அண்மையில் நடந்த யுவனுக்கான விஷ்ணுபுரம் விருது விழாவின் (2023) அமர்வு ஒன்றில் ஜெயமோகன் தன்னிடம் இன்றைய இணையதளங்களால் ஒரு விமர்சன மரபை ஏன் உருவாக்க முடியவில்லை என்று கேட்டதாக சொல்லி அதற்கு தான் யோசித்துக் கண்டடைந்த பதில் என ஒன்றை க. விக்னேஸ்வரன் (கனலி இணைய இதழ் ஆசிரியர்) தன் பேஸ்புக் தளத்தில் எழுதியிருந்தார். அதில் அவர் முந்தைய விமர்சன மரபு எப்படி நிறைய தியாகங்கள், கருத்து மோதல்கள் மத்தியில் ஒரு முரணியக்கமாக தோன்றியது எனக் குறிப்பிட்டு இன்று அதற்கான தேவை ஏற்படவில்லை என்று கூறியிருந்தார். அதைப் படித்த போது எனக்கு மற்றொரு பதில் தோன்றியது: இன்று ஏன் விமர்சகர்களும் திறனாய்வாளர்களும் தேவையில்லை எனப் பரவலாக ஒரு சிந்தனை இருக்கிறதெனில் இது நம் மண்ணில் தோன்றியுள்ள இலக்கிய நுகர்வுக் காலத்தின் முதற்கட்டம்.
ஈழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் எப்படியெனத் தெரியவில்லை, ஆனால் தமிழகத்தில் விமர்சனம், மதிப்புரை போன்ற வஸ்துக்கள் சிரசேதம் செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டு விட்டன. விமர்சகர்கள் செயற்கையான மேற்கத்திய கருத்துருக்களை இங்கே இறக்குமதி செய்து மட்டையடி அடித்தவர்கள், சொந்த மூளையற்றவர்கள், இலக்கிய நுண்ணுணர்வு அற்று அரசியல் மதிப்பீடுகளை மட்டுமே இலக்கியத்தின் மீது வைப்பவர்கள் என சிலரால் ஏராளமான சேறு வாரி இறைக்கப்பட்டது. இது சிரச்சேதத்தை நியாயப்படுத்துவதற்கான ஒரு கதையாடல். இலக்கியத் திறனாய்வின் இடத்தில் முன்பிருந்த கறாரான அழகியல் மதிப்பீடுகள் கூட இன்று இல்லை. க.நா.சுவின் உரைகல் மதிப்பீட்டைக் (டச் ஸ்டோன் மெதாட்) கூட இன்றுள்ளவர்கள் பயன்படுத்துவதில்லை. இன்று புத்தகங்களை பரிசீலிப்பவர்கள், புத்தகங்களைக் கொண்டு விரிவான சமூக, அரசியல், பண்பாட்டு, வரலாற்றியல், தத்துவார்த்த விவாதங்களை முன்னெடுப்பவர்கள் மறைந்து எளிய பரிந்துரையாளர்களே வந்திருக்கிறார்கள். ஒரு உணவகத்து பிரியாணியை பரிந்துரைப்பதைப் போலத்தான் நூல்களையும் பாராட்டுகிறார்கள். அல்லது நிராகரிக்கிறார்கள்.
இன்றுள்ள விமர்சகர்கள் என இருப்போரும் 70, 80களை சேர்ந்தவர்கள். அவர்களிலும் சிலர் முன்னுரை எழுதக் கூடியவர்களாக பரிந்துரையாளர்களாக மாற்றப்படுகிறார்கள். வேறு சிலரோ தம்முடைய இலக்கிய அரசியலுக்காக விமர்சனத்தை வங்கிக்கொள்ளையரின் துப்பாக்கியைப் போல பயன்படுத்துகிறார்கள். இன்றைய இளம் படைப்பாளிகள் விமர்சனத்தை வழியில் போகும் வம்பை கூப்பிட்டு அடிவாங்கும் செயலாகப் பார்க்கிறார்கள். அவர்களுக்கு யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் சொல்லக் கருத்தில்லை. மேலும் அவர்கள் தம் முந்தைய தலைமுறையினரைப் போல செறிவான கருத்தியல் விவாதங்களையும் கோட்பாட்டு மோதல்களையும் படித்து வளராதவர்கள். அவர்கள் இணையதள எழுத்தின், சமூகவலைதள கொண்டாட்டத்தின் பிள்ளைகள். அவர்கள் ஒரு புராதன நகரத்தின் மீது மண்மூடி மறைந்த பின் அங்கு தோன்றியவர்கள். இன்னொரு பிரச்சினை இவர்கள் தம் முன்னோடிகளாக கருதுவோர் 80, 