முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எம்.கே மணி




கடந்த சில நாட்களாக எம்.கே மணியைப் பற்றி எழுதப்படும் பல உணர்ச்சிகரமான அஞ்சலிக் குறிப்புகளைப் படித்துக் கொண்டிருந்தேன். எந்த உள்நோக்கமும் இல்லாமல் மனதில் இருந்து பகிரப்படும் வருத்தமும் மரியாதையும். ஒருவருடைய மதிப்பையும் அன்பையும் பெற நாம் அவர்களை முதலில் சமமாக மதிக்க வேண்டும், அவர்களுக்கு எதிர்பார்ப்பின்றி நேரத்தை கொடுக்க வேண்டும். நேரம் மதிப்பற்றது, நாம் அதை வீணடிப்போமே அன்றி அடுத்தவருக்கு கொடுக்க மாட்டோம். எம்.கே மணி இதையெல்லாம் செய்திருக்கிறார், முன்தீர்மானம் இன்றி, மதிப்பிடாமல், ஒதுக்காமல் பழகியிருக்கிறார். அதனால் தான் இத்தனை பேர்களை அவரது இழப்பு சஞ்சலப்படுத்தியிருக்கிறது. இயக்குநர் மிஷ்கின் மணியின் கடைசிக் கால மருத்துவ செலவுகளைப் பார்த்திருக்கிறார் எனத் தெரிய வந்த போது மிகவும் நெகிழ்ந்தேன். மிஷ்கின் இதே போல தனக்கு தெரியாதவர்களுக்காகவும் யோசிக்காமல் உதவ தலைப்படக் கூடியவர் தான். இம்மாதிரி நல்ல விசயங்களை ஒரு இழப்பின் போதுதான் தெரிந்துகொள்கிறோம், அது துரதிஷ்டமானது என்றாலும் வாழ்க்கை மீது மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு சின்ன விசயத்துக்கும் எதாவது ஒரு பெறுமதியை திரும்ப எதிர்பார்த்து நம்மை நாடுவோர் சூழ்ந்த உலகில் இப்படியான ஒரு தரப்பும் இருப்பது ஒரு அற்புதம்


எம்.கே மணியின் எழுத்தைப் படித்திருக்கிறேன். அவரிடம் உரையாடியதில்லை. அவருடைய பாணியும், நம்பிக்கைகளும் என்னுடையவற்றில் இருந்து வெகுவாக விலகி நிற்பவை. பிறந்தநாள் வாழ்த்துக்களை சியர்ஸோடு அவர் சொல்வதை ஏற்றிருக்கிறேன். கமல் விசயத்தில் சண்டை போட்டிருக்கிறேன். ரொம்ப கூலான ஒரு சினிமா ரசிகர் என்றே நினைத்தேன். ஆனால் அவரது வாழ்க்கை இவ்வளவு துயரானதாக, எழுத்தில் சாகசம் புரிபவராக இருந்திருக்கிறார் எனத் தெரியவில்லை. தெரிந்திருந்தால் அவரை அணுகி பழகியிருப்பேன்


அவரது கதைகளில் ஒரு வினோதமான மனநிலை இருக்கும் என பலரும் சொல்வது உண்மை தான் - அவை துல்லியமான கதையாகாமல் இருக்கலாம், ஆனால் பாத்திர அமைப்பில், நடையில் அவருடைய ஒரு தனித்துவம் இருக்கும். தன் இறுதி சில ஆண்டுகளில் மட்டுமே ஏகத்துக்கு எழுதியிருக்கிறார். ரெட்டை வேட சினிமாவில் ஒரு நாயகன் வேறு ஊருக்கு குடும்பத்திற்கு அடையாளம் மாறி வந்து பரபரப்பாக நடந்துகொண்டு அசத்துவாரே அதே மாதிரி.


அவருக்கு என் அஞ்சலி!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...