கல்ட் சாமியார்களை நியாயப்படுத்தும் போக்கு சொல்வதென்ன?
கல்ட் மத அமைப்புகளின் வரலாற்று தேவையை சில தமிழ் அறிவுஜீவிகள் இவ்விதமாக நியாயப்படுத்தி வரையறுப்பார்கள்:
(முற்போக்கு)
அடித்தட்டு மக்களை நோக்கி இந்து மதத்தை எடுத்துச் செல்வது;
வெகுமக்கள் திரளில் பெண்களுக்கு இடமளித்து அதிகாரமளிப்பது
(வலதுசாரி)
முதலீட்டிய நகரமயமாக்கல் சமூகத்தில் கிறித்துவமும், இஸ்லாமும் அந்நிய முதலீடுகளைப் பெற்று பெருமளவில் வளர்ந்துள்ளதுடன் மதமாற்றத்திலும் ஈடுபட்டு வருகின்றன. இந்த இரு வாய்ப்புகளும் - நிறுவனமயமாகி நவீன இளைஞர் திரளை உள்ளிழுப்பது, நமது மரபான ஆன்மீக வடிவங்களான, உளவியல் கருவிகளால் யோகா, தியானம் போன்றவற்றைக் கற்றுக்கொடுத்து அவர்களுடைய உளவியல் நெருக்கடிகளைத் தீர்ப்பதும் இந்துமதத்தையும் பரப்பியல் மதங்களிடம் இருந்து பாதுகாத்து நிலைப்படுத்துவதும் - இந்துமதத்துக்கு கிடைக்காமல் போனது. அந்த வெற்றிடத்தில் தோன்றியவையே கல்ட் இந்து மத அமைப்புகளும் அவற்றின் குருமார்களும்.
இந்த இரண்டு தரப்புகளும் கோடானு கோடிகளில் மலைமலையாக குவிந்துள்ள கறுப்புப் பணத்தை பெருமளவில் வெள்ளையாக்குவதற்கும், ஜனநாயக பிரச்சாரத்துக்கு மக்களைத் திரட்டுவதற்கும் கல்ட் அமைப்புகள் பயன்படுத்தப்படுவதை நாம் கவனிக்காமல் இருப்பதற்காக அறிவுஜீவிகள் செய்கிற மோடி மஸ்தான் வேலை மட்டுமே.
முதலில் அடித்தட்டு, எளிய மக்கள், பெண்களுக்கு மதத்தை நுகரும் வாய்ப்பு இங்கு மறுக்கப்பட்டிருந்ததா? நான் கவனித்த வரையில் நாட்டார் வழிபாட்டில் அப்பிரச்சினை இருந்ததில்லை. கிராமங்களிலும் சரி, நகரங்களின் அடித்தட்டு, மத்திய வர்க்கத்தினரின் வசிக்கும் பகுதிகளில் உள்ள நாட்டார் தெய்வ கோயில்களில் பெண்களுக்கு சரிக்கு சமமாக, சில நேரங்களில் ஆண்களை விட அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதைச் செய்ய ஒரு அடிகளாரோ பாபாவோ ஜக்கியோ தேவையில்லை. கல்ட் சாமியார்கள் இப்பெண்களுக்கு பொறுப்பு கொடுத்து அதிகாரம் அளிக்கவில்லை, மாறாக அவர்களை பயன்படுத்தி சுரண்டி பணம் சம்பாதிக்கிறார்கள். அதிகாரத்தைக் கொடுப்பதென்றால் ஒரு வேலையின் கூலியான பணத்தில் பங்கையும் கொடுப்பதுதானே? இந்த ஆசிரமங்கள், அமைப்புகளில் மலைமலையாக திரட்டப்படும் பணத்தில் எத்தனை கோடிகளை இந்த பக்தையருக்கு, பெண் நிர்வாகிகளுக்குக் கொடுத்துள்ளார்கள்? இது அடிகளாரின் முன்னெடுப்பு அல்ல, அவருக்கு முன்பே ஓஷோ இதை செய்திருக்கிறார். அவரை ஒட்டி வந்தவர்களின் கல்ட் அமைப்புகளிலும் (நித்தியானந்தா, ஜக்கி), அவருக்கு முன்பே செயல்பட்ட அரசியல் கல்ட் தலைவரான காந்தியடிகளின் அமைப்பு என எதை எடுத்துக்கொண்டாலும் அங்கு தலைமை குருக்களுக்கு அடுத்தபடியாக பெண் நிர்வாகிகளே இருப்பர். ஆனால் இவர்கள் குருவின் அடிமைகளாக இருப்பதால் கடைசி வரையில் போலியான அதிகாரத்தை அனுபவித்து முழுமையாக சுரண்டப்பட்டு வெளியே வரும் போது யாதுமற்றவர்களாக இருப்பர். கல்ட் அமைப்புகளில் இருந்து வெளிவந்த பெண் நிர்வாகிகளின் புத்தகங்களை, பேட்டிகளைப் படிக்கையில் நாம் இதைத் தவறாமல் கவனிக்கிறோம். ஏன் இருந்தாலும் பெண்கள் அங்கு லட்சக்கணக்கில் படையெடுக்கிறார்கள் எனில் பெண்கள் எப்போதுமே அதிகாரமிக்க ஒரு தந்தை உருவை வழிபடுகிறார்கள்; தம்மை வளர்த்தெடுத்து அதிகாரம் அளிப்பதாக வாக்குறுதி தரும் வரமளிக்கும் தெய்வ உருவை நேசிக்கிறார்கள். ஆனால் தாம் சுரண்டப்படுகிறோம் எனப் புரிந்து விரைவிலேயே வெளிவருகிறார்கள். சிலர் வெகுதாமதமாக உளவியல் ரீதியாக சிதைந்து வெளித்தோன்றுகிறார்கள்.
