Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

சந்ததிப் பெருக்கமும் இன்மையும் (பகுதி 1) - ஆர். அபிலாஷ்




கேரளாவை சேர்ந்த என்னுடைய மாணவர் ஒருவர் அரசு உதவி பெறும் கல்லூரியில் நல்ல சம்பளத்தில் உதவிப் பேராசிரியர். அவரை நான் சந்தித்த போது தான் புதிதாகக் கட்டிய பிரம்மாண்டமான வீட்டை தன் போனில் காட்டினார். அப்போது வகுப்பில் உள்ள பிற மாணவர்கள் சிரித்தனர். காரணம் அவரது வீட்டின் முன் எடுத்ததாக அவர் காட்டிய குடும்ப புகைப்படத்தில் அவருடன் மூன்று சிறு குழந்தைகள் ஏற்கனவே இருந்தார்கள். இது நடந்து அடுத்த சில ஆண்டுகளில் இன்னும் இரு குழந்தைகள் வந்துவிட்டனர். இப்போது அவரது குடும்பமென்பது அவர், அவரது மனைவி, ஐந்து குழந்தைகள். இப்போது அவர் மனைவி மீண்டும் கருவுற்றிருக்கிறார். அவரது பெற்றோர் பக்கத்தில் அவர்களது குடும்ப வீட்டில் இருப்பதால் அவ்வப்போது குழந்தைகளில் சிலரை அழைத்துப் போய் வைத்துக் கொள்கின்றன. எப்போதுமே குழந்தைகளின் கும்மாள கலவரம் தான். அவர் தன் முனைவர் பட்ட ஆய்வுக்காக விடுதி அறையில் ஒரு மாதம் தங்கும் நிலை வந்தது. இதைப் பற்றி அவரிடம் பேசிக்கொண்டிருந்த போது எனக்கு ஒரு விசயம் தெளிவாகியது - குழந்தைப்பேறின் எண்ணிக்கை கடந்த ஐம்பது ஆண்டுகளில் வெகுவாக குறைந்ததற்கு உள்ள சில காரணங்களில் இடப்பற்றாக்குறையும் முக்கியமான ஒன்று.

அரசின் கொள்கை

இன்று எல்லாருக்குமே வாழிடம் குறைவாக உள்ளது, ஆனால் விசித்திரமாக இந்த போதாமை நகைமுரணானது. நீங்கள் நகரத்தில் வசித்தால் இதைப் பார்க்கலாம் - எங்கு பார்த்தாலும் இடம் இருக்கும், ஆனால் அங்கு செல்ல உங்களால் முடியாது. நீங்கள் இருக்க வேண்டிய இடத்தில் யாருக்கும் இடமிருக்காது. இருக்கும், ஆனால் இருக்காது. கார்ல் மார்க்ஸ் பணம் உருவாக்கும் ஸ்திரமின்மை பற்றி தன் “மூலதனத்தில்” குறிப்பிடும் போது அதை கடவுளின் இருப்புடன் ஒப்பிடுகிறார். கடவுள் (சிலையாக / சித்திரமாக காட்சி நிலையில்) இருப்பார், ஆனால் (அக்காட்சி நிலையில்) இருக்க மாட்டார். அவர் இல்லாததாலே இருப்பார் (கடப்புநிலைவாதம்.) பத்து ரூபாய் பணத்தைக் கொண்டு நேற்று தேநீர் குடிக்க முடிந்தது, ஆனால் பெட்ரோல் விலையேற்றம், பணவீக்கம், பண்டத்துக்கான சந்தை மதிப்பு உயர்தல் போன்று நம் கட்டுப்பாட்டில் இல்லாத காரணிகளால் தேநீரின் விலை 15 ஆகும் போது என்னிடம் இருந்து 10 ரூபாயின் உண்மையான மதிப்பு 7 ரூபாயாகி விடும். ஆனால் அந்த 10 ரூபாய் என் கையில் தான் இருக்கும், அதன் மதிப்பு மட்டும் என் வசம் இருக்காது. இந்த மாய விளையாட்டு நிலத்தின், வாழிடத்தின் விசயத்தில் நிகழ்ந்தது. இது நம் குடும்ப அமைப்பை, நாம் குழந்தைகளைப் பெற்று வளர்க்கும் உரிமையை தீவிரமாக பாதித்தது. நாம் நமது வாழிடத்தில் இருந்து, குடும்பத்திலிருந்து, குழந்தைகளில் இருந்து அந்நியப்பட்டோம். துண்டுத்துண்டாகி தனிமையை, வறுமையை எதிர்கொண்டோம். அதாவது இப்படி துண்டுத்துண்டாக இருப்பது நம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் என முதலீட்டியம் சொன்ன பொய்யை நம்பி ஏமாந்து போனோம். (“பெர் கேப்பிட்டா இன்கம் உயர்ந்து விட்டது” என காக்காய் குரலில் கூவும் நம் சமூக விஞ்ஞானிகள் இந்த நவீன ‘பொருளாதாரத் தீண்டாமையைப்’ பற்றிப் பேசுவதில்லை என்பது துரதிஷ்டவசமானது.)

