நான் நியுசிலாந்தின் விசிறி அல்லன். ஆனால் நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவின் 388 இலக்கை விரட்டிப் போய் 383ஐ எட்டிய அவர்கள் ஆடிய ஆட்டத்தை வெகுவாக ரசித்தேன். இந்த உலகக்கோப்பையின் சிறந்த போட்டி அதுதான். அதுவும் 32வது ஓவரில் டாம் லேதம் அவுட் ஆகாமல் ரச்சின்னுக்கு துணை கொடுத்து 40வது ஓவர் வரை நின்றிருந்தால் கடைசி 10 ஓவர்களில் 80 ரன்கள் தேவை எனும் நிலை வந்திருக்கும். தேவையில்லாமல் ஒரு ரிவர்ஸ் ஸ்வீப்புக்கு அவர் போனதில் ஆட்டத்தின் நிலை மாறியது. ஆனாலும் நீஷம் ஒரு மரண இன்னிங்ஸ் அடித்தாரே அதற்கு ஈடே இல்லை. அந்த காலத்து குளூசினரை நினைவுபடுத்தினார்.
நியுசிலாந்தின் மட்டையாட்ட வரிசையில் உள்ள ஒரெ திறமையாளர் ரச்சின் ரவீந்திரா. (அவர் நேற்று அபாரமான சதத்தை அடித்தார்.) மிச்ச வீரர்கள் மூன்று நான்கு ஷாட்களுக்கு மேல் ஆடத் தெரியாதவர்கள். ஆனால் அவர்களுடைய சிறப்பு தனிச்சிறப்பு எவ்வளவு பெரிய இலக்கையும் விரட்டி கூலாக மட்டையாடுவார்கள் ஆடுவார்கள் என்பது. நேற்றைய போட்டியிலும் பெர்குஸனுக்கு காயம் ஏற்படாமல், இரண்டு கேட்சுகளையும் ரச்சினும் மிச்சலும் விடாமல் இருந்திருந்தால் ஆஸ்திரேலியாவை 340க்குள் கட்டுப்படுத்தியிருப்பார்கள். நிச்சயமாக ஜெயித்திருப்பார்கள். இவ்வளவு துரதிஷ்டம் இருந்தாலும் கவலைப்படாமல் ஆடிய ஆட்டம் No Country for Oldmen படத்தின் சீரியல் கில்லரான ஆண்டன் சிகரை நினைவுபடுத்தியது.
இந்த உலகக்கோப்பையின் சிறந்த அணி இந்தியாவுக்கு அடுத்த படியாக நியுசிலாந்துதான்; திறமையை விட நிதானமே பெரிது என நிரூபிக்கிறார்கள்!