பெண்கள் நேரடியாக கருவறைக்கு சென்று பூஜை செய்வதும், மாத விலக்கின் போது செல்வதும் அடிகளார் கண்டுபிடித்தது அல்ல. இந்தியாவின் பல பகுதிகளில் இப்படியான பெண்கள் மட்டுமே சென்று வழிபடும் சக்தி பீடங்களும் கோயில்களும் உண்டு. இந்தியப் பண்பாட்டின் பல கூறுகளில் ஒன்று இது. இதை ஒருவர் பயன்படுத்துவதில் முற்போக்கு உண்டெனில் முற்போக்கு என்பதுதான் என்ன?
தம் வாழ்விடத்தில் ஒரு மரத்தடியில் மஞ்சள் துணியை சுற்றியோ கல்லில் சந்தனம், குங்குமத்தைப் பூசியோ தெய்வமாக்கி வழிபடும் போது கிடைக்கும் அணுக்கமும், உரிமையுணர்வும் இம்மாதிரி கல்ட் அமைப்புகளில் ஒருபோதும் கிடைக்கப் போவதில்லை; மாறாக தம் ‘ஆன்மீக உழைப்பில்’ இருந்து அந்நியமாகவே வாய்ப்பதிகம்.
இதையெல்லாம் பெண்ணியம், முற்போக்கு எனும் பெயரில் ஆதரிப்பது மோசடி வேலைக்குத் துணை போவதாகும்.
அடுத்து, இந்து மதத்தை பிரச்சாரம் செய்ய வேண்டிய தேவை என்பதே ஒரு ஏமாற்றுவாதம் தான் - பெரும்பான்மை மதமான இந்துமதம் தன் உறுப்பினர்களை இழந்து பலவீனமாகி வருவதாக நமக்கு எந்த ஆதாரமும் இதுவரைக் கிடைக்கவில்லை. ஆகையால் பிரச்சாரத்துக்குத் தேவையே இல்லை. அடுத்து இந்துமதம் ஒரு நிறுவனம் அல்ல. வரலாற்றின் ஊடே அது நிறுவனமாக இருந்ததே இல்லை (வைணவம், சைவம் போன்ற சில பிரிவுகளைத் தவிர). அடுத்து, யோகா, தியானம் போன்ற உடல், அகப்பயிற்சி முறைமைகள் நம் நாட்டில் இத்தனை நூற்றாண்டுகளாக இந்நிறுவனங்கள் இல்லாமல் தாம் பயிலப்பட்டன. கல்ட் அமைப்புகள் இல்லாவிடில் இவை அழிந்து போகும் என்பதும் மோசடி வாதமே. எத்தனை கோடி பேர் இந்நிறுவனங்களின் பயிற்சியால் யோகாவிலும் தியானத்திலும் நிபுணர்களாகி உள்ளார்கள் என ஏதாவது ஆதாரம் உண்டா? இல்லை. மாறாக இவர்கள் யோகாவையும் தியானத்தையும் விற்று வயிற்றை வளர்க்கிறார்கள். அதை ஒரு சேவையென சொல்லி நிதியும் கறுப்புப்பணமும் வாங்கி கொழிக்கிறார்கள்.