90களில் எழுத வந்து சிறந்த புனைவெழுத்தாளர்களாக நிலைப்பெற்றவர்கள். இவர்கள் பெரும்பாலும் விமர்சனம் எழுதுவதில்லை அல்லது விமர்சனம் இலக்கியத்துக்கு விரோதமான மலினமான அரசியல் செயல்பாடு என நம்புகிறார்கள் அல்லது கூறுகிறார்கள். இதுவும் விமர்சனம், திறனாய்வுக்கு எதிரான ஒரு பண்பாட்டு வெப்பத்தை அதிகப்படுத்தி அதில் காய்ந்து நலிந்து எதிர்க்கருத்தாளர்கள், திறனாய்வாளர்கள், விமர்சகர்கள் ஓய்ந்துவிட்டனர். இறுதியாக 90களுக்குப் பின்னர் இங்கு டி.வி, இணையதளங்கள் வழியாகவும், உலகமயமாக்கல், நகரமயமாக்கல், ஐ.டி வேலைகள், புலம்பெயர்வு என தலைகீழ் மாற்றங்கள் நிகழ்ந்ததில் சம்பாதிப்பது, கேளிக்கையை அனுபவிப்பது, அடுத்து ஓடுவது, அதைத்தாண்டி எதற்கும் நேரமில்லை என தமிழ்நாடு உருமாறியிருக்கிறது. இது நேரம் சம்மந்தப்பட்ட பிரச்சினை அல்ல - நாம் அடையாளமற்றவர்களாக, சாரமற்றவர்களாக, அகம், புறமென சதா ஒரு போதாமை கொண்டு நிலைப்புக்காக ஓட வேண்டியவர்களாக மாற்றப்பட்டு விட்டோம். இலக்கியம், பண்பாடு மீதான ஆழமான பிடிப்பு ஒரு சிறு பகுதியினருக்கு முன்பு இருந்து அவர்கள் சிறுபத்திரிகைகள், இலக்கிய வட்டங்கள், இயக்கங்கள் என அரை நூற்றாண்டாக இயங்க முடிந்தது. அந்த பிடிப்பு, நம்பிக்கை இன்று காலியாகி விட்டது. இன்று எழுத வருவோரிடம் நீ உனக்காக எழுது, வேறு யாரும், எதுவும் பொருட்டல்ல, இலக்கியமும் மொழியும் கூட பொருட்டல்ல எனும் மனநிலையை நாம் விதைக்கிறோம். எழுத்து-பிரசுரம்-அங்கீகாரம் ஒரு சுயமுன்னேற்ற நடவடிக்கையாகவும் வாசிப்பு கேளிக்கையாகவும் மாறிவிட்டது. சற்று சிக்கலான சவாலான படைப்புகளைத் தேடிப் படிக்கும் ஆர்வம் குறைகிறது, தீவிரமான படைப்புகளும் ஜாலியாக “என்கேஜ்” பண்ண வேண்டும், படிக்கும் நேரமே தெரியாமல் இருக்க வேண்டும் என எழுத்தாளர்களும் தீவிர வாசகர்களும் எதிர்பார்க்கிறார்கள். எழுத்து அகம் நோக்கியதாக இருந்து சட்டென புறவயமானதாக மாறுகிறது, ஆனால் இந்த புறமும் முன்பு நாம் கண்ட செறிவான பொருளியல் நோக்கு கொண்ட அரசியல் புறவுலகம் அல்ல, இது ஒரு வெறுமையான எளிய உணர்ச்சிகளாலான புறவுலகம் அல்லது குடும்ப உறவு, குடும்ப வரலாற்றுப் புற மட்டுமே. ஒரு படைப்பாளியை அவரது சாதி, மதம், பாலினம் சார்ந்து சுருக்கும் போக்கையும் நமது ஊடகங்களும் நிறுவனங்களும் ஊக்குவிக்கின்றன. ஒருவருக்கு விருது அளிக்கப்பட்டால் இன்ன சாதியை, மதத்தை, வட்டாரத்தை சேர்ந்த நபருக்கு இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு விருது போயிருக்கிறது, அதனால் இது ‘நியாயமானது’ எனும் உணர்வு பரப்பப்படுகிறது, அவரது படைப்பாளுமை பின்னுக்குத் தள்ளப்படுகிறது. இச்சூழலை படைப்பாளிகளும் வாசகர்களும் அல்ல புறவுலகமே உருவாக்குவதாக நான் நம்புகிறேன். (ஏனென்றால் படைப்பாளிக்கு இது ஒரு அவமானம்.) ஆக ஒரு பத்தாண்டுக்குள் ஒரு பெரிய இடைவெளி விழுந்திருக்கிறது. இச்சூழலுக்குள் இலக்கியம் ஒரு உயர்தர வெற்றுக் கேளிக்கையாக, நுகர்வாகத் தானே இருக்க முடியும். இது ஒரு பெரும் சீரழிவோ வீழ்ச்சியோ அல்ல, ஒரு பெரும் சூன்யம்.
