நான் கடந்த சில ஆண்டுகளாகவே ஜெயமோகனின் கருத்துக்களுக்கு எதிர்வினைகள் எழுதுவதில்லை - அது ஒரு முடிவற்ற கருத்துச் சுழல், அவரது கருத்துக்களுக்கு பதிலெழுதுவது அவ்வளவு முக்கியமல்ல, அது என் வளர்ச்சியைத் தடுக்கிறது என்று ஒருநாள் என் மனதுக்குப் பட்டதும் நான் திருந்திவிட்டேன். இம்முடிவு எனக்கு நன்றாகவே பலனளித்தது. இன்னொரு விசயம், ஜெயமோகன் யாருடைய எதிர்வினையையும் பொருட்படுத்துவதில்லை, அவரை விமர்சிப்பது ஒரு மலையின் உச்சியில் போய் நின்று தனியாகப் பேசிகொண்டிருப்பதைப் போலத் தான். அவரை விமர்சிப்பதும், மறுப்பதும் மனித குலத்துக்கு அவசியமா என்றால் இல்லையென்பேன். ஆனால் இன்று அவரது இணையதளத்தில் அவர் தெரிவித்திருந்த ஒரு தகவலுக்கு நான் மறுப்பு சொல்ல வேண்டும். நான் செய்யும் காரியங்கள், எழுதும் சொற்கள் குறித்து வரும் விமர்சனங்களைப் பொருட்படுத்துவேன், ஆனால் நடக்காதவற்றைப் பற்றி விமர்சனம் எழும் போது அது ஏற்படுத்தும் தவறான மனப்பிம்பத்தை, அதன் நிழலை சுமக்க நான் தயாரில்லை. குறிப்பாக கடலூர் சீனு குறித்து அவர் இப்படி சொல்லியிருப்பது:
//சீனுவுக்கு இதெல்லாம் தெரியும். இன்று அபிலாஷ் அவரை ஏளனமும் நக்கலும் செய்யும்போது சீனு அதை ஒருமுறைகூடச் சொல்லிக் காட்டவில்லை.//
இது உண்மை அல்ல. நான் எங்குமே சீனுவை ஏளனமோ நக்கலோ செய்யவில்லை. செய்யக் கூடாதென்றில்லை. ஆனால் நான் தான் செய்யவில்லையே.
நான் பௌத்த அய்யயனாரின் ஒரு நிலைத்தகவலைப் பகிர்ந்தேன். பெங்களூரில் இலக்கிய விழா நடப்பதால் என்னைப் போன்ற தொடர்ந்து தமிழில் இயங்கி வரும், பெங்களூரிலோ அருகிலோ வசிக்கும் முக்கிய படைப்பாளிகளையும் அழைத்திருக்க வேண்டும் என்று அதில் என் வருத்தத்தையும் கூடவே பதிவு பண்ணினேன். அப்போதே சீனுவையோ பிறரையோ அழைப்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை, கூடவே பிறரையும் அரங்குகளில் சேர்த்திருக்கலாம் என்றேன். “ஜெயமோகனின் அடிவருடிகள்” என்று யாரையும் அழைப்பதில் எனக்கு உடன்பாடில்லை என்றும் எழுதினேன். இதை நான் பின்னூட்டத்தில் சுட்டிக் காட்டியதும் பவுத்த அய்யனாரும் அதை மாற்றிக்கொண்டார்.
அதன் பிறகு பேஸ்புக்கில் கடலூர் சீனு ஒரு மென் இலக்காக்கப்பட்டு பகடி செய்யப்பட்டார். அதற்கு அவரது தோற்றம் அல்ல, அவரது (ஜெ.மோவிற்கு கடிதம் எழுதுபவர் எனும்) பிம்பமும், இலக்கியத்திற்கு வெளியாள் எனும் மற்றொரு வினோத பிம்பமும காரணங்கள். எனக்கு இந்த உள்-வெளி எதிரிடையில் (இலக்கியமானவர், இலக்கியமல்லாதவர்) நம்பிக்கையில்லை. பேஸ்புக்கில் மற்ற முகாமை சேர்ந்த பங்கேற்பாளர்களை பொதுவில் விமர்சிக்க முகாந்திரம் இல்லை, மேலும் அவர்கள் நண்பர்களும் கூட (விமர்சிக்க அவசியமும் இல்லை என்றாலும்) என்பதாலே மொத்த வெறுப்பையும் சீனு மீது இறக்கினார்கள். எனக்கு இது வருத்தத்தை ஏற்படுத்தியது. நான் இதை ஏற்கவோ இதில் ஈடுபடவோ இல்லை. மேலும் எனக்கு அவரை ஏற்கனவே தெரியும். விஷ்ணுபுரம் கூட்டத்தில் வைத்து பேசியிருக்கிறேன். நான் அவரை புக் பிரம்மா அரங்குக்கு வெளியே பார்த்தேன். அவர் அந்தக் கூட்டத்தில் கொஞ்சம் அசௌகர்யமாக இருப்பதை கவனித்தேன். விஷ்ணுபுரம் அரங்குக்கு வெளியே நான் பார்த்த மனிதர் அல்லர் இவர், அவர் அங்கு பதற்றமாக இருக்கிறார் என உணர்ந்து அவரை என் வசம் அழைத்து அணைத்துக் கொண்டேன். அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு சில நிமிடங்கள் பேசினேன். அவர் தன் வழக்கப்படி நைசாக கழன்றுகொண்டார். இப்போது ஜெயமோகன் நானே பேஸ்புக்கில் சீனுவைக் கலாய்த்து அமர்க்களம் செய்தேன், அவமதித்தேன் என்று சொல்வது ஒரு தகவல் பிழை, அது நியாயம் அல்ல. அது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது.