எனக்கு மிகப்பிடித்தமான ஹெமிங்வேயின் சிறுகதை ஒன்றுண்டு - “ஒரு சுத்தமான நன்கு ஒளியூட்டப்பட்ட அறை”. அதில் அந்த சுத்தமான ஒளிநிறைந்த அறை மனிதப் பிரக்ஞையின் / இருத்தலின் உருவகமாக இருக்கும். ஆனால் நான் ஒளியைப்பற்றி ஒரு சிறுகதை எழுதியபோது அதில் ஒளியென்பதை சதா நம்மைக் கண்காணிக்கும், ஒடுக்கும் விழிகளின் பார்வையாகவே நான் உருவகித்தேன். ஒளியென்பது நமது அகவிழியென்றே என் படைப்பு மனம் சிந்திக்கிறது என அதை எழுதியபோது புரிந்துகொண்டேன். பேராசிரியர் அழகரசனைப் பற்றி நினைக்கையில் அவர் ஒரு மென்மையான வெளிச்சம் என்றே எனக்குத் தோன்றுகிறது. துன்புறுத்தாத, தன் இடமே இதுவென்று காட்டிக்கொள்ளாத வெளிச்சம். தன்னைக்கொண்டு பிறரது உலகை திறந்துகாட்டத் தெரிந்த வெளிச்சம்.
எனக்கு ரெண்டாயிரத்தின் பிற்பகுதியில் ஒரு உண்மை உறைத்தது - என் முதுகலைப் படிப்பிற்குப் பிறகு நான் மொழிபெயர்ப்பாளர், காப்பி எடிட்டர், தொழில்நுட்ப எழுத்தர் என பல பணிகளைச் செய்து வந்தேன். என்னுடைய இலக்கு எழுத்தில் செம்மையடைவது மட்டுமேயென்று இருந்ததால் நான் தொழில்ரீதியாக வேலையில் கவனம் செலுத்தியிருக்கவில்லை. தொழில் வாழ்க்கை எனக்குப் பெரும் துன்பமாக இருந்தது. உருப்படியான வேலையென ஒன்று வேண்டும், அதில் நான் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று ஒருநாள் தோன்றியபோதுதான் நான் அது என்ன வேலை என என்னையே கேட்டேன். தற்செயலாக என் நிறுவனத்தில் நான் சக-பணியாளர்களுக்கு பயிற்சியளித்தபோது அதில் மிகுந்த இன்பம் இருப்பதை உணர்ந்தேன். ஆக, நான் மகிழ்ச்சியாக இருப்பதற்கு விரிவுரையாளராக வேண்டும். அதற்கு முனைவர் பட்ட ஆய்வை முடிக்கவேண்டும். இயல்பாகவே நான் என் இலக்கியத் தொடர்புகள் வழியாக விசாரித்தேன். எல்லா முனைவர் பட்ட ஆய்வு தேர்வர்களையும்போல என்னிடம் ஏகப்பட்ட உதவாக்கரையான ஆய்வுக்கூற்றுகள் இருந்தன. ஜெர்மானிய தத்துவம்சார்ந்து பெரும்பாலும் என் கற்பனையில் மட்டும் ஒளிவீசித் துலங்குகிற, நடப்பில் பயனற்ற கூற்றுகள். நான் அவற்றில் ஒன்றை ஆய்வுப்பொருளாக்கும் நோக்கில் நெறியாளர்களைத் தேடிக்கொண்டிருந்தேன். யாரும் அமையவில்லை. நான் அச்சயம் பகுதிநேரமாக செய்துவந்த மொழித்திருத்தப் பணியின் ஊடாக எனக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தின் குற்றவியல் துறையில் ஶ்ரீனிவாசன் எனவொரு பேராசிரியர் அறிமுகமானார். அவரே எனக்கு சென்னைப் பல்கலையில் ஆங்கிலத்துறையில் பேராசிரியராக இருந்த அழகரசனை நோக்கி கைகாட்டினார்.
பேராசிரியர் அழகரசனிடம் நான் என்னை எப்படி அறிமுகம் செய்வது? நான் ஒரு எழுத்தாளர் என்று சொல்லலாம். ஆனால் அதனால் அவருக்கு என் சிந்தனைப்போக்கு, ஆர்வங்கள் விளங்காதே. சுயவிபரச் சுருக்கமும் உதவாது. ஆகையால் நான் அதுவரையில் தமிழ் இணைய இதழ்களிலும் அச்சிதழ்களிலும் பிரசுரித்துள்ள கட்டுரைகளை மட்டும் தேர்ந்தெடுத்து அச்சுப்படி எடுத்தேன். அந்த நூற்றுக்கணக்கான தாள்களில் மிக முக்கியமானவற்றை மட்டும் மீண்டும் தேர்ந்தெடுத்துத் தொகுத்தபோது அவை சில நூறு பக்கங்கள் வந்திருக்கும். நான் அவ்வளவு எழுதியிருக்கிறேன் என்பதே அப்போதுதான் எனக்குத் தெரிந்தது. என்னுடைய எழுத்து கல்விப்புலம்சார்ந்தது அல்ல. பல்வேறு துறைகள்சார்ந்து எனக்குள்ள கருத்துக்களின் சிதறல்களே என் கட்டுரைகள். அவற்றைத் தொகுத்துப்பார்க்கும் போது நானே என் முன் அம்மணமாக நிற்பதைப்போலிருந்தது. அதனால் நான் அந்தத் தேர்விலிருந்து மேலும் பல கட்டுரைகளை எடுத்து வெளியேவைத்தேன். ஒரு கோப்பிலிட்டு பேராசிரியர் அழகரசனிடம் சென்று என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அந்த கோப்பை நீட்டினேன். அவர் வாங்கிப் பார்த்துவிட்டு என்னைத் தன்னுடைய ஆய்வு மாணவராக என்னை எடுத்துக்கொள்வதாக சொன்னார். அவர் பின்னர் யாரிடமோ என்னைப்பற்றிக் குறிப்பிடும்போது “இவர் தான் எழுதிய கட்டுரைகளை மொத்தமாக என்னிடம் கொண்டு வந்தபோது இவ்வளவா என்று வியந்தேன்” என்றார். எனக்கு அடடே, தொகுக்காமல் நிராகரித்த சில நூறு பக்கங்களையும் கொண்டு வந்திருக்கலாமோ என ஒருகணம் சபலம் ஏற்பட்டது. பேராசிரியர் அழகரசன் எனக்கு “அழகரசன் சார்” ஆனார்.