இந்த சூன்யத்தில் இருந்தே இன்றைய வியாபாரம் நடக்கிறது. இதை நாம் நன்கு கவனிக்க வேண்டும். இருப்பதை விற்பதல்ல, இருப்பதைப் போல் ஒன்றை சித்தரித்து நுகர வைப்பதே இன்றைய பின்நவீனத்துவ வியாபாரம். இன்னும் சொல்லப்போனால் நம் காலத்தை சிறுதுண்டுகளாக்கி நம்மிடமே திரும்பத் தந்து அதைக் கொண்டு மகிழக் கேட்பதே இன்றைய வணிக தந்திரம். வெகுஜன கேளிக்கை மட்டுமல்ல மின்னணு பொருட்கள், ஆடைகள், உணவு வகைகளில் இருந்து நாம் வாங்கிக் குவிக்கும் பல்வேறு சிறு பண்டங்கள் வரை இவ்வாறே இன்மையின் மீது அமைக்கப்பட்டுள்ளன. அதனாலே இல்லாத காலம் குறித்த கற்பனையை இவை உருவாக்கி நம்மிடம் விற்பதாக சொல்கிறேன். ஐ.டி திடீர் பணக்காரர்களும் தாம் வீடு, நிலம் என வாங்கிப் போட்ட முதலீடுகள் கூட இன்று மதிப்பிழந்து போய் சூன்யமாகிட ஏமாறி நிற்கிறார்கள். இன்று பணம் பாலைவனத்தில் இல்லாத தடாகம். இன்று நுகர்வு அத்தாடகத்தில் எழும் அலைகள். எல்லாரும் தமது இருப்பு குறித்து இதனால் ஒரு பயம் வந்துவிட்டது. தம்மிடம் உள்ள பண்டங்கள், முதலீடுகள் இன்மையாகி விடுமோ என ஒரு நடுக்கம். ஆனால் இது ஒரு சந்தைப் போதாமை அல்ல, இது சந்தை வளரவே வெகுவாக உதவுகிறது. இது அதுவல்ல, இது நம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாது, ஆனால் அது செய்யக் கூடும் எனும் பதற்றத்தினாலான இச்சையே பண்டமாக்கல்லின் விசையாக இன்று மாற்றப்படுகிறது என்று உளவியலாளர் லெக்கன் கூறுகிறார். லெக்லெவ் இதை ஒரு வெற்றுக்குறிப்பான் என்கிறார். கைக்குள் வந்ததும் மறைந்துபோகும் பட்டாம்பூச்சியைப் போல இன்றைய துய்ப்பு, அனுபவங்கள் மாறிவிட்டன, அதனாலே பட்டாம்பூச்சியை துரத்திக் கொண்டு வெட்டவெளியில் ஓடும் சிறுவனைப் போல நாம் மாற்றப்பட்டு விட்டோம். இன்மையே இருப்பாகி அதுவே வாழ்வின் கொண்டாட்டம் ஆகும் போது அங்கு நாம் (தனிமனிதரும் சந்தையும்) எதை மிக அதிகமாக அஞ்சுவோம்? எதை அதிகமாக எதிர்ப்போம்? உடனடியான நுகர்வுக்கான அனுபவத்தை மறுத்து அதை இன்னும் சிக்கலாக்குவதை, தீவிரமாக்குவதை, ஆழமாக்குவதை எதிர்ப்போம். குறிப்பாக வாசிப்பனுபவத்தை ‘அப்பாலைத் தன்மையை’ நம்மால் இன்று தாங்கிக் கொள்ள முடிவதில்லை. அது இன்னதாக தம் கையருகிலேயே தம் பிடியிலேயே இருக்க வேண்டும் எனப் பதறுகிறோம். இயல்பாகவே நாம் இதற்கு இடைஞ்சலாக உள்ள திறனாய்வுத் துறையையும் கருத்தியல் விவாதங்களையும் பூச்சிமருந்தால் ஒழித்துவிட்டோம்.
