ஹிட்லருக்கு ஒரு வழக்கம் உண்டு. அவர் ஒருபோதும் தன் தோல்வியை ஒப்புக்கொண்டதில்லை. பின்னடைவின் செய்திகளைக் கேட்டால் கடுமையாக கோபப்பட்டு பொருட்களை தூக்கி விசிறியடிப்பது, தன்னை மறந்து திட்டுவது, எச்சரிப்பது, மிரட்டுவது என ஆவி புகுந்த பாவியைப் போல நடந்துகொள்வார். அதன் பிறகு அவரது பிரச்சார அமைச்சர் கோபெல்ஸை அழைத்து தோல்வி குறித்த கதைகளை மறைப்பதற்காக மக்களிடம் தான் வென்றதாக ஒரு நம்பிக்கை ஏற்படுத்த சொல்வார். 1941இல் ரஷ்யாவில் ஜெர்மனிய படை மரண அடிவாங்கி பின்னோடியது. பனிக்காலத்தில் உறைந்து போய் சரியான உணவோ பாதுகாப்போ இல்லாமல் வீரர்கள் மடிந்தனர். ஆனால் அவர்கள் திரும்ப வந்துவிடவோ பின்வாங்கவோ கூடாது என ஹிட்லர் ஆணையிட்டதால் அவர்கள் வேறுவழியின்றி சண்டையிட்டனர். இறந்த குதிரைகளின் தசையை அவர்கள் தின்னும் போது பக்கத்தில் ஒருவர் கக்கா போய்க்கொண்டிருப்பார். அந்தளவுக்கு சிறிய இடங்களில் பதுங்கி வாழ்ந்துகொண்டிருந்தனர். கொஞ்சம் வெளியே போனால் ரஷ்ய படை சுட்டுவிடும். கோபெல்ஸ் ராணுவத்தினர் வெற்றிகொள்வதாக, எதிரிகளை சுட்டுவீழ்த்துவதாக படமெடுத்து அதை திரைப்படமாக வெளியிட்டார்; எல்லா திரைப்படங்களிலும் இந்த திரைத்துணுககுகள் புகுத்தப்பட வேண்டும் என ஆணையிட்டார். இந்த காணொளிகள் மக்களிடையே பெரும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.
பின்னர் அமெரிக்க படைகள் ஜெர்மனியில் குண்டு மழை பொழிந்த போதும் உண்மை நிலவரம் முழுமையாக மக்களுக்கு சொல்லப்படவில்லை. ஜெர்மனியே வெல்லும் என்றே பிரச்சாரம் செய்யப்பட்டது. ஹிட்லர் மட்டும் ஓராண்டுக்கு மேல் தலைநகரில் இருந்து தப்பித்து பதுங்கிடங்களில் ஒளிந்திருந்தார். ராணுவத்தையும் பின்னர் மக்களையும் தன் உயிரைப் பாதுகாப்பதற்கான அரணாக பயன்படுத்தினார்.
ரஷ்யாவிடமோ பின்னர் அமெரிக்கர்களிடமோ ஹிட்லர் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு சமரசம் பேசியிருந்தால் ஜெர்மனி இரண்டாம் உலகப்போரில் உயிரழப்பை குறைத்திருக்கலாம். தோல்வியை மட்டுப்படுத்தியிருக்கலாம். ஆனால் ஹிட்லர் அதற்கு அனுமதிக்கவில்லை. அதற்கு ஒரு முக்கியமான காரணம் இருந்தது.
ஹிட்லர் வெளி எதிரிகளை விட உள் எதிரிகளையே அதிகமாக அஞ்சினார். தன்னைக் கொல்வதற்கான சதித்திட்டங்கள் வெளிநாட்டு நிதியுடன் தீட்டப்பட்டு தனக்கான வலைவிரிக்கப்பட்டு விட்டதாக நினைத்தார். அவர் தன் கட்சியின் தலைவர்களை, ராணுவ தளபதிகளை, சகாக்களை அஞ்சினார். கடுமையான மன அழுத்தத்தில் தவித்தார். தான் பொதுமக்களிடம் தன் தவறுகளையோ தோல்வியையோ ஒப்புக்கொண்டாலோ எதிரிகளிடம் சமரசம் பண்ணினாலோ தன் மீது விசாரணை நடத்தப்படும் அல்லது தான் கொல்லப்படுவோம் என அவர் நம்பினார். அவருடைய லட்சியம் எல்லா உலக நாடுகளையும் முறியடித்து தனக்கு எதிரான சதிகளை ஆதரிப்போரை, நிதியளிப்போரை அழித்து சாகும் வரை சர்வாதிகாரியாக நீடிக்க வேண்டும் என்பதே. அதனாலே அவர் பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா என ஒவ்வொரு பெரிய நாடாக பகைத்து படைதொடுத்துக் கொண்டிருந்தார். இந்த மிதமிஞ்சிய அச்சமே கடைசியில் அவரது வீழ்ச்சிக்கு காரணமாகியது.