ஊரில் ஒருவர் வீடு கட்டினால் தோட்டம் துரவு என இடம் வைத்து தான் வீடு கட்டுவார். ஏழைகளுக்கு கூட சொந்தமாக ஒரு சிறிய வீடு உண்டெனில் அங்கும் போதுமான இடம் இருக்கும். அப்போது நிலத்தின் மீது முதலீடு பண்ணும் பழக்கம் இல்லை. நிலம் பணத்தைப் போல ஒரு குறியீடு ஆகவில்லை. அதன் மதிப்பை சந்தை முடிவு பண்ணும் வழக்கம் இல்லை. நிலம் என்பது மனிதன் தன் தேவைக்கு ஏற்ப எடுத்துக்கொள்ளும் சங்கதி மட்டுமே. நகரமயமாக்கல் இந்தியாவில் பரவலாகியதுமே இடத்தின் மதிப்பு (பண நோட்டைப் போல) குறியீட்டு ரீதியானதாகிறது. ‘இன்னதென்றே நாம் புரிந்துகொள்ள முடியாத சக்திகளால் பணத்தின் மதிப்பு நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் ஏறி இறங்கிக் கொண்டே போகிறது, இது நம்மை நம் உழைப்பில் இருந்து, உழைப்பின் பயன்மதிப்பில் இருந்து அந்நியப்படுத்துகிறது’ என கார்ல் மார்க்ஸ் சொன்னது நிலத்துக்கும் கடந்த ஐம்பதாண்டுகளில் பொருந்தியது. இதன் விளைவாக வாழும் இடம் குறித்த அச்சம், பதற்றம் எல்லாருக்குள்ளும் அனேகமாக ஏற்பட்டது. இது செயற்கையாக ஏற்படுத்தப்பட்டது தான். அடிப்படையான வசதிகளை அரசு எப்போதுமே ஓரிடத்தில் குவித்து வைத்து, அங்கே மட்டுமே பொருளீட்ட முடியும் எனும் நிலையை ஏற்படுத்தி ஏற்றத்தாழ்வையும் அதன் பொருட்டான தொடர் உழைப்புச் சுரண்டலையும் சாத்தியமாக்கி முதலாளிகளை குஷிப்படுத்தியது. சில கிராமங்களில் மிக மோசமான நிலையில் உள்ள நிலமற்ற ஏழைகள் மட்டுமே இருக்க கூடிய பகுதிகளில் இப்போது ‘குறியீட்டு ரீதியாக நிலம் பறிக்கப்பட்ட’ படித்த உழைக்கும் மத்திய, கீழ்மத்திய வர்க்கத்தினர் வசிக்க, மிருகங்கள் மட்டுமே வசிக்கத்தக்க இன்னும் மோசமான பகுதிகளில் கீழ்த்தட்டினர் வசிக்கும் நிலை ஏற்பட்டது. மேற்தட்டினர் மட்டுமே இன்று நகரவாழ்க்கையை சொர்க்கம் என்று கூறக்கூடிய அளவில் நிலைமை மாறிவிட்டது. அமெரிக்கா போன்ற முதலாம் உலக தேசங்களில் நகரங்களில் வாடகையை செலுத்த முடியாமல் தினமும் பல மணிநேரம் பயணம் செய்து வேலைக்கு செல்லும் நிலை உயர்மத்திய வர்க்கத்துக்கே ஏற்பட்டுள்ளது. ஏழைகள் அங்கு வீடற்று காரிலோ வேனிலோ வசிக்கிறார்கள். இன்சுலின் போன்ற மருந்துகளை வாங்க கூட பணமில்லாத நிலையில் மத்திய வர்க்கத்தினர் செத்துக்கொண்டிருக்கிறார்கள். ஜப்பானிலோ நன்றாக உடையணிந்த மேல்மத்திய வர்க்க இளைஞர்கள் நடைபாதைகளில் உறங்குவது மாமூலானது. நகரமயமாக்கல் தீவிரமாக நிகழ்ந்த தேசங்களை கடைசியில் முதலீட்டியம் கொண்டு போய் நிறுத்தும் இடம் இதுதான். ஆனால் அந்த நகரத்தின் எல்லையைக் கொஞ்சம் கடந்தால் நிறைய இடம் இருக்கும். இடம் இருக்கும், அதே நேரம் இடம் இருக்காது. இப்படி நிலத்தின் பொருளையே மாற்றி செயற்கையான போதாமையை உண்டு பண்ணினார்கள். நகரத்திற்கு சீக்கிரமாகவே இடம்பெயர்ந்து நிலைப்பெற்றவர்கள் மட்டுமே இந்த செயற்கையான ஏற்றத்தாழ்வால் பயன்பெற்றார்கள்.

