இதை எத்தனை பேர்கள் உணர்கிறீர்கள் எனத் தெரியவில்லை. எனக்கு ரஹ்மானின் அண்மைக்கால பாடல்கள் (கடந்த சில ஆண்டுகளாக) ஏதோ ராணுவ அணிவகுப்பு மெட்டைப் போல தோன்றுகின்றன. ஒரு எளிய மெட்டு, அதையே அடுத்தடுத்து சரணத்திலும் மீளப்பாடும்படியும் சில வாத்திய கருவிகளை அதே போல தட்டையாக ஒலிக்கவிட்டு முடித்துவிடுகிறார். (இதைப் பற்றி தன் பதிவு ஒன்றில் குறிப்பிட்ட பிரபாகர் வேதமாணிக்கம் ஒரு புதிய முறையை கொண்டு வர முயல்கிறார் ரஹ்மான் என்று சொல்லியிருந்தார்.)
ஆண்டுக்கு சராசரியாக பல பாடல்களை இப்படி உருவாக்கி கலர் கோழிக்குஞ்சுகளை போல வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார். ரஹ்மான் பாட்டு என்றாலே ஒரு வெறுப்பு தோன்றுகிறது. யார் பாராட்டினாலும் இப்போது நான் கேட்க தயாராவதில்லை. டங் டங் டடன் டங் டங் டங் டடண் டங் இப்படியே எல்லா பாடல்களும் போகின்றன. ஐந்தாண்டுகள் முன்வரை அவரது பாடல்களில் நிறைய சிக்கலான அமைப்புகள், படிவம் படிவமான மாறுபாடுகள், ஸ்வரங்கள் வரும் (அது அவராக உருவாக்கியதோ இல்லையோ). இப்போது அவரது நாட்டுப்புற மெட்டுடன் வரும் ஹிந்துஸ்தானி ஸ்வரம் கூட டங் டடங் என்.ஸி.ஸி, ராணுவ அணிவகுப்பு மாதிரியே ஒலிக்கிறது.
சரி ரஹ்மானிடம் தான் பிரச்சினை என நினைத்தால் அண்மையில் பாலிவுட் பாடல்களும் அப்படியே உள்ளன. பல்லவியைத் தாண்டி மெட்டு பல்லி போல சுவரில் இருந்து விழுந்துவிடுகிறது. பட்டாம்பூச்சி போல பறப்பதில்லை. அனேகமான பாடல்கள் முதல் சில வரிகளைத் தாண்டி மனதுக்குள் நுழைவதில்லை. 30 வினாடிப் பாடலை மூன்று நிமிடங்களுக்கு நீட்டியதைப் போல. இது ஒரு புதிய போக்கு, டிரெண்ட் என நினைக்கிறேன். ரஹ்மான் இப்படித்தான் குப்பையாக எல்லாம் போகப் போகிறது, இத்தலைமுறைக்கு இதுவே பிடிக்கும் என முடிவு பண்ணி முன்கூறாகவே தன் இசையின் பாணியை மாற்றிவிட்டார் என நினைக்கிறேன்.