கடந்த இருபதாண்டுகளில் இலக்கிய பதிப்பில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப மாற்றங்களால் வாசக வட்டம் சற்றே வளர்ந்து முன்பை விட அதிக நூல்கள் இன்று விற்கின்றன. ஆனால் இலக்கியத்தில் நிகழ்ந்துள்ள இந்த சமூகப்பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல, சமூக வலைதளங்கள், நவ ஊடகம் வழியாக உருவாக்கப்படும் உயர் பண்பாட்டு மதிப்பும் முக்கியமாகிறது. துரதிஷ்டவசமாக இதுவும் குறியீட்டு அளவிலே இருக்கிறது. நடப்புலகில் மதிப்பிருப்பதில்லை. அங்கீகாரங்கள் இன்று அதிகமாகி இருந்தாலும் ஒருவித போதாமையை அவை இலக்கியவாதிகளிடம் உண்டு பண்ணுகின்றன. இது வேண்டும், ஆனால் இது நிச்சயமாக அதுதானா, இது இல்லாமல் போகிறதா என அவர்கள் யோசிக்கிறார்கள். அவர்கள் அதற்காக எதையும் செய்யலாம், எதையும் விட்டுக்கொடுக்கலாம், சமரசம் செய்யலாம், எந்த உறுதிப்பாடும் தம் நிம்மதிக்கு, திருப்திக்கு பாதகமாகும் என நினைக்கிறார்கள்.
இந்த நிலையில் பிறகே வாசகர்களும், எழுத்தாளர்களும் ஒருசேர புத்தக எழுத்தையும் வாசிப்பையும் வெறும் கேளிக்கையாக, வெற்று விளம்பரமாக கருதத் தொடங்கியுள்ளனர். என்ன நடந்தாலும் அது தம் நூலை ஒட்டி நடந்தால் போதும், ஆனால் தம் நூலின் மீதாக எழும் விரிவான சிக்கலான விவாதமாக அது மாறக்கூடாது எனக் கருதுகிறார்கள். இது சரிதானே என சிலர் நினைக்கலாம். அவர்கள் வாசிப்பின் நோக்கம் என்னவென தமக்குள் கேட்க வேண்டும்.
வாசிப்பு என்பது ஒரு புத்தகத்தின் கருத்துக்களை அறிவதும் அதன் கதை தரும் சுவாரஸ்யத்தை அனுபவிப்பதும் எனில் அது வாசிப்பு அல்ல, நுகர்வு மட்டுமே. வாசிப்பு ஒரு படைப்பூக்க செயல். அது உங்கள் இருத்தலை ஆழமாக்க வேண்டும், அது இச்சமூகத்துடன் உரையாடவும் உறவாடவும் வாய்ப்பை அளிக்க வேண்டும். அதற்கு நீங்கள் ஒரு புத்தகத்தைப் பற்றியல்ல அதைத் தாண்டியே உரையாட வேண்டும். உ.தா., ஒரு நாவல் வன்முறையைப் பற்றி பேசுகிறதெனில் அதைப் படிக்கும் நீங்கள் வன்முறை என்னவென உங்களிடம் கேட்டுக் கொள்ள வேண்டும், அக்கேள்வியை உங்கள் அனுபவம், அறிவின் வழியாக, பல்வேறு துறைசார்ந்த முறைமைகள் வழியாக அலச வேண்டும், அதைக் குறித்து சமூகத்திடம் உரையாட வேண்டும், இயன்றால் நீங்களும் படைப்பாகவோ விமர்சனமாகவோ அதை சார்ந்து எழுத வேண்டும், அந்த நூலை ஒரு படியாக பயன்படுத்தி நீங்கள் ஏறி மேலே போக வேண்டும். அப்போதே வாசிப்பு படைப்பூக்கமான செயலாகும். படித்து விட்டு கிணற்றில் போட்ட கல்லாக நீங்கள் கிடந்தால் அது ஒரு நுகர்வு, வாசிப்பு அல்ல. சரியான வாசிப்பு நீங்கள் சாப்பிட்ட உணவில் இருந்து உடல் சத்துக்களை உள்வாங்கி அதை ஆற்றலாக்கி மானுட செயல்பாடுகளாக்கி சமூகத்தை மேம்படுவதை ஒத்தது. (இதையே நான் எனது “ஏன் வாசிக்க வேண்டும்?” நூலில் விரிவாக பேசியிருக்கிறேன்.) தமிழில் இந்த படைப்பூக்கமான வாசிப்பு இன்று பொதுவெளியில் வாசகர்களிடம் காணாமல் ஆகியிருக்கிறது. ஏனெனில் படைப்பூக்கமான வாசிப்புச் சூழலை இங்கு திட்டமிட்டு அழித்திருக்கிறார்கள். எழுத்தாளர்களும் வாசகர்களும் இன்று விற்பனைப் பிரதிநிதிகளைப் போல மாற்றப்படுகிறார்கள். இலக்கிய நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்கள் வணிக வளாக காவலாளிகள் போல் மாறுகிறார்கள். வாசிப்பின் உடனடி மகிழ்ச்சி, விளம்பரம், பரிந்துரை, விற்பனை தாண்டி எழுத்தாளர்களும் வாசகர்களும் பேசுவதை இன்று யாரும் ஊக்கப்படுத்தவதோ விரும்புவதோ இல்லை.
