நிர்மலா சீத்தாராமனின் கணவரும் பொருளாதார நிபுணரும் மற்றும் எழுத்தாளருமான பரகலா பிரபாகரை கரண் தாப்பர் எடுத்த பேட்டி ரொம்ப ஜாலியாக இருந்தது. பளார் பளாரென அடிப்பதைப் போன்ற கருத்துக்கள். அவர் ஜெர்மனியில் யூதர்களுக்கு நடந்தவை இந்தியாவில் சிறுபான்மையினருக்கு நடக்கப் போவதாக எச்சரிக்கிறார். முதல் நிலையில் நைச்சியமாகப் பேசி வழிக்கு கொண்டு வரப்பார்ப்பது, அடுத்து தனிமைப்படுத்துவது, எச்சரிப்பது, கடைசியாக வெளியேற்றுவது. இந்த நிலைகளில் முதலிரண்டு நிலைகளில் இந்தியா இப்போது இருப்பதாக கூறுகிறார். சரியான பார்வை.
ஆனால் இது ஒரு மேலோட்டமான பார்வை தான்; அவர் கவனிக்காமல் விடும் ஒன்று உண்டு - பாஜகவின் லட்சியம் இஸ்லாமியரை ஒடுக்குவது அல்ல. அவர்களுக்கு இஸ்லாமியர் பொருட்டே அல்ல. அவர்கள் இந்து மதத்தை அரசியல்படுத்தி புறவயப்படுத்த விரும்புகிறார்கள். கடவுளைக் கொன்று அவரிடத்தில் தலைவர்களையும், மத் நம்பிக்கைகளை ஒழித்து அவற்றின் இடத்தில் தம் அரசியல் கொள்கைகளையும் கொண்டு வரப் பார்க்கிறார்கள். ஆக பாஜக முதலில் ஒழிக்க முயல்வது தீவிரமான இந்துக்களைத் தான். அவர்களின் நம்பிக்கையைத் தான். மேற்சொன்ன விசயங்களை இஸ்லாமியரோ கிறித்துவர்களோ பண்ணினால் பாஜக அவர்களை அள்ளி அவரணைத்துக் கொள்ளும். சட்ட மன்றங்களிலும் நாடாளுமன்ற அவைகளிலும் சிறுபான்மையினருக்கு இடமளிக்காதது மேம்போக்கான ஒன்றே - எல்லா கட்டங்களிலும் சிறுபான்மையினருடன் இணக்கமாக போக பாஜகவால் முடியும் - தமது நிபந்தனைகளுக்கு அவர்கள் உடன்படும் பட்சாத்தில். எங்களுடைய ஒரே தெய்வம் பாரத பிரதமர், எங்களுடைய ஒரே நம்பிக்கை பாஜகவின் கொள்கை என அவர்கள் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில். இப்போதைய யுத்தம் முற்போக்குக்கும் பிற்போக்குக்கும் நடுவில் அல்ல. கடவுளுக்கும் கடவுளற்ற தலைவர்கள், மத குருமார்களுக்கும் இடையிலே.
ஹிட்லரும் இதையே தான் ஜெர்மனியில் செய்தார். அவர் இனப்பற்றை அரசியல் பற்றாக உருமாற்றினார். மதம், இனம், குடும்பம் ஆகிய உறவுநிலைகளை தலைவர், கட்சி, கொள்கை என உருமாற்றிக் காட்டினார். இதுவே ஆக ஆபத்தான நிலை.
பிரபாகர் கணிப்பதைப் போல பாஜக இந்தி பெல்ட்டில் 60% இடங்களை இழந்தால், தென்னிந்தியாவில் துடைத்து எறியப்பட்டால் அல்லது அதிகாரத்தையே இழந்தால் அது மகிழ்ச்சியான சேதியாகவே இருக்கும். ஆனால் இப்போதைக்கு அது ஒரு கனவைப் போல இருக்கிறது!