இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வர மாட்டேன். காரணம் பணம் இல்லை. நாய்களைப் பார்த்துக் கொள்ளும் இடத்திற்கான இரு நாள் செலவு, எனக்கும் பல்லவிக்கும் பயணச் செலவு, சென்னையில் தங்கும் விடுதி செலவு எனப் போட்டுப் பார்த்தால் பட்ஜெட் எகிறுகிறது. அப்பணத்தில் 40 புத்தகங்களுக்கு மேல் இணையத்தில் வாங்கலாம். நல்லதாகப் பார்த்து பத்து சட்டைகள் எடுக்கலாம். ரொம்ப நாளாக பத்து கிலோ டம்பல்ஸ் வாங்க யோசித்துக் கொண்டிருக்கிறேன். அதை வாங்கலாம். அல்லது ஒன்றுமே வாங்காமல் வங்கிக்கடனில் ஒரு சிறுபகுதியைக் கட்டிவிடலாம். அடுத்த ஆண்டுக்கான ஏதாவது ஒரு சேமிப்பில் போடலாம்.
என்ன ஸ்டாலில் அமர்ந்து வாசகர்களை சந்திப்பதை, கையெழுத்திட்டுக் கொடுப்பதை, சக படைப்பாளிகளை, நண்பர்களை அட நீங்களா என சுழல்வட்டபாதையைப் போன்ற அரங்குகளில் சந்தித்து விளையாட்டான மகிழ்ச்சியுடன் கைகுலுக்குவதை, அணைப்பதை மிஸ் பண்ணுவேன். ஸ்டால் அலமாரிகளில் புத்தகங்கள் காப்பகத்து முதியோரைப் போல, மலைவாசஸ்தல மரங்களைப் போல என்னைப் பார்த்திருக்க அவற்றிடம் போய் திறந்து பார்த்து நலம் விசாரிப்பதை மிஸ் பண்ணுவேன். கடற்கரையை, உப்புக்காற்றை, அந்த சாலைகளை, வெய்யிலை, உரையாடலை, அன்றாடத் தமிழ் விசாரிப்புகளை, காரசாரமான உணவை, என் நினைவுகள் நிறைந்த கட்டிடங்களைக் கடந்து வரும் மனவெழுச்சியை, மிஸ் பண்ணுவேன். பரவாயில்லை - அடுத்தடுத்த ஆண்டுகளில் இன்னும் அதிகமாக என்னிடம் பணமிருக்கும். அப்போதும் இவையெல்லாம், இவர்களெல்லாம் இருப்பார்கள் தாமே?