நான் ஒரு போக்கை கவனிக்கிறேன் - ஒரு படம் திரையரங்கில் வெளியாகும்போது ஐயோ அம்மா என்று பாராட்டித் தள்ளுகிறார்கள். அதுவே ஓடிடியில் வந்ததும் பார்த்துவிட்டு அமைதியாக நிறைகுறைகளை கவனித்து அந்தளவுக்கு ஒண்ணும் நல்லா இல்ல என்று எழுதுகிறார்கள். காதலிக்கும்போது ஒருவிதமாகவும் கல்யாணத்திற்குப் பிறகு இன்னொருவிதமாகவும் ஒரு பெண் தெரிவதைப்போல இது இருக்கிறது. பக்கத்தில் வந்ததும் அடச்சே என்றாகிறது.
இந்த திரையரங்க வெளியீட்டின்போது ரத்தக்கண்ணீர் வடிப்பவர்கள், வைரல் ஆகிறவர்கள், விழுந்துவிழுந்து பேட்டியெடுக்கும் விகடன், கலாட்டா குழுவினர் ஓடிடியை பொருட்படுத்தாதது காரணமா? பெருங்கூட்டத்தின் பகுதியாக இருந்து பார்க்கும் எழுச்சி, பரவசம் டிவியில் பக்கத்தில் பார்க்கும்போது வராததா? சினிமா நிறைய பொருட்செலவுடன் எடுக்கப்பட்டு மேளதாளத்துடம் வெளியிடப்படும்போது பார்வையாளருக்கும் ரசிகருக்கும் உண்டாகும் ஒருவித குற்றவுணர்வின் வெளிப்பாடு அதன் கடைசிகட்ட விற்பனைக் கண்ணியாக டிவி இருப்பதால் வராமல் போகிறதா?
எப்படி திருவிழா என்பது வெறும் சத்தங்களையும் பரபப்பையும் கூட்டத்தையும் தாண்டி ஒன்றுமில்லையோ, விழா முடிந்ததும் அதே கடையைத் திறந்துவைத்தால் யாரும் வரமாட்டார்களோ அதுவே இங்கும் நடக்கிறதோ?
ஒட்டுமொத்தமாக, இன்றைய சினிமா வெறும் பிரமை மட்டுமே, அது உள்ளீடற்றது என்பதை இது காட்டுகிறது. மிகையாக உணர்ச்சிவசப்படுபவர்கள் கூட அது முடிந்ததும் அதற்கும் தமக்கும் சம்மந்தமில்லை என்பதுபோலப் போகிறார்கள். ஒரு விலைமாதைப் போல சினிமாவை நடத்துகிறார்கள். உச்சம் அடையும் வரை ஆசை காட்டிவிட்டு அடுத்த நொடியே அடச்சே என்று உதறிவிட்டு வருகிறார்கள். தெருவில் அவள் எதிரே வந்தால் தலைதிருப்பிப் போகிறார்கள்.
சினிமா எந்தளவுக்கு மக்களை இடதுகையால் நடத்துகிறதோ, கையாளத்தக்க மூளையற்ற கூட்டமென நினைக்கிறதோ மக்களும் அவ்வாறே சினிமாவை நடத்துகிறார்கள். இரு தரப்புக்கும் பரஸ்பர மரியாதையில்லை. இது நேற்று வேறுவிதமாக இல்லை. அம்மா தாயே என்று திரையில் பார்த்து வியக்கும் நாயகி ஊருக்கு படப்பிடிப்புக்கு வந்தால் வேறுவிதமாகப் பேசுவார்கள், விலையென்ன என்று கேட்பார்கள். முதல் சூப்பர் ஸ்டாரான பாகவதர் கோயிலில் பாடி பிச்சையெடுத்தபோது யாரும் கண்டுகொள்ளவில்லை. உச்சநட்சத்திர நடிகைக்கு கோயில் கட்டுவார்கள். நட்சத்திர பக்கங்களை நடத்துவார்கள். படத்தை புரொபைலில் வைத்துக்கொண்டு சிலாகித்துக்கொண்டே இருப்பார்கள். அதே நடிகையின் அந்தரங்க காணொளிகள் வெளியானால் அதைப் பார்த்து உலகமெல்லாம் பகிர்ந்துகொள்ளும் முதல் ஆட்களாகவும் இவர்களே இருப்பார்கள்.
