நற்பேறு
ஜெயம் ரவி சொல்வது உண்மையாக இருக்கும்பட்சத்தில் இது மிகப் பரிதாபமானது. அதுவும் அவர் தன்னிடம் மிச்சமாக இருப்பது வெறும் கார் தான் எனும்போது வருத்தமாக இருக்கிறது. இதுவே ஒரு நடிகைக்கு நடந்திருந்தால்? நயந்தாராவோ திரிஷவோ தான் நடித்து சம்பாதித்த பணத்தையெல்லாம் ஒரு தயாரிப்பாளர் சுருட்டி தன்னைத் தெருவில் விட்டுவிட்டார் என்று சொன்னால் அவரை ஊரே சேர்ந்து பந்தாடியிருக்கும். ஆணுக்கு நடந்தால் கண்டும்காணாமல் விட்டுவிடுவார்கள். ஆண்களால் அழுதுகாட்டவும் முடியாது. ஜெயம் ரவிக்கும் விவாகரத்தாகும் வேறு மத்திய, மேல்மத்திய வர்க்க ஆண்களுக்குமான வித்தியாசம் பின்னவர்களின் பணத்தையும் சொத்தையும் மொத்தமாக செட்டில்மெண்டின் போது பிடுங்கியிருப்பார்கள். ஜெயம் ரவிக்கு அது விவாகரத்தாகுமுன்பே நடந்திருக்கிறது. என்ன கொடுமையென்றால் நம் சமூகமே இதுதான் சரியெனும் நம்பிக்கைகொண்டிருப்பதுதான் - ஆண்களின் உழைப்பு, பணம், சொத்தெல்லாம் அவர்களுடையது அல்ல, அதை யாராவது பயன்படுத்தவேண்டும், பிடுங்கவேண்டும், அதுவே கடமையாற்றுவது, கண்ணியமாக பாசமாக இருப்பது என சமூகம் நம்புகிறது. அக்கா, தங்கை, அம்மாவுக்காக கொடுப்பது, மனைவி, பிள்ளைக்கு கொடுப்பது என இளமை முதல் வயோதிகம் வரை ஆண்கள் தம் உழைப்பை பணமாகவும் சொத்தாகவும் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். நாம் எப்போதுமே இதைச் சுரண்டலாகப் பார்ப்பதில்லை - வரதட்சிணையை எடுத்துக்கொள்ளுங்கள். கொடுக்க முடியாததால் துன்பப்பட்ட பெண்ணுக்காக இரக்கப்பட்ட அளவுக்கு நாம் அதைக்கொடுக்க தன் ஒட்டுமொத்த சேமிப்பையும் செலவழித்து போண்டியாகும் அப்பாவுக்காக வருந்துவதில்லை. சொத்து, பணம், பண்பாடு, சட்டம், நடைமுறையென்று வந்துவிட்டால் உண்மையில் இது ஒருவிதத்தில் பெண்ணாதிக்க சமூகம்தான். ஆண்களுக்குப் பேசத் தெரியாது, அவர்கள் அடிப்படையில் முட்டாள்கள் என்பதால் இதை உணரவோ, பிறருக்கு உணர்த்தி நியாயம் கேட்கவோ அவர்களுக்குத் தெரியாது. ஓரமாகப் போய் உட்கார்ந்து அழுதுகொண்டிருப்பார்கள். நான் கடந்த சில ஆண்டுகளில் நான் இத்தகைய ஆண்களை ஏகத்துக்குப் பார்த்திருக்கிறேன் - என் நண்பர் ஒருவருக்கு விவாகரத்தானபோது அவரது ஊடகவியலாளர் மனைவி அவர் தான் இருபதாண்டுகளாக நிகழ்ச்சித் தயாரிப்பிலும் திரைக்கதை எழுத்திலும் சம்பாதித்த பணத்தைக் கொடுத்தால் மட்டுமே குழந்தையைத் தருவதாக பேரம் பேசிப் பெற்றுக்கொண்டார். இதையே அவர் அப்பெண்ணுக்கு செய்திருந்தால் சிறையில் தள்ளியிருப்பார்கள். நம்மூர் சட்டம் சொல்வதென்னவென்றால் குழந்தை பெறுவது, கூட வாழ்வது போன்ற பெண்கள் ஆற்றும் சேவைகளுக்காக ஆண்கள் தம் ஒட்டுமொத்த சொத்தை பணத்தை மொத்தமாகவோ பாதியோ கொடுத்து சரணடைய வேண்டும் என்று. இதுவரையிலும் இது மறைமுகமாக பேரமாக நடக்கிறது. இனிமேல் விரைவில் இது சட்டமாகப் போகிறது என்று சட்டமறிந்த என் நண்பர் ஒருவர் சொன்னார். அப்போது உண்மையிலே ஜாலியாக இருக்கும் - இப்போது பெண்ணிய கொடி தூக்கும் பல ஆண்களுக்கு ஆசனத்தில் நெருப்பு வைத்து ஓடவிடுவார்கள். பல மோசடித் திருமணங்கள் இதற்காகவே நிகழும்.
சரி ஜெயம் ரவி விவகாரத்துக்கு திரும்ப வருவோம் - ஒருவிதத்தில் அவருக்கு அதிர்ஷ்டம் உண்டு. அவரது மனைவி நினைத்தால் மாதத்திற்கு சில லட்சங்கள் கேட்டு குடும்பநல நீதிமன்றத்திற்குப் போகலாம். நீதிபதியும் நிச்சயமாக அத்தொகையை அனுமதித்து ஆணையிடுவார். ஆனால் ஜெயம் ரவி தரப்பு தன்னை படத்தயாரிப்பின் பேரில் ஏமாற்றிச் சுரண்டியதாக மனைவி, மாமியார் மீது வழக்குப் போடுவார். இந்த வழக்கு வருடக்கணக்கில் நடக்கும். கடைசியில் சமரசம் பண்ணிக்கொள்வார்கள். ஜெயம் ரவி மீதமிருக்கும் காரையும், குடும்ப சொத்தையும் விற்றுக்கொடுக்க வேண்டியிருக்கும். அது நடக்கவில்லை என்பது அவரது நற்பேறு.