கூடுதலாக ஐம்பது-எழுதுபதுகளில் இந்திய அரசு செய்த இன்னொரு கொடுமையும் கவனிக்கத்தக்கது - அவர்கள் திட்டமிட்டு விவசாயத்திற்கான அடிப்படை உதவிகளை ரத்து பண்ணி உலக வங்கியின் ஆசியைப் பெற்று முதலீட்டாளர்களின் வருகையை நகரங்களை நோக்கி கொண்டு வந்தார்கள். வறட்சியால் விவசாயம் நொடித்துப் போவதை, அதனாலான வறுமையை காரணம் காட்டினார்கள்; பசுமைப் புரட்சி எனும் பெயரில் விவசாயத்தை செலவு பிடித்ததாக்கி, பெரிய நிலம் இல்லாத விவசாயிகள் விவசாயத்தில் நீடிக்க முடியாத நிலைமை ஏற்படுத்தினார்கள். விளைவாக மக்கள் கிராமங்களில் வேலை கிடைக்காமல் நகரம் எனும் விலங்குப் பண்ணையை நோக்கி கூட்டம் கூட்டமாக வந்தனர். இப்போது அரசு மக்கள் தொகை பெருக்கத்தை பொய்யாக காரணம் காட்டி பெருமளவில் பிரச்சாரம் பண்ணி குற்றவுணர்வை ஏற்படுத்தி மக்கள் இரண்டுக்கு மேல் குழந்தை பெறுவதைக் கட்டுப்படுத்தியது. இந்திரா காந்தியின் நெருக்கடி நிலை பிரகடன காலத்தில் அவரது மகன் சஞ்சய் காந்தி இந்தியாவில் பெருநகரங்களை நவீனமான வடிவமைப்பதில் அதிகமாக கவனம் செலுத்தினார். அவர் செய்த முதல் விசயம் சேரிகளில் வசித்த மக்களை வெளியே கொண்டு போய் விட்டு “நகரத்தை சுத்தப்படுத்தியது”; அவரது கொள்கைகளின் பிரச்சாரத்துக்காக மட்டுமே அரசு பல நூறு கோடிகளை செலவு பண்ணியது என கேத்தரீன் பிராங்க் இந்திரா காந்தியின் வாழ்க்கை சரிதை நூலில் தெரிவிக்கிறார். அடுத்து அவர் பல லட்சம் ஏழைகளை பலவந்தமாக பிடித்துப் போய் கருத்தடை அறுவை சிகிச்சை பண்ணினார். தில்லியில் இஸ்லாமியர் கூட்டமாக இதை எதிர்க்க அவர் புல்டோஸர்களை ஏவினார். அவரது உத்தேசம் உலக முதலீட்டை இந்திய நகரங்களுக்கு கொண்டு வருவது. அமெரிக்க பாணி பொருளாதாரத்தை வரவழைப்பது. இதன் மூலம் குழந்தைப்பேறு கட்டுப்பாடின் பின்னுள்ள அரசின் நோக்கத்தை விளங்கிக் கொள்ளலாம் - குழந்தைகளின் எண்ணிக்கை அல்ல பிரச்சினை, குழந்தைப் பேறு, பாலுறவு சார்ந்து மக்களின் ஆற்றலும் நேரமும் செலவிடப்படுவது ஒரு நவீன அரசு விரும்பாது. அந்த இரண்டையும் கட்டுப்படுத்தி கிட்டத்தட்ட இல்லாமல் ஆக்கினாலே மக்களிடம் ஒரு ஏக்கம், போதாமை ஏற்படும்; இதை திருப்பி விட்டால் பெரும் வளர்ச்சிக்கு தோதானபடி மக்கள் கண்மண் பாராமல் உழைப்பார்கள். பாலுறவில் ஈடுபடாமல் அந்த தடுக்கப்பட்ட விழைவை பொருள் நுகர்வில் இன்னும் தீவிரமாக பலமடங்காக காட்டுவார்கள். இதனால் பொருளாதாரம் வளரும். நீங்கள் எந்த வளர்ச்சி பெற்ற தேசத்தையும் பாருங்கள், அங்கு குழந்தைப் பேறும் பாலுறவும் மிகவும் குறைவாக இருக்கும், ஆனால் பாலுறவு குறித்த கனவுகளும் மிகையான இச்சையும் பல வடிவங்களில் வெளிப்படும். பசித்த குழந்தைகள் சோறு குறித்த கனவிலேயே வாழ்வதைப் போல. இந்திராவின் காலத்துக்குப் பிறகு இந்தியாவும் இப்படித்தான் மாறியது. மூன்றுக்கு மேல் பிள்ளை பெறுவோர் சினிமாவில் கேலிப்பொருளாயினர். இப்போதும் கூடத்தான் - மேற்சொன்ன அந்த மாணவரைப் பற்றி பேசினாலே அவரது நண்பர்களும் என் நண்பர்களும் கேலி பண்ணி சிரிக்கிறார்கள். ஆனால் முன்பு இதே கருவளம் தான் பெரிதும் கொண்டாடப்பட்டது. நமது தாந்திரிக மரபு, சக்தி வழிபாடு அந்த பிரமிப்பில் இருந்து தோன்றியது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். அதனாலே நாம் மாதவிடாய் குருதி வடிக்கும் பெண் தெய்வத்தை வணங்குகிறோம். நவீன அரசுகள் செய்த பொய்ப்பிரச்சாரத்தால் இன்று இந்த மிக முக்கியமான மானுடத் திறன் மீது அருவருப்பு நமக்கு ஏற்பட்டு விட்டது. நமக்கும் நம் உடலுக்கும் இடையில் ஒரு அந்நியத்தன்மை ஏற்பட்டுவிட்டது. பாலியல் ஈர்ப்பு மிக்கவர்களாக காட்டிக்கொள்ளும் நாம் மிக குறைவாகவே உடலுறவு கொள்ளுகிறோம், கருத்தரிப்பு திறனும் வெகுவாக குறைந்துவிட்டது என்று ஆய்வுகள் சொல்லுகின்றன, இச்சையே பிரதானம், இச்சையின் நிறைவேற்றம் அல்ல. பாலுறவு நிறைவேற்றம் இன்மையை நாம் இன்று குடி, டிவி, போர்னோகிரபி, சமூகக் கூடுதல், பண்ட நுகர்வு வழியாக மடைமாற்றி விடுகிறோம். ஒரு பெண்ணின் வியர்வையை, உமிழ்நீரை சுவைத்து அனுபவிக்க முடியாத ஆண் மதுவை சுவைத்து, காரில் பயணித்து, போனில் கேம் விளையாட்டி, பர்க்கரைக் கடித்து ஆறுதல் கொள்கிறான். இதையே பெண்களுக்கும் நிச்சயமாக சொல்லலாம். செக்ஸுக்கும் வாழிடத்துக்குமான இடைவெளியே இன்றைய வாழ்வின் மிகப்பெரிய போதாமை, இந்த போதாமையை துய்ப்புக்கான போதையாக மாற்றியதே நவீன முதலீட்டியத்தின் வெற்றி.