அது மட்டுமல்ல வாசகர்களே இன்று விமர்சனத்தின் பயன் என்னவெனக் கேட்கிறார்கள். ஒரு புத்தகம் நன்றாக இருக்கிறது என நாலு இடத்தில் சொன்னால் புத்தகப் பரவலாக்கம் நடக்கும், அது நல்லது தானே எனக் கேட்கிறார்கள். ஆம், ஆனால் பரவலாக்கம் என்பதுதான் சோப்பு, ஷாம்பூ விளம்பர நிறுவனங்கள் செய்வதும். புத்தகம் விற்கக் கூடாது என்று நான் சொல்லவில்லை, ஆழமாக வாசிக்கப்படுவதன் இடத்தில் விற்பனை இன்று முன்னுரிமை பெறுகிறது, அது தவறு என்கிறேன். நாம் இன்று ஹார்ப்பிக் விற்கும் அப்பாஸைப் போல ஆகி விட்டோம், அது தவறு என்கிறேன். வியாபாரத்திற்கு அப்பால் நிறைய உள்ளது. வாசிப்புக்கும் நம் இருத்தலுக்கும் ஒரு மறுக்க முடியாத ஆழமான உறவு உள்ளது. வாசிப்பைக் கொண்டு நாம் முன்னெடுக்க வேண்டிய சமூகப் பண்பாட்டு மாற்றங்கள் உள்ளன. ஜக்கி வாசுதேவின் சீடர்கள் ருத்திராட்ச கொட்டைகளை ஆயிரம் ரெண்டாயிரத்திற்கு கூவி கூவி விற்பதற்கும் இலக்கிய வாசக செயல்பாட்டுக்கும் ஒரு வித்தியாசம் இருக்க வேண்டும், அது இன்று மறைந்து விட்டதென்கிறேன்.
இப்போது நீங்கள் எந்த இலக்கிய விழாவுக்குப் - அதாவது புத்தக வெளியீடு, விருதளிப்பு நிகழ்வுக்குப் - போனாலும் அங்கு புத்தகங்களும் எழுத்தாளர்களும் மட்டுமே எந்த விமர்சனமும் அற்று பரிந்துரைக்கப்படுவதைப் பார்க்கலாம். ஒரு புத்தகம் ஏன் இப்படி எழுதப்பட்டுள்ளது எனும் அலசல் இல்லை, அது சொல்லும் கருத்தை ஒட்டி ஒரு சமூக அரசியல் தத்துவ விவாதம் நடப்பதில்லை. அப்படி யாராவது செய்தால் பதிப்பகத்தார், எழுத்தாளர்கள் எல்லாரும் அசௌகர்யப்படுகிறார்கள். “இவன் ஏன் புத்தகத்தைப் பாராட்டிப் பேசுறதை விட்டுட்டு என்னென்னமோ பேசுறான்?” என யோசித்து “அன்புள்ள மான்விழியே” என்று துண்டுக் காகிதத்தை கொடுத்து விடுகிறார்கள். நான் வளர்ந்த காலத்தில் புத்தகத்தைத் தாண்டி விரிவாக விவாதிக்கப்படும் ஏராளமான இலக்கிய கூட்டங்களைக் கண்டிருக்கிறேன். இன்று நிலைமை தலைகீழாகி விட்டது. ஏன் அப்படி?
