பதிப்பகங்கள் நூலக நூல் கொள்முதலுக்காக முறைகேட்டில் ஈடுபட்டு, அதற்கான கோடிக்கணக்கான பண மதிப்பிலான ஊழலை செய்யும் போது அதனால் எழுத்தாளர்களும் வாசகர்களும் லஞ்சம் கொடுக்க முடியாத சிறுபதிப்பகங்களும் முறையே பாதிக்கப்படுகின்றனர். எழுத்தாளர்களுக்கு ராயல்டி கிடைக்காது - இல்லாத புத்தகத்துக்கு பொய்யான தலைப்பில் ஆர்டர் கொடுத்தாலோ ஒரு பதிப்பகம் முறைகேட்டினால் ஆர்டர் பெற்றாலோ அது கறுப்புப் பணத்தை உற்பத்தி பண்ணும், கறுப்புப் பணத்தை எழுத்தாளருக்கு ராயல்டியாக கொடுக்க முடியாது, மேலும் இல்லாத எழுத்தாளருக்கு எங்கே போய் பணம் சேரும்? இந்த அபத்தமான சூழலை காப்கா கூட கற்பனை பண்ணியிருக்க முடியாது.
வாசகர்களுக்கும் ஒரே நூலை இருபது முப்பது பிரதிகள் அலமாரியில் இருந்தாலோ அல்லது பொய்யான தலைப்பில் இருந்தாலோ பயனில்லை. சேக்கிழாரின் கம்பராமாயணம் என ஒரு நூல் பதிப்பிக்கப்பட்டால் அதை வைத்து வாசகருக்கு சேக்கிழாரையும் புரிந்துகொள்ள இயலாது, கம்பனையும் படிக்க முடியாது. பல குழப்பங்களுக்கு வழிவகுக்கும்.
அடுத்து, விலை. ஊழலினால் சரிசமமாக பதிப்பகங்களுக்கு நூலக ஆணை கிடைக்காமல் அவை நஷ்டத்தை சமாளிக்க புத்தக விலையை ஏற்றுவது வாசகரை பாதிக்கும். மெல்ல மெல்ல இதனால் சிறுபதிப்பாளர்கள் அழிவர்.
இப்படி எல்லாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் குற்றம் இது. ஏற்கனவே நொடிந்து போயிருக்கும் பதிப்பகத் துறையில் ஒரு சிலர் ஊழல் செய்வது ஏழைகளின் சோற்றில் கைவைப்பதைப் போன்றது. இது நியாயம் அல்ல. இத்தகையோரை அரசு தண்டிப்பதுடன் சம்மந்தப்பட்ட அதிகாரையும் இடமாற்றம் செய்ய வேண்டும். ஊழலற்ற வெளிப்படையான அணுகுறையை கொள்முதலில் கொண்டு வர வேண்டும். புத்தக தலைப்பின் அடிப்படையில் தேர்வு செய்யாமல் நல்ல பதிப்பகங்களைத் தேர்வு பண்ணி அவர்களிடம் இருந்து ஒரே எண்ணிக்கையில் நூல் வாங்க வேண்டும்.
பி.கு: அப்படியெல்லாம் அட்டையில் பெயர் மாறிவிடும் என நான் நம்பவில்லை. பெயரில் பிழை வரலாம், ஆனால் ஒரேயடியாக மாறியதெல்லாம் இதுவரை நம் வரலாற்றிலேயே நடந்ததில்லை. இது மோசடி வேலைதான் என்பது என் நம்பிக்கை. வேறு சிலரும் கூட இப்படி அட்டையில் தலைப்பையோ பெயரையோ மாற்றி அச்சடித்து நூலக ஆணைக்கு கொடுப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போதே ஆதாரத்துடன் பார்க்கிறேன்.