கெ.என் செந்திலின் ஒரு கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை - 90% விஷ்ணுபுரத்தார் புக் பிரம்மாவின் விழாவை கபளிகரம் பண்ணியிருப்பதாக சொல்வது நியாயமில்லை. நியாயமே இல்லை. 60% என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம். வேறு முகாமை சேர்ந்த முக்கிய படைப்பாளிகள், பதிப்பாளர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இதிலெல்லாம் பிரச்சினை இல்லை. உண்மையான பிரச்சினை மனுஷ்யபுத்திரன் சொன்னதைப் போல ஒரு விழாவில் அம்மொழியின் தலைசிறந்த படைப்பாளிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும், அது நிகாழமல் போனதே அவலம். கெ.என் செந்தில் குறிப்பிடுவதைப் போல பா. வெங்கடேசனை நிச்சயமாக அழைத்திருக்க வேண்டும். சி.எஸ்.கெ, பாலசுப்பிரமணியம் பொன்ராஜ் போன்றோரும் இங்கே இருக்கும் நல்ல படைப்பாளிகள். தேவதேவனை எப்படி அழைக்காமல் விட்டார்கள் எனப் புரியவில்லை? இப்படி பல “ஆச்சரியங்கள்”.
இன்னொரு பிரச்சினை கணிசமான படைப்பாளிகள் மீது பூஞ்சை போலப் படிந்துள்ள ‘இசைவு அழுத்தம்’. ஜெயமோகனுடன் இசைந்தோ போவதோ அவரைப் பகைத்துக் கொள்ளாமலோ இருந்தால் சில விருதுகள், வெளிநாடு போகும் வாய்ப்பு, சினிமா வாய்ப்பு, விஷ்ணுபுரம் பாராட்டு அரங்குகள், ஜெயமோகன் தம் படைப்புகளை சிலாகித்து எழுதும் கட்டுரைகள் என அனுகூலங்கள் கிடைக்கும், அவரை விமர்சித்தால் கையைக் கட்டித் தெருவில் நிற்க வேண்டியதுதான் என ஒரு அழுத்தம் இன்று வந்துவிட்டது. எழுத்தாளர்களில் திமுகவை எதிர்ப்பவர்கள் கூட பொதுவெளியில் திமுக ஆதரவாளர்களாக காட்டிக்கொள்வதைப் போலத்தான் இதுவும். ஜெயமோகன் ஒரு இலக்கிய ‘ஆளுங்கட்சி’. ஆளுங்கட்சியை அதிகாரிகள் அனுசரிப்பதைப் போல எழுத்தாளர்கள் அவரை அனுசரிப்பது ஒரு சுதந்திரமான சிந்தனைப் போக்குக்கு விரோதமானது; எழுத்து தனித்துவமாக மாறுவதற்கு மோதல் அவசியம். நான் உன்னைப் போல இல்லை, நீ செய்வது, சொல்வது, நினைப்பது தவறானது என நினைக்கிறேன், அதை நிரூபிக்கிறேன் என ஒரு படைப்பாளி நினைக்கும் போதே ஆற்றொழுக்காக புதிய படைப்பெழுத்து பெருகி ஓடுகிறது. ஒட்டி ஒழுகுவது, ஊமையாக இருப்பது, ஆதிக்கம் செய்யும் கருத்தியலுக்கு ஏற்ப எழுதுவது நம்மை நகல் எந்திரமாக்கி விடும். மறுத்து, எதிர்த்து இயங்கும் போது மட்டுமே நாம் அறிவுச்சூழலில், படைப்புச் சூழலில் உயிர்ப்பாக இருக்க முடியும் என நம்புகிறேன். விஷ்ணுபுரம் கலாச்சாரம் அதை அனுமதிப்பதில்லை, மெட்ராஸ் படத்தில் வரும் சுவரைப் போல, மறைமுக தணிக்கை இயக்கம் போல அது செயல்படுகிறது என்பதே நம் காலத்தின் பேரவலம்.