அடுத்தடுத்த நாட்களில் அவருடன் உரையாடும்போது அவர் என்னைத் தேர்ந்தது என் கட்டுரைகளுக்காக மட்டுல்ல, என்னால் எழுத முடியும் என்பதற்காகவும் மட்டுமல்ல என்று புரிந்துகொண்டேன். நவீனத் தமிழ் இலக்கியத்தில் எனக்குள்ள பரிச்சயத்தையும், நான் நவீன மனப்பான்மையையும் இலக்கியத் தோற்றப்பாடுகளையும் விசாரிப்பதில் என் எழுத்தில் அதுவரைக் காட்டிய அக்கறையைக் கண்டு அவர் எனக்குள் இருந்த ஒரு ஆய்வேட்டைக் கண்டுகொண்டார். அந்த மாதிரியான தீட்சண்ணியம் அசாதாரணமானது. இன்று நான் நெறியாளராகிவிட்ட பின்னர் என்னால் நிச்சயமாக எனக்குக் கீழ் செயல்படும் ஒரு ஆய்வு மாணவர் எதை நோக்கி தன் ஆய்வைக்கொண்டு போவார் என கணிக்க முடியவில்லை. அவருடன் உரையாடி அவரது பணியின் முன்னேற்றத்தை நோக்கி மட்டுமே ஓரளவுக்கு இந்த ஆய்வு இந்தப் புள்ளியை நோக்கிச் செல்லுமென என்னால் கணிக்க முடிகிறது. பேராசிரியர் அழகரசன் ஒரு நெறியாளராக வித்தகராக இருந்தார். அவரால் ஒருவரைக் கண்டதும் அவருக்கு சாத்தியமான பணிகளின் ஒட்டுமொத்த சித்திரத்தை மனதில் எழுப்பிக்கொள்ளவும், அந்த வரைபடத்தின் அடிப்படையில் அவரை நடத்தவும் முடிகிறது. அவருக்குக் கீழ் வேலைசெய்வது ஒரு திறமையானப் பயிற்சியாளரிடம் குத்துச்சண்டை கற்றுக்கொள்வதற்கு இணையானது. அவர் மெல்ல மெல்ல நம்மை மற்றொருவராக வடிவமைப்பார். அதை நாம் உணரவே மாட்டோம் எனும்படியாக அவரது தாக்கம் அவ்வளவு நுட்பமாக, மென்மையாக இருக்கும்.
