பெண் முன்னேற்றமும் குழந்தைகளும்
எண்ணிக்கைப் பெருக்கத்தால் செல்வம் குறைகிறது என செல்வந்தர்கள் நினைப்பதில்லை, குறைவாக பிள்ளை பெற்றால் நிறைவாக வாழலாம் என்பது பொருளாதார ரீதியாக தாழ்த்தப்பட்டவர்களின் வர்க்க உளவியல் மட்டுமே. பாலின பேதம் குறித்த விவாதங்களில் குழந்தைகளை பெண்களின் வளர்ச்சிக்கான தடையாக, அவர்களுடைய முதுகில் ஏற்றப்பட்ட பாரமாக பார்க்கிறார்கள். மில்லர் சொல்வது என்னவென்றால் வளர்ந்த நாடுகளில் பெண்கள் குறைவாக குழந்தை பெற்றுக் கொள்வதால் வளமாக இருக்கிறார்கள் என்பது ஒரு உத்தேச மயக்க வழு (intentional fallacy) மட்டுமே. வளர்ந்த நாடுகளில் செல்வம் பெருகுவதன் விளைவே மத்திய வர்க்கத்தினர் அங்கு குழந்தைகள் இல்லாமல் வாழ்வது அல்லது குறைவாக எண்ணிக்கையில் பெற்றுக் கொள்வது நிகழ்கிறது என்றும் இதைப் பார்க்க முடியும். வெளிநாடுகளிலும் இங்கும் பணக்கார பெண்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள். இப்படிப் பார்க்கையில் நம்மால் இதன் பின்னுள்ள நவதாராளவாத பொருளாதார சதித்திட்டத்தைப் புரிந்துகொள்ள முடியும்.
பாலின பேதத்தை ஏற்படுத்துவது பொருளாதார ஏற்றத்தாழ்வே அன்றி குடும்பத்தைப் போன்ற சமூக அமைப்புகள் அல்ல. ஏனென்றால் தேசப் பொருளாதார கொள்கைகளே ஒரு குடும்பத்தின் போக்குகளின் திசைகாட்டி, சந்தைப் பொருளாதாரமே குடும்பத்தின் நடைமுறையைத் தீர்மானிக்கும் நெறிமுறை. விராத் கோலியின் மனைவியால் தொடர்ந்து குழந்தை பெற்றுக்கொண்டு உலகமெல்லாம் பயணிக்க எப்படி முடிகிறது? பாலிவுட் நடிகைகளால் எப்படி குழந்தைப் பேறுக்குப் பின்னர் வேலைக்குத் திரும்பவும் மாடலிங் பண்ணவும் முடிகிறது? அவர்களுக்கு முடிவது ஏன் மத்திய வர்க்க பெண்களுக்கு சாத்தியமாவதில்லை? பொருளாதாரத்தால் தான். ஜுரம் வந்தது என்றால் உடல் சூட்டை அல்ல அதற்கு காரணமான நோய்த்தொற்றையே நாம் சரிசெய்ய வேண்டும். பாலின பேதத்துக்கு, பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு காரணம் பொருளாதார ஏற்றத்தாழ்வே. இந்த பொருளாதார ஏற்றத்தாழ்வே பாலின சமத்துவத்தை உண்டு பண்ணுகிறது, குடும்ப அமைப்பு அல்ல. பாலின சுரண்டல் பொருளாதார சுரண்டலுக்குள் நிகழும் மற்றொரு தீமை எனும் உண்மையைப் பார்க்க விரும்பாமல் உலக வங்கியின் நிதியாதாரத்தைப் பெறும் நிறுவனங்கள் குடும்பத்தையும் ஆண்களையே காரணமாக சித்தரிக்கிறார்கள். குடும்பப் பெண்ணாக ஒருவர் இருப்பது பிற்போக்கானது, வளர்ச்சிக்கும் சமத்துவத்துக்கும் எதிரானது, ஆண்-பெண் உறவுகள் அடிமைத்தனத்தை நோக்கி வழிவகுக்கும் எனும் அச்சத்தை பெண்களிடம் விளைவிக்கிறார்கள். என்னதான் தனிப்பட்ட முடிவுகளால் தனியாக இருப்போரும் உண்டு எனினும் நவீன முதலீட்டிய சமூகத்தில் ஆணும் பெண்ணும் தனியாக இருப்பதை ஊக்கப்படுத்தும் ஒரு வலுவான போக்கு உள்ளதை நாம் மறுக்க முடியாது.
