ஆண்களைப் போல மாறும் விருப்பமும் அதனாலே ஆண்களிடத்து பொறாமை, பதற்றம், அச்சம், ஈர்ப்பும் கொள்வதுமே இன்றைய நவீனப் பெண் மனம். பிராயிடிய மொழியில் சொல்வதானால் அப்பாவை வெறுத்துக் கொன்று மேலேற முடியாமல் அவர் குறித்த விருப்பமாக அதை மாற்றிக்கொள்கிறார்கள். எல்லா ஆண்களையும் அதிகாரக் குறியீடாகக் கண்டு போலச் செய்வது எப்படியெனவும், தமது தனித்துவத்தை தக்க வைப்பது எப்படியென்றும் தத்தளிக்கிறார்கள் என லக்கானிய மொழியிலும் இதை விளக்கலாம். பெண்கள் பரஸ்பரம் பொறாமைகொண்டு மோதுவதும் ஒற்றுமையின்றி இருப்பதும் தப்பில்லை. அது ஒருவிதத்தில் தம்மைக் கொண்டாட, கவனித்துப் பாதுகாக்க உதவுகிறது. கூட்டுசேர்ந்து சுயத்தையும் சுய-பராமரிப்பையும் இழப்பதைவிட அது மேலானது. நீங்கள் எழுத்தாளர்களை, கலைஞர்களை, சிந்தனையாளர்களைப் பாருங்கள் அவர்களால் கூட்டத்தோடு கோவிந்தா போடமுடியாது. ஆனால் அப்படி இருந்தால் அதிகாரமும் பொருளாதார முன்னேற்றமும் சமூகப்பிரதிநுத்துவமும் கிடைக்காது. வறுமையில் தவிக்க நேரிடும். இருந்தாலும் ஆன்ம-ரீதியாக பெண்நிலையே மேலானது. ஆண்நிலை தமக்கும் பிறரும் விரோதமானது, ஆதிக்கமானது, சுரண்டலை சாத்தியப்படுத்துவது, சுருக்கமாக அது டாக்ஸிக்கானது.
இந்த நூற்றாண்டில் பெரிய நெருக்கடியே பெண்கள் ஆண்களாக மாறி தம் தனித்துவத்தை இழப்பதே. இது ஏற்படுத்தும் அழுத்தத்தால் ஆண்கள் பரவலாக பெண்களை போலச் செய்கிறார்கள், வேலை விசயத்தில் மட்டும் ஆண்களைப் போல இருக்கிறார்கள். இப்படி இது ஒரு விஷச்சூழலை ஏற்படுத்திவிட்டது.