இன்றைய எதார்த்தம் என்னவெனில் நகரத்தில் உள்ள செயற்கையான இடப்பற்றாக்குறையினால் சிறிய வீடுகளில் இரண்டு குழந்தைகள் வளர்வதே சாத்தியம் அல்ல. இப்போது அது 1.8 குழந்தைகளாக இந்தியா முழுக்க உள்ள சராசரி உள்ளது. அரசு குழந்தைக் கட்டுப்பாட்டில் முதலீடு செய்த 1 ரூபாய் 1991இல் 3 ரூபாயாகவும், 2016இல் இது 44 ரூபாயாகவும் வளர்ந்துள்ளது. அதாவது, நமக்குப் பிறக்காமல் போன பிள்ளைகள் வெறுமனே பண்டங்களாகவும், அவற்றை நுகரும் நம் நேரமாகவும் மாறிப் போயுள்ளன. உளவியலாளர் லக்கான் சொல்வதைப் போல இந்த மற்றமையை அடைந்து இன்ப நிறைவேற்றம் கொண்டு பெறும் ‘லாபத்தை’ நம்மால் நேரடியாக அடைய முடியவில்லை. இப்படி எதையும் அடைய முடியாதபடிக்கு இன்றைய சமூக உளவியல் மாற்றப்பட்டு விட்டது.
இதற்கு இன்னொரு காரணம் பொருளாதார ஏற்றத்தாழ்வு. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஏழைப் பணக்கார வித்தியாசம் அதிகரித்துவிட்டது. மத்திய வர்க்கத்தினரின் எண்ணிக்கை பெருகி அவர்களின் வாழ்க்கைத்தரம் கீழ்மத்திய வர்க்கத்தினருக்கு உடையதாகி விட்டது. ஆனால் பெரும்பணக்காரர்களோ அதிக எண்ணிக்கையில் குழந்தைகளையும் பெறுகிறார்கள். ஶ்ரீனிவாஸ் கோலியும் நேஹா ஜெயினும் 1995, 2000, 2007 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் செய்த ஆய்வுகளில் இந்து, இஸ்லாமிய சமூகங்களில் மேல்சாதியினர் இடையே மட்டும் மக்கள் தொகை அதிகரித்திருப்பதாக தெரிய வருகிறது. ஆக, ஏழைகளே மிகக்குறைவாக குழந்தை பெற்றுக்கொள்ளும்படி அழுத்தப்படுகிறார்கள். அவர்கள் அவ்வாறு விட்டுக்கொடுத்த பணமே இன்று குட்டிக் குட்டி அம்பானி, அதானிகளை உருவாக்குகிறது. ஒரு கணக்குப் போட்டுப் பார்ப்போம் - ஒருவேளை ஒரு மத்திய வர்க்க குடும்பத்தின் ஒரு குழந்தைக்குப் பதில் 5 குழந்தைகள் பெற்றுக்கொள்ளப்படுகிறார்கள். இப்போது என்னாகும்? அப்பிள்ளைகளை வளர்ப்பது கடினம் என்றாலும் வளர்ந்து படித்து தம் பாட்டுக்கு அவர்கள் தொழில் புரிந்து சம்பாதிக்கும் போது அக்குடும்பத்தின் செல்வம் ஐந்து மடங்காக பெருகுகிறது அல்லவா. அப்பாவிடம் இல்லாத வீடு, வாகனம் ஆகியவை அப்பிள்ளைகளில் ஒரு சிலருக்காவது கிடைக்கும். அவர்கள் ஒற்றுமையுடன் வாழ முடிந்தால், வணிகத்தில் ஈடுபட்டாலோ சிக்கனமாக வாழ்ந்தாலோ இன்னும் அதிகமான வளர்ச்சி சாத்தியமாகும் அல்லவா. ஒரே பிரச்சினை அரசு கல்விக்காக செலவிடும் நிதி, ரேஷன், உள்கட்டமைப்பு வசதிகள் மீது செய்யும் முதலீடு அதிகமாகும். அரசு சற்று கூடுதலாக இந்த உபரியான குழந்தைகளின் வளர்ச்சியில் முதலீடு பண்ண வேண்டியிருக்கும். அதற்கு பதிலாக 5 மடங்கு வளர்ச்சியும் சமூகத்துக்கு கிடைக்குமே. குழந்தைப் பேறு அரசின் முதலீடு நிறுத்தப்பட்டு அது தனியாரின் நிதியாக மாற்றப்படும் போதே சிக்கலாகிறது. ஆகையால் குடும்பக் கட்டுப்பாடு அரசு ஒரு சமூகத்தை கைவிடுவதற்கான முன்கூறான முயற்சிகளில் ஒன்று மட்டுமே என்பது இன்று அதிக குழந்தைகள் பெறும் குடும்பங்களைப் பார்க்கையில் தெளிவாகிறது.