அங்கு நான் போனதுமே அங்கிருந்த ஆய்வாளர் சமூகத்தின், உட்குழுவின் பகுதியாகிப் போனேன். சார் என்னை அவர்களிடம் ஒப்படைத்தார் என்று சொல்வதே தகும். அருள், டேவிட், வாசு, ராம், சுஜாதா என ஒரு இணக்கமான நட்புவட்டம் அறிமுகமானது. ஆய்வாளர்கள் அவர்கள் வெவ்வேறு நெறியாளர்களின் கீழிருந்தாலும் ஒன்றாகப் பழகுவது, சாருடன் ஒன்றாக உணவருந்துவது, பரஸ்பரம் ஆய்வைப் பற்றி உரையாடுவது, ஆய்வெழுத்தைப் படித்து மொழி திருத்தம் பன்ணிக்கொடுப்பது, பல்வேறு வகைகளில் உதவுவது என்று ஒரு விருட்சத்தின் பல கிளைகளைப் போலவிருந்தோம். இது ஆய்வுப் புலத்தில் அதிகமாகக் காணப்படும் தனிமை, அச்சம், நெருக்கடி, பதற்றத்தில் இருந்து விடுபட உதவியது. மாலை நான்கரை மணிக்கு மேல் சார் வீட்டுக்குக் கிளம்பியபிறகு அருள், டேவிட், ராம், நான் மற்றும் சிலர் சேர்ந்து அவரது அறையில் இருந்து கதைகளை சத்தமாகப் படித்து விவாதிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தோம். அது முடிந்தபின்னர் கடற்கரைக்கு செல்வோம், பிரியாணி உண்டுப் பிரிவோம். இது எங்களை நெருக்கமாக்கியது, இலக்கியம் சார்ந்த ஒரு பிணைப்பை உண்டுபண்ணியது. டேவிட் பின்னர் ஆங்கிலத்துறை சார்ந்த நாடக்குழுவை இயக்குவதற்காக நான் குறுநாடகங்கள் எழுதியதும், அருள் என் படைப்புகளைப் படித்து விமர்சனம் செய்ததும் இந்தச் சந்திப்புகளை அடிப்படையாகக் கொண்டே. தனிப்பட்ட முறையில் ஒரு எழுத்தாளராக என்னைச் செறிவாக்க, நான் அறியாத பல பரிமாணங்களை எனக்குள் மலர இந்த ஆய்வுச் சமூகம் உதவியது. இன்று தனியார் கல்வி நிலையங்களில் இத்தகைய கூட்டுச் செயல்பாடுகளை ஆய்வாளர்கள் மத்தியில் காண முடிவதில்லை. நான் என் ஆய்வு மாணவர்களை இத்தகைய சமூகமாக்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு ஒன்றாக இருக்கக் கேட்டாலும் அது சுலபத்தில் வெற்றிபெறுவதில்லை. தனிமனிதர்களின் அணுவாக்கம் (atomization) இன்று கல்விப்புலத்தில் பெரும் சிக்கலாக மாறுகிறது. சார் இதை முன்கூறாக உணர்ந்து எப்படி சரிசெய்தார் என்பதை நினைக்க திகைப்பாக இருக்கிறது.
நான் இப்போது வேலைசெய்யும் பல்கலையில் ஆய்வு மாணவர்களுக்கு என்று ஒவ்வொரு நாளும் செய்யவேண்டிய பணிகளைத் திட்டவட்டமாக அளித்து அவர்களுடைய முன்னேற்றத்தை தொடர்ந்து அளவிட்டு அதற்கேற்ப இடுபணிகளைத் தொடர்ந்து அளிப்பது, இந்த அசைவுகளை ஆவணப்படுத்துவது என மிகவும் வடிவரீதியாக நெறியாள்கை நிகழும். கிட்டத்தட்ட ஒரு ஆய்வகத்தில் உள்ள ஆய்வுப்பொருள் எப்படித் துவக்கம் முதல் கடைசிவரை பரிசீலிக்கப்பட்டு அறுதியிடப்பட்டு வெளிவருமோ அவ்வாறு. ஆனால் ஒரு ஆய்வாளரின் செயல்பாடுகள் அன்றாட வாழ்க்கையின் போக்குகளுக்கும், அக-மாற்றங்களுக்கு ஏற்ப மாறிக்கொண்டே போவது. அழகரசன் சாரின் பாணி இதைப் புரிந்துகொண்டு தன் மாணவர்களை நடத்தினார். அதனாலே நான் அவரை ஒரு விளையாட்டுப்பயிற்சியாளராக கற்பனைப் பண்ணிப் புரிந்துகொள்ள முயல்கிறேன். அவரிடம் நான் சென்ற முதல் நாளிலிருந்தே நான் அவரிடம் என்ன செய்யட்டும், எதைப்படிக்கட்டும், எங்கு போய் உட்காரட்டும் என்று கேட்கவில்லை. சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்துறையில் யாருமே அங்கு அவ்வாறு உரையாட மாட்டார்கள். அது ஒரு கார்ப்பரேட் வேலையிடமோ கல்வி கற்று தேர்வெழுதும் பள்ளியோ அல்ல. அதேநேரம் ஆதி கிரேக்கத்தில் சாக்ரடீஸின் தத்துவப் பள்ளியில் நிகழ்வதைப் போல முடிவற்ற விவாதங்களும் நிகழாது. அங்கு நாம் என்னவேண்டுமானாலும் செய்யலாம். அங்கு போய் நான் அன்றன்றைக்கு எழுதிவரும் கட்டுரையை அல்லது நாவலை எழுதுவேன். சாருடைய அறையில் உள்ள நூலகத்திலிருந்து எதையாவது எடுத்துப்படிப்பேன். என் சக-ஆய்வாளர்களுடன் அரட்டையடிப்பேன். சார் தன் அறையில் இருக்கும்போதும் ஒருபோதும் ஆய்வுச் சம்மந்தமாகப் பேசமாட்டார். அவருக்கு நான் என்ன