முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இலக்கிய அரட்டைக் குறிப்புகள் (2)

ஈழப் புலம்பெயர் / போர் இலக்கியங்களின் சிறப்பு என்னவென்பது எப்போதுமே எனக்குள் இருக்கும் கேள்வி - தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு ஈழத்தமிழரைப் போல போர் அனுபவம் இல்லையாகையால் ஈழ இலக்கியத்தாலே உலக இலக்கியத்திற்கு அருகில் போக முடியும், தமிழ்நாட்டு இலக்கியத்தால் முடியாது என்று ஏன் சிலர் கூறுகிறார்கள்?

இந்த விசயத்தைப் பற்றி மொழியாக்கப் பதிப்புகள் உலகளவில் போவது குறித்துப் பேசிக்கொண்டிருக்கும் போது தற்செயலாக ஜீவ கரிகாலனிடம் குறிப்பிட்டேன். ஈழத் தமிழரிடம் உள்ள ஒன்று தமிழ்நாட்டுத் தமிழரிடம் இல்லை. அது நிஜத்தில் போர் அல்ல. காப்காவின், ஜேம்ஸ் ஜாய்ஸின் புனைவுலகிலும் தான் போர் இல்லை. செர்வாண்டஸ் போரில் பங்கெடுத்தவர் என்றாலும் “டான் குவிக்ஸடோவில்” போர்க் காட்சிகள் இல்லை. ஆக, போர் இல்லாத மகத்தான நாவல்களை நம்மால் கணிசமாக குறிப்பிட முடியும். என்றுமே போர் அனுபவம் இலக்கியத் தகுதியாக அறியப்பட்டதில்லை. நோயுறுவது, விபத்துக்குள்ளாவது எழுத்தாளருக்கானது தகுதி என்பதைப் போன்றது இது. நிஜத்தில் நாம் சொல்ல வருவது போர் அனுபவத்தின் முக்கியத்துவத்தை அல்ல - போர் எதற்காக நடைபெறுகிறது? தேசத்துக்காக. தேசம் இல்லாத மக்களால் போர் தொடுக்க முடியும? முடியாது. இதுதான் உண்மையான பிரச்சினை. நாம் தேசியத்தைப் பற்றிப் பேச பயந்து அதைப் போர் அனுபவம் என மாற்றிவிடுகிறோம்.
தமிழ்நாட்டுத் தமிழரின் மிகப்பெரிய குறை அவர்களுக்கு தேசியம் இல்லாததே என்பது என் அனுமானம். தேசியம் ஏன் இல்லையெனில் அவர்களுக்கு என்று ஒரு தேசம் இல்லை. தேசம் இல்லாதவர்கள் அனாதைகள். சரி ஈழத்தமிழர்களுக்கும் தான் தேசம் இல்லையே? ஈழத்தமிழரிடம் சிறிது காலம் ஒரு தேசம் இருந்தது. அதற்கு முன்பே அவர்களுக்கு தேசம் குறித்த ஏக்கமும், தேசத்தை இழந்த பின்னர் ஒரு கனவு தேசிய உணர்வும் இருந்தது, இருக்கிறது. ஈழத்தமிழர் எனும் அடையாளமே தேச அடையாளத்துடன் தோன்றியதே. அதனாலே போருக்குப் பின்பு எழுதப்பட்ட போர் மற்றும் புலம்பெயர் இலக்கியப் படைப்புகளுக்கு உலகளவில் முக்கியத்துவம் ஏற்பட்டது அது ஒரு மொழிசார் இனக்குழுவின் பண்பாட்டு அடையாளம் என்பதாலோ வரலாற்றுக் கதையாடல் என்பதாலோ அல்ல ஒரு தேசிய இனக்குழுவின் அடையாளம், கதையாடல் என்பதாலே.
ஆனால் தமிழருக்கு இது என்றுமே இருந்ததில்லை. அவர்கள் ஒரு சமரசத்தின் பெயரில் தமிழ் தேசியத்தை கட்டமைத்தார்கள். ஆனாலும் அது டயட் ஷுகரைப் போன்ற ஒன்றே, அது ஒரு போதும் இறையாண்மைக்கு ஈடாகாது. அதனாலே என்னதான் தலைசிறந்த இலக்கியத்தைப் படைத்தாலும் அதற்கு உலக இலக்கியத்தில் மதிப்பு ஏற்படாது. இந்தி மொழி இலக்கியத்துக்கு இந்திய தேசிய அடையாளம் உள்ளது, இந்திய இறையாண்மையில் உரிமை உள்ளது. இதை நீங்கள் எந்த இந்தி பேசும் இந்தியரிடமும் காண முடியும். அவர்கள் தொடர்ந்து தேசம் குறித்த கற்பனையில், பரவசத்தில் இருப்பார்கள். அவர்களுடைய கனவில் நமக்கு என்றுமே உரிமை இருப்பதில்லை. நீங்கள் ஆங்கில இந்திய இலக்கியத்தைப் பார்த்தால் 90களுக்குப் பிறகு அதில் பெரும் தாக்கத்தை செலுத்திய உலகளவில் புகழடைந்தவர்கள் இந்தி பேசும் அல்லது சமஸ்கிருத, தேவநாகிரி மொழிக் குடும்பத்தை சேர்ந்தவர்களே (வங்காளிகள், பஞ்சாபியர், தில்லி, மும்பைக்காரர்கள்). மிகவும் பிரசித்தமான படைப்பாளியென்றாலும் ஆர்.கெ நாராயணுக்கு அவர்களுடைய புகழுலகில், உலக சந்தையில் இடம் இருந்ததில்லை. அருந்ததி ராய் கூட தன்னை கேரளாவை சேர்ந்த தென்னிந்தியராக என்றுமே காட்டிக்கொண்டதில்லை. இந்திய இறையாண்மைக் கனவின் பகுதியாக நின்றே அரசியல் சமூகப் பிரச்சினைகளை அவர் பேசினார்.