உடைப்பதும் அதன் வழியாக போதாமையை உண்டு பண்ணுவதே முதலீட்டியத்தின் லாபத் திட்டம் எனக் கூறும் ராபர்ட் பார்க் முதலீட்டைக் குறைவாகவும் அதை பயன்படுத்தும் மக்களுக்கு போதாமை உள்ளபடியும் பார்த்துக் கொள்வதும், மக்களுக்கு தேசத்தின் நிதியாதாரம் மீது உரிமையில்லாமல் பார்த்துக்கொள்வதுமே நவீன முதலீட்டியத்தின் வெற்றிகரமான உத்தி என்கிறார். அதனாலே பெண்களுக்கு கூடுதலான கல்வியையும், நிதி உதவியையும் வழங்காமல் அவர்களுடைய பிள்ளைப்பேற்றைக் கட்டுப்படுத்த இந்திரா காந்தி அரசு அன்று விழைந்தது. அதையே பின்வந்தவர்களும் தொடர்ந்தார்கள். ஏனென்றால் அது ‘செலவில்லாத குறுக்குவழி’; ஆனால் கருத்தடை முயற்சிகள் தீவிரமாக நடந்த உ.பி, பீகார் போன்ற மாநிலங்களீல் இப்பெண்களின் கல்விக்கோ ஏழைகளின் வளர்ச்சிக்கோ எந்த நிதியாதாரத்தையும் வழங்காமல் திட்டங்களையும் செயல்படுத்தாமல் அரசு கைவிட்டதால் அங்கு குடும்பக் கட்டுப்பாட்டையும் மக்கள் ஏற்கவில்லை, ஏற்ற போதும் அதனால் பயன் கிடைக்கவில்லை. கண்ணாடியைத் திருப்பினால் எப்படி ஆட்டோ ஓடும்? தமிழகத்திலும் கேரளாவிலும் குடும்பக் கட்டுப்பாட்டு திட்டம் நகரமயமாக்கல், கல்வி ஆகிய காரணிகளால் சுலபத்தில் ஏற்கப்பட்டது. ஆனால் இந்த இரு மாநிலங்களின் வளர்ச்சியும் இரு குழந்தை போதும் எனும் முடிவினால் மட்டும் நிகழவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். என்ன பிரச்சினை எனில் இன்றும் குடும்பக் கட்டுப்பாட்டு பிரச்சாரத்தின் தாக்கம், அந்த மயக்க வழு, பிரமை முன்னேறிய சமூகத்து மக்களின் மனத்தில் நீடிக்கிறது: தமது பெண் குழந்தைகளை சமூக மரியாதைக்காக மணமுடிக்க விரும்பும் பெற்றோரில் ஒரு பகுதியினர் அவர்கள் குடும்பம் நடத்துவதை விரும்புவதில்லை. ஒரு ஐ.டி ஊழியரான பெண் தன் குழந்தைக்கு உணவு தயாரிக்கவும், வேறு தேவைகளுக்கும் ஆள் வைத்துக் கொள்ள முடியும். ஆனாலும் குழந்தை வளர்ப்பில் அவர் தன் ஓய்வு நேரத்தில் ஆர்வம் செலுத்தினால் கூட அது அவரது தனிப்பட்ட ‘பொருளாதார வளர்ச்சியை’ பாதித்துவிடும் எனும் அச்சம் அவரது அம்மாவுக்கு இருக்கிறது. அவர் தன் பேரன், பெயர்த்தியை தன் மகளிடம் இருந்து விலக்கி அவர்களை தானே வளர்க்க முன்வருவார். சிலரோ தம் மகளுக்கும் மருமகனுக்கும் இடையில் சிறு பிரச்சினை ஏற்பட்டால் கூட அவர்கள் பிரிய வேண்டும் என அழுத்தம் கொடுக்கிறார்கள். ஏனென்றால் தாம்பத்ய வாழ்க்கை, அது சார்ந்த கடமைகள், சவால்கள், நெருக்கடிகளை ‘பொருளாதார வீழ்ச்சியாக’ அவர்கள் கருதுகிறார்கள். இதனால் இன்று கல்யாணம் பண்ணிக்கொள்ள பக்கத்து அல்லது தொலைதூர மாநிலங்களில் பெண் தேடும் நிலை ஆண்களுக்கு ஏற்படுகிறது. மணப்பெண்ணை ஈர்க்கும் படியான நல்ல சம்பளத்துக்கான வேலை கிடைக்காவிடில் என்னாவது எனும் பயம் ஆண்களையும், கல்விக்கும் சுயவெளிப்பாட்டுக்கும் வளர்ச்சிக்கும் கல்யாணம், குழந்தைப்பேறு தடையாகும் எனும் பயமும், அதனால் சமூகத்துக்காக