அவர் அதற்குப் பதிலாக தன் உள்நாட்டு எதிரிகளைக் கொன்றிருக்கலாமே? இங்கு தான் ஹிட்லர் ஒரு பெரிய சிக்கலை எதிர்கொண்டார்: எத்தனை பேர்களைத் தான் கொல்வது? சுமார் எட்டு கோடி பிரஜைகளில் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தன் கொலைகாரன் ஆகலாமே! அதற்குப் பதிலாக தூண்டி விடுவோரே அழிக்கலாமே.
ஒவ்வொரு கட்டத்திலும் அவர் தன்னை தோல்வியற்றவராக, மரணமற்றவராக, உச்சபட்சமான சர்வாதிகாரியாக ஊடகங்களில் சித்தரித்தது தற்பாதுகாப்புக்காகவே. அதனாலே அவர் கைப்பற்றப்படுவோம் எனும் நிலையில் தற்கொலை பண்ணிக்கொண்டார். அவர் தனது நாட்டு மக்களைப் பற்றி துளியும் கவலைப்படவில்லை.
ஆம் நான் இவ்வளவு தூரம் ஹிட்லரைப் பற்றி சொல்லும் போதே நீங்கள் கணித்திருப்பீர்கள், நான் நமது மோடியைப் பற்றித்தான் சொல்கிறேன். மோடியால் கூட்டணி கட்சியினருக்கு பணிந்து போக முடியும், ஆனால் அவரால் தான் பயத்தில் முக்கிய அமைச்சர் பதவிகளை அவர்களுக்கு கொடுத்துவிட்டதாக ஒரு சித்திரம் ஊடகங்களில் எழுவதை தாங்கிக்கொள்ள முடியாது. அதில் ஆபத்துள்ளது என நினைக்கிறார். எப்படியும் ஆட்சி கவிழக் கூடும். அதற்குள் கட்சிக்குள் தான் பலவீனப்பட்டால் அடுத்த தேர்தலில் அவரைப் பிரதமர் ஆக்க கூடாது என பாஜக தலைவர்களும் ஆர்.எஸ்.எஸ் கழுகுகளும் சேர்ந்து அவரை சூழ்ந்து கத்துவார்கள். தன்னை மகத்தானவராக, முடிவற்ற ஆற்றல் படைத்தவராக 'காட்டினால்' மட்டுமே அவரால் தப்பிக்க முடியும். அவரை எதிர்த்தோ மறுத்தோ யாராவது சிந்திப்பதாக, பேசியதாக செய்தி வந்தாலும் உடனே அவர்களைக் கொண்டே அடுத்த நாளே மறுப்பு வெளியிட வைக்கிறார். தன்னுடைய பிம்பத்தை நிலைகொள்ள வைக்க பிரயத்தனப்படுகிறார். ஆனாலும் அவரது சிறு நகர்வுகளைக் கூட ஊடகங்கள் விமர்சிக்கத் தொடங்கிவிட்டன. அவர் அதற்கு எதிராக தொடர்ந்து போராடி வருவதாக தோன்றுகிறது. தன்னைப் பாதுகாக்க அவருக்கு வேறு வழியில்லை. செய்தி அல்ல, செய்தின் தோற்றப்பாடே உண்மை என கோபல்ஸ் நம்பியதையே இன்றைய பாஜகவும் தீவிரமாக நம்புகிறது. அவர்கள் மட்டுமல்ல சிமன் பொலிவரைப் போன்ற லத்தின் அமெரிக்காவின் 19ஆம் நூற்றாண்டு முதலான சர்வாதிகாரிகள் ஜெர்மனியின் ஹிட்லர், இத்தாலியின் முசோலினி, இந்தியாவின் முதல் சர்வாதிகாரி இந்திரா காந்தி வரை அப்படியே நம்பினார்கள். 1975-77 வரையிலான நெருக்கடி காலம் முழுக்க மக்கள் மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதாக ஊடகங்கள் பேசிக்கொண்டே இருந்தன, கொஞ்சம் மாற்றிப் பேசினால் அந்த பத்திரிகையின் அச்சகம் சீல் வைக்கப்பட்டது. இப்போது எப்படி மோடி இப்போது தனக்கெதிராக அயல்நாட்டு சதித்திட்டம் உள்ளது என நினைக்கிறாரோ அப்படியே தான் அப்போது இந்திராவும், அவருக்கு முன்பு உலகின் ஒவ்வொரு சர்வாதிகாரியும் நம்பினர்.
