நான் சென்னையில் இருந்திருந்தால் இந்த எழுத்தாளர்கள் ஆவணப் பட விழாவுக்கு நிச்சயமாக சென்று மகிழ்ந்திருப்பேன். ஒரு இலக்கிய விட்டேந்தித்தனம் இப்போது வந்துவிட்டாலும் மகிழ்ந்திருப்பேன். எழுத்தாளர்களும் வாசகர்களும் ஒன்று கூட, உரையாட நல்ல வாய்ப்பு. திருவுருவாக்கத்திற்கும் தான் - இலக்கிய சூழல் நிலைக்க நம் முன்னோடிகளை திருவுருவாக்குவதே தீர்வு. சும்மா விமர்சித்து ஓயாமல் சண்டையிடுவதால் தான் இப்படி பிச்சையெடுக்கும் நிலையில் படைப்பாளிகள் இங்கிருக்கிறார்களோ? பிரான்ஸில் முன்பு நிலைமை இப்படி இருந்ததென சொல்வார்கள். ஆனால் அமெரிக்கா, இங்கிலாந்தில் மோதல், சாதல், காதல் எல்லாம் இராது. இந்திய ஆங்கில எழுத்தாளர்களும் அப்படித்தான் - சண்டை போடவே மாட்டார்கள். எப்போதும் ஐந்து நட்சத்திர விடுதியிலே குடியிருப்பதாலோ என்னவோ நாவலை வெளியிட்டு புரொமோஷனுக்கு "எட்ரா வண்டிய" எனக் கிளம்பும் வரை கைப்புள்ள இருக்கிற இடம் தெரியாது. தமிழில் துரதிஷ்டவசமாக நீண்ட காலமாக பிரெஞ்சு சூழல் இருக்கிறது. கொஞ்ச நாட்கள் மாறுவது, சுயவளர்ச்சியில் கவனம் செலுத்துவது நல்லது. நம் புத்தகங்கள் பரவலாக மக்களிடம் போக வேண்டும். ஆங்கிலத்தில் உள்ள ஜெ.ஸி.பி மாதிரியான விருதுகள் தமிழிலும் தோன்ற வேண்டும். இங்கு இல்லாத பணமா? அதற்கு திருவுருவாக்கம் அவசியம்.
இந்த ஆவணப்படத் திருவிழாவில் முதல்வரும் அமைச்சர்களும் பங்கேற்றால் நன்றாக இருக்கும். பிக்பாஸில் கமல் செய்வதைப் போல முதல்வர் தினமும் ஒரு நூல் விதம் 100 நாட்களுக்கு இலக்கிய அறிமுகம் செய்து காணொளியாக வெளியிடலாம். அமைச்சர்களும் செய்யலாம். அதற்கு பெரிய படிப்பாளியாக இருக்க வேண்டும் என அவசியம் இல்லை அத்தகைய ஆதரவே இலக்கியத்தை பொதுஜனத்திடம் கொண்டு சேர்க்கும்.
அதுவரை நம்மிடம் உள்ள கட்டமைப்பை வைத்தே இலக்கிய சூழலை வளர்க்க வேண்டி உள்ளது. அதையே மனுஷ்யபுத்திரன் செய்துவருகிறார். அவருக்கு என் அன்பும் வாழ்த்துக்களும்!
பின்குறிப்பு: ஏதோ சச்சரவு, சர்ச்சை என்றார்கள். ஒரு இலக்கிய அந்நியனாக இருக்கும் என் கண்ணில் இயல்பாகவே அது படவில்லை. யார் வீட்டு எழவோ பாய் போட்ட எழவோ என்று இருந்துவிட்டேன்.