செய்கிறேன் எனத் தெரியும். மாலையில் நாங்கள் தேநீர் அருந்தப் போவதுதான் அவர் என்னிடம் ஆய்வு சம்மந்தமாகப் பேசும் சொற்பமான நேரம். எதாவது ஒரு புத்தகத்தைக் குறிப்பிட்டு “அதைப் படிச்சுப்பாருங்க” என்பார். என்னில் அந்நூல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று தெரிந்தால் அந்த ‘செயல் திட்டத்தை’ கைவிட்டுவிடுவார். குத்துச்சண்டையில் எதிராளியை விட்டுவிட்டு அவர் முக்கியமான நேரத்தில் அருகில் வந்து மாட்டும்போது நாலு குத்துக்களை விடுவதைப் போலத்தான் அவரும் என்னைச் சரியான நேரத்தில் பிடிப்பார். நான் அந்தந்த சந்தர்பங்களில் அந்த நாக் அவுட் குத்தை உணர்ந்ததேயில்லை. ஒரு உதாரணம் சொல்கிறேன்:
என்னுடைய ஆய்வு அதன் துவக்கக் கட்டத்தில் தமிழ் இலக்கியத்தில் தமிழ் நவீனத்துவமும் பின்நவீனத்துவமும் எப்படி ஒன்றுடன் ஒன்று முயங்கியும், மேற்கத்திய இயக்கங்களில் இருந்து வேறுபட்டும் உள்ளன என்பதைக் குறித்ததே. நான் இந்தப் ‘பிரச்சினையை’ முழுமையாக இலக்கிய விமர்சனப் பார்வையில் அணுகவே உத்தேசித்தேன். அழகரசன் சார் இதை பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் தேசிய-பூர்வ பௌத்த அரசியல் சமூக எழுச்சிகளின் பின்னணியில் இருந்து துவங்குவது பொருத்தமானது எனக் கருதியிருக்க வேண்டும். இதை நான் என் ஆய்வை முடிக்கும் தருணத்திலே விளங்கிக்கொண்டேன். ஆய்வுக்குள் இருக்கையில் எனக்கு - எந்த ஆய்வாளரையும்போல - நான் பயணிக்கும் ஆய்வு வெளியின் மொத்தப் பரப்பும் புலப்படவில்லை. நான் அவ்வப்போது கால்பதிக்கிற சிறிய வெளிகளை மட்டுமே கண்டுகொள்வேன். ஆனால் சாருக்கு அந்தப் பரந்துபட்டப் பார்வை இருந்தது. அதேநேரம் ஆய்வாளரின் அறிவுப்பக்குவம் எவ்வளவு அவசியமானது எனும் புரிதலும் அவருக்கு இருந்தது. அவர் சுட்டியுணர்த்திய கோணத்தை அறிவதற்கான வரலாற்றியல் பக்குவம் எனக்கு இல்லை என உணர்ந்ததும் அவர் அதை விட்டுவிட்டார். இன்று நான் எத்தனையோ ஆய்வு நெறியாளர்கள் தமது மாணவர்களிடம் அவர்களுக்கு விருப்பமோ புரிதலோ இல்லாத ஆனால் தமக்குப் பிரியமான ஒரு குறிப்பிட்ட கோணத்தை, பிரச்சினையை ஆராயும்படி தொடர்ந்து வலியுறுத்துவதை கவனிக்கிறேன். இது பெரும்பாலும் இரு தரப்புக்கும் பயனற்ற வகையில் துன்பமாகப் போய் முடியும். மேலும், ஆய்வு என்பது ஆயுளுக்கும் தொடரும் செயல்பாடு அல்லவா.
இன்னொரு கவனிக்கத்தக்க சேதி ஆய்வு என்பது பொருண்மையான திட்ட நிறைவேற்றம் அல்ல. திருமண நிகழ்வைத் திட்டமிட்டுச் செய்வதைப் போல முனைவர் பட்ட ஆய்வைச் செய்ய முடியாது. ஹைடெக்கர் பேசுகிற நனவு அனுபவியல் (phenomenological) செயலே ஆய்வு. அது ஒரு பயணத்தின் முடிவில் நாம் அடையவேண்டிய முற்றுதியான ஒரு புதையல் அல்ல. ஓட்டப்பந்தயத்தின் இறுதியில் கிடைக்கும் பரிசு அல்ல. அது செயலும் மனமும் ஒன்றாக முடிவும் துவக்கமுமற்று மலர்ந்தபடியே இருக்கும் தொடர் நிகழ்வு. அதில் ஒரு ஆய்வாளராக நீங்கள் உங்களையும் உங்கள் செயலையும் சிந்தனையும் தனித்தனியாக பிரித்தறியவே இயலாது. தினந்தினம் நீங்கள் ஆற்றொழுக்காக மாறிக்கொண்டே இருப்பதால் உங்கள் ஆய்வறிக்கையிலும் அதன் பல்வேறு அலையடிப்புகளையும், சுழிப்புகளையும் காணமுடியும். அழகரசன் சாரின் சீர்மை அவர் ஆற்றைக் கட்டுப்படுத்தவோ அதன் பாதையை வகுக்கவோ செய்யாமல் அதன் பாதையில் வரும் தடைகளை முன்னறிந்து அவற்றை நீக்குவதற்கோ சமாளிப்பதற்கோ தீர்வுகளை யோசிப்பார் என்பது. சிலநேரங்களில் தீர்வுகாணும் பொறுப்பையும் ஆற்றிடமே ஒப்படைப்பார். ஆறு அவற்றைப் பரிசீலிக்காவிடில் அதை ஓடவிட்டு கவனித்து கூட வந்தபடியே இருப்பார். அது எங்கெல்லாம் போகக்கூடும் என அவருக்கு ஏற்கனவே தெரியும் என்பதால் ஒரு (இமானுவெல் கேண்டின்) முன்னறி இருப்பைப் போல அவர் ஆற்றின் பிரக்ஞையின் வெகுஅருகாமையிலே இருந்துகொண்டிருப்பார். அழகரசன் சாரின் நெறியாள்கையின் கீழ் ஒருவர் இருப்பது அபாரமான ஆன்மீக அனுபவம் என நான் நம்புவது இதனாலே.