இதைப் புரிந்துகொள்ள காஸ்மெட்டிக் சந்தைக்கு நாம் போகலாம். தோலை வெளிற வைக்கும் பேர் ஆண்ட் லவ்லி களிம்புகளை ஒட்டி ஒரு சர்ச்சை நடக்கிறது என வைப்போம்: கறுப்பு-வெள்ளை இருமையை உருவாக்கி களிம்பை விற்பது ஒரு நவகாலனியாதிக்கம், சாதிய மனப்பான்மை, இனவாதம், அது மனிதரின் மாண்பை, கௌரவத்தை அழிக்கிறது இப்படி அறிவுலகத்திலும் வெகுஜன ஊடகத்திலும் காரசாரமாக விவாதிக்கிறார்கள். இன்னொரு பக்கம் இந்த களிம்பினால் இன்னின்ன பயன் உள்ளது, எனக்கு இந்த விளைவு ஏற்பட்டது, இன்னின்ன பிரச்சினைகள் இந்தித்த களிம்புகளில் உள்ளன இப்படி சில யூடியூப் மதிப்புரைகளும் வருகின்றன. பேர் ஆண்ட் லவ்லி நிறுவனம் இவற்றில் எதை விரும்பும்? பின்னதைத் தான். ஏனெனில் முன்னது அந்த களிம்பைத் தாண்டி விவாதத்தை எடுத்துப் போகிறது, அதன் தேவையையே காலி பண்ணுகிறது. ஆனால் பின்னதோ ஒரு களிம்பில் பல குறைகளைக் கண்டாலும் அதன் நுகர்வு அனுபவத்தை முன்னிறுத்துகிறது. எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் இலக்கிய அமைப்பாளர்களும் இதனாலே தம் நூலை ஒட்டி நடக்கும் சமூக அரசியல், தத்துவ விவாதங்களை விட அதில் வரும் கருத்துக்களை வைத்து நடக்கும் சர்ச்சைகளை, கடும் மறுப்பு, எதிர்ப்புகளை, கொண்டாட்டங்களை, பாராட்டுக்களையே விரும்புகிறார்கள். ஏனெனில் எதிர்ப்போ ஏற்போ அது நுகர்வுக்குள்ளே நடக்கிறது. அவர்கள் ஒருசேர வாசிப்பை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் விரிவான விவாதங்களை நடத்துவோரை தடைசெய்கிறார்கள், அதையும் மீறி வேறு இடங்களில் சென்று விவாதித்தால் தேசிய பாதுகாப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யலாமா என யோசிக்கிறார்கள்.
இன்றைய விருதளிப்பு நிகழ்வுகளும் விவாதங்கள், உரையாடல்கள் அற்ற ஒரு உறவினர் மத்தியிலான சந்திப்பதைப் போல, ‘உண்டாட்டு’ விழாவாக, கொண்டாட்டமாக நிகழ்வது இதனாலே. எந்த நிறுவனத்திலும் முதலாளிகளும் வணிகர்களும் இவ்வாறே தம்மைத் தாண்டிய கதையாடல்களை அனுமதிக்க மாட்டார்கள். உதாரணத்திற்கு நீங்கள் ஒரு பிளாஸாவில், மாலில் போய் அமர்ந்து அரட்டை அடிக்கலாம், அங்குள்ள பொருட்களை வேடிக்கை பார்த்து ஐஸ்கிரிமோ சாண்ட்விச்சோ வாங்கித் தொன்றபடி நடக்கலாம். ஆனால் அங்கு போய் நீங்கள் வட்டமாக அமர்ந்து அரசியல் பேசினாலோ தண்டால் எடுத்தாலோ வெளியே அனுப்பிவிடுவார்கள். ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்கிட்டே நாங்க பாலின சமத்துவம் பற்றி ஒரு சச்சரவில்லாத உரையாடலை முன்னெடுக்கிறோம் என்று சொன்னால் கூட அனுமதிக்க மாட்டார்கள். சாண்ட்விச் சாப்பிட்டுக் கொண்டே உங்கள் கடை வாசலில் நின்றே தண்டால் எடுத்து யோகா செய்கிறோம் என்றாலும் அனுமதிக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் விற்கக் கூடிய பண்டமல்ல அது, அது அவர்களுடைய பண்டங்களுக்கு, நுகர்வுக்கு அப்பால் மனித மனத்தை எடுத்து சென்று விடும். ஒருவேளை பாலின சமத்துவம் பற்றி ஒரு நூலையோ யோகா பயிற்சியையோ அவர்கள் பண்டமாக்கல் செய்தார்கள் எனில் நீங்கள் அங்கு அவற்றை செய்வதை அவர்கள் மகிழ்ச்சியாக ஊக்கப்படுத்துவார்கள்.
இதுதான் இன்று இலக்கியத்துக்கு நடக்கிறது. நாம் ஒரு பெரிய மாலாக மாறி விட்டோம். அங்கு ஒவ்வொன்றும் “கடைக்காரர்களாலும் வணிக வளாக நிர்வாகிகளாலும்” கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த இலக்கிய நுகர்வு காலத்தின் முதற் கட்டம் என்றால் இரண்டாம் கட்டத்தில் நிலைமை இன்னும் மோசமாகும். இரண்டாம் கட்டம் எப்படி இருக்கும்? அப்போது இலக்கியம் ஒரு முழுமையான பண்டமாகி உயர்ப்பண்பாட்டின் குறிப்பானாக மாறும், சமூக மேல்நிலையாக்கத்தின் ஊக்கியாக பரவலாக கருதப்படும். இதைப் பற்றி ரிச்சர்ட் ஓஹ்மென் எனும் விமர்சகர் தனது “Shaping of the Cannon” (இலக்கியத் திருமறையின் உருவாக்கம்) கட்டுரையில் விரிவாக விவாதிக்கிறார்.
