கல்யாண வாழ்க்கைக்கும் காதலின் சுவாரஸ்யத்துக்கும் என்ன சம்மந்தம்? சுவாரஸ்யம், மகிழ்ச்சி போன்றவற்றை நாம் அடுத்தவரிடம் இருந்து பெற முடியாது. அதை நாமாகத்தான் உருவாக்க வேண்டும். இன்றைய காதலர்களுக்கு இரண்டே வாரங்களில் காதல் அலுத்துவிடுகிறது. ஏனென்றால் காதலில் சுவாரஸ்யமில்லை. அது சம்மந்தப்பட்ட தனிமனிதரின் செயலில் இருக்கிறது. காதலிலே நீடிக்க முடியாத சுவாரஸ்யம் வருடக்கணக்கில் நீளும் திருமண வாழ்வில் எப்படிக் கிடைக்கும்? இதைத்தான் தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று எளிமையாக சொல்லி வைத்திருக்கிறார்கள்.
நவீன மனிதர்கள், குறிப்பாக படித்த மேற்தட்டினர், உறவுகளையும் வாங்கிப் பயன்படுத்தும் பண்டமாகவே பார்க்கிறார்கள். அது மெல்லமெல்ல உறவுகள் மீது அவநம்பிக்கை கொள்ளவும் அலுப்படையவும் வைத்து கடைசியில் முழுமையாக தனிமையை நோக்கி அவர்களைத் தள்ளுகிறது - ஜப்பானில் இளைஞர்கள் திருமணத்தில் இருந்து மட்டுமல்ல காதல், நட்பில் இருந்து முழுமையாக வெளியேறி தனியாகவே வாழ்கிறார்கள். ஆனால் அப்போதும் அவர்கள் மகிழ்ச்சியாக இல்லை. தனியான வீடுகளில் வாழ்ந்து துயருற்று மடிகிறார்கள். அவர்கள் இறந்த பிறகும் அவ்வீடுகள் கைவிடப்பட்டு சிதிலமடைகின்றன. இன்று ஜப்பானில் மூன்றில் இரண்டு மடங்கு வீடுகள் இப்படி ஆளற்றுக் கைவிடப்பட்டவையே. இந்தியர்களும் அந்த இடத்தை நோக்கியே பாய்கிறார்கள்.
மகிழ்ச்சியை நாமாகத்தான் உருவாக்க முடியும். யாரும் தர முடியாது. சமூக, குடும்ப உறவுகள் என்பவை நடைமுறைத் தேவைகளுக்காக மட்டுமே. அவை ஒருவிதமான புரோட்டீன் பௌடர். (வெறும் புரதப் பொடியை உண்டால் பாடி பில்டர் ஆக முடியாது.) என்று திருமணத்திற்கு முன்பு காதல், திருமணத்திலும் காதல் வேண்டுமெனப் பேச ஆரம்பித்தார்களோ அன்று ஆரம்பித்தது சனியன். அரிஸ்டாட்டில் தனது “நிக்கோமேக்கியன் அறம்” நூலில் “நட்பென்பது பரஸ்பர நல்லெண்ணம்” என்கிறார். (அவர் காதலையும், தாம்பத்தியத்தையும் நட்பென்றுதான் அழைக்கிறார்.) எந்த சமூக, அந்தரங்க உறவும் பரஸ்பர நல்லெண்ணம் கொண்டு, பணம், அந்தஸ்து, வயது, மனநிலை, உணர்வுகள் எனப் பல நிபந்தனைகளுக்கு உட்பட்டுத் தோன்றுவதே. நீ இன்பம் கொடு, நான் பணம் தருகிறேன், நீ என்னை மகிழ்ச்சியாக வை, நான் உன்னுடன் இருக்கிறேன் என்பது நல்லுறவு அல்ல. ஏதோ ஒரு சந்தர்பத்தில் நம்மால் முழுமையான ஒருங்கிணைவுடன் இன்னொருவருடன் இருக்க முடிகையில் அவருக்கு நன்மை செய்வதே நமக்கு நாம் செய்யும் நன்மையாகிறது, அவருக்கு இன்பமளிப்பது நமக்கு இன்பமளிப்பதாகிறது. பரஸ்பரம் கொடுப்பதல்ல, அளித்துப்பெறுவதல்ல, அளிக்கையில் பெறுவதே என்கிறார் அரிஸ்டாட்டில். ஆனால் இதை நீங்கள் ஆயுள் பரியந்தமும் செய்யமுடியாது.