என்னுடைய அப்பாவுடன் பிறந்தவர்கள் 9 பேர்கள். அவர்கள் அரசுப் பள்ளியில், கல்லூரியில் படித்து வளர்ந்தார்கள். தத்தமது வழியில் செல்வத்தை பெருக்கினார்கள். குடும்பத்துக்கான நிதி என்று எடுத்துக்கொண்டால் என் தாத்தா காலத்தில் இருந்ததை விட அவரது பிள்ளைகள் காலத்தில் பெருகியுள்ளது. கீழ்மத்திய வர்க்கத்தில் இருந்து மேல்மத்திய வர்க்கமாகவோ சில மேல்வர்க்கமாகவோ மாறியிருக்கிறார்கள். இதற்கு என் தாத்தா செய்த ஒரே முதலீடு குழந்தைகளைப் பெற விந்தணுக்களை கொடுத்தது மட்டுமே. என் தாத்தா ஒரே ஒரு பிள்ளையைப் பெற்றிருந்தால் அவரது குடும்பம் கீழ்மத்திய வர்க்கமாகவோ மத்திய வர்க்கமாகவோ நீடித்திருக்கும். இது நிச்சயமாக முந்தைய தலைமுறைகளில் அதிக குழந்தைகளைப் பெற்று வளர்த்த குடும்பங்களுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.

