பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் இந்தியா பெரும்பான்மை யூதர்களின் வாக்குகளை மட்டும் கொண்டு ஸியோனிஸ்ட் கட்சிகளை மட்டும் ஆட்சியில் வர அனுமதிக்கும் இஸ்ரேலைப் போல ஆகும் என மாலன் அந்திமழை பேட்டியில் கூறுவதைக் கேட்டேன். இதெல்லாம் என்ன மாதிரி ஒப்பீடு? இஸ்ரேலின் வரலாறு, பண்பாடு, பொருளாதாரம், இனக்குழு அடையாளம், மதங்கள் வேறு இந்தியா வேறு. இஸ்ரேல் செயற்கையாக மேற்கத்திய சக்திகளின் உதவியுடன் உருவாக்கப்பட்ட சிறிய நாடு. இந்தியாவோ மிக மிக சிக்கலான பரந்துபட்ட தேசம். காலனியவாதிகள் வருமுன்பே இந்து அடையாளம் அற்று பல்வேறு தொகுப்புகளாக வாழ்ந்து வந்த மக்கள் இந்தியர். எத்தனையோ நம்பிக்கைகள், பண்பாடுகள், தத்துவங்கள், மொழிகள், சாதிகள், மதங்களைக் கொண்ட தேசம் இது. இங்கு ராமர் பெயரிலான அரசியல் பிரச்சாரம் மகாராஷ்டிர தலித்துகளை பதற்றமாக்குகிறது. தென்னிந்தியர்களை அந்நியமாக்குகிறது. வைணவ தலைமையை சைவர்கள் ஏற்க மாட்டார்கள். ஆனால் சிவனுடன் விஷ்ணுவையும் வழிபட தயங்க மாட்டார்கள். கேரள சி.எம்.ஐ சபையினர் தம் ஏசுவின் பக்கத்தில் சங்கரரை வைத்திருக்கிறார்கள். பல பௌத்த கோயில்களை இந்துக்கோயில்களாக்கி எந்த பிரச்சினையும் இன்றி வழிபடுகிறோம் என விவேகானந்தர் மகிழ்ச்சியுடன் கோருகிறார். தமிழ்நாட்டு இஸ்லாமிய சடங்குகள், விழாக்களில் இந்துமத சாயல் உண்டு. இந்தியர்களின் மத அணுகுமுறை விசித்திரமானது - மிக மிக நீர்மையானது.
இப்படியான மக்கள் தொகுதியை நீங்கள் எப்படி யூதர்களுடன் ஒப்பிட முடியும்?
நமது பாராளுமன்ற தேர்தல் வரலாற்றைப் பாருங்கள் - ஒரு போதும் சர்வாதிகாரிகள் நீடித்ததோ மதவாதத்துக்காக மக்கள் பெருவாரியாக வாக்களித்ததோ இல்லை. 2014இல் பாஜக வளர்ச்சியின் பெயரிலும் 2019இல் தேசப் பாதுகாப்பின் பெயரிலும் பொய்ப் பிரச்சாரம் பண்ணி ஆட்சியைப் பிடித்தது. அவர்களுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றாததாலே மோடியின் பிம்பம் முழுவதுமாக சரிந்து குப்பையில் கிடக்கிறது. மதவாத வெறிக்காக அவருக்கு வெற்றியை இந்த நாடு இதுவரை அளிக்காத போது இனிமட்டும் எப்படி அளிக்கும்? அதுவும் 200 தாண்டுவார்களா என்பதே கேள்வியாக இருக்கும் போது இவர் நிரந்தர இந்து பெரும்பான்மை ஆட்சி பற்றி பேசுவது அவரது ஆழ்மன ஆசையின் வெளிப்பாடு அன்றி வேறொன்றுமில்லை. ஆனால் அவர் அதை ரொம்ப பாந்தமாக பட்டும்படாமலும் விஷம் ஏற்றுவதைப் போல 'நடுநிலையாக' சொல்வார்.
மாலன் ஒருபக்கம் இப்படி பேசினால் மற்ற பாஜக எதிர்ப்பு தமிழ் சேனல்களில் பல வினோத சாத்தியங்களை பேசுகிறார்கள். ஜூன் 4 வரும் வரை பவாவை விட பயங்கரமாக கதை சொல்வார்கள் போல!