சாரிடம் எனக்கு எதாவது சொல்லவேண்டியிருந்தால் அதைக் குறுஞ்செய்தியாக போனில் அனுப்பச்சொல்வார். அவரது நோக்கம் ஒரு ஆய்வாளராக என் சிந்தனையை சிதறவிடாமல் ஒரு குறிப்பிட்ட இலக்கில் சுருக்கி அடர்த்தியாக வேலைசெய்வதே, சொற்சிக்கனம் அதனாலே அவசியம் எனக் கருதினார் எனப் பின்னர் புரிந்துகொண்டேன். இன்று ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் ஒரு ஆய்வு இலக்கும், கேள்வியும் இருக்க வேண்டும் என்று என்று தனியார் கல்லூரிகள், பல்கலைகளில் கல்விப்புல நிர்வாகிகள் வலியுறுத்துவதைத்தான் வேறொரு மொழியில் அழகரசன் சார் குறுஞ்செய்தி வடிவில் எனக்குக் கடத்தினார் - ஒரு வரியில் நம்மால் ஒரு அத்தியாயத்தின் மையக்கருத்தை, மையநோக்கை சொல்லமுடியுமெனில் அந்த அத்தியாயம் செறிவாக நேர்த்தியாக அமையும். அது எனக்கு மிகவும் அவசியப்பட்டது - என்னுடைய ஆய்வு பாணியானது எல்லாவற்றையும் படித்துத் தொகுத்துக்கொண்டு பின்னர் மனதளவில் பரிசீலித்து சுருக்கியெழுதி என் சிந்தனைகளையும், அலசலை படிப்படியாக எழுதுவது அல்ல. நான் எழுதும்போதே சிந்திப்பேன். நான் படிக்கப் படிக்க எழுதிக்கொண்டே போவேன். ஆய்வு செய்யும் மாதங்களில் நான் தினமும் அண்ணா நூலகத்திற்கு சென்று ஒருபாதி நாளையாவது அங்கு செலவழித்துப் படிப்பதும் சிலநூறு சொற்களையாவது எழுதுவதையுமே வழமையாகக்கொண்டிருந்தேன். மற்ற மாதங்களில் நான் பல்கலைக்கழகத்திற்குச் சென்று படிப்பது, என் புனைவை, அபுனைவை எழுதுவது, அரட்டையடிப்பது என்றிருப்பேன். நான் தினமும் 18 மணிநேரம் எழுத்துக்குள்ளேயே இருந்தேன். ஆய்வுக்கான மாதங்களில் அதற்குரிய பொழுதில் மட்டுமே நான் ஆய்வுசார்ந்து எழுதுவேன் (அதாவது ஆய்வாளராக இருப்பேன்). ஒரு எழுத்தாளராக என் இருத்தலின் ஒரு பகுதி மட்டுமே ஆய்வு. என்னால் எழுத்துக்கு வெளியே சிந்திக்கவோ வாசிக்கவோ முடியாததற்கு ஒரு உளவியல் காரணம் இருந்தது - என்னால் நான் சிந்திப்பதை ஒருசில நாட்களுக்கு மேல் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. நான் அபுனைவு வடிவில் எழுதுவதை சில நாட்களில் முழுமையாக மறந்துபோவேன் (என் புனைவு மட்டும் துல்லியமாக நினைவில் இருக்கும்). இந்த மனவமைப்புக் கொண்ட என்னால் மற்ற ஆய்வாளர்களைப் போல வாசிப்பு, சிந்தனை, பரிசீலனை, எழுத்து என பகுதிப்பகுதியாக நீண்டகால நோக்கில் வேலைசெய்ய முடியாது.
அழகரசன் சார் இதையுணர்ந்து கொண்டார். அவர் எந்த முன்தீர்மானமும் இன்றி என்னை சுதந்திரமாக இயங்க அனுமதித்தார்.
