கட்டுரையில் ஒரு கட்டத்தில் எதிர்பாராத ஒரு எதிர்பாரா கோணத்திற்கு நம் விவாதங்கள் பயணிக்கும். இதை நான் திட்டமிடவே இல்லையே என வியப்போம். அது அந்த எதிராளி முழுக்க மறைந்து நாம் அவரது கோணத்தில் சிந்தித்து அதற்கு ஏற்ப சிந்தனையை வேறொரு இடத்தில் நகர்த்துவதாலே. அது எழுத்தில் ஒரு சுகமான பகுதி. ஒரு கண்டுபிடிப்பு. உருமாற்றம். வளர்ச்சி. அதற்கு எழுத்துக்குள் முன் எண்ணங்கள் இன்றி செயல்பட முடிய வேண்டும்.
இறுதி வகுப்பு இப்படி சுவாரஸ்யமாக முடிந்தது.
நான் தினமும் புனைவெழுதுவதால் ஒரு மூடுண்ட மனநிலைக்குப் போய் விடுகிறேன். அதிகமாக பயணிக்கவோ எழுதவோ நான் விரும்பவில்லை. அப்படிப் பேசும் போது எதிர்த்தரப்பு கண்ணாடிக் கூண்டுக்கு வெளியே தான் இருக்கிறார்கள். அதனாலே நான் மனதளவில் ஒதுங்கி ஒதுங்கிப் போகிறேன். இதற்கு விடுதலை அளிப்பது எழுத்துக்கலை வகுப்புகளே. மாணவர்கள், இளம் படைப்பாளிகளுடன் உறவாட, நட்பை உருவாக்க, கண்ணாடிக் கூண்டை விட்டு வெளியே வர இது உதவுகிறது.
அதனால் அடுத்து நாவல் வகுப்பு விரைவில் ஆரம்பமாகும். விருப்பமுள்ளோர் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.