இன்னொரு பக்கம், யோகாவை தனிப்பட்ட முறையில் ஆசான்கள் ஒவ்வொரு ஊரிலும் தெருவிலும் பணம் வாங்கிக்கொண்டு சொல்லித் தர இருக்கிறார்கள். இந்த கல்ட் அமைப்புகளில் பெரும் பணம் செலுத்தி கூட்டத்தோடு கூட்டமாக நின்று பயில்வதை விட இந்த ஆசான்களிடம் கற்பது மேலானது. தியானத்தையும் விபாசனா பயிற்சி மையங்களில் சிறப்பாக கற்றுக்கொள்ளலாம். ஏதோ ஜக்கி இல்லாவிடில் மக்களுக்கு யோகாவும் தியானமும் கிடைக்காது என்பதாக ஒரு பாவ்லா செய்கிறார்களே இவர்களை செருப்பால் அடிக்க வேண்டாமா? அடுத்து, யோகா ஒரு உடற்பயிற்சி, streching exercise. தியானம் நம் உளவியல் ஆரோக்கியத்துக்கானது. இதை ஒருவர் நமது தத்துவ மரபுடன் தொடர்புறுத்தி யோசிக்கலாம். ஆனால் மதத்திற்கும் இவற்றுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. உண்மையான யோகா அசான்கள் தம்மைக் கடவுளாகவோ குருவாகவோ கருதுவதில்லை என்பதே நிஜம். மனிதர்களே சிந்தித்து பரிசோதித்து உருவாக்கின உத்திகள், பயிற்சிகளைச் செய்ய எதற்கு கடவுளுக்கு பங்கு கொடுக்க வேண்டும்? ஒன்றைக் களவாடி எடுத்து தமதானதாக காட்டிக்கொண்டு அதில் இருந்து ஆன்மீக அதிகாரத்தையும் பணத்தையும் கறப்பவர்களை திருடர்கள் அல்லாமல் வேறு எவரென அழைப்பது?
ஆகையால் கல்ட் நிறுவனங்களால் மக்களுக்கு எந்த நேரடி நடப்பியல் பயனும் இல்லை; ஒரு பப், மாலுக்கு, நைட் கிளப்புக்கு உள்ள சமூகத் தாக்கமே இவர்களுடையதும். கிறுத்துவ தேவாலயங்களின் இந்து மத நீட்சிகளாக உள்ளன. கிறித்துவத்திற்கு எப்படி இவை பலனளிக்கவில்லையோ அவ்வாறே இந்துமதத்துக்கும். வணிகப்பரிமாற்றத்தைத் தாண்டி இவை கேளிக்கை களங்களாகவோ கறுப்புச் சந்தைக்கு முகமாகவோ இயங்குவது மட்டுமே பயன்கள். இன்னும் சொல்லப்போனால் மக்களுக்கு போய் சேர வேண்டிய வரிப்பணம் இச்சாமியார்கள் மூலம் வெள்ளையாக்கப்பட்டு அதனால் இந்நாட்டில் வறுமையே அதிகரிக்கிறது. இவர்களே ஆதரிக்கும் இந்து சமூகத்தில் கடும் பணவீக்கமும் விலையேற்றமும் ஏற்பட்டு மக்கள் துன்புற இந்த கல்ட் அமைப்புகள் ஒரு முக்கிய காரணமாகின்றன.
இந்த கல்ட் சாமியார்களை நியாயப்படுத்தி நாம் கடவுளின் இன்மை ஏற்படுத்தும் பதற்றத்தை ஆற்றிக் கொள்கிறோம் என நினைக்கிறேன்.
பி.கு: கிறித்துவ, இஸ்லாமிய மத நிறுவனங்கள் வணிக செயல்பாடுகளில் ஈடுபட்டு பணத்தைக் குவிப்பதற்கு நம் இந்திய சட்டத்தில் அளிக்கப்படும் அனுகூலங்கள் களையப்பட வேண்டும். சாதி, மத அறக்கட்டளை கல்வி, ஆன்மீக நிறுவனங்கள் வணிக செயல்பாடுகளாக மட்டுமே பார்க்கப்பட வேண்டும். மதத்தின், சாதியின் அடிப்படையில் அறக்கட்டளைகள் நிறுவப்பட்டு பணத்தைக் குவிக்கும் போது சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு அதிகாரம் சில மையங்களுக்குள் இறுகுகிறது. தனியார் என வந்தபின் எல்லாரும் ஒன்றுதான், கல்வி, மதப்பிரச்சாரம் எதுவும் தொண்டாகாது. ஏனெனில் இதைக் காட்டி இந்து கல்ட் அமைப்புகளும் இந்துத்துவ கட்சிகளும் இன்னொரு புறம் கொள்ளையடிக்கின்றன. மதசார்பின்மை அல்ல, அரசியலிலும் சமூகப்பொருளாதாரத்திலும் இருந்து மத நீக்கமே நமக்குத் தேவை. இந்தியாவில் உள்ள மதசார்பின்மை ஒரு போலி மதசார்பு கொள்கை மட்டுமே.