நான் முனைவர் ஆய்வை ஆரம்பித்த முதலாண்டில் என் ஆய்வறிக்கையின் நூறு பக்கங்களை எழுதிமுடித்தேன். அதாவது நான் ஆராய நினைத்த கருத்துருக்களை பரிசீலித்துவிட்டேன். அதற்கடுத்து நான் வேறு சில புலங்களைப் பரிசீலிப்பது அவசியம் என உணர்ந்து சார் என்னை சில மாதங்கள் எதையும் எழுத வேண்டாம் என்று கேட்டார். நான் முழுமையாக ஆய்வில் இருந்து விடுபட்டேன். சார் அந்த நாட்களில் என்னிடம் தான் பங்குகொண்ட சிறுபத்திரிகை உலக அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வார். அந்தத் தகவல்கள் தந்த அக-ஊக்கத்தினால் தூண்டப்பட்டு நான் “ரசிகன்” எனும் நாவலை அந்த எட்டுமாதக் காலத்தில் எழுதிமுடித்தேன். சார் இப்போது எனக்கு அடுத்தடுத்த அத்தியாயங்களுக்கான தனி இலக்குகளை அளித்தார். யுத்த இலக்கியம், வெகுஜன இதழ்களில் வரும் பாலினக் கட்டமைப்புக் கதையாடல்கள், மாற்றுத்திறனாளிகள் தோன்றும் இலக்கியப் பனுவல்கள் என அடுத்த இரு ஆண்டுகளில் பயணித்தேன். எனக்கு மிகவும் உற்சாகமளித்த வாசிப்பு, எழுத்து அனுபவம் இதுவாக அமைந்தது. எனக்கு இன்று யோசித்துப் பார்க்கையில், என்னுடைய தனிப்பட்ட ஆய்வு விருப்பமான தமிழ் இலக்கிய நவீனத்துவத்தைவிட மேற்சொன்ன மூன்று தளங்களில் எழுதிய அத்தியாயங்களே ஆய்வறிக்கையில் மிகச்சிறப்பாக வந்திருப்பதாகத் தோன்றுகிறது - அதற்கு முக்கியமான காரணம் நான் என் அகந்தையை விலக்கிவைத்து சாரின் கண்ணோட்டத்தில் இருந்து ஆய்வுப்பொருளைப் பார்த்து எழுதினேன் என்பது. தஸ்தாவஸ்கியின் நாவல்களில் பாத்திரங்கள் தமக்கான கால-வெளி உலகுகளை பரஸ்பரம் மோதி முயங்க அனுமதிப்பதாக பக்தின் சொல்லுகிறாரே அது என் ஆய்வேட்டில் எனக்கு நேரடியாக முதலீடு இல்லாத கருதுகோள்கள், கண்ணோட்டங்களின் முயக்கத்தின் வழி நிகழ்ந்ததாகத் தோன்றுகிறது.
அழகரசன் சாரிடம் ஆய்வைக் கற்ற அந்த மூன்றாண்டுகளும் என் வாழ்வின் மிகச்சிறந்த காலப்பகுதி என்று நான் கருதுகிறேன் - நான் முழுமையாக என்னிடமிருந்து விடுபட்டு எனக்குள் மலர அவரது மென்மையான வழிகாட்டல் எனக்கு உதவியது. நான் அக்காலத்தில் அவ்வளவு மகிழ்ச்சியாக, சுதந்திரமாக உணர்ந்தேன். இன்று நான் காணும் பல்வேறு ஆய்வு மாணவர்கள் கடுமையான நெருக்கடியில், அழுத்தத்தில் இருப்பதைக் காணும்போது எனக்கு இரக்கம் வருகிறது. அவர்கள் முற்றிலும் தவறான ஒரு அமைப்புக்குள் சிக்கியிருக்கிறார்கள். அழகரசன் சாரும், அவரிருந்த சூழலும் அனுமதித்த நனவு அனுபவியல் முறைமையின்படி ஆய்வை ஒரு படைப்பூக்கச் செயல்பாடாக, இயல்பான அறிவுஜீவி செயல்பாடாக, ஆற்றொழுக்கான வாழ்வனுபவமாகக் கட்டமைத்ததால் என்னைப் போன்ற ஆய்வாளர்களால் நிம்மதியாக சுவாசிக்க, வளர, சிந்தனையாளராக விகாசிக்க இயன்றது.
நான் பின்னர் விரிவுரையாளராகி நெறியாளராகப் பதிவுப் பண்ணிக்கொண்டேன். எனக்குக் கீழ் எட்டு மாணவர்கள் ஆய்வுசெய்தார்கள். அப்போதுதான் என்னுடைய முனைவர் பட்ட ஆய்வின் சிறப்புகளுடன் அதன் போதாமைகளும் எனக்கு விளங்கின. நான் எதையெல்லாம் என் ஆய்வில் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம் என்பது புரிந்தது. ஆனால் என்னை இந்த ஆய்வை செய்ய அழகரசரன் சார் அனுமதித்ததே இந்த முன்னுணர்வுடன் தான் என இப்போது புரிந்தது. எல்லா ஆய்வு மாணவர்களையும் ஒரே அச்சில் வார்க்க முடியாது. ஒவ்வொருவருக்கும் பலங்களும் பலவீனங்களும் இருக்கும். பலவீனங்களை மறைத்து முன்னேறும்போது ஆய்வு பலம்பொருந்தியதாகிறது. அவரவருக்கான வானம் அவரவர் இறகுகளுக்கு கீழே உள்ளது. ஒரு பறவை தன் வானத்துடனே தோன்றுகிறது. அதற்கான சுதந்திரத்தை நாம் அளித்தால்போதும், அது தனக்கான தூரத்தைப் பயணித்து இலக்கை அடையும் என்று எனக்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் விளங்கியது. நான் சார் என்னை எவ்வாறு நடத்தினார் எனப் புரிந்துகொள்ள நானொரு நெறியாளராக மாற வேண்டியிருந்தது.