தமிழின் நல்ல இயக்குநர்களில் ஒருவர் அவர். அவர் படங்களை வெளியிட்டுக் கொண்டிருந்தபோது ஒரு நாயகன் உதயமாகிறான் என்று பாட்டுப் பாடிக்கொண்டிருந்த மாற்றுசினிமா ரசிகர்கள் அவருக்கான சந்தை அடிபட்டதும் ஐயோ பாவம், காசுக்கு வழியில்லாமல் படம் கூட வெளியிட முடியாமல் இருக்கிறார், அவர் நலிந்த கலைஞர் என வீடியோ போட ஆரம்பித்தனர். அவரே ஒரு மேடையில் வந்து நான் நன்றாகத்தான் இருக்கிறேன், எனக்குப் பணம் ஒரு பொருட்டில்லை, படம் வராவிட்டாலும் கவலையில்லை என சொல்லும் நிலை ஏற்பட்டது.
ஒன்று சினிமா கலைஞர்களை, சினிமாவை கடவுள் எனத் தலைக்கு மேல் தூக்கிவைப்பது, அது முடிந்ததும் கீழ்த்தரமாக நடத்துவது, கண்டுகொள்ளாமல் போவது என அடிப்படை மரியாதையே இவர்களுக்கு சினிமா மீது இல்லை. இதனால்தான் தன் காலில் விழுந்த ஒருவரை இளையராஜா துரத்திவிட்டார். அவருக்குத் தெரியும் இது பொய் மரியாதை, போலிக் கொண்டாட்டம் என.
சினிமா மீது பெரும் பிரமையும் வழிபாட்டு மனநிலையும் இருக்கும் அளவுக்கு இங்கு மறைமுக வெறுப்பும் கசப்பும் அதன்மீது இம்மக்களுக்கு உள்ளதென நினைக்கிறேன். சினிமா நடிகர்களைப் போலச்செய்தே வாழ்வோர் இந்த கோபத்துக்காக தம்மை பலிகொடுப்பவர்கள். சாமிக்கு நேர்ந்துவிட்ட கோழியைப் போல.
நமது சமூகம் அதன் அடிப்படையில் மிகவும் நோய்மைப்பட்டதாக உள்ளது. அதன் அத்தனை செயல்களிலும் இந்த நோய்க்கூறே வெளிப்படுகிறது. இது சமூகவலைதளங்களால் இன்னும் தீவிரப்பட்டிருக்கிறது, சமூகமே திருவிழாக்கோலமிட்டிருப்பதாக தோற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் நாம் என்றுமே இப்படித்தான் இருந்திருக்கிறோம். ஒன்றை நினைத்து மற்றொன்றை சொல்லி அதற்கு மாறாக ஒன்றை செய்வது. இரட்டை முகம், இரட்டை வேடம், அதன் கலவையான உணர்ச்சிகள், பாசாங்கான பேச்சு, நடத்தையென. சினிமா இதற்கு மேடையமைக்கிறது. பேய்வடிவான சாமிக்கு ஒருநாள் விழாவெடுத்து மேடையமைத்துக் கொண்டாடுவதையும் மறுநாள் அதை மூலையில் போடுவதைப் போல. ஆனால் அந்த பேய்நிலை சாமிதான் நமது ஆழ்மனமாக மிச்ச நாட்களில் இருந்து நம்மை வினோதமாக நடத்திக்கொண்டிருக்கும்.