இன்றைய நாவல் வகுப்பின் போதான தொல்காப்பிய விவாதத்துக்கு தயாரித்த குறிப்பு இது. மெய்ப்பாட்டின் நுணுக்கங்களை பண்டைய, நவீன கவிதைகளை வைத்து விளக்க முயன்றிருக்கிறேன்.:
மெய்ப்பாடு என்பது மெய்யில் வெளிப்படும் உணர்ச்சி. மெய்யுணர்ச்சி, உடலுணர்ச்சியாகும் அகவுணர்வு. நமது அகத்துக்கும் புறத்துக்குமான இருமையை ஏற்காத தொல்காப்பியம் (உதாரணத்திற்கு சொல்வதானால்) பிரிவு எனும் துயரை இந்த உடலால் மட்டுமே அறியப்படவும் முடியும் என்கிறது. இவ்வாறு நாம் உணர்வுகளை உணர்ச்சிகளாகக் கண்டு அவற்றை மெய்ப்பாடாக கருதியதற்கு நமது சங்கக் கவிதைகள் ஒரு காலத்தில் நிகழ்த்து கலையாக இருந்தமை காரணமாகலாம் பிரசிடென்ஸி கல்லூரியின் பேராசிரியர் ஶ்ரீனிவாசன் கூறுகிறார். அல்லது இதுவே தமிழர்களின் ஆதி மெய்யியலாகவும் இருக்கக் கூடும். தன்னைக் கடந்து உடலற்ற ஒரு ஆற்றலை நோக்கி ஏகாமல், அந்த சுய தாவலில் ஒரு அனுபூதியைக் கொள்ளாமல், தன் பௌதீக உண்மையே தனது மெய் எனக் கருதும் ஒரு போக்கு இங்கு வலுவாக இருந்து, அதன் மெய்யியல் வடிவமாக மெய்ப்பாட்டியல் ஒரு கலைக்கோட்பாடாக வெளிப்பட்டிருக்கலாம்.
தொல்காப்பியத்தின் ஒன்பது இயல்களில் ஆறாவது இயலாக மெய்ப்பாட்டியல் வருகிறது. மெய்ப்பாடுகள் மொத்தமாக எட்டு (புறச்சுவைகள்). 4 வகைகளாக அவை வெளிப்படும் இடங்களை பகுத்துக் காட்டியுள்ளார் தொல்காப்பியர். இவை போக 32 மெய்ப்பாடுகளையும் வேறுபடுத்திக் காட்டியுள்ளார் (அகச்சுவைகள்).
இந்த எண் சுவைகளில் இரண்டாவதாக வரும் அழுகையும், நான்காவதாக வரும் மருட்கையும் எப்படி நவீன கவிதையில் செயல்படுகின்றன எனப் பார்க்க மனுஷ்யபுத்திரன் தோதானவர். பலவகையான பிரிவுகள், அவற்றாலான போதாமை, இயலாமை, கழிவிரக்கம், இவை வரும் மகத்தான வியப்பு இவரது கவிதைகளின் மெய்யியல். தனது இருப்பின் தனிமையை, ஆன்மீகத் தனிமையை, தன்னைத் தாண்டி செல்ல முடியாத ஏக்கத்தை காதல் பிரிவு, காதலியால் புரிந்து கொள்ளப்படாமை, அலட்சியம், அன்பின் போதாமை என பலவிதங்களில் சித்தரித்து ஒரு மெய்ப்பாட்டை அவர் உருவாக்குவதும், அதில் கொண்டு வரும் புதுமைகளும் நுட்பங்களும் வியப்புக்குரியவை.
அழுகை மெய்ப்பாட்டில் இளிவு (அவமானம், இகழ்ச்சி), இழவு (உறவினர், நண்பர்களின் இழப்பின் பொருட்டு), அசைவு (உடல் நோயால் இயலாமை தோன்றுவது), வறுமை ஆகிய நான்கு வகைகள் வருகின்றன. இந்நான்கு நிலைகளால் மட்டுமே ‘அழுகையை’ காட்ட முடியும். மருட்கை (வியப்பு) எனும் மெய்ப்பாட்டில் புதுமை (புதிய ஒன்றைக் காணுதல்), பெருமை (மிகப்பெரிய ஒன்றைக் காணுதல்), சிறுமை (மிகச்சிறிய ஒன்றைக் காணுதல்), ஆக்கம் (வியத்தகு செயலை செய்தல் / காணுதல்) ஆகிய நான்கு வகைகள் வருகின்றன.
உதாரணத்திற்கு கீழ்வரும் கவிதையைப் பாருங்கள்:
“அந்த இடம்
போகும்போது
உன்னுடன் கொண்டு
வந்த எல்லாவற்றையும்
எடுத்துக் கொள்கிறாய்
ஆனால்
அந்த இடம் மட்டும்
அப்படியே எஞ்சிவிடுகிறது
நீயும் கொண்டு வராத
ஏற்கனவே இருந்துமிராத
அந்த இடம்”
இக்கவிதையில் “நீயும் கொண்டு வராத, ஏற்கனவே இருந்துமிராத இடம்” என்று கூறும் போது அந்த இடத்தை நிரப்பும் பொருட்டே நீயும் வந்தாய், அந்த இடம் ஒரு இன்மை, அந்த இன்மை தரும் துன்பம் தீராத இருத்தலியல் துயரம் எனும் பொருள் வருகிறது. இங்கு ‘இழவு’ இருப்பது காதலி இல்லாமல் போவதால் வருவதல்ல, இல்லாமல் போனதை காதலியின் இல்லாமை நினைவூட்டுவதால் வருவதே. இன்மையை கவிஞர் (சாரு நிவேதிதாவைப் போல) ஒரு கொண்டாட்டமாக அல்ல, பேரிழப்பாகவே பார்க்கிறார். கூடுதலாக உன் இழப்பை நான் வருந்தவில்லை, உன் இழப்பினால் வரும் இன்மையின் இழப்பையே வருந்துகிறேன் (“அப்படியே எஞ்சிவிடுகிறது”) எனும் போது, இன்மையின் இருப்பையே இழவு என்கிறார். இதை ஒரு தன்மறுப்பு இன்மை (self-negating nothingness) என நான் பார்க்கிறேன். பருண்மையான ‘இழவைக்’ காட்டி, அது காட்டுவது அதன் ‘இழவை’ அல்ல, அதனுள் இருக்கும் ‘மற்றொரு இழவை’ என்கிறது இக்கவிதை. அந்த மற்றொரு இழவு பூரணமான இன்மை என்பதால் அதற்கு மெய்ப்பாடு இல்லை. மெய்ப்பாடு இன்மையின் துரமாகவும் இதைக் காண முடியும்.