அழகரசன் சார்தான் எனக்கு பக்தினையும், தொல்காப்பியத்தையும், அயோத்திதாசரையும் ஆழமாக விளங்கிக்கொள்ள பாதையமைத்துத் தந்தார். 2012க்குப் பிறகு தமிழில் வந்த என் கட்டுரைகளில் அவரது நெறியாள்கையின் தாக்கத்தைப் பார்க்கமுடியும். நேரடியான போதனைவழியாக அல்ல. தன் உரையாடல்கள்வழியாக சன்னமாக வெளிச்சமிட்டுக் காட்டி அதைச் செய்தார். என்னைப் போல ஒவ்வொரு மாணவருக்கும் அவர் ஒரு புதிய உலகை ஒளியூட்டுக் காட்டியிருப்பார் என நம்புகிறேன். அவர் ஒரு கல்ட் சாமியாரைப் போல தனக்கான கருத்தியலைத் தன் சீடர்களுக்கு கையளிப்பதில்லை; யாரையும் தன்னுடைய சாயலில் உருமாற்றுவதில்லை. சொல்லப்போனால் அவர் தனது கருத்துக்களை எங்கும் சொல்லி நான் கேட்ட நினைவில்லை. அவருடைய அரசியலையும் கருத்துநிலையையும் நான் அவருடைய புத்தகத்தையும் கட்டுரைகளையும் படித்துமட்டுமே புரிந்துகொண்டேன். அவற்றிலும் பிடிவாதமான கருத்துநிலைகள் இல்லை - எதிர்ப்பரசியலும் ஆழமான ஆய்வுப் பார்வையும் மட்டுமே தெரியும். அறிவுத்தேடலையும் சமூகத்தில் சமத்துவத்தையும் ஒன்றாக இணைப்பதே அவரது இலக்கு. மொழியிலும், பண்பாட்டிலும், தத்துவத்திலும் (குறிப்பாக பின்னைக் காலனிய, இந்தியவியல் புலத்தில் நாட்டார், உபதேசியவாதப் பனுவல்களை ஆராய்ந்து) எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துவதே அவரது அரசியல். ஆனால் ஒரு ஆசிரியராகவோ நெறியாளராகவோ அவர் தன்முன் வருவோருக்கான தேவைக்கேற்ப தன்னைத் தகவமைப்பாரே ஒழிய அவர்களை மாற்ற முயலமாட்டார். அவரது வகுப்புகளை கவனித்திருக்கிறேன். அங்கும் அவர் - தனது உரையாடல்களில் செய்வதைப் போன்றே - மாணவர்கள் சிந்திக்கவும் மேம்படவும் வழிகாட்டுவாரே ஒழிய அறிவைக் ‘கையளிக்க’ மாட்டார். கற்றனைத் தூறும் மணற்கேணி என்பதை சரிவரப் புரிந்துகொண்டு தன் பயிற்றுவித்தலில் பின்பற்றியவர் அவர். இவ்வாறு ஒரு முழுமையான பின்நவீனத்துவ ஆசானாக அவர் இருக்கிறார்.
அழகரசன் சாரைப் பொறுத்தமட்டில் தனிப்பட்ட முறையில், இரண்டு தருணங்களை நான் எப்போதுமே உணர்ச்சிகரமாக நினைவுகூர்வேன். 2014இல் எனக்கு சாகித்ய அகாடெமியின் யுவ புரஸ்கார் விருதுகிடைத்த போது காலையிலிருந்தே நிறைய பேர்களின் வாழ்த்துக்களுக்கு பதில் சொல்லி, ஊடகங்களுக்குப் பேட்டியளித்து களைத்திருந்தேன். காலையிலிருந்தே நான் உணவருந்தியிருக்கவில்லை. சென்னைப் பல்கலையில் பின்மதியவேளையில் எனக்கு ஒரு பாராட்டு நிகழ்வை ஏற்பாடு பண்ணியிருந்தார்கள். நான் அன்று சாருடைய அறைக்கு எந்த எதிர்பார்ப்பும் இன்றித்தான் வந்தேன். சார் என்னை வாழ்த்துவார் என எதிர்பார்த்தேன். ஆனால் சார் நான் பசித்திருப்பேன் என்பதை கணித்தோ எப்படியோ என்னிடம் உணவுப்பொட்டலத்தை அளித்து சாப்பிடச் சொன்னார். உலகில் ஒருவர் மட்டுமே இப்படி யோசிக்கிறாரே என்று நான் மிகவும் நெகிழ்ந்துபோனேன். அது ஒரு மிகச்சின்ன விசயம் தான்; சார் அதை நிச்சயமாக கடந்துபோயிருப்பார். மறந்திருப்பார். ஆனால் எனக்கு அது மிகப்பெரிய செயலாகப்பட்டது. மற்றொரு சந்தர்ப்பம் நான் உடல்நலமின்றி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவர் வந்து பார்த்துவிட்டுப் போனது.