அமெரிக்காவில் அறுபது, எழுபதுகளில் எப்படி இலக்கிய நூல்களைப் படிப்பது உயர்த்தட்டை மானசீகமாக அடைவதற்கான ஒரு குறுக்குவழியாக பரிந்துரைக்கப்பட்டது, அது எப்படி ஏழைகளுக்கான ஒரு மதசார்பற்ற விவிலிய திருமறை போல ஆனது, எந்தெந்த நூல்கள் இலக்கியத் தகுதி பெற்றவை எனத் தீர்மானிக்கும் அதிகாரத்தை நியு யார்க் டைம்ஸ் ரெய்வூ போன்ற இலக்கியத் திறனாய்வு இதழ்களே எவ்வாறு பெற்றிருந்தன, அதன் பின்னுள்ள வணிக நோக்கங்கள் என்னென்ன என்று பேசும் ஓஹ்மென் சில ஆச்சரியமான புள்ளிவிபரங்களை அளிக்கிறார். நியு யார்க்கர் ரிய்யூவில் அக்காலத்தில் திறனாய்வு, பரிந்துரைவைத் தவிர மிச்ச இடங்கள் எல்லாம் விளம்பரத்துக்கானவை. விளம்பரங்களை செய்வன புத்தகப் பதிப்பாளர்கள். எந்தெந்த பதிப்பாளர்கள் அதிக விளம்பரங்களை அளிக்கிறார்களோ அவர்களுடைய பதிப்பக நூல்களுக்கே அதிக விமர்சனங்களும் பாராட்டுரைகளும் அந்த இதழில் வரும். இப்படி அதிகமாக பரிந்துரைக்கப்படும் நாவல்கள் உடனடியாக இலக்கிய பெஸ்ட் செல்லராக மாறிவிடும். 1968இல் நியூ யார்க்கர் ரெய்யூ இதழில் அளிக்கப்பட்ட விளம்பரங்கள் மீது நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றை ஓஹ்மென் குறிப்பிடுகிறார். இதன்படி அவ்வாண்டு 74 விளம்பரங்களை ரேண்டம் ஹவுஸ் நிறுவனம் அளித்துள்ளது. அப்பதிப்பக நூல்களுக்கே 58 திறனாய்வுகளையும் பரிந்துரைகளையும் நியு யார்க்கர் செய்துள்ளது. அடுத்து, ஹார்ப்பர் பதிப்பகம் 29 விளம்பரங்களை வழங்கி 22 திறனாய்வுகளைப் பெறுகிறது. இப்படிப் போகிறது புள்ளிவிபரம். இன்னொரு தகவல் நியு யார்க்கரின் திறனாய்வாளர்களில் நான்கில் ஒரு மடங்கினர் ஹார்ப்பர் பதிப்பகத்து எழுத்தாளர்கள் என்பது. அதாவது அப்பதிப்பக நூல்களுக்கு அதிக திறனாய்வுகள் வழங்கியதுடன் தம் நூல்களுக்கான திறனாய்வுகளை தம் எழுத்தாளர்களே எழுதவும் வழிவகுத்துள்ளது நியு யார்க்கர். இவர்களுக்கு அடுத்தபடியாக கல்விப் புலமும் மகத்தான இலக்கிய வரிசை நாவல்களைத் தீர்மானிக்கும் பணியை எடுத்துக் கொள்கிறது. கல்விப் புலத்தினர் பொதுவாக நியு யார்க்கர் இதழின் பரிந்துரைகளையே நம்புகிறார்கள், அவர்கள் தம் பல்கலைகள், கல்லூரிகளின் பாடத்திட்டங்களில் இந்நாவல்களையே சேர்த்துக் கொள்கிறார்கள். இதன் மூலம் இலக்கிய நாவல்களுக்கு உடனடி வாசகர்களும் கல்விப்புல அங்கீகாரமும் கிடைக்கிறது. அதன் பிறகு விருதுகளும் இந்நாவல்களுக்கே கிடைக்கும். இப்படியே இலக்கிய திருவுருக்கள் உருவாக்கப்படுகிறார்கள். விளம்பரம் மூலம் ஒரு இதழுக்கு அளிக்கப்படும் பணம் எங்கெல்லாம் பாய்ந்து என்ன வடிவத்தையெல்லாம் எடுக்கிறது பாருங்கள்.