பண்ணிவிட்டு அதில் இருந்து தப்பிக்க வேண்டும் எனும் விழைவும் நவீன பெண்களையும் ஆக்கிரமித்துள்ளது. இது குடும்பக் கட்டுப்பாட்டு பிரச்சாரத்தின் இன்னொரு முகமாகும். அது இன்று ‘குடும்ப வெறுப்பாக’ மாற்றப்பட்டுள்ளது. ஆண்கள் தனியாக வாழ்வது இயல்பற்றதாகவும், பெண்கள் தனியாக வாழ்வது இயல்பானதாகவும் பார்க்கப்படும் போக்கு இன்று வளர்ந்து வருகிறது. ஆண்களையும் பெண்களையும் இப்படி உளவியல் போதாமை கொண்டவர்களாக்கி மாற்றுவதும், அவர்களுடைய உடலை சதா கண்காணிப்பதுமே இந்த குடும்பக் கட்டுப்பாட்டின் கண்காணிப்பு அரசியல். அரசு, அரசை நடத்தும் உலக வங்கி, அவர்களால் வளர்க்கப்படும் அமைப்புகள் முன்னெடுக்கும் இந்த உயிரியல் அரசியலின் (biopolitics) உத்தேசமே பெண்ணின் கருப்பையைக் கட்டுப்படுத்துவதன் வழியாக சமூக அதிகாரத்தைக் கைப்பற்றி தக்க வைப்பதே எனக் கருதுகிறேன்.
நான் அடுத்து இங்கு முக்கியமாக சொல்ல விரும்புவது இந்த குழந்தைகளின் ஆளுமையில் ஏற்படும் மாற்றத்தைத் தான்.
அதிக குழந்தைப்பேறும் குழந்தைகளின் உடல், மன ஆரோக்கியமும்
தனியாக வளரும் குழந்தைகளின் ஆளுமைக் கோளாறுகளைப் பற்றி நிறைய ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஒற்றைக் குழந்தைகளுக்கு மட்டுமல்ல அவர்களின் பெற்றோருக்கும் மன அழுத்தம் உள்ளிட்ட மனச்சிக்கல்கள் அதிகமாக வருகின்றன. சமூகமாக்கல் திறன் குறைந்தவர்களாகவும் ஆரோக்கியமற்றவர்களாகவும், சுலபத்தில் போதைப் பழக்கத்துக்கு ஆட்படுகிறவர்களாகவும் இருக்கிறார்கள். அண்ணன், தம்பி, அக்கா, தங்கையுடன் வளரும் பிள்ளைகள் சமூகத்துடன் ஒத்திசைவு கொண்டவர்களாகவும், திறன் பெற்றவர்களாகவும் மாறுகிறார்கள். இந்த மாணவ நண்பர் ஒரு விசயத்தை குறிப்பிட்டார் - வீட்டில் சதா கூச்சல் குழப்பம் விளையாட்டு என பிள்ளைகள் இருந்தாலும் அவர்களுக்குள் ஒரு படிநிலை உள்ளது என்றார். மூத்த பெண் குழந்தைக்கு வயது 7. அவளிடம் பிற குழந்தைகள் (தம்பி, தங்கைகள்) அடங்கிப் பணிகிறார்கள். யார் அப்பாவிடம் போய் தொந்தரவு பண்ணினாலும் அந்த அக்கா குழந்தை போய் பேசி அப்பாவைக் காப்பாற்றுகிறாள். அம்மாவின் நேரத்தை பிற குழந்தைகள் எடுத்துக் கொண்டு களைப்படையாத வண்ணம் அவளே சின்னச்சின்ன வேலைகளை எடுத்துப் பண்ணுகிறாள். பள்ளியிலும் இக்குழந்தை தன் வயதை மீறிய முதிர்ச்சியும் நிதானமும் கொண்டிருக்கிறாள். வளர்ந்த குழந்தைகள் இன்று வளர வளர சின்னக் குழந்தைகள் போல மாறிக்கொண்டிருக்க இங்கே ஒரு சின்ன குழந்தை வளர்ந்த குழந்தையைப் போல பொறுப்பாக இருக்கிறாள். இந்த ‘முதிர்ச்சி பாவனைகளை’ தான் பிற பிள்ளைகளும் வளர வளர அவர்களிடம் தான் காண்பதாக சொன்னார். இந்த பாவனையே பின்னர் நிஜமான முதிர்ச்சியாகும். இக்குழந்தைகள் பதின் பருவம் எட்டி சமூகத்துடன் அதிகமாக பழக வாய்ப்புகள் கிடைக்கும் போது இந்த பாவனையே மிகவும் பயனளிக்கும். சுயக்கட்டுப்பாடும் முதிர்ச்சியும் சமூகமாக்கல் திறனும் அதிகரிக்கும். நன்றாகப் பேசி