நாம் தனியாக இருக்கிறோம் என்பதே அறுதியான உண்மை - அதை நாம் உறுதிப்படுத்தும் தத்துவ அலகாகவும் மறப்பதற்கான சிறிய போதையாகவும் உறவுகள், நட்பு, காதல், சமூகமாக்கம் தேவையாகிறது. அவர்களில் மிக மிக அணுக்கமானவர் காலமாகும்போதே நாம் எவ்வளவுத் தனிமையாக இருக்கிறோம் எனத் தீவிரமாக சில கணங்கள் உணர்கிறோம். மீண்டும் உறவு போதைக்குள் விழுந்து தனிமையின் மறதி மட்டுமே தரத்தக்க தன்னுணர்வுக்குள் சிக்குகிறோம். மரணத்தை வாழ்வில் நேரில் காணுறும்போது இந்த இருமை கிடைக்காமல் தத்தளித்து காணாமல் போகிறோம்.
இதனாலே காலனை தெய்வமாக வழிபடும் மரபு நமக்கு இருந்திருக்கிறது. பௌத்தத்தில் வலுவாகவே இன்னும் இருக்கிறது. அங்கு மரணத்தை அனுதினமும் நினைப்பது மெய்யறிவுக்கான மார்க்கம். இந்து மதத்தில் நசிகேதன் வாழ்வின் உண்மையை அறிய காலனிடமே சென்று மண்டியிடுகிறான்.
இதற்கு வெளியேதான் மெய்யறிவுக்கு எதிரான போலி எந்திரமய உலகம் ஒடிக்கொண்டே இருக்கிறது. அது மரணத்தைக் குறித்து யோசிக்க நம்மை அனுமதிக்காமல் ஓடிக்கொண்டே இருக்கச் செய்கிறது. எந்தளவுக்கெனில் இன்று சில நொடிகளிலே மரணத்தைக் கடந்துவிட இவ்வுலகம் நம்மைத் தூண்டுகிறது. அனுதினமும் பார்க்கிற ஒருவர் இல்லாமல் போகும்போது இரங்கல் தெரிவித்துக் கொண்டாட்டத்தில் மூழ்குகிறோம். அதன் பெயரே பண்பாடு, கலாச்சாரம். சமூகம் என ஒன்று உண்டானதுமே மரணத்தை மறப்பது முக்கிய இலக்காக அது வைத்துக் கொள்கிறது. அதற்கு வளர்ச்சி எனப் பெயரிடுகிறோம்.
நமது மொபைல் விளையாட்டுகளைப் பாருங்கள். ரத்தம் தெறிக்கவிடில் போரடிக்கிறது. ஜோம்பிகளைக் கொல்லாவிடில் அதில் உற்சாகமேயில்லை. பலிச்சடங்களை எல்லா இடங்களில் இருந்தும் ஒழித்துவருகிறோம். அதனிடத்தில் வன்முறையற்ற தெய்வத்தையும் வன்முறைமிக்க் வாழ்க்கையையும் உருவாக்குகிறோம்.
மரணத்திற்குப் பதிலாக முடிவற்ற வன்முறையை குறியீட்டுரீதியாக அது நமக்குப் பரிசளிக்கிறது - வெறுப்பாக, கொலைகளாக, ரத்தமாக, அதிகாரமாக, சர்வாதிகாரமாக.
நாம் மரணத்தை வெறுக்காதபோது வன்முறைக்கும் அதிகாரத்துக்கும் தேவையே இராது எனத் தோன்றுகிறது.