ஆக, கல்யாண உறவு அப்படியான நல்லெண்ண உறவு அல்ல. அது ஒரு சமூக உறவு. அது முழுக்க நடைமுறை நோக்கங்களுக்காக அமைவது. தற்காலிக காதலானது மட்டுமே நல்லெண்ண உறவாக இருக்கலாம் (காதலே தற்காலிகம் தானே!).
காதலின் நீட்சியாக திருமண பந்தத்தைப் பார்க்க ஆரம்பித்ததே மனித குலத்தின் வீழ்ச்சியின் துவக்கம் எனக் கருதுகிறேன். இரண்டும் வேறுவேறு விசயங்கள். நீங்கள் எந்த விலங்காவது நாற்பது, ஐம்பது ஆண்டுகள் காதலித்து பார்த்திருக்கிறீர்களா? காதல் அவ்வளவு நுட்பமானது, மென்மையானது, அதன் சாரத்தை யாராலும் காண முடியாதென்று அதனாலே வள்ளுவர் சொல்கிறார். அதை எப்படி அன்றாட வாழ்க்கையின் நடைமுறைக்குள் சாத்தியப்படுத்த முடியும்? அது நம்மைப் போன்ற சாமான்யர்களுக்கானது அல்ல. (எப்போதும் அன்பில் திளைப்பதாக, காதலில் உருகிக்கொண்டிருப்பதாக சொல்கிறவர்கள் பொய் வியாபாரிகள்). அப்படி எந்த மனிதராலும் இயலாது. அரிஸ்டாட்டில் சொல்வதைப் போல காதலை யாராலும் தன்னளவில் நீட்டிக்க முடியாது.
நவீன உலகில் மக்கள் ஏன் காதலை, அதன் சாகசங்களைத் திருமணத்துக்குள் எதிர்பார்க்கத் தொடங்கினார்கள்? காதல் அவர்களுடைய அன்றாட உலகிலிருந்து மறைந்ததுதான் காரணம். எந்திரமயமான உலகில் முழுக்க தன்வயப்பட்ட மக்களுக்கு, தனிமை நோயால் பீடிக்கப்பட்ட ஜனங்களுக்கு காதலின் மீது அச்சம் ஏற்பட்டது. காதலில் மட்டுமல்ல நட்பிலும் அவநம்பிக்கை ஏற்பட்டது. அதனாலே தன் இணையரையே சிறந்த நண்பராக வைத்துக்கொள்ள விரும்பும், அவ்வாறு கோருகிற போக்கும் இன்று அதிகமாகி வருகிறது. காதலும் நட்பும் இல்லாமல் போன உலகைச் சேர்ந்தவர்களுக்கு திருமண வாழ்வின் பாதுகாப்புணர்வு அதிகமாகத் தேவைப்பட்டது. ஆனாலும் தனிமை அவர்களை விடாததால் திருமணத்துக்குள் நட்பில்லை, காதலில்லை எனக் காரணம் சொல்லிப் பிரிவை நாட ஆரம்பித்தனர். காதலை மிக முக்கியமாகக் கருதும் பெண்கள் அதிகமாக விவாகரத்தை நாடுவதிலும் ஆச்சரியமில்லை.
உலகில் எப்போதாவது அரிதாகத் தோன்றும் காதலுக்காக, காதலுக்குள்ளே தோன்றாத காதலுக்காக, நட்புக்குள்ளே தோன்றாத நட்புக்காக ஒருவர் ஒவ்வொரு உறவாக முறித்து, ஓடிக்கொண்டே இருப்பதைப்போன்ற, வாழ்வைப் பணயம் வைப்பதைப் போன்ற அபத்தம் வேறில்லை. அது பொருளாலான உலகில் கடவுளைத் தேடுவதை ஒத்தது. ஏனென்றால் காதலே நவீன உலகின் கடவுள். இதன் பெயர் சுதந்திரமோ, முன்னேற்றமோ அல்ல. இதன் பெயரே பேதைமை.