போட்டியிட்டு தனக்குத் தேவையானதைப் பெற்றுக்கொள்ளும் திறன் அதிகரிப்பதுடன், வருந்தி அழுது முடங்கிப் போகும், எல்லாவற்றுக்கும் பெற்றோரை சார்ந்திருக்கும் இயல்பு இல்லாமல் போகும். நான் இப்போதைய இளைஞர்களிடம் ஒரு விசித்திரமான மனப்பிரச்சினையைப் பார்க்கிறேன் - panic attack. திடீரென அவர்களுக்கு உடல் வியர்த்து, முகம் சிவந்து, வலிப்பு வந்ததைப் போல் ஆகிறது. கூட்டத்தைப் பார்த்தாலே பயமும் ஒவ்வாமையும் ஏற்படுகிறது. அவர்கள் உடனடியாக வெளியே போகாவிடில் மயங்கிவிடுவார்கள். இதெல்லாம் கூட்டமாய் வளரும் குழந்தைகளுக்கு ஏற்படவே முடியாது.
அந்த நண்பர் முக்கியமாக தன் குழந்தைகள் உடல் நலிவுற்று அதிகமாக ஆஸ்பத்திரிக்கு போவதில்லை என்றார். எனக்கு இதை வேறொரு சம்பவத்துடன் பொருத்திப் புரிந்துகொள்ள முடிந்தது - என்னுடைய நாய்க்கு வயது 15. அடிக்கடி நோய்வயப்பட்டு தளர்ந்து வந்தது. கண்பார்வை பாதி போனது. நடக்கவே முடியவில்லை. டாக்டர் பார்த்துவிட்டு சில மாதங்கள் தாண்டாது, தயாராகுங்கள் என்றார். (டாக்ஸ்ஹண்ட் இன நாய்களின் சராசரியான ஆயுள் அதுதான்.) நான் சரி அடுத்த தலைமுறை வரட்டும் என்று இன்னொரு நாய்க்குட்டியை எடுத்தேன். நீங்கள் நம்ப மாட்டீர்கள், அடுத்த சில மாதங்களிலே இந்த 15 வயது நாய் 8 வயது நாயைப் போல ஆகிவிட்டது. அதன் உடலில் வெளிப்படையாகவே மாற்றங்களைப் பார்த்தேன். போட்டி போட்டுக்கொண்டு அதிகமாக ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டது. அதன் நடை வேகமாகியது. வலுவாக தன்னைக் காட்டிக்கொண்டது. இப்போது அதற்கு வயது 16. 18-19 வயதைத் தொடும் என நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது.
தனியாக வாழ்வது மனிதனின் இயல்பு அல்ல. தனியாக வாழும் போது நம் ஆயுள் குறைகிறது என ஆய்வுகளே சொல்கின்றன. தனியாக வாழ்வதே இப்படியாக இருக்கும் போது தனியாக வளர்வது?
உசாத்துணை:
Goli, Srinivas and Jain, Neha. Modi’s Population Growth 'Problem' Is an Old Fallacy in a New Bottle. Health. Thewire.in. https://thewire.in/.../world-population-day-india...
Markert, John. “The Malthusian fallacy: Prophecies of doom and the crisis of Social Security”. Elsevier. The Social Science Journal. Volume 42, Issue 4, 2005, Pages 555-568.
Miller, Michael Matheson. “The Three Fallacies Behind Population Control.” Religion & Liberty Online. Action Institute. https://rlo.acton.org/.../111428-three-fallacies-behind...
Park, Robert M. “NOT BETTER LIVES, JUST FEWER PEOPLE: THE IDEOLOGY OF POPULATION CONTROL.” International Journal of Health Services, vol. 4, no. 4, 1974, pp. 691–700. JSTOR, http://www.jstor.org/stable/45131567. Accessed 10 Mar. 2024.
நன்றி: உயிரெழுத்து