அதில் என்னை உணர்ச்சிவயப்பட வைத்த நிறைய காட்சிகள் இருந்தன. ஆனால் படம் முடியும் போது அது வாழ்க்கையைப் பற்றியோ விழுமியங்களைப் பற்றியோ ஒன்றுமே சொல்வதில்லை. ஐ.பி.எஸ் தேர்வில் வெல்வது எவ்வளவு கடினம், அதற்கு எத்தனை பேர்கள் முயல்கிறார்கள் என சொல்ல பத்து நிமிடம் போதுமே. அப்புறம் எனக்கு வேறொரு கேள்வியும் எழுந்தது - இவ்வளவு பயங்கரமான ஐ.பி.எஸ் தேர்வில் எப்படி அண்ணாமலை - சின்ன வரலாற்றுத் தகவல் கூட தெரியாமல் மேடைகளில் தவறாகப் பேசும் அண்ணாமலை -எப்படி வென்றார்? அவரே ஜெயிக்க முடியுமெனில் பத்து லட்சம் பேர்களில் இருபது பேர்கள் மட்டுமே ஜெயிக்க முடிகிற தேர்வு என ஏன் இந்த படத்தில் சொல்கிறார்கள்? மிகத்தீவிரமான ஒழுக்கமும் ஊக்கமும் இருந்தால் மட்டுமே வெல்ல முடியும் என்கிறார்கள். ஆனால் சில நேர்முகங்களில் அண்ணாமலை பற்றி அவரைப் பற்றி தெரிந்தவர்கள் சொல்லும் விபரங்கள் வித்தியாசமாக உள்ளன - அவர் பகலில் தூங்கி எழுவதே மாலை மூன்று மணிக்குத் தான். இரவில் போதை காளானை எடுத்துக்கொள்கிறார். இப்பழக்கம் அவருக்கு பள்ளிப் பருவத்திலே ஏற்பட்டு விட்டது. இப்படியான ஒருவராலே ஐ.பி.எஸ் ஆக முடியுமெனில் “12த் பெயிலில்” ஏன் இன்னொரு விதமாக சொல்கிறார்கள்? இதில் யார் சொல்வது பொய்? எனக்கு இந்த படத்தை பார்த்து முடித்த பின்னர் பெரிய குழப்பம் ஏற்பட்டுவிட்டது!
வு மில்லில் கஷ்டப்பட்டு இரவில் 2 மணிநேரம் மட்டும் தூங்கி உழைத்து வென்றவர்கள், நேர்மைக்காக வாழ்பவர்கள் இன்று இருக்கிறார்களா என்றே சந்தேகம் உள்ளது. ஈ.ஸி.ஆரில் இந்த ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ்கள் தாம் ‘சம்பாதித்த’ பல நூறு கோடிகளைக் கொண்டு கட்டிய பங்களாக்கள் உள்ளன என ஜூ.வியில் ஒரு ரிப்போர்ட் படங்களுடன் வந்தது. நேர்மையாளர்கள் இவர்களிடம் தான் சலூட் அடித்து நிற்கிறார்கள். நேர்மையான ஐ.பி.எஸ் அதிகாரியாகி நேர்மையற்ற கீழதிகாரிகளைத் திருத்தப் போவதாக “12த் பெயிலின்” நாயகன் சொல்கிறான் - எனில் அவருக்கு மேலே உள்ள சீனியர் அதிகாரிகள், அமைச்சர்களை யார் திருத்துவது? அவரைப் போன்ற ஊழல்வாதி ஐ.பி.எஸ்களை யார் திருத்துவது? ஊழல் ஒரு பொருளாதார அமைப்பின் பிரச்சினை. அதற்குத் தீர்வு நேர்மை என்பதைப் போன்ற அபத்தம் வேறுண்டா? இந்த படம் இவ்வளவு பெரும் வெற்றி பெற்றிருக்கிறது என்பதே சினிமா நம்மை எப்படி தொடர்ந்து ஏமாற்றுகிறது என்பதற்கு அத்தாட்சி.
எனக்கு என்னமோ அண்ணாமலை தான் நம் காலத்தின் மிகப்பெரிய ‘நம்பிக்கை நாயகன்’ எனத் தோன்றுகிறது. அவரைப் போன்றவர்கள் எப்படி சில ஆண்டுகளிலே ஐ.பி.எஸ் ஆகி முதல்வருக்கும், பெரிய தலைவர்களுக்கு ஒற்றறிந்து கொடுத்து நம்பிக்கையைப் பெற்று, எதிரிகளின் பலான காணொளிகளைப் பதிவு பண்ணி மிரட்டி அதிகாரத்தை நிறுவி, பிறகு அப்பதவியையும் விட்டு ஒரு மாநிலத்தின் தலைவர் ஆகிறார்கள் என யாராவது படம் எடுத்தால் அபாரமாக இருக்கும். அந்த படத்துக்கு “ஹலோ பிரதர்” எனத் தலைப்பு வைக்கலாம்.
பின்குறிப்பு: இப்படம் உண்மைக்கதையின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என எனக்கு ஏற்கனவே தெரியும்.