இதுவே நாம் மொழிவாரி மாநிலங்களாகப் பிரிந்த போது தேசங்களாக மாறியிருந்தால் 1940களுக்குப் பிறகு தமிழில் எழுதிய படைப்பாளிகள் நிச்சயமாக உலகளவில் பரவலாக மொழியாக்கப்பட்டு அடுத்த 50 ஆண்டுகளில் சந்தையை வெற்றி கண்டிருப்பார்கள். 1993இல் வெல்வெட் விவாகரத்து நடந்து செக் தேசம் உருவான பின்னர் இன்று காப்காவுக்கு ஒரு முக்கியத்துவம் உள்ளது, அவருக்கான அருங்காட்சியகம், விழாக்கள் அங்கு நிழகின்றன, இதுவே செக் தேசம் உருவாகாமல், சோவியத் யூனியனின் பகுதியாக தொடர்ந்திருந்தால், அல்லது ஹிட்லர் கொல்லப்படாமல், இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி வென்று, ஜெர்மனியின் பகுதியாகவே தொடர்ந்து செக் இருந்திருந்தால் என்னவாகி இருக்கும்? அவர்களுடைய இலக்கியத்துக்கு உலகளவில் மதிப்பிருந்திருக்குமா? இருக்காது. காப்கா காணாமல் போயிருப்பார். ஜெர்மனியின் மக்கள் தொகையும் தமிழ்நாட்டின் மக்கள் தொகையும் கிட்டத்தட்ட ஒன்றுதான். ஆனால் ஜெர்மானிய இலக்கியம், தத்துவத்துக்கு உலகளவில் உள்ள தாக்கம் ஒரு போதும் தமிழ்நாட்டுக்கு இல்லை. தமிழ்நாட்டு மக்கள் தொகைக்கும், நிலப்பரப்புக்கும், உற்பத்தி திறனுக்கும், பொருளாதார மதிப்புக்கும் பத்தில் ஒரு மடங்கு கூட இல்லாத ஐரோப்பிய தேசங்கள் உள்ளன, அவற்றில் தோன்றும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்களுக்கு உள்ள முதுகு நிமிர்வு, தன்னம்பிக்கை ஒருபோதும் தமிழருக்கு இருக்க முடியாது.
நமது மிகப்பெரிய துரதிஷ்டம் முகலாய ஆட்சியின் கட்டுப்பாட்டில் முதலிலும், கிழக்கிந்திய கம்பனியின் படையினரின் கீழ் அடுத்தும், பிரித்தானிய காலனிய ஆட்சியின் கீழ் அதற்கு அடுத்தும் நாம் வந்து ஒரு காலனியின் பகுதியாக மாறிப் போனதே. தமிழ்நாட்டினர் கடும் பஞ்சத்திற்கு ஒரு காலத்தில் ஆளானதும்,வறுமைக்கு ஆட்பட்டதும், உலகம் முழுக்க புலம்பெயர்ந்ததும் காலனியத்தின் பகுதியாக நாம் ஆனதாலே. அதனாலே சுதந்திரத்துக்குப் பின் ஒரு பின்காலனிய தேசமான இந்தியாவின் பகுதியாக வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்டோம். இது தமிழரின் தன்னம்பிக்கையை நிச்சயமாக பாதித்தது, தம்மைக் குறித்து பெருமையுடன் நினைக்க ஒன்றுமே இல்லாமல் பண்ணியது, தமது மொழி, பண்பாட்டுப் பெருமைகளை அங்கீகரிக்கும்படி ஒன்றியத்துடன் கையேந்தும் மனநிலை ஏற்படுத்தியது. பின்காலனிய சிந்தனையில் இதை மிமிக்றி என்கிறார்கள். நாம் இந்தி பேசும் இந்தியாவை போலச் செய்வதற்கோ அதைப் போலச் செய்யாமல் இருக்கவோ தாம் முயல்கிறோம். அவ்வாறே நாம் தேசியவாதிகளாகவோ தமிழ் தேசியவாதிகளாகவோ ஆகிறோம். நாம் ஒரு இயல்பான தேசியர்களாக ஆவதில்லை. இதுவே எந்த அரசியல் பிரச்சினைகளையும் தன்னலம் சார்ந்ததாக சுருக்கிக் கொள்ள வைக்கிறது. உதாரணத்திற்கு, ஹரியானா, உ.பியை சேர்ந்த ஒருவர் ஊழலைப் பற்றிப் பேசும் போது இந்தியாவையே அது பாதிப்பதாகப் பார்க்கிறார்கள், ஆனால் தமிழர்களோ ஒருபோதும் அதை ஒரு பொதுப்பிரச்சினையாக கருத மாட்டார்கள். இங்கு எழுப்பப்படும் எதையுமே தம்முடன் அடையாளப்படுத்த அவர்களால் முடியாது. நாம் யாரோ ஒருவருடைய கைப்பாவையாக மாறிப் போனோம். இதுவே நமது இலக்கியத்தையும் நிழல் இலக்கியமாக்குகிறது.
நமக்குள்ள இந்த வரலாற்று துரதிஷ்டம் ஈழத்தமிழருக்கு இல்லை. சுதந்திரத்தின் போது இலங்கை இந்தியாவுடன் இணைக்கப்பட்டிருந்தால் அவர்களும் நம்மைப் போல காணாமல் போயிருப்பார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.