ஒரு சிந்தனையாளர், கோட்பாட்டாளர், அறிவுஜீவியின் வீழ்ச்சி அவர் தன் சயசிந்தனைக்காகவோ வளர்ச்சிக்காகவோ அன்றி செயல்படாமல் ஒரு இயக்கம், அமைப்பின் பிறழ்வுகளை நியாயப்படுத்த வேலை செய்யும்போது, அதற்கான செயல்திட்டமாக தன் சிந்தனைகளைப் போலியாக பயன்படுத்தும்போது ஆரம்பிக்கிறது. இதைவிட மோசமான வீழ்ச்சி அவர் பெரும் பணமும் புகழும் படைத்த மனிதர்களை தன் பிரதிநிதி எனக் கருதி அவர்களுடைய ஆபாசங்களை மூடிமறைக்க, பாராட்ட தன் அறிவிஜீவி பிம்பத்தைப் பயன்படுத்தும்போது நடக்கிறது. அவர் மெல்ல மெல்ல தன்னை இழந்து ஒரு மாய அதிகார வலையின் கைப்பாவையாகிறார். அவரது குரலுக்கும் மனசாட்சிக்கும் தொடர்பறுந்து போகிறது. முக்கியமாக அவர் அப்பழுக்கற்றவராக தன்னையும் தான் சார்ந்தவர்களையும் காட்டிக்கொள்ளவும், தான் பாதிக்கப்பட்டவர் என நிரூபிக்கவும் போராடத் தொடங்குவார். ஊழல்வாதிகளின், சீரழிவாளர்களின் அறிவுலக அடியாளாக மாறுவார்.
தமிழில் பெரும்பாலும் இது சினிமா, அரசியல் தளங்களில் நடக்கிறது. சினிமாவிலோ அரசியலிலோ நேரடியாகப் பங்கேற்பதை, அதனால் அத்துறைகளை ஆதரிப்பதை நான் கூறவில்லை. வெளியில் இருந்து இத்துறைகளின் ஊழல்களை, சமரசங்களைக் கூவிக்கூவி ஆதரிக்க தம் அறிவுஜீவித்தனத்தை, வாசிப்பை, மொழித்திறனை பயன்படுத்துவதை, ஆனால் தம்மை அத்துறைகளுக்கு வெளியே வைத்து அப்பழுக்கானவராக வைத்துக்கொள்ளும் இரட்டை வேடக்காரர்களைச் சொல்கிறேன்.