என விதித்தது சரிதான் எனத் தோன்றுகிறது. இல்லையெனில் ரோஹித், கோலி, பும்ரா, பண்ட்களெல்லாம் எப்பவோ ஓய்வுபெற்றிருப்பார்கள்.