இன்று என்னைச் சுற்றி நெறியாளர்-ஆய்வு மாணவர் உறவு முழுமையாக தொழில்ரீதியானதாக இருக்கும்படி ஒரு கட்டாயம் உள்ளது. இரு தரப்புக்கும் பரஸ்பரம் அவநம்பிக்கையும் பதற்றமும் உள்ளதால் வங்கிக் கணக்கரையும் வங்கிக்கொள்ளையர்களையும் போலத்தான் நடந்துகொள்கிறார்கள். ஆய்வாளருடனான உரையாடல் சதா ஒரு சமரசப் பேச்சுவார்த்தைப் போலவே இருக்கிறது. இரு தரப்பினரும் எப்போது வேண்டுமெனினும் குண்டு வெடித்துவிடக் கூடும் என்பதைப் போல பட்டும்படாமல் ஆய்வைக் கையாள்கிறார்கள். அழகரசன் சார் தன் மாணவர்களை மனிதர்களாக நடத்துகிறார், சக-மனிதருக்கான நேசத்தை, மரியாதையை அளிக்கிறார். இதை ஒரு முக்கிய விழுமியமாக நான் கற்றுக்கொண்டேன். நான் என் ஆய்வு மாணவர்களிடம் சமத்துவத்தைப் பேணுவதற்கு, அவர்களுக்கு வழிகாட்டுவதுடன் சக-மனிதராக நேசிக்கவும் முயல்கிறேன். முன்தீர்மானங்கள் இன்றி அவர்களை ஆதரிக்கிறேன். அழகரசன் சாரிடம் இருந்து நான் பெற்ற மிகச்சிறந்த பரிசு இதுவேதான்.
அழகரசன் சாரின் ஆசிரியப் பணி நிறைவை எய்தும் இத்தருணத்தில் என் மனமார்ந்த அன்பை அவருக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.
குறிப்பு: பேராசிரியர் அழகரசன் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்துறையில் கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக ஆங்கிலப் பேராசிரியராகவும், பின்னர் துறைத்தலைவராகவும் பணிபுரிந்து இப்போது விருப்ப அடிப்படையில் ஓய்வுபெறுகிறார். அவரது ஆய்வுப்புல ஆர்வம் முற்போக்கு சிந்தனைகள், அம்பேத்கரியம், கீழைத்தேயக் கோட்பாட்டு ஆய்வுகள், பின்காலனியம் ஆகியவை சார்ந்தது. அவர் ஒரு சிறந்த மொழிபெயர்ப்பாளர். ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்துக்காக தமிழ் தலித் இலக்கியத்தை அறிமுகப்படுத்தும் மொழியாக்கத் தொகுப்பு நூலை அவர் ரவிக்குமார் எம்.பியுடன் இணைந்து தயாரித்தார் - The Oxford Anthology of Tamil Dalit Writing. அது மிக முக்கியமான நூலாகும்.
பேராசிரியர் அழகரசன் இருமொழி எழுத்தாளர். அவர் கவிதைத்தொகுப்பை வெளியிடவில்லை என்றாலும் பல நல்ல கவிதைகளை எழுதியிருக்கிறார். அவர் தமிழில் எண்பது, தொண்ணூறுகளில் மும்முரமாக இயங்கிவந்த சிறுபத்திரிகை மரபுடன் தொடர்புகொண்டவர். நுகர்வோர் கலாச்சாரம், வாசிப்பு, தலித் அடையாளம், அம்பேத்கர், இமையர், ரவிக்குமார், ராஜ் கௌதமன், ஜாகீர் ராஜா குறித்து முக்கியமான கட்டுரைகளை எழுதியுள்ளார். சாதிய சமூகம் எப்படி செயல்படும் என்பதை விவரிக்கும் “உட்பகை தோன்றும் தருணம்” அவரது மற்றொரு முக்கியமான நூல். குறிப்பாக, சாதியென்பதை நாம் மற்றமையாக மட்டும் காண்பது ஏன் என அவர் எழுப்பும் கேள்வியை தமிழில் அனேகமாக யாரும் கேட்பதில்லை. பக்தின், ஆல்ப் டெய்லர், லிஸா பெல்லியர், ஸ்டுவர்ட் மெக்கிரிகோர் ஆகியோரிடம் இருந்து கவிதைகளையும் அபுனைவையும் தமிழாக்கியிருக்கிறார். பார்த்தா சாட்டர்ஜி, குகி தியாங்கொ, ஜி.என் தேவி, பாமா, சோ. தருமன் உள்ளிட்ட முக்கியமான சிந்தனையாளர்கள், படைப்பாளர்களை நேர்முகம் செய்திருக்கிறார். தமிழ் ஆய்வுப், படைப்பிலக்கியத்துக்கும் ஆங்கில கல்விப்புலத்துக்கும் முக்கியமான பாலமாக செயல்பட்டிருக்கிறார். பொதுவாக தமிழ்கூறு நல்லுலகில் தத்தமது தகுதியை ஆரவாரமாக தம்பட்டம் அடித்தால் தான் கண்டுகொள்ளப்படுவார்கள். பேராசிரியர் அழகரசன் மென்மையானவர், தன்னைப் புகழை நாடி முன்வைக்காதவர். நிழலோடு நிழலாக பின்னால் இருந்துகொண்டு ஓய்வில்லாமல் பணியாற்றக்கூடியவர். மில்டனின் “அவரது பார்வையின்மை குறித்து” (On His Blindness) கவிதையில் இப்படி ஒரு வரி வரும்: “தேவனுக்கு மனிதரின் பணியோ பரிசோ தேவையில்லை: யார் அவரது மென்மையான நுகத்தடியை மிகச்சிறப்பாய் சுமக்கிறாரோ அவரே சிறப்பாக சேவையாற்றியவர்.” மொழியின், பண்பாட்டின், லட்சியவாதத்தின் மகத்தான நுகத்தடியை அவர் இனியும் சுமந்துகொண்டிருப்பார்.
நன்றி: உயிரெழுத்து, அக்டோபர் 2024