இந்த ஆண்டுக் கணக்கே போலியானதுதானோ என ஒரு நண்பர் என்னிடம் கேட்டார். ஆம் என்றேன். ஆறுதலுக்காகவோ தன்னிரக்கத்துக்காகவோ பெருமைக்காகவோ பயன்படுத்திக்கொள்ளலாம். நமது சமீபத்தைய அனுபவங்களைத் தொகுத்துக் கொள்ளலாம். நான் பின்னதற்காகவே 2024ஐப் பற்றி யோசித்தேன்.
ஒரு நாவலை எழுதி முடித்தேன், சில கட்டுரைகளை எழுதினேன், நல்ல புத்தகங்களை, கதைகள், கட்டுரைகளைப் படித்தேன் என்பதைத் தவிர குறைவாக எழுத்தில் பணியாற்றியதாகத் தோன்றுகிறது. ஆனால் இந்த ஆண்டில் ஏப்ரல்-மே மிக மோசமானதாக, கடும் நெருக்கடி கொண்டதாகவும், அதன் தாக்கம் அடுத்தடுத்த மாதங்களிலும் இருந்தது. வேலை, பணம் போன்ற கவலைகளும் அச்சமும் அலைகழித்தன. அதிலிருந்து என்னைக் கரைசேர்த்தது எழுத்துதான். ஆனால் எழுத்தை ஒரு தீர்வாக, மருந்தாக பயன்படுத்தக் கூடாது, எழுத்தை அதனளவில் ஏற்று ஈடுபட வேண்டும் என்றும் தோன்றுகிறது. ஆனால் இப்படித்தான் என் வாழ்க்கை இருந்திருக்கிறது. கடந்த நான்கு மாதங்களும் மேற்சொன்ன காரணங்களால் என்னால் எழுத்தில் கவனம் செலுத்த முடியாமல் போனது.
எழுத்துக்கு வெளியே குத்துச்சண்டைப் பயிற்சி, பவர் லிப்டிங் பயிற்சி மிகுந்த உற்சாகத்தை அளித்தது. தனிப்பட்ட வாழ்க்கையிலும் புத்துணர்ச்சியான பல தருணங்கள். இந்த செமஸ்டர் திரைக்கதை எழுதக் கற்பிக்கும் வகுப்பொன்றை கல்லூரியில் நடத்துகிறேன். அது பெரும் உற்சாகம் அளிக்கிறது. ஒவ்வொரு வகுப்பிலும் புதிய விளையாட்டுகளை அறிமுகப்படுத்தி கதைகூறலை ஜாலியாக மாற்ற முயல்கிறேன். மாணவர்களிடம் நல்ல வரவேற்பு.
பாதி எழுதி முடித்த மூன்று நாவல்களும், திருத்தி முடிக்க வேண்டிய நாவலொன்றும் உள்ளன. அவற்றை 2025-26 ஆம் ஆண்டுகளில் முடிக்கவேண்டும்.
எனக்குச் சிறிது அதிர்ஷ்டமிருந்தால் வருமாண்டில் என் நடைமுறைப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அப்போதுதான் என்னால் முழுமையாக எழுத்தில் ஈடுபட முடியும்.
