ஜெயமோகனின் ஆளுமையைப் பற்றி ஒரு நண்பரிடம் விவாதித்துக் கொண்டிருக்கும் போது அவர் தன் காலத்துக்கு வெகு முன்னதாகவே இப்போதை இளைஞர்களிடம் காணப்படும் மிகையான தன்மதிப்பையும், தன்னை மையமாக்கி உலகைப் பார்க்கும் போக்கையும் கொண்டிருந்தார் என்று சொன்னேன். எழுத்தாளரின் ஆளுமையே அவரது எழுத்தின் ஆதாரம், அவரது ஆளுமை அவனது கற்பனையின் புறவடிவம், அது இந்த உலகின் ஆதார இயக்கவிசை என ஜெயமோகன் நம்புகிறார். இது வெர்ட்ஸ்வொர்த்தும் கால்ரிட்ஜும் தாரோவும் ஏற்கனவே 19ஆம் நூற்றாண்டில் சொன்னதுதான். இந்த சிந்தனைக் கோணம் நவீனத்துவ இயக்கத்தில் கடுமையாக மறுக்கப்பட்டது. நவீனத்துவத்தில் எழுத்தாளர் என்பவர் மானுடப் பாய்ச்சலின் மிகச்சிறிய துளியாக மாறினார். நவீனத்துவ யுகத்தில் மட்டுமல்ல பொதுவாக பௌத்த சமண துறவற (தன்மறுப்பு) மரபின் தாக்கம் இன்னுமுள்ள இந்தியாவின் பெரும்பான்மை சமூகம் கூட ஒரு தனிமனிதன் பணிவும், விட்டுக்கொடுக்கிற பாங்கும் கொண்டவர்களையே கொண்டாடுகிறது. நமது சினிமா நட்சத்திரங்கள் கூட இப்படித்தான் தம்மைக் காட்டிக் கொள்கிறார்கள். ஆனால் இன்றைய பின்நவீன உலகில் எழுத்தாளர் தன்னை ஒரு பேராளுமையாக கருதுவதற்கு, தன்னுடைய மையத்...