சர்வாதிகாரிகள் megalomaniac ஆக இருப்பார்கள். உலகமே தம் காலடியில் என நம்புவார்கள், அதே சமயம் அதை ஏற்காதவர்கள் தம் எதிரிகள் என்றும் கருதுவார்கள். அதனாலே அவர்கள் சுயகாதலின், சுயபாதுகாப்பின் பொருட்டு தம் நண்பர்களையும் மக்களையும் பலிகொடுக்க தயங்க மாட்டார்கள்.
இப்படி மைனாரிட்டி அரசாக ஆட்சியமைத்தாலும் அது நிலைக்காது, அதனால் பாஜக ஆட்சி அமைத்திருக்காமல் அடுத்த ஆண்டு வரப் போகும் தேர்தலை சந்திக்க வேண்டும் என சுப்பிரமணியம் சாமி கூறியிருக்கிறார். அது ஒரு நல்ல ஆலோசனை தான். ஆட்சி வீழ்ந்தால் அது மோடியின் பிம்பத்துக்கு பெரிய களங்கமாகும். மக்களுக்கு அவர் மீதான நம்பிக்கை மீளவில்லையெனில், அவரது ஆட்சி வழக்கம் போல வெறும் சினிமாத்தனமாக மட்டுமே இருக்கும் எனில், விலைவாசி இறங்கவில்லை, வேலையின்மை சரியாகவில்லை எனில் அடுத்த தேர்தலில் பாஜக இன்னொரு 100 இடங்களை இழக்கும். ஆனால் காங்கிரஸ் ஆட்சியமைத்தாலோ அவர்களாலும் ஐந்தாண்டுகளை முடிக்க முடியாது. ஆக அவர்கள் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்து பாஜகவுக்கு அதிகமாக வாக்களிக்க வாய்ப்புண்டு. ஆனால் மோடியின் பதவி ஆசையே அவரை மூன்றாவது முறையாக ஒரு பலவீனமான ஆட்சியை அமைக்க வைக்கிறது என்று சுப்பிரமணியம் சாமி சொல்கிறார். ஆனால் கவனித்தோமானால் அது பதவி ஆசையல்ல, அச்சம் தான். அவர் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்காமல் எதிர்க்கட்சியாக அமர்ந்தால் கட்சிக்குள் அவரது பிடி தளரும்; 2025இல் வர சாத்தியமுள்ள பாராளுமன்ற தேர்தலில் அவரை பிரதமர் வேட்பாளராக நிறுத்த பாஜகவே அனுமதிக்காது. பாஜக ஒருவேளை தோற்றுவிட்டால் அவருக்கு எதிராக ஊழல் விசாரணைகள் நடத்தப்படும். வென்றால் அவர் அத்வானி, வாஜ்பாய் போல ஒதுக்கப்படுவார். இதை சுப்பிரமணியம் சாமியும் அறிவார்: அவர் வெளிப்படுத்துவதும் மோடியின் உள்கட்சி எதிரிகளின் சதித்திட்டத்தை தான். 'தேர்தலில் கூட தோற்கலாம், ஆனால் இவர்களிடம் உடனடியாக தோற்க கூடாது' என மோடி நினைக்கிறார். அரசியலில் ஒவ்வொரு ஆறு மாதங்கள் அழியாமல் இருப்பதும் கூட சாதனை தானே. தேர்தல் வரும் போது தான் கட்சியின் சர்வாதிகாரியாக இருந்தால் தன்னால் வென்று வர முடியலாம் என அவர் நம்புகிறார். அப்படி நம்புவதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை.
அதனாலே கூட்டணி கட்சியினர் தம்மைக் கவிழ்த்து விடுவார்கள் என அவருக்கு பயம் குறைவு. உட்கட்சி எதிரிகளை விட கூட்டணியினர் குறைவான கோரப்பற்கள் கொண்டவர்களே. மோடியால் கத்தியை கீழே வைக்கவே முடியாது.
