இதுதான் புக் பிரம்மா இலக்கிய விழா பற்றி என கடைசிப் பதிவு (என்று நினைக்கிறேன்).
இன்று மாலையில் பென்யாமினுடனான உரையாடல் நிகழ்வு நடந்து கொண்டிருந்த போது போனேன். பென்யாமின் பதற்றமாக ஒரு எனெர்ஜி இல்லாம பேசிக்கொண்டிருந்தார். ஒருங்கிணைப்பாளர்கள் நேர விசயத்தில் ரொம்ப கறார் போல - அரங்குக்கான நேரம் முடிவதற்கு முன்பே டிங்டிங் என மணியடித்தார்கள். (அப்போதும் கூட சிலரது தூக்கம் கலையவில்லை.) ஆனால் பென்யாமின் வெளியே பார்த்த போது என்னிடம் உற்சாகமாகப் பேசினார்.
அரங்கில் கால்வாசி தான் கூட்டம். ஒரு தற்படம் எடுக்கலாம் என முயன்றால் எனக்குப் பின்னால் ஒருவர் மதிய ஆங்கிலப் படத்திற்கு வநதவரைப் போல தூங்கிக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்த அனேகமானவர்கள் மந்திரித்து விட்டவர்களைப் போலத்தான் இருந்தனர். அங்கேயோ வெளியிலோ ஒரு பரபரப்பு, உற்சாகம் இல்லை. பொதுவாகவே பெங்களூர் மக்கள் எங்கு போனாலும் கறுப்புக் கண்ணாடியைக் கழற்றாமல் ஏ படம் பார்க்க சென்றதைப் போலத்தான் அதீத மெத்தனமாக இருப்பார்கள் என்றாலும் இந்த நிகழ்வு ஒரு மார்க்கமாகவே இருந்தது; ஏதோ மணப்பெண் ஓடிப்போன கல்யாண மண்டபத்தில் உணவுக் கூடத்தைப் போல.
கிட்டத்தட்ட காலியாக இருந்த அந்த அரங்கைப் பார்க்க எனக்கு "ச்சே இதற்காகத் தான் இவ்வளவு அங்கலாய்த்துக் கொண்டோமோ" என இருந்தது. (அனேகமாக எல்லா அரங்குகளின் போதும் கூட்டம் இப்படித்தான் இருந்தது என ஒரு தோழி சொன்னார்.) எப்போதுமே இப்படித்தானே - உண்மையில் எப்படித்தான் இருக்கிறது எனத் தெரிந்துகொண்டு புலம்பியிருக்கலாம்.
அருமையான இடம், நல்ல ஒருங்கிணைப்பு, உணவருந்தவும் உரையாடவும் வசதியான இடங்கள், கிட்டத்தட்ட மெட்ராஸ் மியூஸிக் அகாடிமியைப் போல இருக்கிறது, ஆனாலும் ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது.
ச்சே, இதற்காகத் தானா என "மோகமுள்" பாபுவைப் போல நினைத்துக் கொண்டேன்.