இந்தியாவில் இச்சூழல் நிச்சயமாக இந்திய ஆங்கில நாவல்களுக்கும், இப்போது மாநில மொழிகளில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் பெறும் நாவல்களுக்கும் உள்ளது. இங்கு பெரும் பணம் பாய்வதில்லை என்றாலும் பதிப்பக ஆசிரியர்களுக்கும் பத்திரிகை ஆசிரியர்களுக்கும் துணி மறைவில் விரல்களைப் பிடித்துப் பார்க்கும் ஏதோ ஒரு மாட்டு வியாபாரம் உள்ளது. பதிப்பகத்தின் சார்பில் சில நூல்களை விமர்சனத்துக்காக பேராசிரியர்களுக்கு அனுப்புகிறார்கள், பேராசிரியர் விமர்சகருக்கு ஒரு விமர்சனம் பிரசுரமாகும், பதிப்பகத்தாருக்கு விளம்பரம் கிடைக்கும் எனும் அளவில் இது நடக்கிறது. அதே போலத் தான் பத்திரிகைகள் நடத்தும் விருதளிப்பு விழாக்களில் பரிசு பெறும் நாவல்களும், அவற்றில் வெளியிடப்படும் நூல்களும். இவையும் கழுவாத கையைச் சுற்றும் ஈக்களைப் போல சில அயல்நாட்டு ஆங்கில பதிப்பகங்களை சுற்றிச் சுற்றியே வருகின்றன என்பது எதார்த்தம். ஆனால் அமெரிக்காவில் அறுபது, எழுபதுகளில் இருந்த அளவுக்கான பெரிய சந்தை அல்ல இது.
தமிழில் பதிப்பகங்களை ஒட்டிய குழுக்கள், அக்குழுக்களில் செயல்படும் படைப்பாளிகள், அவர்களும் அவர்களையும் ஆதரிக்கும் இதழ்கள் என இச்சூழல் உள்ளது. சில குறிப்பிட்ட படைப்பாளிகளின் நூல்களும், அந்த படைப்பாளர்களும் திரும்பத் திரும்ப சில நாளிதழ்கள், வார இதழ்களில் விமர்சிக்கப்பட்டு பாராட்டப்படுவதை காண்கிறோம். இதற்கு அந்த துணையாசிரியர் பொறுப்பில் உள்ளோரின் ரசனையும் நட்பும் நம்பிக்கையும் காரணங்கள். இப்படி விமர்சன கவனம் பெறுவோர் நிலைமையே ஒரு சில நண்பர்களின் அன்பையும் ரசனையையும் நம்பியிருக்கையில் அது கூட கிடைக்காதவர்களின் நிலை?
தமிழில் இன்றும் ஒரு முழுமையான இலக்கிய வணிக இயக்கம் தோன்றவில்லை. ஆனால்
இப்போதுள்ள சூழலைப் பார்க்கும் போது அறுபதுகளுக்குப் பிறகு அமெரிக்க இலக்கியத்துக்கு நடந்தது எதிர்காலத்தில் ஒருவேளை தமிழுக்கு நடக்கக் கூடும் போகிறது எனத் தோன்றுகிறது. அன்று திறனாய்வும் பரிந்துரைகளும் இணைந்து இலக்கிய, நடுநிலை பத்திரிகைகள் வளர்ந்து வெகுஜன இதழ்களிலும் முக்கிய பண்பாடாகப் பரவும். திறனாய்வாளர்களுக்கு நல்ல ஊதியமளித்து தட்டி ஊக்கப்படுத்தி பெரிய இதழ்களிலும் வெகுஜன ஊடகங்களிலும் இலக்கிய மதிப்பீடுகளை செய்ய வாய்ப்பளிப்பார்கள். அதன் பிறகு திறனாய்வாளர்கள் பதிப்பகங்கள், ஊடகங்களின் சில்க் ஸ்மிதாவாக மாற்றப்படுவார்கள். ஒரு சமூகம் எதைப் படிக்க வேண்டும் என்பது ஒரு சிலர் பணத்தின் மீதமர்ந்து தீர்மானிப்பார்கள். அதாவது இவர்கள் பிடுங்கிப் போட்ட இடத்தில் இருந்தே திறனாய்வு மரபு வலுவாக முளைக்கும். ஆனால் அது ஒரு வெற்றுக் குறிப்பானாக மட்டுமே இருக்கும்.
இப்போதுள்ளது இலக்கிய சோப்பு மாடல்கள் அருவியில் குளிக்கும் லா லாலாலலா காலம் மட்டுமே. இவர்கள் தேங்காய் நாரும் தேய்ந்த சிந்தாள் சோப்புத் துண்டுமாக குளத்திற்குப் போகும் திறனாய்வாளர்களை “குறுக்கே வராதே ஓய், ஷூட் நடக்குது போய்யா அந்த பக்கம்” எனத் துரத்தத் தான் செய்வார்கள். இது இலக்கிய நுகர்வுப் பண்பாட்டுக் காலம். இது இப்படித்தான் இருக்கும்.
நன்றி: உயிரெழுத்து, ஜனவரி 2024