இந்த தன்மறுப்பு இன்மையைக் காட்ட நகைமுரணை உத்தியாக பயன்படுத்துகிறார். இது 17ஆம் நூற்றாண்டில் இருந்து நவீன கவிதைகள், பின்நவீன கவிதைகள் வரை பயன்படுத்தப்படும் உத்தியே. ஒரு எளிய உதாரணமாக ஜப்பானிய கவிஞர் மஹாசிதேவின் இந்த ஹைக்கூக் குறிப்பிடுவேன்:
“தானியக் களஞ்சியம் எரிந்துவிட்டது
இப்போது
நான் காண்பேன் நிலவை”
கவிதைசொல்லி தான் அடைக்கலம் புகுந்த களஞ்சியத்தின் கூரை எரிந்துவிட அங்கு அவர் இழப்பை அல்ல பெருவியப்பை அடைகிறார் - நிலவின் பரிபூரண வெளிச்சம் (ஒன்று மற்றொன்றை சார்ந்தே உருவாகிறது, இழப்பை சார்ந்து இருப்பு தோன்றுகிறது எனும் பௌத்த உண்மையின் குறியீடு) ஒரு மனத்திறப்பை, ஆன்மீக மலர்ச்சியை அவருக்கு அளிக்கிறது.
இதில் தன்மறுப்பு இருப்பு (self-negating existent) வருகிறது. ஒன்று அழிந்ததும் மற்றொன்று தோன்றுகிறது, ‘இழவின்’ போது ‘புதுமை’ (நான்காவது மெய்ப்பாடான மருட்கையில் ஒரு வகை) வருகிறது. பக்தி கவிதைகள் தோன்றும் இதே பாணியை போக்கைப் பார்க்க முடியும்:
“மா ஏறு சோதியும் வானவரும் தாம் அறியாச்
சே ஏறு சேவடிக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ” (திருவாசகம்)
நான்முகனும், இந்திரனும், கலைமகளும், திருமாலும், வேதங்களும், ருத்திரனும், தேவர்களும் அறிய முடியாத ஒன்றை (இருப்பை மறுக்கும் ‘இழவு’ - அதாவது அருள்) சிவபெருமானின் காலடியில் சென்று அருந்துவாய் (இருப்பின் ‘மருட்கை’) என திருவாசகப் பாடல் கூறுகிறது.
மனுஷ்ய புத்திரனின் இன்னொரு பிரபலமான கவிதை பின்வருவது:
“இழந்த காதல்
நின்று சலித்த என் தோட்டத்து மரமொன்று
பின்னிரவில்
என் பிரியத்தின் இதம் வேண்டி
மெல்லப் படியேறி வந்தது
மரங்கள் நடப்பது சாத்தியமில்லையென அறிந்திருந்ததால்
ஒரு விபரீதக் கனவென்று திகைத்து
வரவேற்கத் தாமதித்துவிட்டேன்
ஆயிரம்
இலை நுனிகளால்
வேர் நுனிகளால்
புறக்கணிப்பின் துக்கம் ததும்பி
படியிறங்கிப் போகிறது
என் தோட்டத்து மரம்”
மரம் நடந்து வருவது ‘புதுமை’ எனும் மெய்ப்பாடு. அது தடபுடவென்று அன்றி ‘மெல்ல வருகிறது’ என்பது அதன் ‘சிறுமையை’ (ஒருவித குழந்தையைக்) காட்டுகிறது. பிரியத்தின் இதம் வேண்டி எனும் போது பிரியமற்று அது வாடிப் போயிருப்பது, அதன் ‘இழப்பு’ (இழவு) நமக்குத் தெரிகிறது. அந்த போதாமையை இட்டு நிரப்ப அது ‘கோத்தும்பியாக’ கவிதை சொல்லியை நாடி வருகிறது. அது நிஜமல்ல, விபரீதமானது (‘மருட்கை’) அவரது மனமோ அதை மறுக்கிறது. அதாவது இருப்பை இன்மை என்கிறது. (சிவபெருமான் கோத்தும்பியை வரவேற்க தாமதமாக அது திரும்ப சென்றுவிடுகிறது. மாற்றியும் வாசிக்கலாம்.) புறக்கணிப்பின் துக்கம் ததும்ப அது திரும்ப செல்வதை அவர் அதன் ‘ஆயிரம் இலைநுனிகள், வேன் நுனிகளால்’ சுட்டுகிறார். இது ஒரு நகைமுரண். இன்மையை இருப்பால் காட்டுவது. மருட்கையும் இழவும் கலந்து ஒரு வினோத உணர்ச்சியை மனுஷ்யபுத்திரன் உருவாக்குகிறார்.