வாழ்விடமும் பொருளாதாரமும்

அடுத்து இடப்பற்றாக்குறைக்கு வருவோம். என் தாத்தாவின் வீடு சராசரியான அளவு கொண்டதே. ஆனால் அப்போது குழந்தைகள் விளையாட தெரு இருந்தது. தூங்கும் நேரம் போக குழந்தைகள் தெருவிலும் ஊரிலும் சுற்றிக் கொண்டு இருப்பார்கள். நகரத்திலோ தெருவோ நடைபாதையோ சாலையோ மக்களுக்கு ஆனது அல்ல. பொது நிலமே நகரத்தில் இல்லை. எங்கும் காவல் துறையின் கண்காணிப்பு, கட்டுப்பாடுகள், குற்றம் குறித்த அச்சம் இருக்கும். நகரத்தை நீங்கள் எலுமிச்சை பிழிவதற்கான கருவியுடன் ஒப்பிடலாம். இவ்வளவு செய்து அரசு இப்போது குழந்தைகளின் எண்ணிக்கையை இரண்டில் இருந்து ஒன்றாக்கி இன்றைய நிறைய தம்பதியினர் அந்த ஒரு குழந்தையைப் பெறுவதையே பெரும் போராட்டமாக்கி இருக்கிறது. நகர வாழ்க்கை சூழல் ஆண், பெண்ணின் கருத்தரிக்கும் திறனை நசிக்க வைத்து விட்டது. அப்படியே பிறந்தாலும் அக்குழந்தையை வளர்க்கும் திராணியும் நேரமும் இன்றும் நம்மிடம் இல்லை. ஆகையால் குழந்தை இல்லாத தம்பதியினர் ஒரு கூட்டமாக தோன்றி வருகிறார்கள். ஜப்பான் போன்ற சமூகங்களில் இப்பிரச்சினை தீவிரமாகி 80 வயசுக்கு மேலான வயசாளிகள் மிக அதிகமாகவும் குழந்தைகள் மிகவும் குறைவாக இருக்கிறார்கள். அவர்கள் அடுத்த தலைமுறை குறித்த கவலையில் இருக்கிறார்கள். சீனாவில் அவர்கள் முன்பு கொண்டு வந்த ஒரு குழந்தை கொள்கையின் விளைவாக பெரும் நெருக்கடியில் இன்று அரசு இருக்கிறது. கூடுதலாக குழந்தையைப் பெற அவர்கள் மக்களுக்கு ஊக்கத்தொகை கொடுக்கும் நிலை இன்று அங்கு. அதை விட பெரிய அவலம் குழந்தைப் பேற்றை அரசும் தனியார் முதலாளிகளும் கட்டுப்படுத்துவதுதான். எந்த உயிரினத்திலும் மற்றவர்கள் பாலுறவையோ இனப்பெருக்கத்திலோ தலையிட முடியாது. நவீன மனிதர்கள் மட்டுமே அடுத்தவர்களின் படுக்கையறையிலும் தொட்டிலிலும் மூக்கை நுழைக்கிறார்கள். 

இது ஒரு செயற்கையாக உண்டு பண்ணப்பட்ட பொருளாதார சிக்கலின் விளைவே என ஒப்புக்கொள்ள எந்த அரசும் தயாராக இல்லை. குழந்தையைப் பெற்று வளர்க்க பெண்கள் குறிப்பாக செலுத்தும் ஆற்றலை பொருளாதார வளர்ச்சியை நோக்கித் திருப்ப வேண்டும், ஆண்களையும் இதற்காக இரட்டிப்பு நேரம் உழைக்க வைக்க வேண்டும் எனும் முதலீட்டியத்தின் கனவு மட்டுமே பலித்துள்ளது. நவீன ஆணும் பெண்ணும் 14-18 மணிநேரம் உழைக்கிறார்கள். அவர்கள் கணவன் மனைவியாகவோ அப்பா, அம்மாவாகவோ இருக்கும் சாத்தியம் குறைந்துவிட்டது. கூண்டுக்குள் தொடர்ந்து ஓடும் எலிகள். அதே போல இந்தியாவின் மக்கள் தொகை கடந்த 50 ஆண்டுகளில் குறைந்துள்ளதா? இல்லை. கடந்த 63 ஆண்டுகளில் 216.5% அதிகரித்துள்ளது. இதற்கு நம் பொருளாதார நிபுணர்கள் எனப்படும் ஜால்ராக்கள் “மக்கள் தொகை கட்டுப்பாடு இல்லாவிடில் 416.5% ஆகியிருக்கும் தெரியுமா” என கண்ணை உருட்டிக் காட்டி பயமுறுத்த வேறு செய்வார்கள். இவர்கள் சொல்வதற்கு எந்த ஆதாரமும் இருக்காது. உ.பி., பீகரை உதாரணம் காட்டுவார்கள். ஆனால் அவர்கள் வீழ்ந்ததற்கு குழந்தைகளின் பெருக்கம் அல்ல காரணம். விவசாய நிலங்கள் ஒரு சிலர் கைகளில் மட்டும் இருப்பது, உள்கட்டமைப்பு வசதியின்மை, ஏற்றத்தாழ்வுகள், கல்வி வசதி இன்மை என பல்வேறு காரணிகள் நிஜத்தில் உள்ளன. 

ஶ்ரீனிவாஸ் கோலியும் நேஹா ஜெயினும் செய்த ஆய்வில் 2040இல் நமது இனப்பெருக்கம் சராசரியாக 0.5 ஆகும், 2060க்குப் பிறகு இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகை வளர்ச்சியே பின்னுக்குப் போகும், நெகட்டிவ் ஆகும் எனத் தெரிய வருகிறது. 1990 முதல் 2016 வரை 1.65 கோடி குழந்தைகளின் பிறப்பு தள்ளிப்போடப் பட்டிருப்பதாக அவர்கள் தம் ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்கள். 2061இல் நாம் 1.9 கோடி குழந்தைகளை மேலும் பிறக்காமலே தடுத்துக் ‘கொன்றிருப்போம்’.

