வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்குத் தெரியாது, ஆனால் எனக்குத் தெரியும்: கடந்த மூன்று மாதங்களில் நான் எழுதும் அளவு வெகுவாக குறைந்துவிட்டது. சராசரியாக ஒருநாளைக்கு ஆயிரம் சொற்களாவது குறைந்தது எழுதுவேன். மாதத்திற்கு 50,000 சொற்கள்தாம் என் கணக்கு. ஒரு பக்கம் கட்டுரைகள் எழுதிக்கொண்டே இன்னொரு பக்கம் என் நாவல்களில் நேரம் செலவிட்டபடி இருப்பேன். முக்கால்வாசி எழுதிய நிலையில் நான்கு நாவல்கள் இப்படி கைவசம் இருக்கின்றன. மிகவும் நேரநெருக்கடியான நாட்களில் கூட சில நிமிடங்களாவது எழுதக் கிடைத்தால் போதும், நிம்மதியாவேன். கூடுதல் நேரம் கிடைக்கும் நாட்களில் அதிகமாக எழுதி ஈடுகட்டுவேன். ஆனால் அண்மையாகத்தான் இது முடியாமல் போய்விட்டது.
இது பெரிய உலகப் பிரச்சினையா? ஆமாம், எனக்கு எழுத்துதான் உயிர், உடல், ஆவியெல்லாம். எழுதுவது குறையும்போது என் மூளைக்குப் போகும் பிராணவாயு குறைந்து போகிறது. நான் நடைபிணமாக மாறுகிறேன். அதிகமாக எரிச்சல்படுகிற, மகிழ்ச்சியற்ற மனிதனாகிறேன்.
காரணம் என் வேலையில் ஏற்பட்டுள்ள மிதமிஞ்சிய சிக்கல்கள், நெருக்கடி, பிரச்சினைகள்தாம். முன்பைவிட பலமடங்கு அதிகமாக உழைக்கவேண்டியிருக்கிறது. எப்போதுமே வேலையிலிருக்கும் உணர்வு. எவ்வளவு உழைத்தாலும் வேலை தீராத அலுப்பு. ராட்சஸ பள்ளமொன்றில் கைமணலை அள்ளிஅள்ளிப் போட்டு இன்னும் நிரம்பவில்லையே என அசந்துபோகும் நிலை. கோவிட்டுக்குப் பிறகு பலருக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சினைதான். வேலையைக் காப்பாற்றிக்கொள்ள, மூன்று வேளை சாப்பிட்டு வாடகை கொடுத்து கடனைத் தீர்க்கவே எல்லாரும் 18 மணிநேரத்திற்கு மேல் உழைக்கிறார்கள். சம்பாதிக்கும் பணத்தை பொருளாதார வீக்கமும் வரிகளும் விழுங்கியது போக, நிம்மதியை வேலை நெருக்கடி பிடுங்கிக்கொள்கிறது. என்னுடைய பிரச்சினை நூதனமானது - எனக்கு வேலைக்காக, எதிர்காலப் பாதுகாப்புக்காக வாழப் பிடிக்காது. அது தற்காலிகமானது. எனக்கு நிரந்தரமான உயர்ந்த இலக்குகளுக்காக ஓடப் பிடிக்கும். 9-9 வேலைகளில் நம் நேரத்திற்கு எந்த மதிப்பும் இல்லை. நாம் போனால் அங்கு இன்னொருவர் வந்து உட்கார்ந்துகொள்வார். யாரும் ஓரிரு நாட்களுக்கு மேல் நம் உழைப்பைப் பற்றிக் கவலைகொள்ள மாட்டார்கள். ஆனால் இப்படி எழுத்துக்காக வாழும், போதுமான அளவுக்கு மட்டும் வேலையில் ஈடுபடும் காலம் முடிந்துவிட்டது எனத் தோன்றுகிறது. உலகம் ஒரு பெரும் நிலக்கரிச் சுரங்கமாக மாறிவிட அது எல்லாருடைய கையிலும் மண்வெட்டியைக் கொடுத்து இருட்டில் இறக்கிவிட்டு விடுகிறது.
எல்லா வேலையிலும் பௌதீகமான ஓய்வு இருக்கும். ஆனால் ‘மன ஓய்வு’ என ஒன்று உண்டு. அகம் கடலைப் போல ஓய்ந்து அமைதியாக அசைவற்று இருக்கவேண்டும். எனக்கு அந்த மன ஓய்வு தான் அண்மைக்காலமாக கிடைக்கவில்லை. ஓய்வுப் பொழுதிலும் ஆயிரம் பிரச்சினைகளைப் பற்றி நினைத்து முயற்சிகள் செய்தபடியே இருக்கவேண்டி வருவதால் மனம் எழுத்துக்கு நேரெதிரான திசையில் சென்றுவிடுகிறது. ஒருநாளை நூறு சொற்களை எழுதுவதே பெரிதாகிவிட்டது. என் கணிணியில் நான் எழுதவில்லை, அதை வேறுவேலைகளுக்காக பயன்படுத்துகிறேன் என்று அதைப் பார்க்கையில் நினைக்கையிலே வியப்பாக இருக்கிறது.
ஆனாலும் எழுதியெழுதிப் பழகியவன் என்பதால் மனம் நிலைபெற்றதும் சட்டென என்னால் பழைய தாளலயத்துக்குத் திரும்ப முடிகிறது. ஒன்றிரண்டு ஓய்வுநாட்கள் கிடைத்தால் நாவலை விட்ட இடத்திலிருந்து சரளமாக எழுதமுடிகிறது. இப்போதுதான் எனக்கு வருடக்கணக்கில் எழுத முடியாமல் போன பல நண்பர்களின் நிலையைப் புரிந்துகொள்ள முடிகிறது. அவர்கள் திறமையானவர்கள், ஆனால் வாழ்வின் சூறாவளிக்கு தம்மை ஒப்புக்கொடுத்தபடி தாமே சூறாவைளியின் மையமாக மாறிப் போனவர்கள். ஒரேயடியாக அக அமைதியை இழந்த பின்னர் எழுதாமல் இருப்பதே இயல்பாகிவிட்டவர்கள். மௌனித்துப் போனவர்கள். சிலர் சில பத்தாண்டுகள் எழுதாமல் இருந்துவிட்டு மீண்டு வருவார்கள். பலருக்கு திரும்ப வரும் பாதை மூடுண்டு போயிருக்கும். அவர்கள் சிறுகசிறுக கேளிக்கைகளால், சுயநிந்தனையால், தன்வெறுப்பால் தம்மை அழித்துக்கொள்வார்கள். அவர்களால் அது எப்படி முடிகிறது என்று வியந்ததுண்டு. அது இப்படித்தான் முடிகிறது என எனக்கு அனுபவப்படும்போது இப்போது புரிகிறது.
வாழ்வின் பல்வேறு சார்புநிலைகள், நிபந்தனைகள் தாம் ஒவ்வொன்றையும் தோற்றம் கொள்ளச் செய்கின்றன என்றார் நாகார்ஜுனர். எழுத்தும் கூட சாராம்சமானது அல்ல - நிபந்தனைகள் மாறும்போது எழுதும் மனம் எந்திர மனமாகிவிடக் கூடும். உலகின் ஆகப்பெரும் சாபக்கேடு அதுதான்.