“மீராசாது” நாவலை தமிழில் மொ. செந்தில்குமார் மொழிபெயர்த்திருக்கிறார். தமிழில் வெகுவாக சிலாகிக்கப்பட்ட நாவல் இது. நான் மொழிபெயர்ப்பில் படிக்கவில்லை. நான் ஸ்டோரிடெல் ஒலிநூல் செயலியில் மலையாள மூலத்தில் இந்நாவலைக் ‘கேட்டேன்’.
1970, 80கள் வரை வெகுஜன இலக்கியத்தில் பிரசித்தமாக இருந்த கதை வடிவம் இது: ஸ்திரிலோலனான ஒரு நாயகன், அவனிடம் காதல்கொண்டு பித்தாகி கிட்டத்தட்ட அடிமையாகவே செயல்படும் நாயகி. நாயகன் அவளை மணமுடித்து தொடர்ந்து அவளைச் சுரண்டுகிறான், ஏமாற்றி பல பெண்களை அனுபவிக்கிறான். கடைசியில் நாயகிக்கு மனம் தெளிந்து அவள் அவனைத் திருத்தி அவனுடன் வாழ்வாள் (ரமணி சந்திரனின் "மயங்குகிறாள் ஒரு மாது" நாவலை நினைத்துப்பாருங்கள்). இக்கதைகளின் அழகே நாயகியின் ஸ்டாக்ஹோம் சிண்டிரோமும், தன்னழிவில் அவள் கொள்ளும் பெருங்கிளர்ச்சியும்தான். அவள் வன்மமான நாயகனை வழிபடுவதில் ஒரு கிறுக்குத்தனமும், அதர்க்கமான அகப்பாய்ச்சலும் இருக்கும். உன்மத்தமான இக்காதல் அன்று பல வாசகர்களைக் கட்டிப்போட்டது. இந்தக் கதையமைப்பில் எப்போதுமே ஒரு அரைகுறைப் பெண்ணியவாதமும் இருக்கும். கே.ஆர் மீரா இதை வைத்து மூன்று விசயங்களைச் செய்கிறார்:
அ) அவரது “மாலாகயுடே மறுகுகள்” நாவலில் வருவதைப்போல இதிலும் கட்டற்ற காதலின் பேரில் நிகழும் வெறுப்பு, துரோகம், கோபம், அதன் பெயரிலான குற்றம் வருகிறது. இது கள்ள உறவுகளும் குற்றங்களும் பெருகும் இக்காலத்திற்கு இந்நாவலைப் பொருத்தமாக்குகிறது.
ஆ) காதலின் பேரிலும் குடும்பத்துக்காகவும் தன் சுயமரியாதையை, எதிர்காலத்தைத் தொலைக்கும் ஒரு தனிமனுஷியின் பெண்ணியப் போராட்டமாக இதைச் சித்தரிக்கிறார். மிகுந்த கவித்துவத்துடன் உணர்ச்சிவேகத்துடன் எழுதுகிறார்.
இ) பெண்ணியக் கதைகளில் இல்லாமல் போன தத்துவார்த்தத்தைக் கொண்டுவருகிறார் - அதுதான் என்னை இந்த நாவலில் வெகுவாகக் கவர்ந்தது. நீங்கள் அம்பையின் பெண்ணியப் படைப்புகளில் ஒருபோதும் மதம் மீதான, கடவுள் மீதான விமர்சனத்தைக் காணமுடியாது. அதே போல குடும்பத்தைத் துறப்பதும் ஒரு தீர்வாக அளிக்கப்பட மாட்டாது. ஆனால் மீரா அதைச் செய்கிறார்; கிட்டத்தட்ட அம்பையின் கதையுலகை நிறைவு செய்வதைப்போல இதுவுள்ளது.
இந்த தத்துவார்த்த கோணத்தை மேலும் விளக்குவதானால் பக்திக்கும் காதலுக்குமான தொடர்பு, கடவுளுக்கும் அடிமை மனநிலைக்குமான தொடர்பு என்று கூறலாம். கடவுள் என்பதே இல்லாத ஒன்றை நிகழ்த்திக்காட்டும் ஒரு காட்சிதான். அக்காட்சியை நீங்கள் அணுகும்போது அது காலியாக இருப்பதை உணர்வீர்கள், ஆனால் அப்போது நீங்கள் ஏமாற்றமுறாமல் பரவசமாவீர்கள். அதையே (கடப்புநிலையின் அகக்கிளர்ச்சியை) பக்தி என்று கட்டமைக்கிறார்கள். இதையே மற்றமையைத் தள்ளிப்போடுகிற இன்பம் (differance) என்று தெரிதா கூறுகிறார். இந்த மனநிலை உங்களை எதார்த்த உலகில் இருந்து துண்டித்து ஒரு மிதப்புநிலையில் வைத்திருக்கிறது. இந்த போதைக்கு ஆட்பட்டவர்கள் காதல்வயப்பட்டவர்களைப்போன்றே இருப்பார்கள். இறைவன் தன் பக்தரிடம் தோற்றுவிக்கும் இந்த மாயமான பந்தத்தை வைணவம் லீலை என்கிறது. மீராவின் நாவலில் இந்த லீலை ஆணுலகச் சுரண்டலைப் பார்க்கமுடியாத ஒரு அடிமை மனநிலை மட்டுமே. இதிலிருந்து ஒரு பெண் விடுபடுவதையே, பௌதீக உலகின் நியதிகளுக்கு மீள்வதையே அவர் ‘முக்தியாகக்’ காட்டுகிறார். (பக்தியில் இருந்து முக்தி என ரைமிங்காகவும் சொல்லலாம்.)
இந்த பக்திமார்க்கம் பரிசீலிக்கப்படும் இடங்கள் நாவலில் மிகக்கவித்துவமாக, கற்பனையைத் தூண்டும்விதமாக, ஆழமாக வந்துள்ளன. ஆனால் இதை மேற்கொண்டு அவர் வளர்த்தெடுக்காமல் ஒரு எளிய பழிவாங்கல் கதையாக முடித்துவிடுகிறார்.
குற்றக்கதையாகவும் இது முழுமையாக அமையவில்லை. கணவனைப் பழிவாங்குவதற்காக மீரா ஏன் தன் குழந்தைகளை விடமூட்டிக் கொல்கிறார், அவருக்கு மனம் பேதலித்துவிட்டதா போன்ற கேள்விகளுக்கு அவர் பதிலளிப்பதில்லை. நாவலின் கவித்துவ எழுச்சியில் தன்னைத் தொலைத்துவிடுகிறார்; அதனாலே குறியீட்டுத்தன்மை அவருக்கு முக்கியமாகிறது. கிருஷ்ணர், ராதை, மீரா, கோயில் வளாகத்தில் தன் குட்டிகளைத் தூக்கிவரும் குரங்குகள், ஊனைத் தின்று அரிக்கும் எறும்புகள் இப்படி பல உருவகங்கள் வருகின்றன. சட்டென உருவகக் கதைக்கு பிரேக் போட்டு நிறுத்தி அதை குற்றக் கதையாக்குகிறார். இதுவே “மீராசாதுவின்” மிகப்பெரிய குறை. ஒரு நல்ல நாவலுக்கான மொழியை, கருவைக் கண்டடைந்து அதைக் கொண்டுபோய் தொலைத்ததைப்போல அவரது எழுத்து அமைந்துவிடுகிறது.