இப்போது மேற்சொன்ன மாணவ நண்பருக்கு வாருங்கள். அவரிடம் மிகப்பெரிய வீடும் சொத்தும் உள்ளது. அவர் இயல்பாகவே அடுத்தடுத்து குழந்தைகளைப் பெற்றுக்கொள்கிறார். அவரது மனைவியும் இதை எதிர்க்காமல் மகிழ்ச்சியாக நிறைய பிள்ளைகளை விரும்புகிறார் என்று அவர் கூறினார். இத்தனைக்கும் அப்பெண் வேலை பார்க்கிறார். ஆனால் தனியார் வேலை அல்ல, அரசு வேலை. மனைவிக்கு அரசு ஒவ்வொரு குழந்தைக்கும் 6 மாதங்கள் சம்பளத்துடன் விடுப்பு கொடுக்கிறது. அவர் இது போக அப்பாவுக்காக அரசு அனுமதிக்கும் ஒரு மாத விடுப்பை எடுத்துக் கொள்கிறார். எந்த தனியாரும் இத்தகைய விடுப்பையோ ஊதியத்தையோ குழந்தைப்பேறுக்கு கொடுக்காது. என்னதான் சட்டம் அதை வலியுறுத்தினாலும் அச்சட்டத்தை காலில் போட்டு மிதிப்பதே தனியாரின் போக்காக உள்ளது. அவர்கள் இருவரும் நல்ல சம்பளத்தில் அரசு வேலையில் இருப்பதும் சொத்து இருப்பதுமே அவர்களைக் காப்பாற்றி தம் இயற்கை விழைவுகளின் படி குடும்பத்தை பெருக்க அனுமதிக்கிறது. இந்தியாவின் மக்கள் தொகை பெருக்கம் கடந்த அரை நூற்றாண்டில் வெகுவாக வளர்ந்துள்ளதும், அதை ஒட்டி பொருளாதாரம் வளர்ந்துள்ளதும் உண்மை. ஆனால் நாம் இதை மக்கள் தொகை கட்டுப்பாட்டினால் ஏற்பட்ட வளர்ச்சி என திரித்துக் கூறுகிறோம் என்பதே புள்ளிவிபரம் கூறும் உண்மை. 

மக்கள் தொகை பூச்சாண்டியும் பின்காலனிய ஆதிக்கமும்

சரி, இந்த எளிய உண்மையை ஏன் ஆய்வாளர்களும் அரசும் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்? பொருளாதார உத்தேசத்துக்கு அப்பால் ஆய்விலும் ஒரு மயக்க வழு உள்ளது. இதை மால்தூஸிய மயக்க வழு என்று சொல்கிறார்கள். தாமஸ் மால்தூஸ் என்பவர் பதினெட்டாவது நூற்றாண்டில் வாழ்ந்த அறிஞர். இவர் 1798இல் “மக்கள் தொகை கொள்கை மீதான ஒரு கட்டுரை” எனும் கட்டுரையில் முதன்முதலாக உலகம் முழுக்க ஒவ்வொரு 35 ஆண்டுகளிலும் மக்கள் தொகை இரட்டிப்பாக பெருகுகிறது என்றும், இதனால் பெரும் பஞ்சமும் வறுமையும் ஏற்படும் என்றும் அச்சுறுத்தினார். இவரைப் பின்பற்றி வந்த பல ஆய்வாளர்களும் இப்படி ‘பூச்சாண்டி காட்ட’ அதை ஒட்டி நவமுதலீட்டிய கொள்கை வகுத்தவர்களும் மக்கள் தொகை கட்டுப்பாட்டை வலியுறுத்தினார்கள். ஆனால் இவர்கள் கவனிக்கத் தவறுவது மக்கள் தொகை பெருக்கமுள்ள தேசங்களில் (உதாரணமாக இந்தியாவும் சீனாவும்) அதற்கு ஈடாக உற்பத்தி பெருக்கமும் அதை ஒட்டிய உள்கட்டமைப்பு வசதிகளின் வளர்ச்சியும், இதன் விளைவான பொருளாதார வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளது என்பதை தான். மால்தூஸின் இந்த பார்வையை Economic Fallacy of Zero Sum Game என்கிறார்கள். அதாவது பொருளாதாரத்தை ஒரு உணவுப்பண்டமாகவும், மக்களை அதைப் பகிரும் போட்டியாளர்களாகவும் பார்ப்பது. ஆனால் எதார்த்தத்தில் மக்கள் தொகை அதிகமாக ஆக அந்த ‘உணவுப்பண்டத்தைப்’ பெருக்கும் சாத்தியங்களும் அதிகமாகின்றன. உற்பத்தியும் நுகர்வும் பெருகுகின்றன, சந்தையில் பணத்தின் சுழற்சி அதிகமாகும், பணவீக்கம் குறையும், வளர்ச்சி தோன்றும். பொருளாதார வளர்ச்சியைத் தீர்மானிப்பது மக்களின் எண்ணிக்கை மட்டும் அல்ல, வேறு பல சமூகப்பொருளாதார காரணிகள், குறிப்பாக அரசின் சமூகநலக் கொள்கைகள், நிதி முதலீடு ஆகியவை முக்கிய பங்களிக்கின்றன. என்ன பிரச்சினை என்றால் நவ-மால்தூஸிய சிந்தனையாளர்கள் இன்றும் மக்கள் தொகை பெருக்க பூச்சாண்டி காட்டிக்கொண்டே இருக்கிறார்கள். மக்கள் தொகை பெருக்கத்தால் இயற்கைச் சூழல் அழிகிறது, மாசு அதிகமாகிறது என்கிறார்கள். ஆனால் கட்டற்ற பொருளாதாரத்தின் முக்கிய பங்கை சுட்டிக்காட்ட மாட்டார்கள் என்று ஜான் மார்க்கெட் தன் கட்டுரையோன்றில் விமர்சிக்கிறார். இதன் பின்னுள்ள நவகாலனிய மனநிலையையும் நாம் கவனிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். காலனிய யுகத்தில் உற்பத்தியில் ஈடுபட காலனிய அடிமைகளை வெள்ளை அரசாங்கம் பயன்படுத்தியது. ஆனால் அதற்கான நுகர்வுக்கு அவர்களுடைய சொந்த ஊரில் மக்கள் தொகை இல்லை என்பதால் அவர்கள் அந்த பண்டங்களை மீண்டும் காலனிய நாட்டுக்கு கொண்டு வந்து, அந்த பண்டத்துக்கான சந்தையைக் காப்பாற்றுவதற்காக உள்ளூர் பண்டங்களைத் தடை செய்தனர். இதை நீங்கள் இந்தியாவின் உள்ளூர் நெசவுத்தொழிலை பிரித்தானிய அரசு நசுக்கியதை வைத்துப் புரிந்துகொள்ளலாம். அதே நேரத்தில் காலனிய அரசுக்கு தன் காலனிகளில் உள்ள பெரும் மக்கள் தொகைக்கு நிதிப்பங்கீடு செய்யவும் விருப்பம் இருக்கவில்லை. அதனாலே இங்கு தாது வருடப் பஞ்சங்கள் விளைந்த கதையை நாம் அறிவோம். 

