சாருவின் "ஔரங்சேப்" நாவலை தமிழில் அது தொடராக வெளிவந்தபோது படித்து சிறுகுறிப்புகளை எழுதினேன். தொடரென்பதால் அது தேவைக்கதிகமாக நீண்டுவிட்டது என அதை நாவலாக அச்சில் படிக்கையில் தோன்றியது. எப்படிப் பார்த்தாலும் தமிழில் மிகத்தனித்துவமான சுவையான நாவல் அது. மேலும் ஆங்கில மொழியாக்கத்துக்காக சாருவும் மொழிபெயர்ப்பாளர் நந்தினியுமாக அதன் அளவை வெகுவாக சுருக்கினார்கள். இந்நாவலைப் பொறுத்தமட்டில் மிக மிகக் கடினமான காரியம் இது. என்னதான் பதிப்பகம் அளித்த அழுத்தம் காரணமாக அவர்கள் அதைச் செய்தாலும் பெரிதும் நேர்மறையானப் பலனை இந்தச் சுருக்கம் அளித்துள்ளது. ஆங்கிலத்தில் நாவல் இன்னும் செறிவாகிவிட்டது.
அதேநேரம், ஆங்கில மொழியாக்கம் என்னைப் பெரிதும் கவரவில்லை. சாருவின் மொழியழகு, குறிப்பாக சாருவுக்கே உரித்தான சொற்தேர்வு, வாக்கிய அமைப்பு, அதன் ஒலி லயம், சகஜத்தன்மை போய் பொது ஆங்கிலத்தில் நந்தினி மொழியாக்கிவிட்டார் மொழிபெயர்ப்பாளர். இது இன்று ஆங்கில மொழியாக்கத்தில் உள்ள போக்குதான் என ஆங்கிலப் பதிப்பக முகவர்களுடன் பேசும்போது புரிந்துகொள்ள முடிகிறது. ஆங்கில வாசகர்களுக்கு உறுத்தாமல் இருக்கவேண்டும் என நினைத்து ராணுவ ஒழுங்குநடையை மொழியாகத்தில் கொண்டு வருகிறார்கள். ஆனால் அதையும் மீறி நந்தினி நேர்த்தியாக தன் பணியைச் செய்திருக்கிறார். அதனாலே இதை ஆங்கிலத்தில் மட்டும் படிக்கையில் தென்றல் அடிக்கும் சோலையில் இளைப்பாறும் உணர்வு வரும். (தமிழில் படித்தவர்களுக்கே இது வேறு சாரு எனத் தோன்றும்.) நமக்கு சிறுகுறையாக உள்ள ஒன்று வேறொரு தளத்தில் நல்ல பலனைக் கொடுக்கும். மேலும் இந்நாவலுக்கு எம்மொழியிலும் நிற்கும் வலுவுள்ளது.
அதனாலே ஆங்கில மொழியாக்கம் நல்ல கவனத்தைப் பெற்று கிராஸ்வெர்ட் விருதுக்கான குறும்பட்டியலில் வந்துள்ளது. சாருவுக்கு இவ்விருது கிடைத்தால் மிகவும் மகிழ்வேன். வெல்லட்டும்.