பண்டைய காலனியவாதிகளுக்கு இன்றும் மூன்றாம் உலக நாட்டு மக்கள் மீது நம்பிக்கை இல்லை என்பதாலே அவர்களை வெறுமனே நுகர்வோராக மட்டும் கண்டு அவர்களுடைய தொகை பெருகக் கூடாது என அஞ்சுகிறார்கள், அவர்களால் உற்பத்தியாளர்களாகவும் மாற முடியும் என்பதை நம்ப மறுக்கிறார்கள், இது ஒரு மானுடவியல் மயக்க வழு (anthropolgical fallacy) என்கிறார் ஆய்வாளர் மைக்கேல் மேத்ஸன் மில்லர்.

மீண்டும் வாழிடத்துக்கும் குழந்தைப்பேறுக்குமான உறவுக்கு வருவோம். இடம் இருப்பதும், அமைதியான வாழ்க்கைச் சூழல் அமைவதும் அரசு வேலையின் நிரந்தரத்தன்மையும் ஒரு ஆணையும் பெண்ணையும் எந்தளவுக்கு கருவளம் கொண்டவர்களாக மாற்றி ஐந்துக்கு மேல் பிள்ளை பெற செய்ய வைக்கிறது பார்த்தீர்களா! இந்த விசயங்கள் அவர்களுடைய உளவியலையை மீண்டும் இயற்கையான ஒன்றாக மாற்றுகிறது - மனிதனின் அடிப்படையான இயற்கை விழைவேயே இனப்பெருக்கமும் இன்ப நாட்டமும் தான். போதுமான அரசு நிதியுதவியும் உள்கட்டமைப்பு வசதிகளும் இருந்தால் இது இந்தியாவின் கணிசமான குடும்பங்களுக்கும் சாத்தியப்படும். இதனால் பொருளாதார வளர்ச்சியும், மனநல மேம்பாடும் நிகழும். மனிதரை மேற்சொன்ன இனப்பெருக்க, இன்ப நாட்ட இலக்குகளை நோக்கி செல்ல விடாமல் தடுத்து உபரியான பொருள் உற்பத்தி, அதை நுகர்வதற்கான உள்கட்டமைப்பு வசதியும் பொருளாதாரத் திறனும் இல்லாத நிலையை ஏற்படுத்தி வறுமையை, ஏற்றத்தாழ்வை உண்டு பண்ணி தொடர்ச்சியாக ஒரு போட்டிநிலையில் வைத்திருப்பதே நவதாராளாவத்தின் இலக்கு. நாம் பெற வேண்டிய குழந்தைகளை இழக்கும் போதெல்லாம் நாம் மேலும் மேலும் ஏற்றத்தாழ்வை நோக்கி செல்கிறோம் என்பதே நாம் பேசத் தலையப்படாத உண்மை. (தொடரும்)

நன்றி: உயிரெழுத்து 

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...